செவ்வாய், 11 ஏப்ரல், 2017

கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் – மலையாள சினிமா….



சென்ற சனிக்கிழமை ஒரு சினிமா பார்த்தேன். அதுவும் மலையாள சினிமா! சிலருக்கு, “எந்தா வெங்கட் சேட்டாயிக்கு எந்தாயி…. மலையாள சினிமே கண்டோ?” என்ற குழப்பம் வந்துவிடப்போகிறது. குழப்பத்திற்கு நானே விடையளித்து விடுகிறேன்!


சென்ற சனிக்கிழமை – காலை எழுந்திருக்கும்போதே மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. கடந்த பல சனிக்கிழமைகள் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. இந்த சனிக்கிழமை வேலையிருந்தாலும், அழைப்பு வந்தாலும் போகப்போவதில்லை என்ற முடிவுடன் இருந்த சனிக்கிழமை அது! பொறுமையாக எழுந்திருந்து ஒரு கட்டஞ்சாயா குடித்து, நிதானமாக அமர்ந்து சில வலைப்பூக்கள் படித்துக் கொண்டிருந்தபோது, வா. மணிகண்டன் அவர்களின் நிசப்தம் வலைப்பூவில் “எப்படி நேரம் கிடைக்கிறது?” என்ற வலைப்பதிவில், பதிவர் சேக்காளி அவர்கள் இப்படி கருத்து எழுதி இருந்தார்.

”முடிஞ்சா இந்த படத்தை (https://www.youtube.com/watch?v=1vCkI74W3pU) பாருங்க மணி. பார்க்கும் போது வாய் விட்டு நல்லா சிரிச்சேன். குறிப்பா நாயகனின் போன் ரிங் டோன் ஒலிக்கும் சீன். என்னா மா கதையோடு நக்கலை பிண்ணி பிசைந்திருக்கிறார்கள்” என்று எழுதி இருந்ததைப் பார்க்க, மணிகண்டன் பார்த்தாரோ இல்லையோ, நான் பார்க்க முடிவு செய்தேன்! பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்ட பல படங்கள் பார்க்கவே இல்லை! என்பதால், இன்றே செய் அதையும் நன்றே செய் என அப்படியே உட்கார்ந்து இணைப்புக்குச் சென்று விட்டேன்!

நடுநடுவே சில அலைபேசி அழைப்புகள், வாயில் கதவு தட்டப்படும் இடைஞ்சல்கள் என இருந்தாலும், மொத்தப் படத்தினையும் பார்த்து முடித்தேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்த்த ஒரு படம் – அதுவும் ஒரு மலையாளப் படம். நமக்கும் சினிமாவுக்கும் ரொம்பவே தூரம். நடிகர்கள் பெயராவது ஓரளவுக்குத் தெரியும், நடிகைகள் அதுவும் இப்போதைய நடிகைகள் யாரென்று கேட்டால் திருதிருவென்று முழிப்பேன்! இன்னமும் ரேவதி நல்ல நடிப்பார் என்று சொல்லிக்கொண்டிருப்பவன் நான்! இப்போது லேட்டஸ்டா, ஃபேமஸ் நடிகை யாரென்று கேட்டால் தெரியாது! நமக்கும் சினிமாவுக்கும் அத்தனை தூரம்! தமிழ் சினிமாவே இப்படி என்றால் மலையாள சினிமா…. சுத்தம்!

நாயகன், நாயகி, படத்தில் நடித்தவர்கள் யார் எனத் தெரியாது, அவர்கள் யாருடைய பெயரும் தெரியாது. இயக்கம் யாரென்று தெரியாது, In fact, இப்படி ஒரு படம் வந்தது கூட தெரியாது என்றாலும், ஏதோ ஒரு தைரியத்தில் படம் பார்க்கத் தொடங்கிவிட்டேன்! 2016-ல் வெளிவந்த படம். ஒரு அழகிய கிராமம். அந்த அழகிய கிராமம் மீது ஒரு மோகமே வந்துவிட்டது. இப்படி ஒரு கிராமத்திற்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையும் வந்துவிட்டது. எத்தனை இடத்திற்குச் சென்றாலும், இன்னும் பல இடங்களுக்குச் செல்லும் ஆசை மட்டும் குறையவே இல்லை!

அந்தக் கிராமத்தில் இருக்கும் ஒருவர் சினிமா நடிகர் ஜெகன் மீது கொண்ட மோகத்தில் தானும் அவரைப் போல, ஜூனியர் ஜெகன் எனப் பெயர் வாங்க வேண்டும் என சென்னைக்குப் புறப்படுகிறார். சினிமா உலகில் அவரால் உள்ளே நுழைய முடியாமல் போக, தனது கிராமத்திற்குத் திரும்புகிறார். கிராமத்தினரின் கிண்டலுக்கு உண்டாகி, “நான் நாயகன் ஆகாவிட்டாலும், எனது மகனை நாயகன் ஆக்கிக் காட்டுகிறேன் என சவால் விடுகிறார்!” சவாலில் ஜெயித்தாரா இல்லையா என்பது தான் படம்.

மனைவி கர்ப்பமாக இருக்கும்போது, வருங்கால நாயகனுக்காக, மனைவிக்கு விதம் விதமாகப் பழங்கள் வாங்கிக் கொடுத்து, என் மகனுக்காக, உனக்கில்லை என்று சாப்பிட வைக்கிறார்! எதிர்கால நாயகனாக வளர்க்க ஆசைப்பட்ட மகன் பிறக்கிறார் – கன்னங்கரேலென்று! குழந்தை பிறந்த உடனேயே மனைவி இறக்க, தனியாளாக மகனை வளர்த்து, அவனை சினிமாவில் நுழைக்க, அவர் செய்யும் எல்லா முயற்சிகளும் தோல்வி அடைகிறது. பள்ளியில் ஒரு சினிமா ஷூட்டிங்க் நடக்கும்போது அதில் ஒரு காட்சியில் திருடனாகத் தோன்றும் வாய்ப்பு கிடைக்கிறது நாயகனுக்கு! அதன் பிறகு அவனுக்குக் கிடைக்கும் எல்லா வேடங்களுமே திருடன் வேடம் தான்!

படம் முழுக்க, காமெடியைத் தூவி இருக்கிறார் இயக்குனர். பல இடங்களில் வாய்விட்டுச் சிரித்தேன். வீட்டில் தனியாக இருக்கும்போது இப்படிச் சிரிப்பது நல்லதல்ல! எதிர் வீட்டில் இருந்து ”தனியா சிரிக்கிறார் பாவம்! இந்த வருஷம் தில்லில வெயில் கொஞ்சம் ஜாஸ்தி தான்!” என்று நினைத்து விடப் போகிறார்கள் என பயம் வர, கதவு மூடியிருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டேன். நல்ல வேளை கதவு மூடிதான் இருந்தது. நாயகன், அவருக்கு நண்பராக வருபவர், நண்பரின் அப்பா, நாயகனின் அப்பாவின் நண்பர் என பலரும் சிரிக்க வைக்கிறார்கள். ஒரு காட்சி மட்டும் இங்கே….

 

நாயகனுக்கு சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமே, நாயகிக்கு நாயகன் மீது காதல், நாயகனுக்கோ வேறு ஒரு பெண்ணின் மீது காதல், அந்தப் பெண்ணுக்கோ இவர் மீது அப்படி எண்ணம் இல்லை, இடையில் சில குழப்பங்கள், நாயகனால் நாயகிக்கு வந்த அவமானம், அதனால் அவர் அப்பா திட்ட, நாயகன் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார். அங்கே என்ன நடந்தது, நாயகன் பிழைத்தாரா, நாயகியுடன் சேர்ந்தாரா என்பதை வெள்ளித்திரையில் – உங்கள் கணினித் திரையில் காண்க!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படிச் சிரிக்க முடிந்திருக்கிறது. படத்தில் நடப்பதெல்லாம் சாத்தியமில்லை என்றாலும் இரண்டு மணி நேரம் சிரிக்க வைத்ததற்காக படக்குழுவினருக்கு வாழ்த்துகள். இந்தப் படம் பற்றித் தெரிந்து கொள்ள உதவியாக இருந்த பதிவர்கள் சேக்காளி மற்றும் மணிகண்டன் ஆகியோருக்கும் நன்றி! முடிந்தால் பாருங்களேன்…. 

மீண்டும் வேறொன்று பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

32 கருத்துகள்:

  1. விமர்சனம் ஆர்வத்தை மிகவும்
    தூண்டிவிட்டது
    நிச்சயம் பார்த்து விடுவேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      முடிந்தால் பாருங்கள்......

      நீக்கு
  2. நேரம் கிடைத்தால் பார்த்து விடுகிறேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. பாஷை புரிந்ததா? நானும் பார்க்க முயற்சி செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலையாளம் மனசிலாவும்... பட்சே சம்சாரிக்கான் பற்றில்லா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. ஐயோ ஜி நன்னாயிட்டு இவ்விடே சம்ஸாரிக்குனுண்டல்லோ!!!

      கீதா

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  4. விமர்சனத்தை ரசித்தேன் ஐயா
    நானும் இந்தப் படத்தினைப் பார்க்க முயற்சிப்பேன்
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்தால் பாருங்கள்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. பார்க்கும் ஆவலை தூண்டிட்டீங்க, சப்ரைட்டில் இருந்தால் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பார்த்த காணொளியில் சப் டைட்டில் இல்லை! மலையாளம் புரியும் என்பதால் அது இல்லாமலும் பார்க்க முடிந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  6. இப்போதெல்லாம் பொறுமையாக ஒரு முழு படத்தையும் பார்க்க முடிவதில்லை Iam losing interest in films.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஒரு சினிமா பார்த்திருக்கிறேன்... எனக்கும் பொறுமை இல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

      நீக்கு
  7. இந்தப் படம் பார்த்துவிட்டேன். தியேட்டரில். உங்கள் விமர்சனம் நல்லாயிருக்கு ஜி! செம காமெடி மூவிதான்...

    கீதா : இன்னும் கண்டிட்டில்லா ஜி! காணனும்! காணாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  8. மலையாள பட வழக்கமான பார்மூலா
    தமிழ் சினிமாவில் புகழ் அடையவேண்டும்
    என ஒரு சராசரி மலையாளியின் கனவு
    தமிழக சினிமாவை நுணுக்கமாக
    அலசி ஆராய்வர் அடிப்படையில்
    மலையாளிகள் காட்டுவாசிதான்
    மலையாள இலக்கியபம் 19 நூ தொடங்குகிறது. பொருளாதார வளர்ச்சியும் அரபுகளின் எண்ணெய்
    எழுச்சிக்கு பிறகு கேரளாவில் பணம்
    கொட்டியது அதன் முன் பின்தங்கியது(நவீனத்தில்) சென்னை தான் கேரளா மக்கள் விரும்பும் பட்டணம்.
    இது பல ஆண்டுகளாக தொடருகிறது
    ஆச்சர்யம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாச்சியப்பன் நாராயணன் ஜி!

      நீக்கு
    2. கேரளாவை பற்றி ஆராய்ச்சி
      செய்து கொண்டுருந்தேன்
      உங்கள் சினிமா விமர்சனம் கேரளா
      புகழ்வதை போல் இருக்கு. ஆனால்
      உண்மை வேறு என தோன்றியது
      அது தான் பதிவிட்டேன்.

      நீக்கு
    3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாச்சியப்பன் நாராயணன்.

      நீக்கு
  9. இந்த திரைப்படத்தைப் பார்க்க ஆவலைத் தூண்டிவிட்டுள்ளது உங்களது பதிவு. அவசியம் பார்ப்பேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  10. பலர் சொல்லியுள்ளதுபோல் உட்கார்ந்து சினிமா பார்க்கும் ஆர்வம் போய்விட்டது. எப்படியும் தமிழில் சுடுவார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சினிமா பார்க்கும் ஆர்வம்... உண்மை தான். நம்மில் பலருக்கும் அந்த ஆர்வம் இல்லை இப்போது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத்.

      நீக்கு
  11. படம் பெயரே சொல்லலையே, அல்லது சொல்லி இருக்கீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தின் பெயர் தலைப்பிலேயே இருக்கிறது - கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
    2. ஹிஹிஹி, அது படத்தோட பெயரா? அ.வ.சி. :)

      நீக்கு
    3. அ.வ.சி.! உங்களோடு சுருக்- எண்ணங்களுக்கு ஒரு டிக்‌ஷ்ணரி ப்ளீஸ்!

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  12. அருஞ்சொற்பொருள்:-

    அ.வ.சி= அசடு வழியச் சிரித்தேன்

    விவிசி= விழுந்து விழுந்து சிரித்தேன்

    கு.வி.மீ.ம.ஒ= குப்புற விழுந்தாலும் மீசையிலே மண் ஒட்டலை

    ம.ம.=மரமண்டை

    வி.பு.சி.= விழுந்து புரண்டு சிரித்தேன்.

    ம.சா.= மனசாட்சி
    மற்றது அவ்வப்போது வெளிவரும். :)

    பதிலளிநீக்கு
  13. மலையாளம் கைரளி டி.வி பிரமேம் பார்த்தேன் அல்போன்ஸ் புத்திரன் படம் ஒவ்வொரு காட்சியும் எப்படி வரும் எப்ப முடியும் என தெரியாத வகையில் வித்தியாசமான கேமிரா கோணம்.
    அடுத்த படம் தமிழில் செய்கிறார்.புதுபடம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரேமம் பற்றி முன்னரே அறிந்திருக்கிறேன். ஆனால் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும்!

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாச்சியப்பன் நாராயணன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....