சனி, 15 ஏப்ரல், 2017

ஹனிமூன் தேசம் – வசிஷ்ட் குண்ட் – வெந்நீர் ஊற்று

ஹனிமூன் தேசம் – பகுதி 16

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!


ராம் மந்திர் - வசிஷ்ட் குண்ட் அருகே


பியாஸ் நதிக்கரையிலிருந்து புறப்பட மனதே இல்லாமல் புறப்பட்டு வாகனம் நிறுத்துமிடத்திற்கு வந்து சேர்ந்தோம். மணாலியின் பல பகுதிகள் பெரிய வாகனங்கள் செல்ல முடியாத அளவு குறுகிய பாதைகளைக் கொண்டது. குறிப்பாக பழைய மணாலி பகுதிகள்! அங்கே எங்கள் வாகனமான Tempo Traveller-ல் பயணிப்பது நிச்சயம் முடியாத ஒன்று. அதனால், எங்களுக்கு இருந்த வழிகள் – ஒன்று நடந்து செல்வது அல்லது, ஏதாவது சின்ன வாகனத்தினை அமர்த்திக் கொள்வது! நடந்து செல்வது முடியாத விஷயம்! அதனால் சின்ன வாகனம் அமர்த்திக் கொள்ள முடிவு செய்தோம்.  ஆனால் எங்களுக்கு ஒரு வாகனம் போதாது என்பதால், இரண்டு வாகனங்களை அமர்த்திக்கொள்ள ஜோதி ஏற்பாடு செய்தார்.



எங்கள் வாகனத்தினை ஜோதி பார்த்துக்கொள்வதோடு, சின்னச் சின்ன பராமரிப்பு வேலைகளையும் பார்த்து முடித்துக் கொள்வதாகச் சொல்ல, எங்கள் பயணம் இரண்டு ஜீப்களில் தொடர்ந்தது. இரண்டு வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாகப் பயணித்து பழைய மணாலியின் குறுகிய பாதைகளில் சென்றன.  மணாலி நகரிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பழைய மணாலி. அங்கே பியாஸ் நதிக்கரையின் அருகே அமைந்திருப்பது வசிஷ்ட் குண்ட் மற்றும் மிகவும் பழமையான ராம் மந்திர் – அதாவது ராமர் கோவில்.  குறுகிய சாலைகளில் வாகனத்தை லாவகமாகச் செலுத்தி, மலைப்பாதையில் விரைவாக அழைத்துச் சென்று கோவில் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் எங்களை விட்டார்கள்.



மலைப்பாதையில் கொஞ்சம் மேல் நோக்கி நடக்க வேண்டியிருந்தது. மூச்சு வாங்கியபடியே மலைப்பாதையில் ஏறி, முன்னேறினால் ஒரு அழகிய கோவில். கோவில் இருந்த பகுதியும் வசிஷ்ட் என்றே அழைக்கப்படுகிறது.  வசிஷ்ட மஹரிஷி பர்ணசாலை அமைத்து இங்கே தான் இருந்ததாக வரலாறு. சுமார் 4000 ஆண்டு பழமையானது என்று எழுதி வைத்திருந்தார்கள்.  சில கதைகளும் உண்டு.  கதைகள் இல்லாத இடம் ஏது?  கதை கேட்க நீங்க ரெடி என்றால், பகிர்ந்து கொள்ள நானும் ரெடி!


கல்லிலே கலைவண்ணம் கண்டான்....

தனது மகன்கள் அனைவரும் விஸ்வாமித்திரரால் கொல்லப்பட்டதாக அறிந்த வசிஷ்ட மஹரிஷி வாழ்க்கையை வெறுத்து நதியில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்க, நதியோ அவரை உள்வாங்க மறுத்தது…. தனது முயற்சி தோல்வியில் முடிய, வசிஷ்ட மஹரிஷி தனது வாழ்க்கையை புத்தம் புதிதாய் தொடங்க முடிவு செய்திருக்கிறார். மஹரிஷியை உள்வாங்க மறுத்த நதிக்குப் பெயர் விபாஷா! அதாவது தளைகளிலிருந்து விடுதலை தருபவர்! அந்த நதி தான் பெயர் மாறி தற்போதைய பியாஸ்! மஹரிஷி இங்கேயே பர்ணசாலை அமைத்து தபஸ் செய்து கொண்டிருக்கிறார்.


மரக்கதவில் வேலைப்பாடுகள்....

இந்த வசிஷ்ட மஹரிஷி இஷ்வாகு குலத்தினரின் குரு. பதினான்கு வருட வனவாசத்திற்குப் பிறகு, ராவண வதம் முடித்த ராமர் தனக்குப் பிடித்த பிரஹ்ம ஹத்தி தோஷத்திற்குப் பரிகாரமாக அஸ்வமேத யாகம் செய்ய வேண்டும் என முடிவாகிறது. மற்ற முனிவர்கள் எல்லாம் இருக்க, குலகுருவான வசிஷ்ட மஹரிஷி இல்லாமல் யாகம் நடத்த முடியாது. அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியாமலிருக்க, அவரை அழைத்து வர யாரை அனுப்புவது! வேறு யார் – உடனே லக்ஷ்மணனைப் பார்க்க, அவரும் இதோ வசிஷ்ட மஹரிஷியைத் தேடிப் பிடித்து அவரை அழைத்து வருகிறேன் என புறப்படுகிறார்!


வசிஷ்ட் குண்ட் - கோவில்

அவர் தவத்தில் இருக்கும் வசிஷ்டரை, அவரது பர்ணசாலை அமைந்திருந்த வசிஷ்ட் பகுதியில் வந்து கண்டுபிடிக்கிறார். தனது குலகுரு ஒவ்வொரு நாளும், நீராடுவதற்காக, நீண்ட தூரம் நடந்து பியாஸ் நதிக்குச் செல்ல வேண்டியிருக்கிறதே, என்று யோசித்த லக்ஷ்மணன் தனது வில்லை எடுத்து ஒரு அம்பை எய்து விட, அந்த இடத்தில் ஊற்று உண்டாகிறது. அதுவும் வெந்நீர் ஊற்று! குளிர்ப்பிரதேசம் அல்லவா! குளிர்ந்த நீரில் குளிப்பது சிரமம் என்று யோசித்திருப்பார் போலும்!  ஆனால் வசிஷ்டரோ, என்னை விட உனக்குத் தான் இந்த வெந்நீர் ஊற்றுக் குளியல் அவசியம். நீண்ட தூரம் என்னைத் தேடிக் களைத்துப் போயிருக்கிறார், இந்த ஊற்றில் நீ முதலில் குளி என்று சொன்னது மட்டுமல்லாது, இனிமே இந்த ஊற்றில் குளிப்பவர்களுக்கு உடல் அசதி போகும், சரும வியாதிகள் எதுவும் அண்டாது என்று வரம் கொடுத்து விட்டாராம்!


மரத்தில் அழகிய வேலைப்பாடுகள்

இப்போதும் இந்த வசிஷ்ட மஹரிஷி கோவில் பகுதியில் வெந்நீர் ஊற்று உண்டு! என்ன, பழைய மாதிரி இல்லாமல், ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இடம் பிரித்து பெரிய தொட்டியாகக் கட்டி வைத்திருக்கிறார்கள். வரும் பயணிகள் பெரும்பாலானோர் இந்த வெந்நீர் ஊற்றில் குளிக்கிறார்கள். நாங்கள் குளிக்காவிட்டாலும், உள்ளே சென்று பார்க்கலாம் எனச் சென்றால் கொஞ்சம் அதிர்ச்சி! சிலர் உடம்பில் பொட்டுத் துணியில்லாமல் குளிக்கிறார்கள் – சரும ரோகம் போகவேண்டுமே. இது போன்றவர்கள் சிலர் செய்யும் செயலால், வேகவேகமாக வெளியே வரும் பயணிகளைப் பார்க்க முடிந்தது.


ராமர் கோவிலில் சிவன்! 
மரத்தில் வேலைப்பாடுகள்

வசிஷ்ட மஹரிஷியின் கோவிலுக்குப் பக்கத்திலேயே ராமருக்கும் கோவில் உண்டு. இந்த ராமர் கோவிலும் மிகவும் பழமையான கோவில் தான். அழகிய மர வேலைப்பாடுகள் நிறைந்த கோவில். கோவிலின் சுற்றுப்பகுதி முழுவதும் மரத்தினால் ஆனது. ஒவ்வொரு பகுதியிலும் சிலைகள் அழகாய் வடித்திருக்கிறார்கள்.  கலைநயம் கொண்ட கோவிலின் அழகைப் பார்த்து ரசித்தபடி வந்தோம். கோவிலாயிற்றே, புகைப்படம் எடுக்க வேண்டாம் என நினைத்தால், பலரும் செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்க, நானும் எனது கேமராவில் கோவில் பகுதியில் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன்.



கோவிலிலிருந்து மலைப்பாதையில் நடந்து வாகனம் நிறுத்துமிடத்திற்குத் திரும்பினால் எங்கள் வாகனங்கள் இருந்ததே அன்றி ஓட்டுனர்கள் இருவருமே இல்லை! எங்கே சென்றிருப்பார்கள் எனத் தேடுவதற்கு முன்னர் கொஞ்சம் தேநீர் அருந்தலாம் என முடிவு செய்தோம்! குளிருக்கு இதமாய் இருந்தது அந்த தேநீர்… வாகன ஓட்டிகள் வரும் வரை காத்திருக்கலாம்! அவர்கள் எங்கே இருந்தார்கள், அதன் பிறகு நாங்கள் எங்கே சென்றோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

32 கருத்துகள்:


  1. //மணாலியின் பல பகுதிகள் பெரிய வாகனங்கள் செல்ல முடியாத அளவு குறுகிய பாதைகளைக் கொண்டது. //

    சமீபத்தில் வாட்ஸாப்ப்பில் ஒரு வீடியோ வந்தது. மிகக் கடினமான ஒரு சாலையில் மேடுகளிலும் பள்ளங்களிலும் செல்லும் ஒரு வாகனம்! ஆனால் டிரைவர் மட்டுமே அதில் இருந்தார். மிக அழகிய இடம் என்று தெரிகிறது. விஸ்வாமித்திரர் எதற்காக வசிஷ்டரின் வாரிசுகளைக் கொன்றார் என்று கீதாக்காவிடம் கேட்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகிய இடம் தான்.

      கீதாக்காவிடம் கேட்க வேண்டும். பதில் கிடைத்தாலும் இங்கேயும் பகிர்ந்து கொள்ளுங்கள்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. கீதா அக்கா இங்கு வந்து படிக்கும்போது அவராகவே இங்கேயே பதில் தந்து விடுவார் என்று நம்புகிறேன்!

      :)))

      நீக்கு
    3. நெல்லைத்தமிழன் பதில் தந்திருக்கிறார் ஸ்ரீராம். பாருங்கள்.

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அழகிய படங்களுடன் வசிஷ்ட் குண்ட் பற்றிய தகவல்..

    அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  3. அரசன் கௌசிகன் படைவீர்ர்களுடன் தண்ணீருக்காக வசிஷ்டரின் ஆஸ்ரமத்தில் நுழைகிறான். முனிவர் ஆசிரமம் என்று வெளியேற நினைக்கும்போது வசிஷ்டர் அரசபரிவாரங்களுக்கு உணவு அளிக்கிறார். அது எப்படி சாத்தியம் என்று அரசன் நினைக்க, காமதேனுவின் சகோதரி ந்ந்தினி பசு மூலமாக எதைக்கேட்டாலும் கொடுக்கும் என்று வசிஷ்டர் கூற, அந்தப் பசுவைத் தர மறுத்ததால் கௌதமன் படைபலத்துடன் கவர முயற்சித்துத் தோல்வியடைகிறான். அரசன், படை இவைகளைவிட முனிவர் பெரியவரா என்று, அரசபதவியைத் துறந்து தவம் செய்கிறார். ....விசுவாமித்திரர் ஆகிறார்... சிவனினம் பிரம்மாஸ்திரம் பெற்று வசிஷ்டர் ஆசிரமத்தின்மீது படையெடுத்து வசிஷ்டரின் அனைத்து புதல்வர்களைக் கொன்று, வசிஷ்டர் மீது பிரம்மாஸ்திரம் பிரயோகிக்க முயல, வசிஷ்டர் அவருடைய தண்டத்தை முன்னிறுத்தி பிரம்மாஸ்திரத்த்தின் சக்தியை ஆகர்ஷிக்கிறார்...... பின் பலவித சம்பவங்களுக்குப் பின் கடைசியில் பிரம்மரிஷி வசிஷ்டர் வாயால் விசுவாமித்திரர் "பிரம்மரிஷி" என்று அழைக்கப்படுகிறார்....

    மணாலி ஆன்மீகத்துக்காக நான் சுற்றவேண்டிய இடங்களில் முக்கியமான ஒன்று. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்ன பிறகு தான் இந்த கதை நினைவுக்கு வருகிறது.... படித்திருக்கிறேன்.

      மணாலி சென்று வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. அழகிய படங்கள்
    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மொஹம்மத்.....

      நீக்கு
  5. விபாஷா ,பிபாஷா ஆகலாம் ,எப்படி பியாஸ் ஆகலாம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படி வேண்டுமானாலும் ஆக்கலாம்! ஆக்குவது நாம் தானே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  6. இதே மாதிரிக் கதை வேறு சம்பவங்களுடன் பெயர்களுடன்படித்த நினைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

      நீக்கு
  7. ஆகா, வெந்நீர் குளியல் பார்ப்தற்காகவே இனி உங்கள் நண்பர்கள் அந்த இடத்துக்கு முந்துவார்கள் என்று தோன்றுகிறது...
    -இராய செல்லப்பா (மீண்டும்) நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.

      நீக்கு
  8. மிக அருமையான அழகிய கோயில், கட்டிடமே ஒரு வித்தியாசமான அழகைக் கொடுக்குது பனி மலையிலிருந்து தூர வந்துவிட்டீங்கள் என்பது புரியுது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பனி மலையிலிருந்து தூர வந்துவிட்டீங்கள் - அவ்வளவு தொலைவு அல்ல! பக்கத்தில் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  9. படங்களுடன் பதிவு
    மிக மிக அருமை
    ஸ்தல புராண கதையும் சொல்லியவிதமும்
    நெல்லைத் தமிழன் மீதியை சொல்லி முடித்தவிதமும்
    அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  10. அருமை ஜி...

    புதிய பல தகவல்கள் அறிய முடிந்தது...

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. அழகான இடம், அருமையான படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  12. வெந்நீர் ஊற்று
    இயற்கையின் விநோதங்களில் ஒன்று
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  14. கோவிலில் உள்ள மர வேலைப்பாடுகள் அருமையாக உள்ளன! தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  15. அருமையான இடங்கள் என்று தெரிகிறது வெங்கட்ஜி! படங்களும் அழகு. தொடர்கிறோம்..

    கீதா: வசிஸ்ட் குண்ட்!!! முதல் முறை 25 வருடங்களுக்கு முன்பு போன போது வசிஷ்ட் குண்ட் இயற்கையாக இருந்தது. அப்போது ஆண் பெண் பிரிவுகள் இல்லை. ஓபன் ஸ்பேசில்..சுனை போன்று தண்ணீர் ஊற்றெடுத்துக் கொண்டெ இருந்தது. நல்ல சூடு! .அதே போன்று நேரு குண்ட் என்றும் கூட ஒரு இடத்தில் இருந்தது ஆனால் அது ஏதோ ஒரு ...இப்போது 2008ல் சென்ற போது நீங்கள் சொல்லியிருப்பது போல் ஆண்கள் பெண்கள் குளிக்க என்று பிரிவுகள், ராமர் கோயில் நன்றாக டெவலப் ஆகியிருந்தது. கொஞ்சம் ஏறித்தான் செல்ல வேண்டியிருக்கும் இந்தக் கோயில் ஆனால் மிக அழகான கோயில். போகும் வழியில் நிறைய கலர்ஃபுல் கடைகள். கீழே பியாஸ் நதி என்று அமர்க்களமான இடம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு இடத்திலும் மாற்றங்கள்..... அது தானே இயல்பு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....