ஹனிமூன் தேசம்
– பகுதி 12
தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down
Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!
விதம் விதமாய் பராட்டா... கூடவே காரசாரமாய் ஊறுகாய்!
மோதிரத்தினைத்
தேடித்தேடி கிடைக்காத பிறகு வாகனம் நிறுத்தி இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம். நாங்கள்
சென்ற போது எங்கள் வாகனம் மட்டுமே இருந்தது. இப்போது நிறைய வாகனங்கள்! கூடவே சுற்றுலாப்
பயணிகளை நம்பி பிழைப்பு நடத்தும் உள்ளூர்வாசிகளும் வர ஆரம்பித்திருந்தார்கள். உள்ளூர்
உடை அணிந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள வாடகைக்கு துணி தருபவர்கள், தேநீர், சிற்றுண்டிகள்
விற்பவர்கள் என பலரும் அங்கே இருந்தார்கள். தேநீர் மட்டும் அருந்தி, காலை உணவுக்காக
எங்கே போகலாம் என ஜோதியிடம் கேட்க, வண்டியில் செல்லும்போது எந்த உணவகம் திறந்திருக்கிறதோ
அங்கே போகலாம் என முடிவு எடுத்தோம்.
உணவகத்திலிருந்து கண்ட காட்சி....
பெரும்பாலான
வட இந்திய நகரங்களில் உணவகங்கள் மிகவும் காலம் தாழ்த்தி தான் கடை திறப்பார்கள். நம்
ஊர் போல காலை ஆறு மணிக்கு கடை திறந்து வைக்க மாட்டார்கள். எட்டு மணி – எட்டரை மணிக்கு மேல் ஆடி அசைந்து கடை
திறந்து, அதுவும் குளிக்காமல் கொட்டாவி விட்டபடி கடை திறப்பவர்கள் தான் அதிகம்! அதுவும்
பெரும்பாலான இடங்களில் காலை உணவு என்றால் ”டபுள் ரொட்டி” என்று அழைக்கப்படும் ப்ரெட்
டோஸ்ட் தான் காலை உணவு! இல்லை என்றால் பராட்டா – தயிர் மற்றும் ஊறுகாயுடன்! அதுவும்
இந்த டபுள் ரொட்டி பெயரை தில்லி வந்த பிறகு தான் கேள்விப்பட்டிருக்கிறேன் – தமிழ் நாட்டில்
இருந்தவரை இப்படி அழைக்கலாம் என்று கூட தெரியாது! இரண்டு ஸ்லைஸ்கள் வைத்து இருப்பதால்
டபுள் ரொட்டி!
உணவகத்தில் இருந்த தறி....
இதில் Dhari எனும் கார்பெட் போன்ற தரை விரிப்பைச் செய்கிறார்கள்...
சைவம்
என்றால், இரண்டு ஸ்லைஸ்களுக்கு நடுவே வெண்ணையும், ஜாமும் தடவி, டோஸ்ட்! அசைவம் எனில்
நடுவே ஆம்லெட்! அதான் டபுள் ரொட்டி! பெரும்பாலான வட இந்தியர்களுக்கு காலை உணவு இந்த
டபுள் ரொட்டியும் ஒரு கிளாஸ் பாலும் தான்! நாமோ, ஜூரம் வந்தால் மட்டுமே ப்ரெட் சாப்பிடுபவர்கள்!
நமக்கு இது ஒத்து வராது! சரி அடுத்த ஆப்ஷன் – பராட்டா தான்! எந்த உணவகம் திறந்திருக்கிறது
என்று பார்த்தபடியே வர, கோத்தி என்ற சிற்றூரில் இருக்கும் HIM CAFÉ திறந்திருந்தது!
சிறிய உணவகம் தான். உள்ளே ஒரு அறை, வெளியே – திறந்த வெளியில் மலைகளைப் பார்த்தவாறு
ஒரு Lawn – அங்கேயும் சில Table-Chairகள். திறந்த வெளி தான் எல்லோருடைய Choice ஆக இருந்தது!
பெரும்பாலான
சுற்றுலாப் பிரதேசங்களைப் போல, காலையில் சென்ற Gulaba-விலும் கழிப்பறை வசதிகள் இல்லை
என்பதால் உணவகத்திற்கு வந்த பிறகு முதல் வேலை முக்கியமான வேலை! அதன் பிறகு தான் சாப்பிட
என்ன இருக்கிறது என்ற கேள்வியே! டபுள் ரொட்டியில் தான் ஆரம்பித்தார் அந்த உணவகச் சிப்பந்தி!
அட ஆள விடுங்கப்பா! பராட்டா என்னென்ன வகைகள் கிடைக்கும் என்று கேட்க, வரிசையாக அடுக்கினார்
– ப்ளையின் பராட்டா, ஆலு பராட்டா, ப்யாஜ் பராட்டா, பனீர் பராட்டா, மிக்ஸ் பராட்டா என
வரிசையாகச் சொல்ல, எல்லாவற்றிலும் சில பராட்டாக்கள் சொல்லி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ
அவ்வளவு சீக்கிரம் கொண்டு வரச் சொல்லி இயற்கையை ரசிக்க ஆரம்பித்தோம்.
அந்த மலையுச்சிக்குப் போகலாமா....
சுற்றிலும்
மலை, பின்புறத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நதி, எங்கோ மலைப்பிரதேசத்திலிருந்து பனி உருகி
மெல்லிய நீர்வீழ்ச்சியாகக் கொட்டிக் கொண்டிருக்கும் காட்சி எனப் பார்த்துக் கொண்டே
அரட்டை! அதிகாலையில் பனிப்பிரதேசத்திற்குச் சென்றதால் சிலருக்குத் தலைவலி! அவரவர் துணை
தனது இணைக்கு தலையைப் பிடித்துவிட அப்படியே சில புகைப்படங்கள் எடுத்து அவர்களை கிண்டல்
செய்து கொண்டிருந்தோம். பராட்டா வந்த பாடில்லை! சரி நாமே களத்தில் இறங்கி விட வேண்டியது
தான் போல! என்று நினைத்தபடியே “அனுமதி இல்லை” என்று எழுதி இருந்த சமையலறைக்குள் பிரவேசித்தேன்!
”உங்க
தலையைப் பார்த்ததும் தோசைக்கல்லை போடலாம்னு இருந்தேன்” என்று சில மனைவிமார்கள் கணவனிடம்
சொல்வதுண்டு – அதைப்போல, நாங்கள் ஆர்டர் கொடுத்த பிறகு தான் வேலையே ஆரம்பித்திருந்தது. பனீர் பரோட்டாவிற்கு பனீர் உதிர்த்து, மிளகாய்ப்பொடி,
தனியா, உப்பு கலந்து கலவை தயாராகிக் கொண்டிருந்தது. ப்யாஜ் பராட்டாவிற்கு பொடிப்பொடியாக
வெங்காயம் நறுக்கிக்கொண்டிருந்தார் ஒருவர். ஸ்டஃப் செய்யத் தேவையான எல்லாம் தயாராகிக்
கொண்டிருக்க, ஒரு பெண்மணி பராட்டா செய்து கொண்டிருந்தார். ”கொஞ்சம் விரைவாகச் செய்யுங்கள்
அம்மணி” என்று சொல்லி விட்டு வெளியே வந்தேன். மற்ற சிலரும் பராட்டா செய்வதைப் பார்த்து
வர, சிறிது நேரத்தில் பராட்டாக்கள் வகைவகையாய் வந்து சேர்ந்தது.
இந்தாங்க.... நீங்களும் பராட்டா சாப்பிடுங்க!
குளிர்
மிகு காலையில் இளஞ்சூட்டில் வந்த பராட்டாக்கள் திவ்யமாக இருந்தது. ஊறுகாய், தயிர் உடன்
பராட்டாக்கள் மளமளவென்று காலியானது! காலியாக
காலியாக, ஓடி ஓடி பராட்டாக்களை எடுத்து வந்து கொடுத்துக் கொண்டிருந்தார் உணவகச் சிப்பந்தி.
அனைவரும் தேவையான அளவு, தேவையான வகை பராட்டாக்களை உண்டு முடித்த பிறகு ஒரு தேநீரும்
குடித்து அங்கிருந்து புறப்பட்டோம். எங்கள் அனைவருக்குமாகச் சேர்த்து, காலை உணவுக்கு
என்று ஆன செலவு 1420/- மட்டும்!
அடுத்ததாக
எங்கே சென்றோம், அங்கே கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை வரும் பகுதியில் சொல்லட்டா!
தொடர்ந்து
பயணிப்போம்…..
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
இங்கே இப்போது தான் பொழுது விடிந்து கொண்டிருக்கின்றது..
பதிலளிநீக்குபரோட்டா வகையறாக்கள் பசியைத் தூண்டி விட்டன!..
உங்களுக்காகவே புகைப்பட வாயிலாக பராட்டா! :) எடுத்துக்கொண்டீர்கள் தானே!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
புரோட்டா ஆசையை தூண்டி விட்டது ஜி
பதிலளிநீக்குதமிழகத்தில் இந்த பராட்டா கிடைக்காதே கில்லர்ஜி! நீங்களே செய்து கொண்டால் தான் சாப்பிட முடியும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
வெயில் மண்டையை பொளக்கும் நேரத்தில் ஐஸ் மலையைக் காட்டி புலம்ப விடுகிறீர்களே!
பதிலளிநீக்குவரீங்களா, ஒரு ட்ரிப் போயிட்டு வ்ருவோம்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி!
எனக்கு எப்படி பரோட்டாவுக்கு ஊறுகாயோ அல்லது தயிரோ தொட்டுக்கத் தராங்கன்னு எண்ணம். ஒருவேளை ஸ்டஃப்ட் பராத்தாவுக்கு இந்த காம்பினேஷன் நல்லா இருக்குமோ? இப்போதான் பயணத்துல ஒரு இடுகைல, உணவு பிரதான இடத்தைப் பிடித்திருக்கு.
பதிலளிநீக்குபனி மலை... வா வா என்று அழைக்கிறது.
இந்த ஸ்டஃப்ட் பராட்டாவுக்கு ஊறுகாயும் தயிரும் தான் பெஸ்ட் காம்பினேஷன்.
நீக்குபயண இடுகையில் உணவு பிரதான இடம் பிடித்திருக்கு - :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
அருமையான தகவல்,நன்றி
பதிலளிநீக்குதமிழ் செய்திகள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹென்றி.
நீக்குநானும் கற்பனையில் உங்களோடு பரோட்டா சாப்பிட்டுவிட்டு பயணத்தைத் தொடர்கிறேன்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்கு//உங்க தலையைப் பார்த்ததும் தோசைக்கல்லை போடலாம்னு இருந்தேன்” என்று சில மனைவிமார்கள் கணவனிடம் சொல்வதுண்டு –//
பதிலளிநீக்குஹாஹா :) எல்லார் வீட்லயும் நடக்கிறதுதான் ..அப்போதானே சுடசுட தர முடியும்
பரோட்டா பார்க்க ஆசையாயிருக்கு ..வட இந்தியர்கள் பெரும்பாலும் பரோட்டா வுடன் ஊறுகாயும் தயிரும் சாப்பிடறாங்க இல்லையா ..
தொடர்கிறேன்
அப்பதானே சுடச்சுட தர முடியும்! :) அதே தான்....
நீக்குபெரும்பாலும் பராட்டாவுடன் ஊறுகாயும் தயிரும் தான். அது தான் இருப்பதிலேயே பெஸ்ட் காம்பினேஷன். அதுவும் ஊறுகாய் - மிக்ஸ் ஊறுகாய் - கேரட் கூட போட்டிருப்பார்கள்! :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்.
படங்களும் அழகு. உங்கள் பயணக் குறிப்புகளும்....தொடர்கிறோம்..
பதிலளிநீக்குகீதா: வெங்கட் ஜி நாங்கள் மார்ஹி யில் உணவு உண்டோம். ரோஹ்டாங்க் பாஸ் போகும் வழியிலுள்ள... அங்கு ஒரு பெரிய நீரோடை பியாஸ் நதியின் கிளையாக இருக்கலாம்...நடுவில் பாலம் இருந்தது. உயரம் குறைவுதான்...அந்தப் பாலத்தின் ஒரு புறம் மலையின் மேலே ஜவான்கள் கேம்ப் இருந்தது. அங்கு உணவகமும் இருந்தது. அந்த உணவகத்தில் பராட்டா நாங்களும் பனீர் பராட்டாவும் ஆலு பராட்டாவும் ஆர்டர் செய்து பகிர்ந்து கொண்டோம். ஊறுகாய் தயிர்...நன்றாக இருந்தது சிம்பிள் ஃபுட் தான் ஆனால் நன்றாக இருந்தது. பாலத்தின் மறுபுறம் தண்ணீரின் கரையில் கூட மேசைகள், நாற்காலிகள் எல்லாம் போடப்பட்டு அங்கும் உணவு உண்ணலாம் என்றிருந்தது. வரும் போது அங்கு டீ குடித்தோம்..மார்ஹியில் பாரா க்ளைடிங்க் சென்றோம் வரும் போது..
ரஹலா அருவிக்கும் சென்று வந்தோம். நாங்கள் சென்ற சமயம் யாருமே இல்லை. பராட்டா படங்கள் சூப்பர். பயணக் குறிப்புகள் சூப்பர் ஜி!! தொடர்கிறோம்.
தொடரின் அனைத்து பகுதிகளும் உங்கள் மணாலி பயண நினைவுகளை மீட்டெடுப்பதில் மிக்க மகிழ்ச்சி கீதா ஜி!
நீக்குபராட்டா - simple and mouth watering...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
குளிர் நாட்களில் காலைப்பொழுதுகளில் சூடான பரோட்டா சாப்பிட்ட இனிய அனுபவம் நாவில் மீண்டும் உதிக்கிறது, உங்கள் பதிவைப் படிக்கும் பொழுது!
பதிலளிநீக்குஇராந செல்லப்பா நியூஜெர்சி
உங்கள் தில்லி நினைவுகளை மீட்டெடுத்தது போலும் இப்பதிவு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.
பராட்டாவுக்கு ஊறுகாயா! ஆனால் அப்போதுதான் போடும் பரோட்டாக்கள் என்றால் மென்மையாக நன்றாக இருக்கும்! படங்களும் நன்றாய் இருக்கிறது.
பதிலளிநீக்குஆம், ஜுரம் வந்தால் மட்டும்தான் ப்ரெட் நாங்களும்!
இது நம்ம ஊரு பராட்டா அல்ல! கோதுமை பராட்டா. அதற்கு காம்பினேஷன் ஊறுகாய், தயிர்!
நீக்குஅட நீங்களும் ப்ரெட் ஜூரம் வந்தால் மட்டும் தான் சாப்பிடுவீங்களா?
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
சப்பாத்தி மாதிரி இருக்கே ,பரோட்டா ?விரித்து மடித்து செய்யவில்லையோ இதை :)
பதிலளிநீக்குஇது நம்ம ஊர் பரோட்டா இல்லை பகவான் ஜி! இது வட இந்திய பராட்டா - கோதுமை மாவில் செய்வது [சிலர் கொஞ்சமாக மைதா சேர்த்துக் கொள்வதுண்டு!] விரித்து மடித்து செய்வதில்லை. Stuffed பராட்டா இது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!
ஆஹா படங்க?ள் மிக அருமை. அதென்ன டபிள் ரொட்டி சாப்பிடமாட்டேன் என அடம்பிடிக்கிறீங்க. எங்கட ஆட்களில் ஒரு பழக்கம்.. எந்த தொலை தூரம் போனாலும் நம்மூர்ச் சாப்பாட்டையே தேடுவது.. அது தப்பு... போகுமிடத்தில் என்ன ஸ்பெசலோ அதைத்தான் ட்ரை பண்ணோனும்... அப்போதானே அந்த இடத்து உணவு பற்றி நமக்கு தெரியும்... சரி அதை விடுங்கோ...
பதிலளிநீக்குசாப்பாடு மிக மலிவாக கிடைச்சிருக்கே. பன்னீர் பரோட்டா சூப்பராத்தான் இருக்கு.
பலருக்கு இப்படி பழக்கப்பட்ட உணவையே தேடும் வழக்கம் உண்டு. எனக்கு அந்தப் பிரச்சனை இல்லை. எங்கே என்ன கிடைக்கிறதோ அதைச் சாப்பிட்டு விடுவேன் - ஒன்றே ஒன்று அது சைவமாக இருக்க வேண்டும் - அவ்வளவு தான்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா...
பராட்டா என்றதும் ஓடோடி வந்த என்னை ஏமாற்றவில்லை! :) இப்போது இங்கேயும் எல்லாவகை பராட்டாக்களும் ஃப்ரோசனில் கிடைக்கின்றன. என்றாலும் சூடாக அப்போது செய்து சாப்பிடும் சுவை என்னமோ இருக்காது என்றே நினைக்கிறேன். :)
பதிலளிநீக்குஃப்ரோசனில் கிடைத்தாலும் சுடச்சுட செய்து சாப்பிடும் சுவை வராது இல்லையா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
நாங்க ப்ரெட் சான்ட்விச் அடிக்கடி செய்வோம்! ப்ரெட் உப்புமா, ப்ரெட் டோஸ்ட் என்று சாப்பிடுவது உண்டு. ப்ரெட்டை தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு ரோஸ்ட் செய்து தோசை மிளகாய்ப் பொடியுடன் சாப்பிட்டால் சொர்க்கம் பக்கத்தில்! :)
பதிலளிநீக்குப்ரெட்டில் விதம் விதமாய் செய்வதுண்டு - வட இந்தியார்கள் ப்ரெட் டோஸ்ட் தவிர இப்படி விதம் விதமாய் செய்வதில்லை!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
பரோட்டா வகைகளைப் பார்த்தாலே சாப்பிடத் தூண்டுகிறது ஐயா
பதிலளிநீக்குநிச்சயம் நன்றாகவே இருக்கும். கிடைத்தால் சாப்பிடுங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
படத்தில் பார்த்த பரோட்டாவை சாப்பிட முடியவில்லை,
பதிலளிநீக்குகடையில் சாப்பிட்டு விட்டேன்.
அருமையான பதிவு நண்பரே ,
தொடரட்டும் பயணம் ...
நம்ம ஊர் கடையில் கிடைக்கும் பராட்டா அல்ல இங்கே கிடைப்பது! அது பரோட்டா - மைதாவில் செய்வது. இங்கே கிடைப்பது கோதுமை மாவில் செய்வது - பராட்டா!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.
அருமையான படங்கள்.
பதிலளிநீக்குபராட்டா படங்கள் சாப்பிட ஆசையை தூண்டியது. மலைபயணத்தில், குளிர் சமயம் பசி இருக்கும் அதிகமாய். அற்புதமாய் சுட சுட பாராட்டா, ஊறுகாய், தயிர் வயிற்றுக்கும், மனதுக்கும் கொண்டாட்டம் தான்.
குளிர் சமயத்தில் சுடச்சுட பராட்டா - தேவாமிர்தம் தானம்மா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நாங்கள் ஜெய்ப்பூர் சென்றிருந்தபோது தேனீர் ஆர்டர் செய்தால் அப்போதான்பால் பாக்கெட்டைப் பிரித்து சாய் செய்வார்களது சரி எப்போதாவது இம்மாதிரி பனி படர்ந்திருப்பதை ரசிக்க முடியும் அங்கிருப்பவர்கள் என்ன நினைக்கிறார்களோ
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.
நீக்கு