ஹனிமூன் தேசம் – பகுதி 21
தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!
மணாலியிலிருந்ந்து காலையில் புறப்பட்ட நாங்கள் அடுத்ததாகச் செல்ல நினைத்திருந்த இடம் மணிக்கரண் என்ற இடத்திற்கு! குறுகிய மலைப்பாதைகளில் இயற்கைக் காட்சிகளையும் அபாயகரமான சாலைகளையும் கடந்து நாங்கள் அங்கே சென்றது எதற்கு? அந்த இடத்தில் அப்படி என்ன விசேஷம் என்பதை இந்தப் பகுதியில் பார்க்கலாம். மணிக்கரண் என்பது எங்கே இருக்கிறது? மணிக்கரண் மணாலியிலிருந்து குலூ வழியே பயணித்து, புந்தர் எனும் இடத்தினைக் [இங்கே ஒரு விமான நிலையம் உண்டு!] கடந்து மணிக்கரண் சென்றடையலாம். மொத்த தூரம் சுமார் 80 கிலோமீட்டர். பெரும்பாலும் மலைப்பகுதி தான்.
சென்ற பகுதியில் சொன்னது போல, பாட்டு கேட்டபடியே மணிக்கரண் வந்தடைந்தோம். மணிக்கரண் சர்தார்ஜிகள் மத்தியில் ரொம்பவும் பிரபலமான இடம்! இங்கே இருக்கும் மணிக்கரண் சாஹேப் எனும் குருத்வாராவிற்கு பஞ்சாப் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் பகுதிகளில் இருக்கும் சர்தார்ஜிகள் அனைவரும் வந்து வழிபாடு செய்வது வழக்கம். ட்ராக்டர் ட்ரைலரிலும், இரு சக்கர
வாகனங்களிலும் புறப்பட்டு விடுவார்கள்! அதிலும் பைக்குகளில் வரும் இளைஞர்களை சாரி
சாரியாகப் பார்க்க முடியும்! பாதையில் அப்படிச் செல்லும் நிறைய இளைஞர்களையும் எங்களால்
பார்க்க முடிந்தது.
மணிக்கரண் பகுதியில் இருக்கும் குருத்வாரா மற்றும் கோவில் ஆகிய இரண்டில்
கோவில் தான் முதன்மையாக இருந்தது. ஆனாலும் கோவிலுக்கு வருபவர்களை விட
குருத்வாராவிற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தான் அதிகம்! குருத்வாராவிற்கு
வரும் பக்தர்கள் அனைவருமே கோவிலுக்கும் வருவார்கள். இதுவரை குருத்வாரா சென்றிருக்க
வாய்ப்பில்லாதவர்களின் வசதிக்காக சில விஷயங்கள் இங்கே சொல்ல நினைக்கிறேன்.
குருத்வாராவில் சிலை என்று எதுவும் கிடையாது. குரு கிரந்த் சாஹேப் என
அழைக்கப்படும் சீக்கிய குருமார்களின் அறிவுரைகள் அடங்கிய புத்தகம் தான்
குருத்வாராவில் வழிபடுவார்கள்! எல்லா குருத்வாராக்களிலும் இப்படி ஒரு குரு கிரந்த்
சாஹேப் பட்டுத் துணியில் பொதிந்து வைத்திருப்பார்கள். இரவு நேரம் குருத்வாராவை
மூடும்போது, இந்த குரு க்ரந்த் சாஹேப் பட்டுத்துணியில் மூடி அதற்கான பெட்டியில்
வைத்துவிடுவார்கள்.
இந்த மணிக்கரண் குருத்வாராவின் உள்ளே ஒரு குகையும் உண்டு – Hot Cave என்று அழைக்கிறார்கள். கீழே இருக்கும் வென்னீர்
ஊற்று இந்தப் பாறைக்குப் பின் புறத்திலிருந்து தான் செல்வதாகத் தெரிகிறது. அதனால்
இந்தப் பாறைகள் எப்போதுமே சூடாகவே இருக்கும். சூடாக இருக்கும் இந்த பாறைகளின் மீது
சாய்ந்து அமர்ந்து கொண்டால், உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் தீரும் என்பது
நம்பிக்கை. அங்கே அமர்ந்தபடி, மணிமாலைகளை உருட்டும் பக்தர்களை அங்கே பார்க்க
முடியும். நாங்களும் சில நிமிடங்கள் பாறைகளில் சாய்ந்து அமர்ந்து உடலை சூடாக்கிக்
கொண்டோம் – குளிருக்கு இதமாய் இருந்தது அந்தச் சூடு!
குருத்வாரா நுழைவாயில்.....
பெரும்பாலான குருத்வாராக்களில் “குரு கா லங்கர்” என அழைக்கப்படும் உணவு வழங்குவது வழக்கம். இங்கேயும்
இப்படி லங்கர் உண்டு! ஆனால் மற்ற குருத்வாராக்களை விட இங்கே கிடைக்கும் லங்கர்
கொஞ்சம் ஸ்பெஷல் என்று தான் சொல்ல வேண்டும். பெரிய பெரிய பானைகளில் பருப்பு, அரிசி,
காய்கறிகள் ஆகியவற்றைப் போட்டு, பானைகளின் வாயை சாக்கால் கட்டி, கீழே இருக்கும் வென்னீர்
ஊற்றில் இறக்கி விடுவார்கள். சில மணி நேரங்களில் நன்கு வெந்து விடும் இவற்றை
எடுத்து பக்குவமாக்கி பிரசாதமாக லங்கரில் தருவார்கள். லங்கர் பொதுவாகவே நாள்
முழுவதும் நடந்தபடியே இருக்கும்.
லங்கர் சாப்பிட உங்களுக்கு இஷ்டமில்லை என்றால், கவலை வேண்டாம் – சின்னச் சின்ன
துணிப் பைகளில் அரிசி, கருப்புக் கடலை ஆகியவற்றை விற்கும் கடைகள் இங்கே உண்டு.
காசு கொடுத்தால், அந்தப் பையோடு தருவார்கள் – பையில் இணைத்திருக்கும் நூலின் ஒரு
முனையை பிடித்துக் கொண்டு வெந்நீர் ஊற்றில் பையைப் போட்டு சிறிது நேரம்
காத்திருந்தால், பையில் இருக்கும் கடலை/அரிசி நன்கு வெந்திருக்கும். அதையே
பிரசாதமாக நீங்கள் உண்ணலாம்! இந்த வெந்நீர் ஊற்று இருக்கும் பகுதியில் தான்
கோவிலும் இருக்கிறது. சிவன் கோவில் – வாசலில் அழகிய நந்தி. கோவிலுக்கும் பக்தர்கள்
வந்த வண்ணமே இருக்கிறார்கள். அனைவரும் பக்தியில் திளைத்திருக்க, நான்
வந்திருக்கும் நபர்களையும் கோவில் வளாகத்தினையும் புகைப்படம் எடுத்துக்
கொண்டிருந்தேன்.
மீண்டும் கோவிலிருந்து குருத்வாராவிற்கு வருவோம்! குருத்வாராவில் ஒரு விஷயம் –
இங்கே வரும் அனைவருமே சேவாதாரராக வேலை செய்ய முடியும். வரும் பக்தர்கள் அனைவருமே
குருத்வாராவில் ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம். நாங்கள் அங்கே
சென்றிருந்தபோது விறகுகள் நிறைய வந்து இறங்கி இருந்தது [என்ன தான் வெந்நீர் ஊற்றில்
சில உணவுகள் வெந்து இருந்தாலும், ரொட்டி செய்வதற்கும், மற்ற சமையலுக்கும் விறகுகள்
தான்! நானும் விறகுகளை சுமந்து சென்று அதற்கான இடத்தில் இரண்டு மூன்று முறை சேர்த்தேன்.
ஒரு சீக்கியர் அப்படி சேவா செய்யும் அனைவரையும் உணவு உண்ண அழைத்துக்
கொண்டிருந்தார். அவருக்கு ஒரு நமஸ்தே சொல்லி, “ஹல்வா” கிடைத்தது – போதும் என்று சொல்லி விட்டேன்.
ஹல்வா – அது என்ன இங்கே ஸ்பெஷல்? என்று கேட்டால், எல்லா குருத்வாராக்களிலுமே
கிடைக்கும் ஹல்வா ரொம்பவும் ஸ்பெஷல்! நெய் சொட்டச் சொட்ட அவர்கள் தொன்னைகளில்/கைகளில்
தரும் ஹல்வா ரொம்பவே நன்றாக இருக்கும். இந்த ஹல்வா சாப்பிடுவதற்கென்றே சில முறை
வீட்டின் அருகே இருக்கும் பங்க்ளா சாஹேப் குருத்வாராவிற்குச் சென்றதுண்டு! கொஞ்சம்
கொஞ்சமாகத் தருவார்கள் என்றாலும் திவ்யமாக இருக்கும். கைகளில் நெய் பிசுபிசுக்க சாப்பிடுவதில்
அலாதியான இன்பமுண்டு!
கோவில், குருத்வாரா என்றாலே கதைகள் இல்லாமலா? இந்த இடத்திற்கும் கதைகள் உண்டு!
மணிக்கரண் என்ற பெயர் எப்படி வந்தது? வேறு என்ன பெயர்கள் இவ்விடத்திற்கு உண்டு
என்பதற்காக ஒரு சில விஷயங்கள்/கதைகள்...
மணிக்கரண் என்ற வார்த்தைக்கு அர்த்தம் – காதில் அணியும்
நகை. ஒரு முறை சிவபெருமானும், பார்வதியும் இந்தப் பகுதி வழியாக சென்று
கொண்டிருந்தபோது மலைப்பாங்கான இப்பகுதியில் சற்றே இளைப்பாற, இவ்விடம்
அவர்களுக்குப் பிடித்துப் போனது! சுமார் 11000 ஆண்டுகள் இங்கே தவம் செய்தார்களாம்!
[நமக்கு ஒரு ஆண்டு என்பது அவர்களுக்கு ஒரு நிமிடமாக/நொடியாக இருக்கலாம்!] அப்படி இருந்தபோது
பார்வதியின் காதணி நதியில் எங்கோ விழுந்துவிட, அதைக் கண்டுபிடிக்க முடியாமல்
சிவபெருமானிடம் முறையிட, அவர் தனது பூதகணங்களை காதணியைத் தேடி அனுப்புகிறார்!
அவர்கள் தோல்வியுடன் திரும்ப, கோபம் கொப்பளிக்கிறது சிவனுக்கு. தனது மூன்றாம்
கண்ணைத் திறந்து விடுகிறார்!
திறந்த கண்களிலிருந்து “நைனா தேவி” எனப்படும் தேவி தோன்றுகிறார். அவர்
பார்வதியின் காதணிகள் சேஷ்நாக் என அழைக்கப்படும் பாம்பிடம் இந்த காதணிகள்
இருப்பதாகச் சொல்லி, சேஷ்நாக்-இடம் அதைத் திரும்பித் தருமாறு கூறுகிறார். நாகம்
தனது விஷம் கொண்ட மூச்சை வெளியேற்ற, இந்தப் பகுதியில் இருக்கும் ஆற்றின் பல
பகுதிகளில் வெந்நீர் ஊற்றுகள் உருவாகின்றன! பாறைகளுக்கு இடையேயும் நிறைய வெந்நீர்
ஊற்றுகள். அதைத் தவிர பார்வதியின் காதணியோடு, விலைமதிப்பு மிக்க பல கற்கள்
வெளிவருகின்றன. பார்வதியின் காதணி கிடைத்துவிட அவருக்கும் மகிழ்ச்சி. சிவனுக்கும்
கோபம் தணிகிறது!
இந்தக் கதை ஒரு புறமிருக்க, குருத்வாராவிற்கு சம்பந்தமான ஒரு கதையும் உண்டு!
அந்தக் கதை, இந்தக் கதை!
சீக்கிய குருமார்களில் ஒருவர் தனது இரண்டு சீடர்களுடன்
இப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் வேளையில் சீடரில் ஒருவரான மர்தானாவிற்கு பசி!
பக்கத்து கிராமத்தில் கோதுமை மாவு மட்டும் கிடைக்க அதை எப்படிச் சமைப்பது என்று
புரியவில்லை. அங்கே இருந்த பாறையை விலக்கும்படி குருஜி மர்தானாவிடம் சொல்ல, அங்கே
வெந்நீர் ஊற்று! கோதுமை மாவினை பிசைந்து சப்பாத்திகளாகத் தட்டி, வெந்நீர் ஊற்றுக்குள்
போட, அவை அடித்துக் கொண்டு போகிறது! சோகத்துடன் குருஜியைப் பார்க்க, ஆண்டவனிடம்
வேண்டிக்கொள், நல்லதே நடக்கும் என்று குருஜி சொன்னபடி, “நான் வெந்நீரில் போட்ட
சப்பாத்திகள் திரும்பி வந்தால், உங்கள் பெயரால், ஒரு சப்பாத்தியை நான் தானம்
செய்வேன்” என்று கூற தயாரான சப்பாத்திகள், மிதந்து வந்தனவாம்!
அன்றிலிருந்து இப்பகுதியில் வரும் அனைத்து பக்தர்களும், குரு கா லங்கர் என்று
அழைக்கப்படும் அன்னதானத்தில் தங்களது பங்காக எதையாவது கொடுத்துச் செல்வது
வழக்கமாகி இருக்கிறது!
கதைகள்... கேட்க
எப்பவுமே ஸ்வாரஸ்யம் தானே....
அந்தக் காலம் - கோவிலுக்கு வந்திருந்த ஒரு முதியவர்!
இந்தக் காலம் - கோவிலுக்கு வந்திருந்த ஒரு சிறுவன்!
கோவில், குருத்வாரா, வென்னீர் ஊற்று ஆகிய அனைத்தையும் பார்த்து, சுமார் ஒரு
மணி நேரத்திற்கும் மேலே அங்கே செலவிட்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டோம்.
ஹிமாச்சலப் பிரதேசம் சென்றால் மலைப்பகுதியில் செய்யும் பயணத்திற்காகவும், இந்த
வெந்நீர் ஊற்று, குருத்வாரா, கோவில் ஆகியவற்றைப் பார்ப்பதற்காகவும் ஒரு முறை
மணிக்கரண் சென்று வரலாம்! வாய்ப்பிருந்தால்
நிச்சயம் சென்று வாருங்கள். மணிக்கரணிலிருந்து புறப்பட்ட எங்கள் வாகனம் அடுத்ததாய்
எங்கே நின்றது, அங்கே என்ன செய்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்!
தொடர்ந்து பயணிப்போம்…..
நட்புடன்
வெங்கட்
திருவரங்கத்திலிருந்து....
திருவரங்கத்திலிருந்து....
அருமையான பயணம். வெந்நீர் ஊற்று கதைகள், குருத்துவாரா கதைகள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குபடங்கள் அழகு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குதொடர்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குவெந்நீர் ஊற்று அவசியம் ஒருமுறையேனும் பார்க்க வேண்டும் ஐயா
பதிலளிநீக்குநன்றி
தொடர்கிறேன்
முடிந்த போது சென்று வாருங்கள் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
வெந்நீர் ஊற்று ஆச்சர்யமாக இருக்கின்றது ஜி
பதிலளிநீக்குஇயற்கை இப்படி பல ஆச்சர்யங்களை தனக்குள் வைத்திருக்கிறது இல்லையா....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
அங்குலம் அங்குலமாக வர்ணனை..
பதிலளிநீக்குஇயற்கையின் அதிசயமான வெந்நீர் ஊற்று.. சிவ சந்நிதி.. குருத்வாரா!..
மிக்க மகிழ்ச்சி..
இன்னும் நிறைய விஷயங்கள் இங்கே உண்டு...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!
நீக்குவேறு எங்கோ இந்த மாதிரி வென்னீர் ஊற்றுகள் இருக்க்கிறதா படித்த நினைவு பல விஷயங்களை அறிகிறேன் நன்றி
பதிலளிநீக்குஹிமாச்சல் பகுதியில் பல இடங்களில் வெந்நீர் ஊற்று உண்டு. இத்தொடரில் பார்த்த பியாஸ் குண்ட் கூட வெந்நீர் ஊற்று உண்டு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.
வெந்நீர் ஊற்றுக்குண்டான கதைய இப்பதான் தெரிந்துக்கொண்டேன். படங்கள் அருமைண்ணே.
பதிலளிநீக்குநம்மூர் கோவில்ல கருவறையினுள் படமெடுக்க அனுமதிக்க மாட்டாங்களே! அங்க எப்பிடிண்ணே?!
இங்கேயும் பல இடங்களில் கருவறைக்குள் படம் எடுக்க அனுமதி இல்லை. இந்தக் கோவிலில் அப்படி தடை இல்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
பயணமும் படங்களும் மிக அழகு.. வோட்டும் போட்டு விட்டேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.
நீக்குnice story on anna dhaan ...
பதிலளிநீக்குwish i should be there ..
முடிந்தால் சென்று வாருங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.
நாங்களும் சென்றோம் ஜி மணிக்கிரண்...முதல் முறை சென்ற போது....இப்போது இன்னும் நன்றாக டெவேலெப். ஆகிருப்பது தெரிகிறது.ஜி....தொடர்கிறோம்....
பதிலளிநீக்குகீதா
மாற்றங்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறது - குறிப்பாக குருத்வாராக்களில் - கர்சேவா என்ற பெயரில் எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!
வெந்நீர் ஊற்று இயற்கையாய் உண்டானது ,மதங்கள் தங்களுக்கு ஏற்றவாறு கதைகளை உருவாக்கிக் கொள்கின்றன என்று தெரிகிறது :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!
நீக்குஉண்மையிலேயே உங்களைக் கண்டு (பொறாமை) பெருமைப் படுகிறேன் தாங்கள் சொல்லும் விதம் நேரில் காண்டதுபோல் உள்ளது!
பதிலளிநீக்குபொறாமையும் பெருமையும் ஒரு சேர! மகிழ்ச்சி ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
ஆச்சரியமான தகவல்களுடன் படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி! தொடர்கிறேன்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குமணிக்கரண் பற்றி மீண்டும் படித்து மகிழ்ந்தேன் ஜி
பதிலளிநீக்குமீண்டும் படித்து ரசித்தமைக்கு நன்றி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.