சனி, 22 ஏப்ரல், 2017

நடு ரோட்டில் பஸ்கி!


சாலைக்காட்சிகள் - 19


இவர் அவரல்ல....
படம்: இணையத்திலிருந்து...

இப்போதெல்லாம் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும்போது இரவு எட்டு மணிக்கு மேலாகி விடுகிறது – பெரும்பாலான நாட்களில். அதுவும் எனது அலுவலகம் இருக்கும் பகுதிகள் இந்தச் சமயத்தில் மக்கள் நடமாட்டம் கொஞ்சமே இருக்கும். பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருக்கும் போது ஒன்றிரண்டு பேர் மட்டுமே இருப்பார்கள். எப்போதுமே நாம் எந்தப் பேருந்துக்காகக் காத்திருக்கிறோமோ அந்தப் பேருந்து வராது – மற்ற எல்லாம் வரும்! சில சமயங்களில் அரை மணி நேரம் கூட, பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டியிருக்கும். கடந்த சில நாட்களாகவே இப்படி காத்திருக்கும் நேரம் – நடந்தே வீடு திரும்பியிருந்தால் உருப்படியாக ஏதாவது செய்திருக்கலாம்!

நேற்றைய முன் தினம், இரவு எட்டு மணிக்கு, பேருந்து நிலையத்தில் காத்திருக்கும்போது, என்னைத் தவிர இரண்டு மூன்று பேர் தான் இருந்தோம் – அதில் ஒரு பெண்மணியும். எதிர்புறத்திலிருந்து ஐம்பது, ஐம்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து வந்தார் – வித்தியாசமான உடை! கீழே Track suit! மேலே முண்டா பனியன். காலில் Leather Shoe! கைகளில் விதம் விதமான கயிறுகள், அதுவும் பல வண்ணங்களில்.  கழுத்திலும் கயிறுகள், தாயத்துகள் எனப் பலப் பல! வரும்போதே ஏதோ பேசியபடியே வந்தார். கிட்டே வந்ததும் தான் என்ன பேசுகிறார் என்பது தெரிந்தது! வேறொன்றுமில்லை – ஒரு Standard North Indian தனது பேச்சை ஆரம்பிக்கும் வசவு வார்த்தைகள் – ஹிந்தியில் சொன்னால் – Maa Behan ki Gaali! – அதாவது அம்மா மற்றும் சகோதரியை இழிவு படுத்தும் வசவுச் சொற்கள்! கொஞ்சம் சுதியில் இருப்பாரோ என்று சம்சயம்!

அவர் நாங்கள் நின்றிருந்த பேருந்து நிலையத்திற்கு வந்த பிறகு அங்கே காத்திருக்கும் அனைவரையும் ஒரு லுக்கு விட்டார் – தனியாக நின்றிருந்த பெண்மணியைக் கொஞ்சம் அதிகமாகவே லுக்கு! அந்தப் பெண்மணி அரண்டு போய் கொஞ்சம் நகர்ந்து நின்று கொண்டார். முண்டா பனியன் ஆசாமி தன்னந்தனியே பேசிக் கொண்டிருந்தார் – “என்னை யாருன்னு நினைச்சே…. உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன் பார்த்துக்க, ஒழிச்சுடுவேன்….” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார் – நடு நடுவே மானே தேனே, பொன்மானே மாதிரி வசவு வார்த்தைகள்! சரி என்ன தான் செய்யப் போகிறார் பார்க்கலாம் என்று நானும் மற்ற சிலரும் பார்த்துக் கொண்டிருந்தோம்.

பேருந்து வரும் வழியைக் காணோம்…. முண்டா பனியன் ஆசாமி தொடர்ந்து எதையோ பேசிக் கொண்டிருந்தார். அந்தப் பெண்மணியிடம் ஏதோ பேச முயல, அவர் இன்னும் கொஞ்சம் நகர்ந்து சென்றார். பதட்டம் அவரது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. நான் கொஞ்சம் முறைக்க, என்னைப் பார்த்து, வடிவேலு ஒரு படத்தில் சொல்வது போல, “என்னா லுக்கு! நான் யாரு தெரியுமா?” என்று அவராக பேசிக் கொண்டிருந்தார்.  திடீரென சாலையில் கீழே படுத்துக் கொண்டு, ஒரு கையை முதுகில் வைத்து, மற்ற கை விரல்களை மடக்கி தரையில் ஊன்றி, பஸ்கி எடுக்க ஆரம்பித்தார் – “ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு….”  எண்ணிக்கை வேறு!

”என்ன பார்க்கறே, இப்ப கூட நூறு பஸ்கி எடுப்பேன், எண்ணறீயா?” என்று பொதுவாகக் கேள்வி! யாரும் பதில் சொல்ல வில்லை. ஒதுங்கி நின்ற பெண்மணிக்கும் முகத்தில் கொஞ்சம் சிரிப்பு! நாங்களும் புன்னகைக்க, அவர் பஸ்கியைத் தொடர்ந்து கொண்டிருந்தார்! சாலையில் திடீரென பேருந்து வர, அதுவும் எனக்குத் தேவையான பேருந்து வர, இவரோ, அதே சாலையில் பஸ்கி எடுத்துக் கொண்டிருக்கிறார்! பேருந்து ஓட்டுனர் ஒலி எழுப்ப, தலையை மட்டும் தூக்கி, “ஏத்திடுவியா, ஏத்திடுவியா, என் மேலே ஏத்திடுவியா, ஏத்து பார்க்கலாம்! ஏத்து!” என்று சவால் விடுகிறார்! பேருந்து நின்ற பிறகு எழுந்திருந்து – “ம்ம்ம்.  அந்த பயம் இருக்கட்டும்!” என்று சத்தமாகச் சொல்லியபடி நான் ஏறிய அதே பேருந்தினுள் ஏறிக் கொண்டார்!

நான் பேருந்து நடத்துனரிடம் பயணச் சீட்டு வாங்கிக் கொண்டு முன்னே வர, ஓட்டுனர் அருகே பஸ்கி எடுத்த ஆசாமி! இன்னமும் தனியாக பேசியபடியே! ஓட்டுனர் அவரிடம் ”ஏய்யா இப்படி நடு ரோட்ல பஸ்கி, நான் ப்ரேக் போடலன்னா என்னா ஆவறது?” என்று கேட்க, இவர் பதில் சொல்லவே இல்லை! இரண்டு மூன்று நிறுத்தங்களுக்குப் பிறகு தானாகவே இறங்கிச் சென்றார். பயணச் சீட்டும் வாங்கவில்லை, அவரிடம் யாரும் கேட்கவும் இல்லை!

அவர் இறங்கிய பிறகு ஓட்டுனரிடம் பேச்சுக் கொடுக்க, “இன்னும் ஒரு ரவுண்ட் ட்ரிப் இருக்கு, இப்பவே இப்படின்னா, கடைசி ட்ரிப் இன்னும் அதிக குடிகாரர்களோடு மல்லுக்கட்டணும்…. தில்லி ரொம்பவே கெட்டுப் போச்சுங்க, பகல்லயே நிறைய பேரோட வாக்குவாதம், ராத்திரி ஆனா இப்படி குடிகாரங்கக் கிட்ட பேசறத விட சும்மா இருக்கலாம்! என்னா வாழ்க்கை இது” என்று அலுத்துக் கொண்டார்.

நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வர, இறங்கி சாலையை கடந்தால் நடைபாதையில் ஒரு ஆசாமி, நல்ல போதையில் தரை நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறார்! ம்ம்ம்… நடக்கட்டும். இன்னும் நல்லா கையை தூக்கித் தூக்கி நீச்சல் அடி என்று சொல்லியபடி நடந்து வீடு வந்து சேர்ந்தேன். அந்த ஓட்டுனர் சொன்னது போல, என்னா வாழ்க்கைடா இது! என்று தான் தோன்றியது – அந்த மனிதர்களின் வாழ்க்கையைச் சொன்னேன்!

நாளை வேறு ஒரு பதிவுடன் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

18 கருத்துகள்:

  1. அட, அங்கேயும் இந்தப் பிரச்னைதானா! அங்கேயும் கேஜரிவால் திறந்து வச்சிருக்காரா? ஆமாம், கேவா என்ன சத்தத்தையே காணோம்? என்ன பண்ணுகிறார்? அவர் பற்றி டெல்லி வாசிகளின் பொதுவான அபிப்ராயம் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டெல்லி வாசிகள் கே.வா.வை திட்டித் தீர்க்கிறார்கள்! :) தப்பான ஆளிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டோம் என! )

      இங்கேயும் அரசு தான் நடத்துகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு

  2. ஆஹா தமிழ் நாடு போல்தான்
    டில்லியுமா ?

    நாடு மொத்தத்தில் குடியால்
    நாறிக் கொண்டுதான் உள்ளது

    சொல்லிச் சென்றவிதம்
    மிக மிக அருமை

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாட்டின் பெரும்பாலான பகுதிகள் குடி மோகத்திலும், போதையிலும் தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்....

      நீக்கு
  4. நம்மூர்ல இது மாதிரியான காமெடி கூத்துகள் தினைக்கு நாலு பார்க்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தினைக்கு நாலு! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  5. எல்லா மாநிலங்களும், குஜராத் தவிர, இபடித்தான் போலும்..

    கீதா: .தமிழ் நாடு கேட்கவே வேண்டாம்...ஏதோ இங்கு டாஸ்மாக் மூடியதாக ச
    செய்தி அடிப்பட்டடது.....ஆனால் எங்கள் பகுதிக்கு அருகில் இன்னும் ஆக்ட்டிவாக இருக்கிறது....ஒவ்வொரு ஏரியாவிலும் போராட்டம் பண்ணினால் மூடுவார்களாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  6. எனக்கு குடிபோதையில் தடுமாறுபவர்களைக் கண்டால் இப்படி மானமிழந்து வாழ்கிறார்களே என்ற பரிதாபம் வரும். அதே சமயம் சிகரெட் குடிப்பவர்களைக் கண்டால் தானும் வீணாப்போய், அதைவிட அடுத்தவர்களின் உயிருக்கு உலை வைக்கிறார்களே என்று எரிச்சல் வரும். தமிழகம் மட்டுமல்ல தலைநகரும் குடிகார்ர்கள் பிரச்சனையைச் சந்திக்கிறது என்பது ஆறுதல்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  7. புதுவித அனுபவமா இருக்கு. வெளிநாடுகளில் இப்படியானோரை உடனடியா பொலீஸ் பிடித்து ஹொஸ்பிட்டலில் போட்டிடுவார்கள்.. நம் நாடுகளில்.. எதைத்தான் கவன்மெண்ட் கவனிப்பது.. கஸ்டம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே பிடிக்க மாட்டார்கள்! அவர்களும் சேர்ந்து கொள்வார்கள் - பணி முடிந்த பிறகு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  8. எல்லா இடத்திலும் குடிதான் அரசை ந்டத்துது போல...
    குடி மகன்கள் திருந்தப் போவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு

  9. வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதுபோல் தலைநகரிலும் இது போன்ற காட்சிகள் அரங்கேறுகிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைநகர் மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளிலும் இது உண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....