வெள்ளி, 21 ஏப்ரல், 2017

ஹனிமூன் தேசம் – மால் ரோடு, மணாலி – ஆப்பிள் பர்ஃபி

ஹனிமூன் தேசம் – பகுதி 19

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!


மால் ரோடு, மணாலி.....
 
தேவதாரு மரங்கள் நிரம்பிய ஹடிம்பாவின் கோவில், மர ரூபத்தில் இருக்கும் கடோத்கஜன் ஆகிய இடங்களைப் பார்த்த பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். நிறைய கடைகள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் கடைகள் அப்பகுதியில் இருந்தது. சில கடைகளில் குழந்தைகளுக்காகவே – துப்பாக்கியால் பலூன் சுடும் வசதியும் இருந்தது. எங்கள் குழுவினரில் இருந்த இரண்டு பெண்கள் துப்பாக்கி ஏந்தி பலூன் சுட்டார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்ட எங்களை வாடகைக்கு அமர்ந்தி இருந்த வாகன ஓட்டுனர்கள் தங்குமிடத்தில் கொண்டு விடவேண்டுமா எனக் கேட்க, நாங்கள் சொன்ன இடம் வேறு – அது மால் ரோடு!


மால் ரோடு, மணாலி.....
படம்: இணையத்திலிருந்து....

ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்ட சமயத்தில், அவர்களுக்கு தில்லியின் சூடு ஒத்துக்கொண்டதில்லை. பெரும்பாலான கோடை நாட்களில் தலைநகரிலிருந்து புறப்பட்டு இது போன்ற கோடை வாசஸ்தலங்களுக்கு வந்து விடுவார்கள்! வடக்கில் இது போன்ற இடங்கள் நிறையவே உண்டு – ஷிம்லா, நைனிதால், மசூரி, மணாலி என இப்படி ஏற்படுத்தப்பட்ட இடங்கள் அனைத்திலும் ஒரு பொதுவான விஷயம் என்றால் அது இந்த இடங்கள் அனைத்திலும் இருக்கும் மால் ரோடு! மணாலியிலும் இப்படி ஒரு மால் ரோடு இருக்கிறது.  அந்த மால் ரோடு முழுவதும் இருபுறமும் விதம் விதமாய் கடைகள்.  வாகன ஓட்டிகளிடம் எங்களை மால் ரோட்டில் விட்டு விடுங்கள் என்று சொல்ல, அவர்களுக்கும் அது வசதியாகப் போயிற்று!

மால் ரோடு, மணாலி.....
படம்: இணையத்திலிருந்து....

எங்களை மால் ரோடு ஆரம்பிக்கும் இடத்தில் விட்டு அவர்கள் புறப்பட நாங்கள் மால் ரோடில் நடக்க ஆரம்பித்தோம். மால் ரோடில் ஒரு வசதி – அதில் சாலைப் போக்குவரத்து கிடையாது. நடக்க மட்டும் தான் முடியும் என்பதால் சாலை முழுவதுமே நடைபாதை தான்! இரு புறமும் கடைகள், குளிர்கால உடைகள் விற்பனை செய்பவை, உணவுக்கான கடைகள், நினைவுப் பரிசுகள் வாங்க வசதி என நிறைய கடைகள். கடைகளைப் பார்த்துவிட்டால் ஷாப்பிங் தானே! அனைவரும் கடைகளுக்குள் நுழைய நானும் இன்னும் சில நண்பர்களும் சாலை ஓரத்தில் உள்ள நடைபாதையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.

மால் ரோடு, மணாலி.....
பனிப்பொழிவு நாளில்...
படம்: இணையத்திலிருந்து....

எத்தனை விதமான பொருட்கள் விற்பனைக்கு இருக்கிறது. மனிதர்களின் தேவைகளும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. முன்பெல்லாம் ஒருவருக்கு பத்து உடை இருந்தால் அதிகம். இப்போதெல்லாம் ஒரு நாள் போட்ட உடையை மீண்டும் போட, ஒரு மாதமோ, ஒரு வருடமோ ஆகும்! எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி, ஜனவரி 1-ஆம் தேதி ஒரு புடவையைக் கட்டினால், அந்த புடவை அடுத்த ஜனவரி 1 ஒன்று தான் அதை அடுத்த முறை கட்டுவார்! அவ்வளவு புடவைகள், உடைகள்! பெண்களிடம் மட்டுமல்ல, ஆண்களிடமும் இப்படி உடைகள் அதிகரித்து விட்டன என்று தான் சொல்ல வேண்டும்!


அப்பா அம்மா ஷாப்பிங்.......
குழந்தை இருட்டிலும் மொபைலில் விளையாட்டு!
மால் ரோடு, மணாலி.....

வந்திருந்த அனைவருமே ஏதேதோ உடைகள் வாங்கிக் கொண்டிருக்க, நானும் சில சுடிதார் மெட்டீரியல்கள் வாங்கிக் கொண்டேன் – மனைவிக்கும் மகளுக்கும். பெரும்பாலும் உடைகள் தேர்வு செய்வதில் எனக்கு அத்தனை பொறுமை கிடையாது. ஒன்றிரண்டு மட்டும் பார்த்து அதில் ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுப்பது தான் வழக்கம். அதனால் தேர்ந்தெடுக்கும் பொறுப்பினை குழுவில் வந்த பெண்மணிகளிடம் விட்டுவிட்டேன். பலவற்றைப் பார்த்து அவர்கள் தேர்ந்தெடுத்த சிலவற்றில் சிலதை வாங்கிக் கொண்டேன்.


சொல்லவரும் விஷயம் முக்கியம்... ஸ்பெல்லிங் அல்ல!
மால் ரோடு, மணாலி.....

துணிமணி, வீட்டுக்குத் தேவையான அலங்காரப் பொருட்கள், குளிர்கால உடைகள் என விற்பது தவிர, இங்கே நிறைய உலர்பழங்களும் விற்பனைக்கு வைத்திருப்பார்கள். பல கடைகளில் இருப்பவர்கள் உங்களை ஏமாற்றக் கூடும் என்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும் – குறிப்பாக உலர் பழங்கள் வாங்கும்போது அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதன் தரம் குறித்து நமக்கு அவ்வளவு தெரியாதே. மலைப் பூண்டு கூட இங்கே கிடைக்கிறது. பாதாம், பிஸ்தா, அக்ரூட், உலர் திராட்சை என பலவிதப் பொருட்களுக்கான கடைகளும் இங்கே உண்டு.

ஆப்பிள் பர்ஃபி.....

ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு இங்கே ஆப்பிள் மரங்கள் கிடையாது. அவர்கள் தான் இங்கே ஆப்பிள் பயிரிடுவதை ஆரம்பித்து வைத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் அந்த ஆப்பிள் வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை நம்மவர்கள் தான் கண்டுபிடித்து இருப்பார்கள் என நினைக்கிறேன்! பாருங்களேன், ஆப்பிள் வைத்து பர்ஃபி செய்து விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள் இங்கே! ஆப்பிள் பர்ஃபி இங்கே ரொம்பவே புகழ்பெற்ற இனிப்பு வகை. நாங்களும் கொஞ்சம் ஆப்பிள் பர்ஃபி மற்ற இனிப்பு வகைகள் வாங்கிக் கொண்டோம். மணாலி சென்றால் நிச்சயம் ருசிக்க வேண்டிய இனிப்பு இந்த ஆப்பிள் பர்ஃபி.


ஷாப்பிங்க் போகலாமா...
மால் ரோடு, மணாலி.....
படம்: இணையத்திலிருந்து....

ஒரு வழியாக ஷாப்பிங்க் முடிந்தது, நாள் முழுவதும் சில இடங்களுக்குச் சென்று, நிறைய மகிழ்வான தருணங்களுடன் அன்றைய நாள் முடிவுக்கு வந்தது. கொஞ்சம் ஓய்வு தேவை தானே.  மால் ரோடில் இருந்து புறப்படும் முன்னர் ஜோதியை அலைபேசியில் அழைக்க மால் ரோடின் மற்ற முனையில் வண்டியுடன் காத்திருப்பதாகச் சொன்னார். காலாற நடந்து வந்து வாகனத்தில் ஏறிக்கொண்டு நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தோம். இரவு உணவுக்கான தேவைகளை பணிபுரிபவரிடம் சொல்ல, அவர் அரை மணி நேரத்தில் தயாராகும் என்று சொல்லிச் சென்றார். 


Camp fire.....
படம்: இணையத்திலிருந்து...

அனைவரும் அங்கே இருந்த ஹாலில் கூடி, அன்றைய பொழுதின் நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டிருந்தோம். ஒரு Camp Fire ஏற்பாடு செய்ய முடியுமா என்று தங்குமிட உரிமையாளரிடம் கேட்க, வெளியே முடியாது என்றும், தங்குமிடத்தின் உள்ளே இருக்கும் Fire Place-ஐ வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சொல்ல, அதில் அத்தனை மஜா இருக்காது என்பதால் – வெளியே நடுவில் Camp fire இருந்தால் சுற்றி வந்து கும்மியடித்து, பாடல், ஆடல் என இருக்க முடியும் – அறைக்குள் இருப்பது ஒரு சுவற்றில் என்பதால் சுற்றி எல்லாம் வர முடியாது! மேலும் அதற்குக் கேட்ட கட்டணமும் மிக அதிகம், என்பதால் வேண்டாம் என்று சொல்லி விட்டோம். Camp Fire இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் எஞ்சாய் செய்திருக்கலாம்! என்றாலும் சில விஷயங்கள் நம் கையில் இல்லை!

இரவு உணவு வர, அனைவரும் பகிர்ந்து உண்டு, குளிருக்கு அடக்கமாக ரஜாய்க்குள் புகுந்து கொண்டோம்! காலையில் சீக்கிரம் புறப்பட வேண்டும். அடுத்த நாள் – எங்கே சென்றோம், என்ன பார்க்கப் போகிறோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

22 கருத்துகள்:

  1. ஆப்பிள் ஃபர்பி அல்வா மாதிரி இருக்கிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  2. தொடர்கிறேன். வித்தியாசமாய் ஏதாவது விற்பனை இருந்ததா? வழக்கமான ஸ்வீட், ஸ்வெட்டர், துணி வகையறாக்கள் தவிர?

    தம இன்னும் சப்மிட் ஆகவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னென்னமோ பொருட்கள் அங்கே இருந்தன. வித்தியாசமாக இருந்தது என்று குறிப்பாகச் சொல்ல முடியவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. படங்கள் அருமை ஐயா
    வாகனப் போக்குவரத்து இல்லாத மால் ரோடு
    நன்றாகத்தான் இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

      நீக்கு
  5. ரொம்ப அழகா இருக்குதே மால் ரோடு! பெண்களுக்கு நிறைய இருக்கும் போலத் தெரியுது. பயணக் குறிப்புகள் அருமை தொடர்கிறோம்.

    கீதா: மால் ரோடு மிகவும் சுவாரஸ்யமான ஒன்று அங்கு வாங்குவதென்றால் கஷ்மீரி எம்ப்ராய்டரி/பாஷ்மினா போட்ட சல்வார் மெட்டீரியல்கள்...ஆனால் அங்கும் இங்கு சொல்வது போல்தான் விலை இருந்தது. குறைவு என்று சொல்ல முடியாது என்றாலும் ஒரு சில நன்றாக இருந்தன. வாங்கும் அளவில். ஆப்பிள் ஃபெஸ்டிவல் நடந்தது அங்கு நாங்கள் சென்றிருந்த போது ஆப்பிளில் பல வகையான இனிப்புகள், கார வகைகள்..என்று சுவாரஸ்யமாகவும், நன்றாகவும் இருந்தது. அன்று ஃபெஸ்ட் முடியும் நாள் என்பதால் மாலை அவர்கள் ஊர் டான்ஸ் இசை என்று நாங்கள் பார்க்க முடிந்தது. ஃப்ரீய்யாக நடக்க முடிந்தது ஆம் போக்குவரத்து இல்லாததால்.... மகன் இன்னும் எனக்கு அனுப்பியபாடில்லை புகைப்படங்களை. நான் எடுத்தவைதான்...அவனது கணினியில் இருப்பதால்...

    குட்டி குட்டி பச்சை ஆப்பிள்/சிவப்பு ஆப்பிள் நல்ல இனிப்பாக இருந்தது. அதன் ஜூசும் நன்றாக இருந்தது. ஆப்பிள் பை என்று கேக் எல்லாம் செய்திருந்தார்கள். பெரிய பெரிய அனார் காந்தார் அனார் என்று வைத்திருந்தார்கள். வித விதமான ஆப்பிள்கள் என்று சுவாரஸ்யமாக இருந்தது.

    அருமையான குறிப்புகள்...தொடர்கிறோம் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் சென்றது ஆப்பிள் பூ அரும்பும் காலத்தில். ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் சென்றால் ஆப்பிள் பழமாகக் கிடைக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  6. படங்கள் செய்திகள் அருமை.படங்கள் எல்லாம் மிக அழகு.
    ஆப்பிள் அல்வா பார்க்க அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  8. கூடவே பயணிக்கிறோம் நாகராஜ்!- இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய. செல்லப்பா ஐயா.

      நீக்கு
  9. மால் ரோட்... மணாலி பார்க்க ஆசையா இருக்கு.. சூப்பரா சொப்பிங் செய்யலாம்போல இருக்கே... படங்கள் அனைத்தும் அருமை.. ஆனா ஏன் இங்கு மட்டும் நீங்க படம் எடுக்கவில்லை...?:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போன பகுதி ஒழுங்கா படிக்கலைன்னு தெரியுது..... Battery காலி என்று எழுதி இருந்தேன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா...

      நீக்கு
  10. மால் ரோடில் கிடக்காத பொருளே இல்லை போல் இருக்கிறதே. தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னென்னமோ கிடைக்கிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  11. சுவாரஸ்யமான பதிவு. தொடர்கிறேன். btw. சென்ற பதிவிற்கு நான் அனுப்பிய கமெண்ட் வரவில்லையே, ஏன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியவில்லை. வந்த கருத்துகள் அனைத்துமே வெளியிட்டு விட்டேன்... சில சமயங்களில் இப்படித்தான் ஆகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....