புதன், 19 ஏப்ரல், 2017

ஹனிமூன் தேசம் – ஹடிம்பாவின் காலடி – இப்படியும் தண்டனை - யாக்!


ஹனிமூன் தேசம் – பகுதி 18

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!


ஹடிம்பா தேவி கோவில்....
 
ஹடிம்பாவின் கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசை.  வளைந்து நெளிந்து செல்லும் வரிசையில் நின்று செல்ல, எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும் என்று தெரிந்தது. என்னுடன் வந்தவர்கள் அனைவரும் வரிசையில் நிற்க, நான் கையில் கேமராவுடன் அங்கும் இங்கும் திரிந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு சர்தார்ஜி என்னிடம் வந்து “உங்களைப் பார்த்தால் இந்த ஊர் போலத் தெரியவில்லையே, இங்கே என்னென்ன பார்த்தீர்கள்” என ஆங்கிலத்தில் ஆரம்பித்தார்! ஹிந்தியில் பதில் சொல்ல, அவருக்கு ஆச்சரியம் – “உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?” எனக் கேட்க, “உங்கள் மொழியான பஞ்சாபி கூட எனக்குப் புரியும்!” என்று நான் சொல்ல இப்படியே எங்கள் பேச்சு தொடர்ந்தது.


மிருகங்களின் தலைகளும் கொம்புகளும் கேடயங்களாக
ஹடிம்பா தேவி கோவில்....

அவர் தனது பயண அனுபவங்களைச் சொல்ல, நான் எனது பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள, அப்படியே எங்களுக்குள் பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது. வரிசையும் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து எங்கள் குழுவினர் கோவிலின் வாசல் பகுதிக்கு வந்திருந்தார்கள்.  அங்கே இன்னுமொரு தில்லி நண்பரும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பரது குடும்பத்தினரோடு குலூ-மணாலி வந்திருந்தார்கள் – அவர்களையும் அங்கே வரிசையில் பார்க்க அவர்களோடும் சில நிமிடங்கள் பேசினோம். கோவில் வாசலில் சென்ற பதிவில் சொன்னது போல நிறைய மிருகங்களின் தலைகள் மாட்டி வைத்திருக்கிறார்கள். அவை நம்மையே பார்ப்பது போல ஒரு பிரமை. 


மான் கண்டேன்... மான் கண்டேன்!
ஹடிம்பா தேவி கோவில்....

கொம்புகள் - பயமுறுத்துகின்றனவா?
ஹடிம்பா தேவி கோவில்....

அவற்றை எல்லாம் படம் பிடிக்கலாம் எனப் பார்த்தால், எனது கேமராவின் பேட்டரி “நான் காலி!” என்று சிவப்பு எழுத்துகளில் மின்னியது! வேறு Standby பேட்டரி என்னிடம் இல்லாதது ஒரு பெரிய குறை! நல்ல வேளையாக நண்பரின் மகள் வைத்திருந்த காமிராவில் அத்தனை புகைப்படங்கள் எடுக்காததால் பேட்டரி இருக்க, அவரிடமிருந்து கேமராவினை வாங்கி நான் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். ”அதெல்லாம் சரி, சென்ற பகுதியை முடிக்கும்போது இன்னும் கதை சொல்கிறேன் என்று சொல்லி இருந்தாயே, அந்த கதை என்ன ஆச்சு?”, என்று நீங்கள் கேட்பதற்கு முன்னால் கதைக்கு வருகிறேன்!

குளிர்காலத்தில் ஹடிம்பா தேவி கோவில்....
படம்: இணையத்திலிருந்து....

இந்த வனப்பகுதிக்கு டுங்க்ரி வனம் என்ற பெயர். பீமன் ஹடிம்பாவைத் திருமணம் செய்து கொண்டாலும், கடோத்கஜன் பிறந்த பிறகு, அங்கிருந்து தனது வனவாசத்தினை முடிக்க, அப்பகுதியை தனது மகன் மற்றும் மனைவியிடம் தந்து சகோதரர்களுடனும், தனது தாயார் மற்றும் பாஞ்சாலியுடனும் புறப்படுகிறான். தங்களது குடிமக்களைக் காக்கும் சீரிய பொறுப்பினை தொடர்ந்து செய்கிறாள் ஹடிம்பா. இப்பகுதி மக்களுக்கு அவள் தான் தெய்வம். துர்கையின் ரூபம்! இந்த வனப்பகுதியில், பூமியைப் பிளந்து கொண்டிருக்கும் ஒரு பாறை மீது தான் இந்தக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. பாறை மீது ஹடிம்பாவின் காலடித் தடங்கள் உண்டு.



ஹடிம்பா தேவி கோவில் உட்புறம்....
படம்: இணையத்திலிருந்து....

மிகச் சிறிய ஒரு உருவ பொம்மையும் அங்கே உண்டு. பாறைக்கு மேலே ஒரு கயிறு தொங்கிக் கொண்டிருக்கிறது. அங்கே கயிறு எதற்கு என்று கேட்பவர்களுக்கு, முன்பெல்லாம் தவறு செய்பவர்களை இங்கே அழைத்து வந்து கைகளை கயிற்றில் கட்டி பாறை மீது தள்ளி [மோதச் செய்வார்கள்] விடுவார்கள் என்று சொல்கிறார்கள். நல்ல வேளை இப்போதெல்லாம் அப்படிச் செய்வதில்லை. அப்படி தண்டனை தருவதென்றால், நம் மக்கள் அனைவருக்குமே தண்டனை தர வேண்டும்! குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு!


ஹடிம்பா தேவி கோவில்....

நல்ல வேளையாக இந்தக் கோவில் ராஜா பகதூர் சிங் 1553-ஆம் ஆண்டில் எப்படிக் கட்டினாரோ அப்படியே பராமரிக்கப்பட்டு வருகிறது. சுற்றிலும் மரத்தினால் கட்டப்பட்ட கோவில். மேலே நான்கு நிலைகளில் கோபுரம். முதல் மூன்று மரத்தினாலும், நான்காவது உலோகத்தினாலும் ஆனது! மரக் கதவுகள் மற்றும் சாளரங்கள் அனைத்திலும் அழகிய உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சென்ற பகுதியில் சொன்னது போல, எங்கிலும் மிருகங்களின் தலைகளும், கொம்புகளும் மாட்டி வைக்கப்பட்டுள்ளன.  டுங்க்ரி வனப்பகுதியில் அமைந்திருக்கும் இக்கோவில் அமைதியான சூழலில் இருக்கிறது. மணாலி சென்று பனிச்சிகரங்களை மட்டும் கண்டு வந்தால் உங்கள் பயணம் முற்றுப்பெறாது – இங்கேயும் நிச்சயம் வர வேண்டும் – வனத்தினை ரசிப்பதற்காகவாது!

ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் ஹடிம்பா தேவி, மற்றும் சிலர்!...
படம்: இணையத்திலிருந்து....

இங்கே ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் ஹடிம்பா தேவியின் பிறந்த நாள் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த பண்டிகை நாட்களில் சுற்று வட்டாரத்தில் இருக்கும் அத்தனை கிராம மக்களும் இங்கே வந்து விடுவார்கள். ஆடல், பாடல் நிகழ்ச்சிகளோடு மிகவும் கோலாகலமான கொண்டாட்டமாக இருக்கும் என்பதை ஹிமாச்சல் நண்பர்கள் சொல்லக் கேட்டதுண்டு. இங்கே நடக்கும் இன்னுமொரு திருவிழா, இந்தக் கோவிலைக் கட்டிய ராஜா பகதூர் சிங் அவர்களின் நினைவாக நடப்பது. அந்தத் திருவிழா ஸ்ரவண மாதம் என்று அழைக்கப்படும் மாதங்களில் [ஜூலை-ஆகஸ்ட்] நடைபெறுகிறது. திருவிழா சமயங்களில் இங்கே சென்றால் பல்வேறு நிகழ்வுகளை ரசிக்கலாம் என்றாலும் பனிப்பொழிவு பார்க்க இயலாது! ஒன்றிருந்தால் மற்றது கிடைக்காது!


மர ரூபத்தில் கடோத்கஜன்....
படம்: இணையத்திலிருந்து....

ஹடிம்பா தேவியிடம் பிரார்த்தனை செய்து அங்கிருந்து சற்றே தொலைவில் இருக்கும் கடோத்கஜன் கோவில் [ஒரு மரத்தடியில் தான்!] சென்று அங்கேயும் பிரார்த்தனை செய்து கொண்டோம்.  இந்தப் பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்க இன்னுமொரு விஷயமும் உண்டு! அது என்ன? இங்கே சிலர் யாக் என அழைக்கப்படும் சடை எருமைகளை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருப்பார்கள். அவற்றின் மீது அமர்ந்து நீங்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்! ஒரு சுற்று வரலாம்! அதை ஏன் படுத்துவானேன் என்று நான் மேலே அமர்ந்து கொள்ளவில்லை!


சுற்றுலாப் பயணிக்குக் காத்திருக்கும் யாக்!
ஹடிம்பா தேவி கோவில்....

ஹடிம்பா தேவி, கடோத்கஜன் ஆகிய இருவருடைய வழிபாட்டுத் தலங்களையும் ரசித்த பிறகு மெதுவாக வாகனம் நிறுத்தி இருந்த இடத்திற்கு நடந்தோம். வழியில் இருந்த கடையில் கொஞ்சம் தேநீர்! தேநீர் இல்லாமல் இந்தக் குளிர்ப்பிரதேசத்தில் முடிவதில்லை!  இந்தக் கோவிலுக்கு அருகிலேயே இன்னுமொரு கோவிலும் இருக்கிறது – அது மனு கோவில்! ரிஷி மனுவின் கோவில். அங்கே நாங்கள் செல்லவில்லை! கோவில் மூடி இருப்பார்கள் என்று தெரிந்ததால் அங்கே செல்லாமல் வாகனத்தினை நோக்கி நடந்தோம். அங்கிருந்து எங்கே சென்றோம் என்பதை வரும் பகுதியில் சொல்லட்டா!

தொடர்ந்து பயணிப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

18 கருத்துகள்:

  1. தகவல்கள் அனைத்தும் சுவாரஸ்யம்.... நன்றி ஜி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. நல்லவேளை சடை எருமை பிழைத்துப் போனது!..
    ஹடிம்பா தேவியின் கோயில் பற்றிய செய்திகள் சிறப்பு..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வேளை சடை எருமை பிழைத்தது! :) ஆனால் நிறைய பேர் அதில் உட்கார்ந்து புகைப்படம் எடுத்தபடியே தான் இருப்பார்கள்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  4. படங்களும் தகவல்களும் அருமை வெங்கட்ஜி...தொடர்கிறோம்...

    கீதா: ஆம் ஜி அங்கு நிறைய விலங்குகள் முகங்கள் மாட்டப்பட்டிருக்கும். முதலில் ம்யூசியம் என்று நினைத்தேன் ...முதல் தடவை சென்ற போது அப்புறம் கோயில் என்று தெரிந்தது...யாக் ஆம்..நாங்கள் ஏறவில்லை பாவம் அது....மகன் முதல் தடவை சென்ற போது இரண்டரை வயதுதான் என்பதால் அவனது ஆசைக்காக அவனை ஏற்றி கொஞ்சம் சுற்றி வந்தார்கள். இரண்டாம் முறை போன போது பெரியவன் ஆகிவிட்டதால் ஏறவில்லை...குஃப்ரி கூட முதலில் குதிரையில் தான் செல்ல வேண்டும் என்றதால் செல்லவில்லை..குதிரைகளிலும் ஏற்றிச் சென்றார்கள்....ஏற்றம் மிகுதியாக இருந்தது சகதியும் இருந்தது. அப்புறம் ஜீப்பில் சென்றோம்...உங்கள் பயணத் தொடர் அருமையாகச் செல்கிறது..

    மீண்டும் நினைவுகள் உங்கள் பதிவுகளை வாசிக்கும் போது...தொடர்கிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  5. கதை கதையாம் காரணமாம் ,எப்படியோ வியாபாரம் ஓடுகிறது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  6. சுவாரஸ்யமான தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி! தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  7. ஹடிம்பா தேவி, கடோத்கஜன் ஆகிய இருவருடைய வழிபாட்டுத் தலங்களையும்

    ...நாங்களும் ரசித்தோம் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  8. நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது... அந்த குட்டி ரக மாடு சூப்பர். இங்கும் இப்படி குட்டி ரக குதிரை பார்த்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  9. சுவாரஸ்யம். தொடர்கிறேன். இடும்பியின் பிறந்த நாளை நினைவு வைத்திருக்கிறார்கள் பாருங்களேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடும்பியின் பிறந்த நாள்! :) எல்லாம் நம்பிக்கை தானே.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....