வெள்ளி, 11 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – கிர் காட்டுக்குள் – கண்டேன் சிங்கங்களை


இரு மாநில பயணம் – பகுதி – 37

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!



முந்தைய பதிவில் சொன்னது போல, சாஸன் Gகிர் வனப்பயணத்திற்காக, எங்களுக்குக் கிடைத்த Route – பாதையின் எண் இரண்டு – ஏழு பாதைகளில் எங்களுக்குக் கிடைத்த பாதையில் பயணித்துக் கொண்டிருந்தோம். சிங்கங்கள் எங்களுக்குக் காட்சி கொடுக்குமா, கொடுக்காதா என்ற எண்ணமே அனைவருக்கும் இருந்தது. காலை நேரத்திலேயெ பயணிப்பதால் கொஞ்சம் குளிரும் இருந்தது – பொதுவாக வனப்பகுதிக்குள் குளிர் சற்று அதிகமாகவே இருக்கும் என்பதால் அதற்குத் தகுந்த உடை அணிந்து செல்வது நல்லது. அதைப் போலவே சிவப்பு வண்ண உடைகளையும் தவிர்ப்பது நல்லது! மிருகங்களுக்கு சிவப்பு வண்ணம் பார்த்தால் “ஆஹா நமக்கு இரை கிடைச்சுதடா!” என்று உங்கள் மேல் தாவிட வாய்ப்புண்டு!






எங்களுடன் வந்திருந்த வழிகாட்டி தேவ்சியாவிடம் பேச்சுக் கொடுத்தேன்.  சிங்கங்கள் மனிதர்களை தாக்குவதில்லை – விலங்குகளை மட்டுமே தாக்குகின்றன. மனிதர்களோடு நட்பாகவே இருக்கின்றன – ”உன் வம்புக்கு நான் வரலை, என் வம்புக்கு நீ வராதே” பாலிசி தான். காட்டுக்குள்ளேயே சில ஆதிவாசி குடும்பங்கள் வசிக்கிறார்கள். அவர்கள் எருமைகளையும் பசுக்களையும் வளர்த்து, அதன் பாலை விற்பனை செய்கிறார்கள். அவர்கள் வனத்திற்குள்ளேயே தங்குவதால் வெளியே வந்து போக தனி அனுமதிச் சீட்டு வைத்திருக்கிறார்கள். இரு சக்கர வாகனங்களும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிங்கங்கள் அவர்களது ஆடு மாடுகளை அடித்துச் சாப்பிட்டாலும் மனிதர்களை தொந்தரவு செய்வதில்லை என்று தகவல் தந்தார்.  




எங்களுடன் பேசியபடியே நடுநடுவே மான்களையும் மயில்களையும் காண்பித்த படியே வந்தார். அவர்கள் அரசு ஊழியர்களா என்ற வினாவினை நண்பர் எழுப்ப, Forest Ranger-கள் மட்டுமே அரசு ஊழியர்கள், நாங்கள் – அதாவது வழிகாட்டி, ஜிப்சி ஓட்டுனர்கள் எல்லோரும் அரசு ஊழியர்கள் அல்ல, எங்களுக்கு அரசு சம்பளம் கிடையாது. சுற்றுலா பயணிகளிடம் இருந்து வாங்கி எங்களுக்குத் தருவார்கள் நாள் ஒன்றுக்கு மூன்று வனப் பயணம் இருந்தாலும், எல்லோருக்கும் மூன்று பயணங்களிலும் சுற்றுலா பயணிகளுடன் செல்லும் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஒரு சில நாட்களில் ஒரு முறை கூடக் கிடைக்காமல் போவதுண்டு என்று தன் சொந்தக் கதை, சோகக் கதையைச் சொல்லிக் கொண்டு வந்தார். பேசிக் கொண்டே வந்த எங்களைத் தாண்டி அரசின் வன அலுவலர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்றார்.




சில நிமிடங்களில் ஒரு வளைவில் பார்த்தால் அந்த வன அலுவலர் தனது வாகனத்தினை நிறுத்தி பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். எங்கள் வாகனத்தினையும் சைகையில் நிறுத்தச் சொன்னார். வண்டி மெதுவாக ஊர்ந்து நின்றது. கிட்டத்தட்ட 10 அடி தொலைவில் சிங்கங்கள் – மொத்தம் எட்டு சிங்கங்கள் – மர நிழலிலும் பாதையிலும் படுத்துக் கொண்டும் உட்கார்ந்து கொண்டும் இருந்தன – அனைத்தும் விழித்துக் கொண்டு தான் இருந்தன.  தேவ்சியா எங்கள் அனைவரையும் பேசாமல் இருக்கும்படி சைகையில் சொன்னார். ஓட்டுனர் கிம் Bபாய் எவ்வளவு அருகில் செல்ல முடியுமோ அந்த அளவு அருகே வாகனத்தினை நிறுத்தி இருந்தார். வன அலுவரும் அங்கே பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தார் – அவர் கையில் ஒரு ஈட்டி மட்டும் தற்காப்புக்காக!



சிங்கத்தின் பாதச் சுவடுகள்.... 

ஆஹா இன்றைக்கு நல்ல வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது – எவ்வளவு புகைப்படம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என மெல்லிய குரலில் சொல்ல, நானும் நண்பர் ப்ரமோத்-உம் அவரவர் கேமராக்களில் தொடர்ந்து படங்களை எடுத்துத் தள்ளினோம். எத்தனை புகைப்படங்கள் எடுத்தோம் என அளவில்லை! நிறைய முறை இப்படி வனப்பயணங்கள் – வேறு வேறு மாநிலங்களில் சென்றிருந்தாலும் சிங்கம் போன்ற மிருகங்களை இவ்வளவு அருகில் பார்த்ததில்லை. இதுவே முதல் முறை இப்படி மிக அருகில் நான் பார்க்கிறேன். கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்கு மேல் அங்கேயே நின்று கொண்டிருந்தது எங்கள் வாகனம். சிங்கங்களை காமிரா வழியே பார்த்தது மட்டுமன்றி அவற்றின் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டே இருக்க அலுக்கவே இல்லை.



என்னதான் வனவிலங்கு சரணாலயங்களில் இப்படி சிங்கங்களை பார்த்திருந்தாலும் நமக்கும் அதற்கும் தடுப்பு இல்லாமல் இப்படி வெகு அருகில் பார்க்க வாய்ப்பு கிடைப்பது அரிது தானே.  அதனால் அந்த இடத்தினை விட்டு நகர எங்களுக்கு மனதே இல்லை. பதினைந்து நிமிடங்கள் அங்கேயே நின்று வேண்டிய அளவு புகைப்படங்களை எடுத்துக் கொண்ட பிறகு அங்கிருந்து வாகனத்தினை மெல்ல நகர்ந்தினார். வழியில் அமர்ந்திருந்த ஒரு சிங்கம் எழுந்து நின்று வாகனம் நோக்கி நடந்தது! இரண்டே இரண்டு மீட்டர் அருகே சிங்கம்! புகைப்படம் எடுக்க வெளியே ஒருவர் கையை நீட்ட உள்ளே வைக்கும்படிச் சொன்னார். நாங்கள் சென்ற ஜிப்சி – ஒரு Open ஜிப்ஸி என்பதையும் இங்கே சொல்லி விடுகிறேன். ஒரு அறை விட்டால் அவ்வளவு தான்!



எங்கள் வாகனம் தான் முதலில் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது. எங்களுக்குப் பிறகு வந்த வாகனங்கள் அங்கே சில நிமிடங்கள் நின்று புறப்பட்டன. அனைவருக்கும் சிங்கங்களை அவ்வளவு அருகே பார்த்ததில் மகிழ்ச்சி. வனத்திற்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே சிங்கங்களைப் பார்த்ததால் வனத்திற்குள் இன்னும் வேறு விலங்குகளையும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கூட எங்களுக்கு இல்லை! இவ்வளவு அருகே சிங்கங்களைப் பார்த்த மகிழ்ச்சியுடன் அனைவரும் முன்னே வனப்பயணத்தினைத் தொடர்ந்தோம். இந்தப் பகுதியில் கொடுத்திருக்கும் படங்கள் அனைத்தும் நான் எடுத்தவை. நண்பர் ப்ரமோத் எடுத்த படங்கள் அடுத்த பதிவில் இணைக்கிறேன். பயணத்தில் பார்த்த மற்ற விலங்குகள், பறவைகள் பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
       
தொடர்ந்து பயணிப்போம்.
 
நட்புடன்

வெங்கட்
தமிழகத்திலிருந்து....

36 கருத்துகள்:

  1. குட்மார்னிங்க் வெங்கட்ஜி!!

    கண்டேன் சீதையைனு அனுமார் சொன்னது போல கண்டேன் சிங்கங்கங்களைனு தலைப்பு பார்த்ததும் ஆஹா என்று உற்சாகம்...சிங்கம் கம்பீரமாக இருக்கே இதோ பதிவுக்கு போய்ட்டு வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டேன் சீதையை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. சிங்கத்தை பார்க்கறதுக்கு (உங்க படம் மூலமாத்தான்..) முந்தா நாள் லருந்து க்யூவுல நின்னுட்டுருந்தோம் காத்துக் கொண்டு... ஜி!! இப்ப சவாரி!! ஹா ஹா ஹ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. குட்மார்னிங் வெங்கட். உங்கள் பதிவுக்கும் முக நூல் சென்று எரிக் குதித்து வருகிறேன்! சாதாரணமாகத் திறக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை ஸ்ரீராம் குட்மார்னிங்க் நான் நேரா கதவை திறந்து வந்து கிர் ருக்குள்ள வெங்கட்ஜியோடு அடிச்சுப் புடிச்சு புகுந்துட்டேன்...ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. என்ன கீதா சொல்ல? வரவர, எல்லா தளங்களுக்கும் முகநூல் சுவர் வழியாத்தான் வரவேண்டியிருக்கும் போல! கடை உள்ளே நீதான் காப்பியாத்தணும்!!!!! (கடவுளே நீதான் காப்பாத்தணும் என்பதை மலையாளத் தமிழில் சொன்னேன்!)

      நீக்கு
    3. எகிறி குதித்து வர வேண்டியிருக்கிறதே! :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. சிங்கங்கள் மனிதர்களை அடித்துச் சாப்பிடாதுதான் அதனால் தான் சிலர் லண்டனில் வீட்டில் கூட வளர்த்து பின்னர் ஆஃப்ரிக்க காட்டில் விட்டு பல வருடங்கள் கழித்து இவர்கள் பார்க்க போன போது அது இவர்கள் வருவதை அறிந்து ஓடி வந்து கட்டிக் கொண்டதாக வீடியோ கூட இணையத்தில் உண்டு. அது போல் எனக்குத் தெரிந்த வெட் ஒருவர் விலங்கியல் பூங்காவில்தான் வேலை அவர் வந்தாலே ஓடி வந்து தோள் மீது கால் வைத்து கொஞ்சி விட்டுப் போகுமாம்.

    அதனால....வெங்கட்ஜி ஹலோ உன்னை பார்க்க வந்துருக்கோம் ஒரு செல்ஃஃபி எடுத்துக்கலாமோனு கை கொடுத்து பகக்த்துல போய் ஒரு ஃபோட்டோ எடுக்கலாமோ?!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிங்கத்துடன் ஒரு செல்ஃபி! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  5. மிருகங்கள் வண்ணங்களை அறியுமா? இதுவும் என் நீண்ட நாள் சந்தேகம், மாடுகளுக்கு எதிரேயும் சிவப்பு ஆடைகள் அணியக்கூடாது என்பார்கள். படையப்பா படத்தில் கூட நாம் பார்க்கவில்லையா?!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிருகங்கள் வண்ணம் அறியுமா? அறியும் என்று தான் நமக்குச் சொல்கிறார்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. சிங்கங்களை இவ்வளவு அருகில் பார்ப்பது த்ரில் அனுபவமாயிருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இரண்டு நாட்களாய் யானை பற்றிய விடியோக்கள் யு டியூபில் பார்த்து வருகிறேன். அவை பைக்கைத் துரத்துவதும், வண்டியைக் கவிழ்ப்பதும், நண்பர்களாய்ப் பழகுவதும் என்று.. சிங்கங்கள் அதிக த்ரில்! நேரில் பார்த்த உங்களுக்கு ஒரு பட்டம் தரலாம்! சிங்கத்தமிழர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிங்கத் தமிழர்! ஹாஹா.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. சிறுவயதில் சிங்கம் என்று எழுதுவதற்கு பதில் சிங்ஙம் என்று எழுதுவேன். மூன்றாம் வகுப்புப் படிக்கும்போது என்று நினைவு. டீச்சர் சொல்வார்... "சிங்கம் எவ்வளவு கம்பீரமான விலங்கு.. அதைப் போய் இப்படி எழுதி அசட்டு விலங்காக்கி விட்டாயே" என்பார்! திருத்தி விட்டு இரண்டு நாட்கள் கழித்து திரும்ப எழுத்தாகி சொன்னாலும் மறுபடி எனக்கு அப்படிதான் வரும். அப்புறம் சரியானது. அப்போது வந்த பழக்கம்தான் இன்னும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிங்ஙம் - ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. வாவ் வெங்கட்ஜி படங்கள் அசத்தல்!! ஹையோ கண்டிப்பாகப் போக வேண்டும்...ஓபன் ஜிப்ஸி ஆஹா ஆஹா....ஆமாம் ஜி இப்படி எந்தத் தடுப்பும் இல்லாமல் சிங்கங்களை அருகில் பார்ப்பது என்பது வாவ்!!! ஹையோ எப்படி இருந்திருக்கும் செமையா இருந்திருக்கும்...

    பன்னெருகட்டா பூங்காவில் சஃபாரி உண்டு...அங்கு நாங்கள் சிங்கத்தை எங்கள் வண்டியின் முன்பாகப் பார்த்தோம் ஜி...அதுவும் காலை இளம் வெயிலில் தக தக என்று மின்னியது ஆண் சிங்கம். பிடரியுடன்!! செம!! அப்போது கேமரா கிடையாது...மொபைல் ஃபோன் கிடையாது. அது போல புலிக்குட்டிகள் வெள்ளைப் புலிக்குட்டிகளை மிக மிக அருகில் பார்த்தோம்...

    வெங்கட்ஜி படங்கள் அத்தனையும் செமையா இருக்கு....தொடர்கிறோம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  9. நல்ல த்ரில் அனுபவம் இல்லையா ஜி...ஹையோ...இன்னும் படங்கள் பகிருங்கள் ஜி!! சிங்கம் ஒன்று புறப்பட்டதே!!! ரஜனி டயலாக் சிங்கம் சிங்கிளாத்தான் வரும்னு இல்லாம வெங்கட்ஜி சிங்கம் கூட்டத்தோடு போய் சிங்கங்களைப் பார்த்துட்டு வந்துட்டீங்க...நல்ல அனுபவம் ஜி வாழ்வில் ஒரு முறையேனும் அனுபவிக்க வேண்டும் பார்த்து ரசிக்க வேண்டும். அந்த ஆதிவாசிகள் நிஜமாவே தைரியசாலிகள் தான்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. த்ரில் அனுபவம் தான். மறக்க முடியாத அனுபவமும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  10. சிங்கங்களை அருகில் மிக அருகில் பார்ப்பது உண்மையிலேயே மறக்க இயலாத விசயம்தான் வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிதை வீதி சௌந்தர்.

      நீக்கு
  12. சிங்கத்தை கிட்டக்க பார்த்து படமெடுத்த ஆண்சிங்கம் வாழ்க வாழ்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  13. நாங்க மும்பை போரிவிலி வன விலங்குகள் சரணாலயத்தில் லயன் சஃபாரி மூலம் சிங்கங்களைப் பார்த்திருக்கோம். அதுக்கு முன்னாலும் பார்த்தாலும் இம்மாதிரிக் காட்டுக்குள் அதுங்களோடு நெருங்கி நின்னு பார்க்கலை! நல்ல அனுபவங்கள் தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    பதிவும் படங்களும் அருமை. என்ன இருந்தாலும் சிங்கத்தின் கம்பீரமே தனிதான். எழுந்து நின்று ஒரு பார்வை பார்ப்பதிலும், படுத்த நிலையில் ஒரு லுக் விடுவதிலும் அதற்கு நிகர அதுதான். எப்படியோ உங்கள் புண்ணியத்தில் நாங்களும் சிங்கங்களை மிக அருகிலேயே பார்த்தாச்சு. வீர தீர சாகச பயணம்தான். அடுத்து என்ன விலங்குகள் என அறியும் ஆவலில் உள்ளேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  16. இந்தியச் சிங்கங்களைப் பார்க்கும்போது, பூனையும், பஞ்சத்தில் அடிபட்ட தோற்றமும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

    ஆனாலும், சிங்கத்தைப் பார்ப்பதே ஒரு அனுபவம்தான். கிராமச் சூழலில் பார்க்க விட்டுப்போய்விட்டதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்....

      நீக்கு
  17. வெங்கட்ஜி படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன. கிர் சிங்க வனத்தை உங்களுடன் நாங்களும் சுற்றுகிறோம். ரொம்பவும் சுவாரஸ்யமான திரில்லிங்காக இருந்திருக்கும் இல்லையா..சிங்கங்களை நேரில் பார்ப்பது என்பது அனுபவம் தான். அதுவும் அருகில்....தொடர்கிறோம்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....