புதன், 2 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – தியுவிலிருந்து கிர் வனம் நோக்கி



இரு மாநில பயணம் – பகுதி – 33

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


ஒரு கடி கடிச்சுக்கலாம்!
தியு - கிர் சாலை வழி உணவகத்தில்.....

தியு நகரிலிருக்கும் சில இடங்களையும், தியு நகரிலுள்ள போர்த்துகீசியர்கள் கட்டிய கோட்டையையும் பார்த்த பிறகு நாங்கள் தியுவிலிருந்து புறப்பட்டோம். இன்னும் சில இடங்கள் – குறிப்பாக கடற்கரைகள் இருந்தாலும், அடுத்த நாள் காலை நாங்கள் குஜராத்தின் Gகிர் வனப் பயணத்திற்கு முன்பதிவு செய்திருந்ததால் மதியமே புறப்பட்டோம். முதல் நாள் இரவு கிடைத்த அனுபவத்தினால் மதிய உணவினை வழியில் பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தோம். தியு நகரிலிருந்து குஜராத் - Gகிர் வனம் சுமார் 70 கிலோமீட்டர் தொலைவு தான் என்றாலும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. வழியில் குஜராத் எல்லையில் தியுவிலிருந்து வரும் அனைத்து வாகனங்களுமே நிறுத்தப்படுகிறது.



தியுவிலிருந்து கிர் வனத்திற்கு....
வரை படம் - இணையத்திலிருந்து...

அதுவும் குஜராத் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனம் என்றால் நிச்சயம் நிறுத்தி விடுவார்கள். ஏற்கனவே இத்தொடரின் பகுதி ஒன்றில் சொன்னது போல, குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பதால், எல்லைப் பகுதி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் சரக்கு கடத்திக் கொண்டு வர வாய்ப்பிருக்கிறது – அதிக விலையில் விற்கலாமே! அதனால் வாகனத்தினை முழுவதும் சோதனை செய்கிறார்கள் – ஒரு சிறு குப்பி இருந்தால் கூட கடுமையான தண்டனை தான்! சிறைத் தண்டனை கூட கொடுப்பதுண்டு. அதனால் பாதிக்கப்பட்ட ஒரு அரசு ஊழியரை நான் அறிந்திருந்தேன். கேரள நண்பர்களுக்கும் ஓட்டுனர் முகேஷ் முன்பே சொல்லிவிட்டார் – வாங்கி எடுத்துச் செல்ல நினைக்காதீர்கள் என!


தியுவிலிருந்து கிர் வனத்திற்கு பயணம் செய்த காட்சி....



வாகனத்தில் இருந்த கூல் ட்ரிங்க் குப்பிகளைக் கூட தியு எல்லைக்குள்ளே வீசி எறிந்து விட்டார் முகேஷ். மாட்டிக் கொண்டால் நிறைய பிரச்சனைகள் உண்டு – வண்டியை ஜப்தி செய்துவிடுவார்கள் என்றும் சொன்னார். சில ஓட்டுனர்கள் வண்டியின் டேஷ்போர்டை கழட்டி உள்ளே வைத்து கடத்தி வந்து குஜராத்தில் அதிக விலைக்கு விற்பதுண்டு என்றும் சொன்னார். வாகனத்தில் ஆண்கள் மட்டுமே தனியாக இருந்ததால் சோதனைச் சாவடியில் இருந்தவர்களுக்கு சந்தேகம் - சோதனைகள் அதிகமான நேரம் நடந்தது – முகேஷ் கீழே இறங்கி பயணம் செய்பவர்கள் அனைவருமே அரசு அதிகாரிகள் என்ற விவரத்தினைச் சொன்ன பிறகு மேலே செல்ல அனுமதித்தார்கள். சோதனை முடிந்த பிறகு முகேஷ் ஒரு டெமோ காண்பித்தார் – டேஷ்போர்டைக் கழட்டி எப்படி சரக்கு கடத்துவார்கள் என! நல்ல வேளை சரக்கு இல்லை!


சலாட் - உணவகத்தில்...



காலையில் பூரி மட்டும் சாப்பிட்டது. தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருக்கிறோம்.அதனால் வழியில் எங்காவது நிறுத்தி மதிய உணவினை முடித்துக் கொள்ளலாம் எனச் சொல்ல, முகேஷ் ஒரு குஜராத்தி DHதாBபாவில் வண்டியை நிறுத்தினார். குஜராத்தி தாலி தான் ஆர்டர் செய்தோம். குஜராத்தில் இருந்த இந்த மாதிரி உணவகங்கள் அனைத்திலுமே எனக்கு ரொம்பவும் பிடித்த விஷயம் அவர்கள் கொடுக்கும் மோர் – chசாச்ch என அழைக்கப்படும் மோர் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கிறார்கள் சில இடங்களில்! சில இடங்களில் மோருக்கும் காசு வாங்குவது உண்டு! தாலி சொல்லும் போதே மோரும் சொல்லி விடுவோம் – நானும் நண்பர் ப்ரமோத்-உம்.



தண்ணீர் கொண்டு வைத்த பிறகு உணவகச் சிப்பந்தி கொண்டு வைத்தது மிளகாய்! பதப்படுத்தப்பட்ட அந்த மிளகாயை ஒரு கடி கடித்துக் கொண்டு ரொட்டி சாப்பிடலாம்! வித்தியாசமாக சாலட் – வைத்திருந்ததில் வெங்காயம் தவிர்த்தோம் – எப்போதோ வெட்டி வைத்துவிடுவதால் இப்படியான இடங்களில் வெங்காயம் தவிர்ப்பது நல்லது! உணவின் சுவை அதிகம் இல்லையென்றாலும் சுகாதாரமாகவே இருந்தது. உணவினை நிதானமாகச் சாப்பிட்ட பிறகு, அங்கிருந்து புறப்பட்டோம். நாங்கள் பயணித்துக் கொண்டிருந்தபோதே என் அலைபேசிக்கு அழைப்பு – மோஹித் அழைத்தார்!


என்ன செய்கிறார் இந்த இளைஞர்....

மோஹித் – இவர் தான் எங்களுடைய அடுத்த தங்குமிடத்தின் உரிமையாளர். கிர் வனப்பகுதிக்கு மிக அருகிலேயே இவருடைய தங்குமிடம் அமைந்திருக்கிறது. எங்கே இருக்கிறீர்கள், எப்போது வருவீர்கள் எனக் கேட்பதற்காக அழைத்தார். ஓட்டுனர் முகேஷிடம் கேட்டு அவரது இடத்திற்குச் சென்று சேர எவ்வளவு நேரம் ஆகும் எனச் சொல்ல, தான் காத்திருப்பதாகச் சொன்னார். கிர் வனப்பகுதி அருகில் வந்ததும் மோஹித்-ஐ அழைக்க, அவர் முக்கிய சாலைக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்து எங்களை அழைத்துச் சென்றார் – அவர் வாகனத்தினைத் தொடர்ந்து நாங்கள் சென்று சேர்ந்த இடம், கிர் வனப்பகுதியில் இருக்கும் Bபோஜ்dடே எனும் கிராமத்தில் அமைந்திருக்கும் ஒரு ஃபார்ம் ஹவுஸ்!


தங்குமிடம் - ஷிவ் ஃபார்ம் ஹவுஸ்....
அப்படியே படுத்துக் கொண்டு விடலாம்!

மாந்தோப்பின் நடுவில் அமைந்திருக்கும் ஃபார்ம் ஹவுஸ். சப்போட்டா, மாமரம் என பல மரங்கள். அந்த மரங்களில் கட்டி இருந்த ஊஞ்சல்கள், மர நிழலில் இருந்த கயிற்றுக் கட்டில்கள் என ரம்மியமான கிராமிய சூழல். தோப்பில் நிறைய மயில்கள் உலவிக் கொண்டிருக்க, அப்படியே கயிற்றுக் கட்டிலில் படுத்தபடி இருக்கலாம் எனத் தோன்றியது. குஜராத்தி நண்பர் ஒருவர் மூலம் தான் இந்த இடத்தினைத் தேர்ந்தெடுத்து இருந்தேன். எப்படி இருக்குமோ, கேரள நண்பர்களுக்குப் பிடிக்குமோ என்று நினைத்தபடியே இருந்தேன். ஆனால், அந்த இடம் எனக்கு மட்டுமல்ல, அவர்களுக்கும் ரொம்பவே பிடித்திருந்தது.  அங்கே கிடைத்த அனுபவங்கள் என்ன, மாலை நேரத்தில் என்ன செய்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்
 
நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

52 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி

    ஏதோ திங்க படம் எல்லாம் கண்ணை ஈர்க்குதே இதோ பதிவுக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் 🙏 கீதா ஜி.

      முதல் படம் பச்சை மிளகாய்!

      நீக்கு
  2. குட்மார்னிங் வெங்கட். இன்று க்ளிக்கியதும் தளம் திறந்து விட்டது!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இன்று க்ளிக்கியதும் வந்துவிட்டது....

      கீதா

      நீக்கு
    2. காலை வணக்கம் 🙏 ஸ்ரீராம்.

      ஆஹா நல்ல விஷயம். கூகிளாண்டவரே அறிவார் இதன் ரகஸ்யம்.

      நீக்கு
    3. கூகிளாண்டவருக்கு நண்றி சொல்ல வேண்டும் கீதா ஜி.

      நீக்கு
  3. ஜி வாவ் அடுத்தது கிர் வனமா!! ஆஹா!! ஓ அப்ப அந்த முகப்பு மான்கள் கிர் வன மான்களா!!!
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். முகப்பில் கிர் வனத்து மான்கள் தான். வனம் பற்றி இரண்டு மூன்று பதிவுகள் வரும் கீதா ஜி.

      நீக்கு
  4. சரக்கு எப்படிக் கடத்தலாம்னு கத்துக் கொடுத்துட்டாங்களா ?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் 🙏 ரிஷபன் ஜி.

      ஹாஹா....இப்படியும் சொல்லலாம்.

      நீக்கு
  5. பாண்டிச்சேரியிலிருந்து சென்னைக்கு சரக்கு எடுத்து வருவார்கள் கோபி பட்டிருக்கிறேன். இவ்வளவு சோதனை இருக்காது என்றும் கோபி பட்டிருக்கிறேன். மேலும் ஒரு பாட்டில் திறந்து கொஞ்சம் அருந்தி விட்டு மிச்சம் வைத்திருந்தால் விட்டு விடுவார்களாம்! நோ... நோ... அப்படிப் பார்க்கக் கூடாது... நிஜம்மா கேள்விப்பட்டதுதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் நான் சொல்ல வந்தேன் உங்கள் கமென்ட் கண்ணில் பட்டுவிட்டது!!! ஸோ டிட்டோ....ஹா ஹா ஹா எதுக்கு? அப்படிப் பார்க்கக் கூடாதுனு சொன்னதுக்கு!!

      ரொம்ப எல்லாம் செக்கிங்க் கிடையாது ஸ்ரீராம். இப்போது கொஞ்சம் கூடுதலாகி இருக்கும் என்று தோன்றுகிறது. சமீபத்தில் பாண்டி சென்று விட்டு வந்த போது பேருந்தை கொஞ்ச நேரம் நிறுத்தி விட்டு செக் செய்தார்கள் பாட்டில் இருந்தால் பிடிக்கலாம்....வயிற்றுக்குள் இருப்பதை என்ன செய்ய முடியும்....எல்லாவற்றையும் வயிற்றுக்குள் ஊத்தி எடுத்து வருவார்கள் போலும்....ஒரே அலம்பல் தான் பேருந்து முழுவதும். ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. // கோபி பட்டிருக்கிறேன். //

      "கேள்விப்பட்டிருக்கிறேன்"... என்றிருக்க வேண்டும்.

      அவசரப்பட்டு கைதட்டிக்கொண்டு விட்டேன்... ச்ச்ச்ச்ச்சே...!!!

      கணினி மீண்டும் மீண்டும் அணைந்து விடும் அபாயத்துக்கு நடுவில் வேகவேகமாக தட்டச்சுகிறேன்!

      நீக்கு
    3. கடலூர் பாண்டி எல்லையில் நிறைய சோதனை சாவடிகள் உண்டு. பேருந்தில் வரும் அனைவரிடமும் சோதனை செய்வார்கள். இப்பொழுது எப்படியோ தெரியாது.

      மிச்சம் வைத்திருந்தால் விட்டு விடுவார்கள் ஹாஹா நீங்கள் அப்படி பார்க்கக்கூடாதுன்னு சொன்னதால் பார்க்கல ஸ்ரீராம்.

      நீக்கு
    4. வயிற்றுககுள் இருப்பதை என்ன செய்ய முடியும்? அதானே ஓண்ணுமே செய்ய முடியாது.

      பல வருடங்களுக்கு முன்னரே இந்த நெடுஞ்சாலையில் "குடிகாரர்கள் நடமாடும் பகுதி ஜாக்கிரதை" என்று பதாகைகள் வைத்த ஊர் இந்த ஊர் கீதா ஜி.

      நீக்கு
    5. தட்டச்சு தவறுதலாக வருவதால் என்ன பிரச்சனை - சொல்ல வருவதை புரிந்து கொள்ள முடிந்தது ஸ்ரீராம்.

      நீக்கு
  6. கமெண்ட்ஸ் போடுவதற்குள் இரண்டுமுறை கணினி அணைந்து விட்டது. ப்ளூ ஸ்க்ரீன் எரர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடாடா... ஏதேனும் வைரஸ் பிரச்சனையா? இப்படி அணைந்து கொண்டே இருந்தால் கஷ்டமாச்சே ஸ்ரீராம்.

      நீக்கு
  7. எப்போதோ வெட்டி வைத்துவிடுவதால் இப்படியான இடங்களில் வெங்காயம் தவிர்ப்பது நல்லது! //

    ஆமாம் ஜி வெங்காயம் வெட்டினால் உடனே பயன்படுத்த வேண்டும் இல்லை என்றால் நல்லதில்லை...மிளகாய் பார்த்ததுமே ஈர்க்கிறது. குஜராத்தி தாலி அதாவது சிம்பிள் தாலி மிகவும் பிடிக்கும்.

    அந்த ஃபார்ம் ஹவுஸ் வாவ்!!! ஹையோ என்ன அழகு! சுகமா இருந்திருக்குமே கயிற்றுக் கட்டில் மரங்கள் தோப்பு என்று!!! காத்திருக்கிறேன் இன்னும் படங்கள் வரும் என்று..கிர் வனத்தைக் கிர் என்று உங்கள் வழி சுற்றவும்...!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெட்டி ரொம்ப நேரம் வைத்த வெங்காயம் விஷமாகி விடும் என்று சொல்வார்கள் இங்கே கீதா ஜி.

      ஃபார்ம் ஹவுஸ் ரொம்பவே நன்றாக இருந்தது கீதாஜி.

      நீக்கு
  8. "அந்த இளைஞர்" நீங்கள்தானோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஸ்ரீராம் வெங்கட்ஜி தான் இருக்கும் சிங்கம் ஏதாவது எட்டிப் பார்க்குதோனு பார்க்குறார் போலும்!!!

      கீதா

      நீக்கு
    2. ஹாஹா எங்கள் குழுவில் இருந்த யாருமே இல்லை. அங்கே இருந்த சிப்பந்தி அவர் ஸ்ரீராம்.

      நீக்கு
    3. சிங்கம் எட்டிப் பார்க்குதான்னு இந்த சிங்கம் பார்த்தால்..... ஹாஹா யோசித்துப் பார்த்தேன் கீதா ஜி.

      நீக்கு
  9. தங்கும் இடம் சுவாரஸ்யமாக இருக்கும் போலவே... சிங்கங்களும் வந்து எட்டிப்பார்க்குமா?

    அப்பாடி... எழுத்துப்பிழைகள் இல்லாமல் (இங்கு) இன்றைய 'கமெண்ட்ஸ் செஷனை' முடித்து விட்டேன்!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாரஸ்யமான இடம் தான். சிங்கங்கள் எட்டிப் பார்க்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. ஆஹா.... சிங்க வனமா! பார்க்காத இடம்!

    கயித்துக்கட்டில் எனக்கும் ரொம்பப்பிடிக்கும் :-) மயில் வேற உலவுதா.... ஹைய்யோ.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மயில் நடமாட்டம் நிறையவே இருந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  11. வெங்கட் கிர் வனம் வந்தாச்சா,. எந்த நிமிடமும் சிங்கம் வரும்னு
    சொல்லுங்கோ
    இந்தப் பதப் படுத்தப்பட்ட மிளகாயும் வெங்காயமும் மிக நன்றாக இருக்கும். ஆனால் நம் கண்முன்னால் வெங்காயம் கட் செய்து கொடுக்க வேண்டும்.

    கட்டிலிம் ,போட்டு ,மரங்கள் நிழலும் காற்றும் சேர்ந்தால்
    இனிய தூக்கத்துக்குத் தயார். இனிய பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  12. குஜராத்தி ஹோட்டல்களில் நானும் மோர் சாப்பிட்டு இருக்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  13. பயணக்காட்சியை ஓட்டிப் பார்த்தபோது நாங்களும் காருக்குள் இருந்து பயணிப்பதைப் போலவே இருந்தது. வழக்கம்போல அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  14. ரம்மியமான கிராமிய சூழலை நினைத்தாலே மனம் மகிழ்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  15. வெளியில் வெங்காயம் சாப்பிடுவதை நானும் தவிர்த்துவிடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  16. குஜராத்தி தாலி, அவர்களது விருந்தோம்பல், அளவில்லாத மோர், காரமில்லாமல் வாட்டி இருக்கும் மிளகாய் - பார்க்கவே யம்மியா இருக்கு. பயண விவரங்களும் நமக்கும் போக வாய்ப்புகிடைக்கலையே என்று எண்ணும்படி இருக்கு. அருமை.

    கிராமியச் சூழ்நிலையில் தங்கும் விடுதி... ஆஹா ஆஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  17. உங்களை நினைத்தால் பொறாமைவருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  18. தங்குமிடம் மிகவும் அழகாக இருக்கிறது. கிர் ஃபாரஸ்டைச் சுற்ற ரெடியாகிவிட்டோம். தொடர்கிறோம் வெங்கட்ஜி. படங்கள் நன்றாக உள்ளன. நிறைய ஊறுகாய்கள் போல இருக்கு...

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  19. அந்த பையன் கவண்கல்லால் மாங்காய் அடிக்கிறான் என்று நினைக்கிறேன்.
    அழகான தங்கும் இடம்.
    பயணத்தை தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  20. காணொளியும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    மனதுக்கு இதமான பயண அனுபவங்கள். குஜராத் உணவு வகைகள் பார்க்கவே மிகவும் நன்றாக உள்ளது. அவை காரமில்லாத பச்சை மிளகாய்களா? தங்குமிடம் இயற்கை எழிலோடு அற்புதமாக உள்ளது

    காணொளியும் கண்டேன். இருபுறங்களிலும் இயற்கையோடு பயணம் மிகவும் ரம்மியமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். தங்கள் பயணத்தோடு தொடர்கிறேன்.பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  22. தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பதியலாமே http://tamilblogs.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி tamil blogs!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....