சனி, 5 மே, 2018

அடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…



வரைபடம் - இணையத்திலிருந்து...

என்னதான் தலைநகரிலேயே வாழ்க்கையின் பாதிக்கு மேலான வருடங்கள் இருந்துவிட்டாலும், தாய் தமிழகம் நோக்கி பயணிப்பது என்னவோ பிடித்துத் தான் இருக்கிறது. தலைநகர வாழ்க்கை ஒரு விதத்தில் பிடித்திருக்கிறது என்றால் தமிழக வாழ்க்கை வேறு விதத்தில். பொங்கல் சமயத்தில் வந்தது – அதன் பிறகு இப்போது தான் வர சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது. எங்கேயாவது செல்ல வேண்டும் என்றால் நிறைய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கிறது – அலுவலகத்தில் விடுமுறை சொல்ல வேண்டும், சொன்ன மாதிரி விடுமுறை கிடைக்க வேண்டும், பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்ய வேண்டும், ஊருக்கு வரும்போது கொண்டு வரவேண்டியதை எல்லாம் நினைவாக எடுத்து வைக்க வேண்டும் என நிறையவே வேலைகள்.

கொஞ்சம் முன்னரே பயணம் பற்றி திட்டமிட்டால், விமான பயணச்சீட்டுகள் இரயில் II AC கட்டணத்திற்குள்ளேயே கிடைத்துவிடும். இல்லை என்றால் இரயிலில் தான் வர வேண்டியிருக்கும். இரயிலில் பயணம் செய்வது ஒரு தனி சுகம் என்றாலும், தில்லியிலிருந்து திருச்சி சென்று சேர்வதற்கு 40 மணி நேரத்திற்கு மேலே ஆகிவிடுகிறது. போக வர என்று பார்த்தால் மூன்று-நான்கு நாட்கள் இரயிலிலேயே இருக்க வேண்டிய கட்டாயம். விமானம் என்றால் காலையில் தில்லியில் புறப்பட்டால் மாலைக்குள் திருச்சி! இந்த முறையும் முன்னரே திட்டமிட்டபடியால், விமானத்திலேயே பயணம் – யாருங்க அது, ஃப்ளைட் டீடெய்ல்ஸ் கேட்கறது – எனக்கு இந்த மாலை, மரியாதை எல்லாம் பிடிக்காது – சாரி – நான் சொல்ல மாட்டேன்!

அட மாலை மரியாதை செய்யவா கேட்டாங்க, கருப்பு கொடி காட்டத்தான் கேட்டோம்னு சொன்னாலும், எப்ப வருவேன்னு கண்டிப்பா சொல்லப் போறதில்ல! அரசியல் பிடிக்காதுன்னாலும், “எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது…. ஆனா வர வேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன்!” அப்படின்னு சொல்லிக்கலாம்! தமிழகத்திற்கு வரும்போது சில பதிவர்களையும் சந்திக்க விருப்பம் உண்டு – குறிப்பாக தஞ்சை செல்லும் ஆர்வம் இருக்கிறது – பெரிய கோவிலுக்குச் சென்று கொஞ்சம் புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். அப்படி தஞ்சை சென்றால் கரந்தை ஜெயக்குமார் ஐயா, முனைவர் ஜம்புலிங்கம் ஐயா ஆகியோரைச் சந்திக்கும் விருப்பம் உண்டு.

சின்னச் சின்னதாய் சில பயணங்களும் உண்டு – குடும்ப நிகழ்வுகள், வேறு சில காரணங்களுக்காக பயணங்கள். அதில் ஒரு பயணம் பாண்டிச்சேரி நகருக்கு – அங்கே என் கல்லூரி நண்பர்கள் சிலரை அவரவர் குடும்பத்துடன் சந்திக்க இருக்கிறேன். இரண்டு நாட்கள் பாண்டிச்சேரியில்! சில நண்பர்களை கிட்டத்தட்ட 27 வருடங்கள் கழித்து சந்திக்க இருக்கிறேன் – கல்லூரியில் மூன்று ஆண்டுகள் மட்டுமே நட்பாக இருந்திருந்தாலும், கல்லூரி முடித்து 27 ஆண்டுகளுக்குப் பிறகும் நட்பு தொடர்கிறது – சிலரிடம் மட்டும். மற்றவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம் – சிலரை கண்டுபிடித்தாலும், தொடர்பில் இருக்க ஆவலில்லை அவர்களுக்கு! நண்பர்கள் அனைவரும் அவரவர் குடும்பத்துடன் வருகிறார்கள் – தொடர்பில் இருக்கும் அனைத்து நண்பர்களும் மிகவும் எதிர்பார்க்கும் சந்திப்பு இது. சந்திப்பு பற்றி பிறகு பகிர்ந்து கொள்கிறேன்.

வேறு சில பயணங்களும் உண்டு – சிவகங்கை, கோவை, கன்னியாகுமரி என சில இடங்களுக்குப் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. நடுவில் நெய்வேலிக்கும் பயணம் செய்ய எனக்கு ஆசை உண்டு. இருக்கிற மூன்று வார விடுமுறையில் எங்கெங்கே பயணம் செய்யப் போகிறேனோ எனக்கே புரியவில்லை! எல்லாப் பயணங்களுமே குடும்பத்துடன் தான் என்பதால் “வீட்டுக்குப் போயும் ஊரைச் சுத்த கிளம்பியாச்சா?” என்று கேள்விக் கணைகளை வீச வேண்டாம் என கண்டிப்பாக சொல்லி விடுகிறேன்! மூன்று வாரம் எவ்வளவு இடங்களுக்குச் சுற்ற முடியுமோ அவ்வளவு சுற்ற வேண்டும்! பார்க்கலாம் எங்கங்கே செல்ல முடிகிறது என!

சென்னை, here I come! சென்னையிலிருந்து உடனடியாக திருச்சி செல்லப் போவதில்லை. வேறு இடத்திற்கு பயணம்! பயணத்தில் இருக்கும் போது மற்ற நண்பர்களின் பதிவுகளைப் படிப்பதில் கொஞ்சம் தடங்கல் ஏற்படலாம். எனது பக்கத்திலும் பதிவுகள் சிலவற்றை Schedule செய்து வைத்திருக்கிறேன் – குறிப்பாக இரு மாநில பயணம் பயணத்தொடரின் பகுதிகள் மற்றும் இந்தப் பதிவு உட்பட! நடுவே சில நாட்கள் பதிவுகள் வராமல் இருந்தால் – I assure you that I will be back with loads of pictures and posts!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

39 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி....

    ஆஹா தமிழகம் வந்து பயணமா...3 வாரத்தில் பெரும்பாலும் நீங்கள் வீல்ஸ் ஆன் ரோட்!!!!!. சூப்பர் ஜி...எனக்கும் பயணம் என்றால் ரொம்ப பிடிக்கும்....வாருங்கள் புகைப்படங்களுடன். சுவாரஸ்யமான விஷயங்களுக்கும் பஞ்சம் இருக்காது....

    பயணங்கள் முடிவதில்லை....பயன்கள் இனிதே அமைந்திட வாழ்த்துகள் ஜி என்ஜாய்..மேடி...ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் 🙏 கீதா ஜி.

      பயணங்கள் முடிவதில்லை - இப்படியே பயணித்துக் கொண்டே இருந்தால் நன்றாகத் தான் இருக்கும் ஆனால்....

      நீக்கு
  2. பயன்கள்...பயணங்கள் என்று திருத்தம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..... பயன்கள் பயணங்கள் - இந்த auto correct ஒரே தொல்லை கீதா ஜி.

      நீக்கு
  3. வாங்க, வாங்க, அப்படியே நம்ம வீட்டுக்கும் வந்துட்டுப் போங்க! பயணம் எங்களூக்கும் பிடிக்கும்னாலும் இந்த வெயில்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வர வேண்டும்.... அழைத்து விட்டு வருகிறேன் கீதாம்மா.....

      நீக்கு
  4. தமிழக பயணம் வெற்றிகரமாக அமையட்டும் ஜி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. குட்மார்னிங் வெங்கட். இன்று கணினிக்கு வருவதில் சற்றே தாமதம்!

    பதிலளிநீக்கு
  6. தமிழகப் பயணம் தொடங்கி விட்டதா? உங்கள் மனைவியும் இப்போதுதான் பழைய வகுப்புத்தோழர்களைச் சந்தித்துத் திரும்பினார் போலவே... இனிமையான அனுபவங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடங்கி விட்டது ஸ்ரீராம். அவர் அனுபவங்கள் எழுதி இருக்கிறார். பயணங்கள் இனிமையான அனுபவங்களை தரும் என நம்பிக்கை தான்.

      நீக்கு
  7. சென்னை உங்களுக்கு கருப்புக்கொடி எல்லாம் காட்டாது... சென்னை என்ன? யாருமே! பயணக்கட்டுரை மன்னன் அல்லவா நீங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணக்கட்டுரை மன்னன் ? ஹாஹா நல்ல பட்டப் பெயர் தான் ஸ்ரீராம். சென்ற நவம்பரில் தான் கடைசியாக சுற்றுலா சென்றேன்.

      நீக்கு
  8. நல் வரவு வெங்கட். பாண்டிச்சேரியில் படித்தீர்களா அட. எங்கள்
    கடைசி மகன் SOM..PONDY MBA 92 to 94 படித்தான்.
    உங்கள் பயணங்கள் சிறக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாண்டிச்சேரியில் இல்லைம்மா - நான் படித்தது நெய்வேலியில்! இப்போது சந்திக்கப் போவது மட்டுமே பாண்டியில் வல்லிம்மா.

      நீக்கு
  9. தங்களது பயணத்தில் எங்களையும் காண ஆர்வம் என்றவுடன் எங்களுக்கு மகிழ்ச்சி. தமிழகம் வருக..தஞ்சை வருக.. காத்திருக்கிறோம், உங்களைச் சந்திக்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரவேண்டும்..... வருமுன்னர் அழைக்கிறேன் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  10. தமிழக பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  11. தமிழக் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
    நீங்கள் திட்டமிட்ட படி அனைத்து நடைபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. பெங்களூரி வெயில் அதிகம் இல்லைகுடும்பத்துடன் வந்தால் மகிழ்ச்சி சதிப்பு எதிர்பார்த்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழைப்பிற்கு நன்றி ஜி.எம்.பி. ஐயா. பெங்களூரு வருவது கடினம் தான்.

      நீக்கு
  13. பயணங்கள் முடிவதில்லை. நிறைய இடுகைகளுக்கான விஷயங்களும் கிடைக்கும் என நினைக்கிறேன். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய விஷயங்கள் கிடைக்கலாம் - எழுதலாம்! நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  14. வாழ்த்துகள்.தஞ்சை வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுகளை நண்பர்களிடம் எதிர் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திக்க எண்ணம் உண்டு. பார்க்கலாம். நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  15. வெங்கட்ஜி இப்ப தமிழக உலாவா? உங்கள் பயணம் சிறப்பாக அமைந்திட வாழ்த்துகள் வெங்கட்ஜி!!!காத்திருக்கிறோம் உங்கள் பயணக் கட்டுரைகள் மற்றும் புகைபப்டங்கள் பார்த்திட.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். தமிழகத்தில் சில நாட்கள் துளசிதரன் ஜி. பதிவுகள் வரலாம்.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    தங்கள் தமிழக பயணங்கள் நலத்துடன் இருந்திட நல்வாழ்த்துக்கள். பயணத்தின் நோக்கங்களும் அழகாய் சிறப்பாய் அமைந்திட பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. ஆரணிக்கு ஒரு டிக்கெட் புக் பண்ணிடுவோமா?! திருச்சி டூ ஆரணி 6 மணி நேர பிரயாணம்தான்ண்ணே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரணிக்கு ஒரு டிக்கெட் - இந்த முறை வாய்ப்பில்லை ராஜி.

      நீக்கு
  18. தமிழ் நாட்டில் உங்கள் சுற்றுப்பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. உங்கள் ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு ‘பயன்’ படிப்பவருக்கு.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....