படம்: இணையத்திலிருந்து..
அரசு அலுவலகங்கள் பலவற்றில் இருக்கும் கோப்புகளும் அதில் இருக்கும் காகிதங்களும் பல விஷயங்களை நமக்குச் சொல்பவை. அலுவலகத்தில் சேர்ந்த புதிதில் பல பழைய கோப்புகளைப் படித்துப் பார்ப்பதில் எனக்கு நிறைய ஆர்வம் உண்டு. இப்போதும் அப்படி பல கோப்புகளைப் படித்து விஷயங்களைத் தெரிந்து கொள்வதுண்டு. பல பிரபல அதிகாரிகள், மந்திரிகளில் ஆரம்பித்து பிரதம மந்திரிகளின் கையெழுத்து/கையொப்பம் ஆகியவற்றை பார்க்கும், படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததுண்டு. நான் அரசு அலுவலகத்தில் சேர்ந்த புதிதில் கிடைத்த ஒரு அனுபவம் பற்றி இன்றைக்குப் பார்க்கலாம்! அதற்கு முன்னர் பழைய அலுவலக் அனுபவங்கள் பற்றிய ஒரு சிறு தகவல்!
அலுவலக
அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்து இரண்டே இரண்டு பதிவுகளோடு நின்று விட்டது. இதற்கு
முன்னர் எழுதிய இரண்டு பதிவுகளைப் படிக்காதவர்கள் வசதிக்காக இங்கே அப்பதிவுகளின்
சுட்டிகள் கீழே தருகிறேன். இப்பதிவுக்கும் அந்த பதிவுகளுக்கும் சம்பந்தம் இல்லை
என்றாலும் படிக்காதவர்கள் படிக்கலாம்!
அலுவலகத்தில்
சேர்ந்த புதிது. அந்தப் பிரிவில் இரண்டு சர்தார்ஜிகள் உண்டு. இதில் ஒருவரைப் பற்றி
தான் இன்றைக்குப் பார்க்கப் போகிறோம். ஏற்கனவே சொன்ன காத்தாடி இராமமூர்த்தி
அவர்களின் அடுத்த இருக்கையில் அமர்ந்து இருப்பார் இந்த சர்தார்ஜி – அவர் பெயர்
பரம்ஜீத் சிங்... Bபேட்டா, Pபுத்தர் [இரண்டு வார்த்தைகளுக்கும் மகன் என்ற அர்த்தம்
தான் – ஒன்று ஹிந்தி, மற்றொன்று பஞ்சாபி!] என பாசத்துடன் அழைத்துப் பேசுவார்.
அவரது மேஜையில் எண்ணிலடங்கா கோப்புகள் இருக்கும். அப்படி என்னதான் அந்தக்
கோப்புகளில் இருக்குமோ என்ற எண்ணம் எனக்குள் அடிக்கடி வந்து போகும். கேட்கலாம்
என்றால் நமக்கு ஹிந்தி தகராறு! நாமே உள்ளே புகுந்து எடுத்துவிடலாம் என்றால் ஒரு
சிறு தயக்கம் – உள்ளேயிருந்து மாண்டுபோன மந்திரி யாராவது வந்துவிடுவாரோ என்ற
தயக்கம்! அவ்வளவு கோப்புகள் அந்த மேஜையில் இருக்கும்.
அவ்வளவு
கோப்புகளும் ரொம்பவும் தேவையான கோப்புகள் எனச் சொல்வார் பரம்ஜீத். ஒரு நாளும்
அக்கோப்புகளை அவர் எடுத்து நான் பார்த்ததில்லை. தினமும் காலையில் வந்து மேலாக தூசு
தட்டுவதோடு சரி. ஆனால் அந்தக் கோப்புகளை வேறு யாரும் தொட்டுவிடக்கூடாது என்பதில்
ரொம்பவே கண்டிப்பாக இருப்பார். நானும் பல மாதங்கள் அதைத் தொடாமல் தான் இருந்தேன்.
பிறகு ஒரு வாரம் அவர் விடுப்பில் இருந்த போது அவரது வேலைகளை நான் செய்ய
வேண்டியிருந்தது. அப்போது என்ன ஆனாலும் ஆகட்டும் என அவரது கோப்புகளை ஒவ்வொன்றாக
எடுத்துப் பார்த்தேன்! அப்படிப் பார்த்தது 1991-ஆம் வருடம். கையில் எடுத்த கோப்பு
எந்த வருடத்தியது தெரியுமா – 1964-ஆம் வருடத்திய கோப்பு! நான் பிறப்பதற்கு 7
வருடம் முன்னர் திறந்த ஒரு கோப்பு!
கிட்டத்தட்ட 27
வருடங்களான ஒரு கோப்பு அவரது மேஜை மேலே இருந்தது.
ஆஹா என்னதான் அந்தக் கோப்பில் இருக்கும் எனப் பார்க்க கோப்பைத் திறந்தவுடன்,
தொடர்ந்து நான்கு ஐந்து தும்மல்கள்! உள்ளிருந்து வந்த பொடி தூசு என்னையும்
பக்கத்தில் இருந்த சிலரையும் தும்ம வைத்தது! தொட்டாலே உடைந்து விடும் அளவிற்குத்
தான் அந்த காகிதங்கள் இருந்தன. ரொம்பவும் ஜாக்கிரதையாகத் தான் அக்காகிதங்களை கையாள
வேண்டியிருந்தது. அந்த வருடங்களில் இருந்த அதிகாரிகளின் ஆங்கில வார்த்தைப்
பிரயோகங்கள், அப்போதைய சம்பவங்கள் பற்றிய பல தகவல்களையும், மந்திரியின்
கையொப்பத்தினையும் பார்க்கக் கிடைத்தது. இப்போது மாதிரி அப்போது அலைபேசிகள்
இல்லையே. இருந்தால் அவற்றை படம் பிடித்து வைத்திருப்பேனோ என்னவோ!
இங்கே மத்திய அரசாங்கக்
கோப்புகள் பற்றி சில விஷயங்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு கோப்பு என்றால்
அதில் இரு பகுதிகள் உண்டு – Noting Portion மற்றும் Correspondence Portion. இதில்
இரண்டாவது வரும் கடிதங்கள், அரசிலிருந்து அனுப்பும் கடிதங்கள் மற்ற காகிதங்கள்
அடங்கும். முதலாது இருக்கிறதே – அதாவது Noting
Portion – அது தான் கோப்பின் முக்கியப் பகுதி. அதைப் படித்தால், அந்தக் கோப்பில்
என்ன விஷயங்கள் இருக்கிறது, எதைப் பற்றி, என்ன முடிவு எடுக்கப்பட்டது என பல விஷயங்கள்
தெரிந்து கொள்ளலாம். அப்போதைய அலுவலர்கள்/அதிகாரிகள் எழுதிய குறிப்புகள், அத்துறை
மந்திரியாக இருந்தவரின் கையொப்பம் என பலவற்றை அந்தக் கோப்புகளின் Noting Portion-ல்
பார்க்க முடியும்.
பல சமயங்களில்
இந்த Noting Portion விவாதத்திற்கு உரியதாக முடியும். ஒரு சம்பவம் நினைவுக்கு
வருகிறது – ஒரு முக்கியமான விஷயம் குறித்து மந்திரி முடிவு எடுக்க வேண்டும்.
மந்திரிக்கும் துறை அதிகாரிக்கும் அத்தனை சுமுகமான உறவு இல்லை. அதிகாரி என்ன
சொன்னாலும் மந்திரி கேட்க மாட்டார். இல்லை எனில் மந்திரி சொல்வதை அதிகாரி கேட்க
மாட்டார். ஒரு முறை அப்படி அதிகாரி அனுப்பிய கோப்பில் “Not Approved” என்று
மந்திரி எழுதி அனுப்ப, நிறைய பிரச்சனைகள். மீண்டும் கோப்பு மந்திரியிடம் செல்ல,
ஒரு e சேர்த்து விட்டார் மந்திரி! “Not Approved” என்பது e சேர்த்து “Note
Approved” என்றானது!
பரம்ஜீத்
அவர்களின் கோப்பிற்கு வருகிறேன்! 1964-ஆம் ஆண்டில் ஏதோ ஒரு மருத்துவமனைக்கும் அலுவலகத்திற்கும்
இடையேயான சில ஸ்வாரஸ்ய விவாதங்கள் தான் அதில் இருந்தது. அப்படி ஒன்றும் முக்கியமான
தஸ்தாவேஜாக அது இல்லை என்றாலும் அதை இத்தனை வருடம் பாதுகாப்பாக வைத்திருந்தார்
பரம்ஜீத். ஒவ்வொரு கோப்பும் எத்தனை வருடம்
வைத்திருக்க வேண்டும், அதற்கான விதிகள் என்றெல்லாம் நிறைய விஷயங்கள் அரசு
அலுவலகத்தில் உண்டு. அவை பற்றி பிறிதொரு சமயத்தில் சொல்கிறேன். இப்படி நிறைய
கோப்புகளை பரம்ஜீத் அவர்கள் விடுமுறையில் இருந்த போது படித்து புதிய விஷயங்களைத்
தெரிந்து கொண்டேன். அந்தப் பிரிவிலிருந்து
அவர் சென்ற பிறகு அவர் பாதுகாத்து வைத்த பல கோப்புகள் நிரந்தரமாக அழிக்கப்பட்டன.
பரம்ஜீத்
அவர்கள் இப்படி பல விஷயங்களைச் சேமித்து வைத்திருந்தார். அவருக்கு அடுத்து வந்தவர்
அனைத்தையும் அழித்து விட்டார். மேஜை காலி! ஒவ்வொரு முறை காலி மேஜையைப்
பார்க்கும்போதும் ஏதோ ஒரு வித வலி மனதுக்குள் வரும் – எத்தனை பாசத்துடன் அந்த பழைய
கோப்புகளை அவர் வைத்திருந்தார் என்று தோன்றும். ஆனாலும் சில விஷயங்கள்
இப்படித்தான் – சட்டென்று மாறி விடும்! நல்ல மனிதர் அந்த பரம்ஜீத்.
அலுவலகத்திலிருந்து ஓய்வு பெறும் வரை தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருந்தார் –
அவரது கையெழுத்து என்னால் மறக்கவே முடியாது – பெரிது பெரிதாக, எழுதக் கற்றுக்
கொள்ளும் குழந்தை போல ஒழுங்கில்லாமல் எழுதுவார்! சமீபத்தில் தள்ளாடியபடி ரகாப்
கஞ்ச் குருத்வாரா வாசலில் அவரைப் பார்த்தபோது என்னை அவருக்கு அடையாளம்
தெரியவில்லை.
யார் என்று
சொன்ன பிறகு ”புத்தர்….”
என்று அதே பழைய பாசத்துடன் அழைத்து, என்னைப் பற்றி விசாரித்தார். ”காது சரியாகக் கேட்கவில்லை, பார்வையில் குறையிருக்கிறது, மகளுக்கு
திருமணம் செய்து விட்டேன், மகன் வங்கியில் பணி புரிகிறான் என பல விஷயங்களைச்
சொன்னார். வயதாகி விட்டது, குருவின் கிருபையால் வாழ்க்கை ஓடுகிறது” என்பது தான்
முக்கியமாகச் சொன்னது! அவருடன் குருத்வாரா அருகே இருக்கும் ஒரு கடையில்
தேநீர் அருந்திய பிறகு அவர் வழி அவர் செல்ல, என் வழியில் நான் சென்றேன். பேருந்தில் புறப்படும் முன்னர் என்னைக்
கட்டிப்பிடித்து ”ஜீத்தே ரஹோ புத்தர்” என்று வாழ்த்த மறக்கவில்லை பரம்ஜீத் சிங் ஜி!.
மீண்டும்
சந்திப்போம்… சிந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
குட்மார்னிங்.
பதிலளிநீக்குஅந்த இரண்டு பழைய பதிவுகளையும் நான் வாசித்திருக்கிறேன். முன்னொரு காலத்தில் எங்கள் பிளாக்கிலும் அலுவலக அனுபவங்கள் அவ்வப்போது வந்துகொண்டிருந்தது!
வணக்கம் ஸ்ரீராம். அலேக் அனுபவங்கள் பதிவுகள் நல்ல நினைவிலிருக்கிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீங்கள் சொல்லியிருக்கும் குறிப்புகள் பற்றி அறிவேன். அது சம்பந்தமாக ஒரு சம்பவம் கூட நான் பகிர்ந்திருந்த ஒரு அலுவலக அனுபவங்கள் பகுதியில் வந்திருந்தது. அது ஒரு இலக்கிய சர்ச்சை! கடுப்பாகிப் போனார் அதிகாரி!
பதிலளிநீக்குகோப்பில் இலக்கிய சர்ச்சை - ஹாஹா... நிச்சயம் இலக்கியம் பிடிக்காத அதிகாரி கடுப்பாகலாம்! தேவையில்லாத விஷயங்களை எழுதுவதாக கண்டிப்பது சில அதிகாரிகளுக்கு கைவந்த கலை இல்லையா ஸ்ரீராம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
என்னுடைய எஸ் ஆர் சமீபத்தில் எடுத்து செலோ டேப்பெல்லாம் போட்டு ஒட்டி சரி செய்தேன். தொட்டாலே ஓடியும் காகிதங்கள்தான். என்னதான் டிஜிட்டலைஸ் செய்தாலும் அவையும் முக்கியமாச்சே... லேமினேட் செய்ய எண்ணம்.
பதிலளிநீக்குஇங்கே அழகாக பைண்ட் செய்து வைத்திருக்கிறார்கள். சில வருடங்களுக்கு ஒரு முறை அதன் பக்கங்களை நகல் எடுத்து தருவதும் இப்போது வழக்கமாகி இருக்கிறது. லேமினேட் செய்வது அத்தனை நல்லதல்ல ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீங்கள் சொல்லியிருக்கும் சம்பவம் நெகிழ்ச்சி. சில நேரங்களில் சில அனுபவங்கள்...
பதிலளிநீக்குசில நேரங்களில் சில அனுபவங்கள் - உண்மை தான் ஸ்ரீராம். நெகிழ்ச்சியான நினைவுகள்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி
பதிலளிநீக்குகாத்தாடி ராமமூர்த்தி பற்றி வாசித்திருக்கிறேன்
இரண்டாவது பார்க்கிறேன்..
கீதா
வணக்கம் கீதாஜி! இரண்டாவது பதிவும் பார்த்து விட்டீர்கள் போல்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மனது நெகிழ்ந்துவிட்டது ஜி!
பதிலளிநீக்குபரம்ஜீத் சிங்க் ஜி பற்றி வாசித்ததும்.
எத்தனை அனுபவங்கள் உங்களுக்கு!!
மாலாவைப் பார்த்துவிட்டு வருகிறேன்..ஹா ஹா ஹா
கீதா
நெகிழ்ச்சி.... பரம்ஜீத் பற்றிய நினைவுகள் எப்போதும் வருவதுண்டு. நல்ல மனிதர் அவர். கீதாஜி, எத்தனையோ பேருக்கு உதவிகளும் செய்தவர் அவர்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நான் பணியாற்றியபோது கோப்புகள் நீங்கள் கூறியபடியே, ஆனால் Note File, Current File என்று பெயரிடப்பட்டிருக்கும். Note Fileஇல் அலுவலகக்குறிப்புகளும், அலுவலர்களின் ஆணையும் இருக்கும். Current Fileஇல் அந்த கோப்பு தொடர்பாக வந்த கடிதங்களும், அனுப்பப்படுகின்ற கடித நகல்களும் இருக்கும்.
பதிலளிநீக்குஉங்கள் அலுவலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அன்பு வெங்கட், எத்தனை அனுபவங்கள். அத்தனையும் எழுதி வீட்டுப் போயிருக்கிறார்.
பதிலளிநீக்குஆனால் இது போலத்தான் தொலைக்க முடியாமல் பாரத்தைச் சுமக்கிறோமோ.
பரம்ஜீத் நலமாக இருக்கட்டு,
மிக நெகிழ்வான,சுவாரஸ்யமான பதிவு. நன்றி மா.
தொலைக்க முடியாத பாரம் பல உண்டு தானே வல்லிம்மா... பரம்ஜீத் நலமாக இருக்க வேண்டும் என்பது தான் எனது பிரார்த்தனையும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
//பல பிரபல அதிகாரிகள், மந்திரிகளில் ஆரம்பித்து பிரதம மந்திரிகளின் கையெழுத்து/கையொப்பம் ஆகியவற்றை பார்க்கும், படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததுண்டு//
பதிலளிநீக்குஎனக்கும் இதில் ஆர்வமுண்டு ஜி நானும் அந்த நாட்டில் இவைகளை பார்த்து இருக்கிறேன்.
இறந்து போன முன்னாள் மன்னர் கையெழுத்துவரை...
முன்னாள் மன்னர் கையெழுத்து வரை... நல்ல அனுபவங்கள் அவை கில்லர்ஜி! பல பிரதம மந்திரிகளின் கைப்பட எழுதிய விவரங்களைப் படிப்பதில் ஒரு மகிழ்ச்சி கிடைக்கத்தான் செய்கிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மிகவும் ரசிக்கும்படி இருந்தது வெங்கட் ஜி. உங்கள் பதிவை படிக்கும்போது என்னுடைய அலுவலக நினைவுகள் வந்து சென்றது.
பதிலளிநீக்குஉங்கள் அலுவலக நினைவுகளையும் முடிந்தால் எழுதுங்களேன் இராமசாமி ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
ஞாபகங்களை விட்டுச் செல்லும் பதிவு சிறப்பு தொடருகிறேன் வாழத்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குநெகிழ்ச்சியான அனுபவம் ஜி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்கு