ஞாயிறு, 28 ஜூலை, 2019

தேசிய அருங்காட்சியகம் – தொடரும் நிழற்பட உலா



அன்பின் நண்பர்களுக்கு இந்த ஞாயிறில் இனிய காலை வணக்கம். இந்த நாளை ஒரு நல்ல பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாமா?

சிதைக்க முயலும் சோதனைகளுக்கிடையே தன்னைச் செதுக்கி உயரும் சாதனை தான் வாழ்க்கை!
 
சென்ற ஞாயிறன்று தலைநகர் தில்லியின் ஜன்பத் சாலையில் அமைந்திருக்கும் தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சில சிற்பங்கள் மற்றும் சிலைகளின் நிழற்படங்களை பகிர்ந்து கொண்டேன். அந்தப் பதிவின் சுட்டி – தேசிய அருங்காட்சியகம் – சிற்பங்களும் சிலைகளும் – நிழற்பட உலா.  அந்த நிழற்படங்களின் தொடர்ச்சியாக இந்த வாரமும் அங்கே எடுத்த வேறு சில நிழற்படங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். சென்ற வாரம் மகள் எடுத்த நிழற்படங்கள் என்றால், இந்த வாரம் இல்லத்தரசி எடுத்த நிழற்படங்கள்.


படம்-1: யமுனா [ஆமாம் யமுனா நதிப் பெண்ணே தான்!] – மத்தியப் பிரதேசத்திலிருந்து – கி.பி. எட்டாம் நூற்றாண்டு – சிற்பம். உயரம் 63.5 செ.மீ.; அகலம் 43.5 செ.மீ. – கேசம் முதல் பாதம் வரை அனைத்தும் சிறப்பான முறையில் செதுக்கப்பட்டிருக்கிறது – எத்தனை detailing!


படம்-2: கல்யாணசுந்தரமூர்த்தி [சிவன் பார்வதி திருமணம்] – பரத்பூர், ராஜஸ்தானிலிருந்து – கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு - சிற்பம். உயரம் 98.5 செ.மீ.; அகலம் 68.5 செ.மீ.


படம்-3: பாலகிருஷ்ணா [அ] சம்பந்தர் – தென்னிந்தியாவின் விஜயநகரத்திலிருந்து – வெண்கலச் சிலை – உயரம் 51.2 செ.மீ.; அகலம் 33.0 செ.மீ.


படம்-4: மாணிக்கவாசகர் – தென்னிந்தியாவின் சோழற்காலத்து வெண்கலச் சிலை – உயரம் 50.2 செ.மீ.; அகலம் 21.8 செ.மீ.


படம்-5: கஞ்சிக் கலையம் கொண்டு போகிறாரோ இப்பெண்மணி – சிற்பம் - உடை, காதணி என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கி இருக்கிறார் இந்தச் சிற்பி.


படம்-6: சாமுண்டா தேவி – ராஜஸ்தானிலிருந்து – கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டு - சிற்பம். உயரம் 52.5 செ.மீ.; அகலம் 36.0 செ.மீ.


படம்-7: சிற்பம் வடிக்க ஆரம்பித்த சிற்பி, தான் வடித்த சிலைப் பெண்ணின் முக அழகில் மயங்கி சிற்பம் வடிப்பதையே மறந்து விட்டானோ? முகம் மட்டும் இருக்கும் ஒரு சிற்பம்…


படம்-8: ஒரு சிற்பத்தில் தான் எத்தனை எத்தனை உருவங்களைக் கொண்டு வர முடிகிறது இந்தத் திறமைசாலிகளால்! இம்மாதிரி அழிந்த உயிரினங்கள் எத்தனை எத்தனை? பார்க்கப் பார்க்க எத்தனை எண்ணங்கள் மனதில் தோன்றுகின்றன!


படம்-9: இந்தச் சிலை பற்றிய குறிப்பு என்னிடம் இல்லை – ஆனால் எத்தனை அழகு… பார்க்கும்போதே மனதில் ஒரு மகிழ்ச்சி. திறமைசாலி இந்தச் சிற்பி.


படம்-10: உங்களின் இசைக்கேற்ப நான் ஆட வேண்டும் என்று சொல்கிறாளோ இந்தச் சிலைப் பெண்… இசைக் கலைஞர்கள் சிற்பம்.


படம்-11: இந்தக் காட்சி என்ன என்று தெரியவில்லை. யாரோ ஒரு இளைஞர் தனது பலத்தினை வட்டப்பாறை தூக்கி நிரூபிக்கிறாரோ? இல்லை கிருஷ்ணரை கூடையில் தூக்கியபடி யமுனையைக் கடக்கிறாரோ வசுதேவர்?


படம்-12: துணியில் தாயம் விளையாட்டு… அதற்கான தாயமும், Coin-களும் யானைத் தந்தத்தில் செய்யப்பட்டு வண்ணம் பூசியவையாம்!


படம்-13: தலையில் பானை சுமந்தபடி வாத்தியமும் வாசிக்கிறார் இந்தப் பெண்மணி – சிலை – வெள்ளியோ? பெண்மணியின் கூந்தலும் அவ்வளவு அழகாக வந்திருக்கிறது!


படம்-14: அழகான வேலைப்பாடுகளுடன் குடுவைகள்…


படம்-15: மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பதற்கான ஏற்பாடு – அதிலும் கலைநயம்…


படம்-16: சவாரி செய்தபடியே தன் காதலியை ஆசையுடன் பார்த்து மகிழும் காதலன்! – இதுவும் வெள்ளிச் சிலை.

எத்தனை அழகான சிற்பங்கள், சிலைகள் இல்லையா? இந்த அருங்காட்சியகத்தில் உள்ளவை அனைத்தையும் பார்க்க நிறைய பொறுமை வேண்டும். நாங்கள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அங்கே இருந்தோம். காட்சிப் படுத்தியிருக்கும் பெரும்பாலானவற்றிற்கு அதன் பக்கத்திலேயே குறிப்பு எழுதி வைத்திருக்கிறார்கள். சில இடங்களில் அத்தகவல்கள் QR Code ஆகவும் இருக்கிறது – அலைபேசி மூலம் Scan செய்து தகவல்களைப் பார்க்கவும் சேமித்துக் கொள்ளவும் முடியும் என்பது கூடுதல் வசதி! தலைநகர் தில்லி வரும் வாய்ப்பும், நேரமும் இருந்தால் ஜன்பத் சாலையில் இருக்கும் இந்த அருங்காட்சியகம் சென்று வாருங்கள்.

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில நிழற்படங்களோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

40 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    அருமையான வாசகம். இன்றைய படங்களுக்கும் ஏற்ற ஒன்று மனித வாழ்க்கைக்கும்!

    ஹை ஸ்ரீராமை முந்திக் கொண்டேன்! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி! ஆமாம் இன்றைக்கு நீங்க தான் ஃபர்ஸ்ட்! ஸ்ரீராம் இன்னும் கூட இங்கே வரல!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அந்தப் பின்னலழகு வாவ் எவ்வளவு அழகாகச் செதுக்கியிருக்காங்க! பாராட்டுகளுக்கும் மிஞ்சியவர்கள். எப்படி ஒரு திறன்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் - அதுவும் கல்லில் இப்படி நளினமாகச் செதுக்கி இருப்பது சிறப்பு தான் கீதாஜி. திறமைசாலிகளாக இருந்த அவர்களுக்கு என்னுடைய வந்தனம்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. அனைத்தையும் மிகவும் ரசித்தேன் வெங்கட்ஜி.

    அந்த உடைகள் முதல் எப்படி அழகாகச் செதுக்கியிருக்காங்க. நீங்கள் சொல்லியிருப்பது போல் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்துச் செதுக்கியிருக்கிறார்கள். மெழுகுவர்த்தி ஸ்டான்ட் கூடக் கலை நயம். கடைசி சிலை உட்பட அத்தனையும் கலை நயம் பிரமிக்க வைக்கிறது. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.

    ஆமாம் ஜி நீங்கள் சொல்லியிருப்பது போல் பார்க்கும் போது மனதில் எண்ணங்கள் பல எழுகின்றன. அந்தச் சிற்பிகள் தங்கள் மனதில் எழுந்ததி அழகாகக் கலைநயமாக வடித்த அளவு மனதில் தோன்றும் அந்த எண்ணங்களை எழுத்தில் வடிக்க இயலவில்லையே என்றும் தோன்றுகிறது.

    அருமை ஜி அனைத்தும். அட! டெக்னாலஜி - மொபைல் வழி ஸ்கான் செய்து வாசிக்க க்யூ ஆர் கோட்!!!

    தில்லி செல்லும் வாய்ப்பு ஏற்பட்டால் கண்டிப்பாகச் செல்ல வேண்டும். முன்பு சென்ற போது இதெல்லாம் பார்க்க இயலவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாஜி. இங்கே ஒவ்வொன்றும் கலைநயம். பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

      அடுத்த முறை தில்லி வரும்போது சொல்லுங்கள். நானே கூட உங்களை அழைத்துச் செல்கிறேன் [இன்னுமொரு முறை நானும் பார்க்கலாமே! :)]

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. ஆதி எடுத்த படங்கள் மிக அழகு.
    அருங்காட்சியகத்தை ஆதியின் படங்களுடன் சுத்தி வந்து விட்டேன்.

    மகுடி வாசிக்கும் பெண்ணின் ஜடை கடைசியில் குஞ்சம் அழகு. அவர் அணிந்து இருக்கும் அணிகலங்கள், அவர் உடுத்தி இருக்கும் ஆடைகளில் உள்ள பூ வேலைப்பாடு எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருங்காட்சியகத்தினை படங்கள் வழி நீங்களும் சுற்றி வந்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. எல்லாம் அற்புதறான காட்சி
    கடைசி ஒட்டகச்சிலை ஸூப்பர் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒட்டகச் சிலை உங்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. 3ஆவது படம் பாலகிருஷ்ணராக இருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு இருந்தால் கையில் வெண்ணெய் இருக்கும் என்று படித்துள்ளேன். அது பெரும்பாலும் ஞானசம்பந்தராகத்தான் இருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சிறு குழப்பம் இருப்பதால் தான் இப்படி பாலகிருஷ்ணர் [அ] ஞானசம்பந்தர் என குறிப்பு எழுதி இருக்கிறார்கள் - எனக்கும் ஞானசம்பந்தர் எனவே தோன்றியது முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு



  7. கடந்த ஒரு நூற்றாண்டுகளில் இரும்பு வார்ப்பு போன்ற தொழிலில் முன்னணியில் இருந்தது ஜெர்மனி மற்றும் ரஷ்யா. 70 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிருந்து வந்த இரும்புத் தளவாடங்கள் இன்னமும் தன் வலிமையை இழக்காமல் இருக்கின்றது. சமீபத்தில் ஒரு பொறியாளர் எழுதிய கட்டுரையை வாசித்தேன். ரஷ்யாவில் இருந்து வந்த ஒரு கருவியின் போல்ட் நட் திறக்கமுடியாமல் அப்படியே உடைக்க முற்பட்டனர். ஆனால் உடைக்க முடியவில்லை. காரணத்தை பின்வருமாறு சொல்கின்றார். இரும்பு உருக்குத் தன்மையில் பல வித தரப்பரிசோதனை செய்து செய்து அதனை மிக மிக சுத்தமாக மாற்றப்பட்டு அதன் பிறகு செய்யப்படும் கருவிகள் தன் வலிமையை எந்தக் காலத்திலும் இழக்காது. தீயில் உருக்கினால் மட்டுமே அதன் தன்மை மாறும். காரணம் அந்த அளவுக்கு அதன் சுத்தத்தன்மை நீண்ட காலம் பேசும் என்றார். எனக்கு இந்தச் சிலைகளைப் பார்க்கும் போதுஇத்தனை ஆண்டுகள் கடந்து வந்த போதும் அதன் தன்மை மாறாமல் அப்படியே இருக்கின்றது என்றால் ஆயிரம் வருடத்திற்கு முன்பு அந்த தொழில் நுட்பத்தில் நம்மவர்கள் சிறந்து விளங்கி இருக்கின்றார்கள் என்று தானே அர்த்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தொழில் நுட்பத்தில் நம்மவர்கள் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் - உண்மை. தொன்மையான பல விஷயங்களை இப்படிப் பார்க்கும்போது அவர்களது திறமை கண்டு வியக்காமல் இருக்க முடிவதில்லை. உங்கள் மேலதிகத் தகவல்கள் சிறப்பு ஜோதிஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பாலகிருஷ்ணாவும் இல்லை, சம்பந்தரும் இல்லை, நர்த்தன கிருஷ்ணன் கோவில்களில் சில இடங்களில் பாம்பும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நர்த்தன கிருஷ்ணர் - இருக்கலாம்... அருங்காட்சியகக் குறிப்பில் எழுதி இருந்ததை இங்கே சொல்லி இருக்கிறேன் கோமதிம்மா... சிலை வடித்தவரும், இறைவனுமே அறிவார்கள் உண்மையான ரூபத்தினை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. காளிங்க நர்த்தனர் சிலை முந்தைய பதிவில் இரண்டு படங்கள் இருந்தது கோமதிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. வணக்கம் வெங்கட்.

    தினம் ஒரு தகவல் போல தினம் ஒரு பொன்மொழியுடன் தொடங்குகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம் ஸ்ரீராம். தினம் ஒரு பொன்மொழி - முடிந்தவரை பகிர்ந்து கொள்ள எண்ணம். பார்க்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. முதல்படத்தில் இருக்கும் சிற்பத்தில் நடுவில் இருக்கும்பெண் கைப்பை மாட்டியிருப்பது போல தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். அந்தக் காலத்திலேயே இப்படி கைப்பைகள் உண்டு என்பதற்கு இது ஒரு உதாரணம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. முக அழகில் மயங்கி சிலை வடிக்க மறந்தானா, இல்லை மனம் கல்லாகப்போன பெண்ணை சிம்பாலிக் சிலையாக்கிவிட்டானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் கல்லாகப் போன பெண்ணை சிம்பாலிக் சிலையாக்கிவிட்டானா? மாறுபட்ட கோணம்... எதற்கு இப்படிச் செதுக்கி இருப்பார் என்று நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. எல்லாச் சிற்பங்களும் மிக அழகு. கலைநயத்துடன் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். ஒவ்வொன்றிலும் ஒரு வித அழகு தெரிகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. சிறப்பான சிற்பங்கள். நல்லதொரு படத் தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  16. //பாலகிருஷ்ணா [அ] சம்பந்தர் // இதேபோன்ற சிற்பம் தஞ்சை அரண்மணை சிற்பக்கூடத்தில் (உலோகச் சிற்பக் கூடத்தில்) இருக்கிறது. அதன் கீழ் திருமங்கை ஆழ்வார் என எழுதியிருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமங்கை ஆழ்வார் - சில சிற்பங்களைப் பார்த்து யாருடையது எனக் கண்டுபிடிப்பது கடினம். இங்கேயும் அந்தக் குழப்பம் இருந்ததால் இப்படி இரண்டு பெயரைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  17. //தன் காதலியை ஆசையுடன் பார்த்து மகிழும் காதலன்! –// - என்ன சும்மா சும்மா அசையற..ஒட்டகத்தைக் கட்டுப்படுத்தறது சிரமமாக இருக்கு" என்று சொல்லியிருக்கக்கூடாதா?

    படம் 6 - சரியாக ஃபோகஸ் செய்யப்படலையா இல்லை சிற்பமே அழிந்துபட்ட நிலையில் இருந்ததா?

    அப்போ சிற்பங்களை வடித்த சிற்பிகள் உணவும் இருப்பிடமும் மட்டும் பெற்றிருப்பார்கள். அவர்களுக்குத் தெரியுமா அவர்களின் சிற்பங்களை இத்தனை பேர் பார்த்து மகிழ்வார்கள், கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ளது என்று?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /சும்மா சும்மா அசையற ஒட்டகத்தைக் கட்டுப்படுத்தறது சிரமமாக இருக்கு/ ஹாஹா... இப்படியும் சொல்லி இருக்கலாம்! எல்லாம் நம் கற்பனைக்கே விட்டு விட்டார் அந்தச் சிலையை வடித்தவர்!

      படம் 6 - சிதையுண்ட சிற்பம் தான்.

      அப்போது அவர்களுக்கு இந்த சிற்பங்களின் மதிப்பு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  18. படங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு
    நேரில் பார்த்த உணர்வு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  19. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  20. மிக அழகிய சிற்பங்கள். நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....