திங்கள், 22 ஜூலை, 2019

ஜெர்மனிக்கு அழைத்த விதி…


படம்: இணையத்திலிருந்து...


அன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்.

பல சமயங்களில் ”விதி வலியது” என நமக்கு உணர்த்தும் நிகழ்வுகள் நடந்தபடியே இருக்கின்றன. ஆனாலும் நமக்கு அதன் வலிமை புரிவதில்லை. சமீபத்தில் கேட்ட ஒரு நிகழ்வு “விதி வலியது” என்று மீண்டும் சொன்னது. அந்த நிகழ்வினைப் பற்றிச் சொல்வதற்கு முன்னர் ஒரு கதையைப் பார்க்கலாம் வாங்க…
 
விதி வலிமையானது என்பதற்கு நிறைய சான்றுகள் உண்டு. அபிமன்யுவின் மகனான பரிக்ஷித் பாண்டவர்களுக்குப்பின் அரியணையில் ஏறியவன். நல்லவன். மனிதநேயம் மிக்கவன். காட்டில் வேட்டையாடும் போது ஓர் மானைத் துரத்திச் சென்றான். அங்கே முனி ஒருவர் தவமிருந்தார். அவரைப் பார்த்து தான் துரத்திய மான் இப்பக்கம் வந்ததா என் வினவினான். அவர் மௌனமாக இருக்கவே எரிச்சலடைந்தவன் அருகில் இறந்து கிடந்த பாம்பை தூக்கி அவர்மேல் வீசிவிட்டு சென்றான். அது அவன் கர்மபலன்.

அந்த ரிஷியின் மகன் தன் தந்தையை அவமதித்தவன் பாம்பரசனால் தீண்டப்பட்டு ஏழு இரவுக்குள் இறப்பான் எனச் சாபம் தந்தான். இதையறிந்த பரிக்ஷித் ஒற்றைத் தூணின்மேல் மாளிகை எழுப்பி ஏழு நாட்கள் தங்க முடிவு செய்தான். மூலிகை வைத்தியர்கள், காவலர்கள் சூழ ஆறு நாள் கழிந்தது. ஏழாம் நாள் மன்னன் பசியாற பழங்கள் வந்தன. அவைகளை மந்திரிகளுக்கும் கூட இருந்தோருக்கும் பகிர்ந்து அளித்து ஒரு பழத்தை எடுத்து உண்ண ஆரம்பித்தான். புழு வடிவில் உள்ளே இருந்த பாம்பரசன் தீண்ட பரிக்ஷித் இறந்தான். எப்படி பாதுகாப்பாக இருந்தாலும் விதி எந்த வடிவத்திலும் தொடரும் என்பதே இதன் பொருள்.

இந்த கதை உங்களில் பலரும் படித்திருக்கக் கூடும். நான் சமீபத்தில் கேட்டு அதிர்ந்த ஒரு நிகழ்வினைப் பற்றிப் பார்க்கலாம். தலைநகர் தில்லியின் பல அரசுக் குடியிருப்புகளில் ஒன்று இருக்கும் பகுதி – நிறைய வீடுகள் அங்கே உண்டு. இங்கே ஒரு நல்ல விஷயம் குடியிருப்புகளின் நடுநடுவே அமைந்திருக்கும் பூங்காக்கள். ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் இங்கே நடைப்பயிற்சி செய்யும் பலரைப் பார்க்க முடியும். அப்படி நடைப்பயிற்சி செய்யும் ஒரு பூங்காவிற்கு வருபவர்கள் அந்த 22-வயது இளைஞரைக் கண்டிப்பாக கவனித்து இருப்பார்கள். வயது 22 என்றாலும் ஐந்து வயதுக்கான முதிர்ச்சி மட்டுமே அவரிடம். பூங்காவில் நடப்பது அந்த இளைஞனுக்கு மிகவும் பிடித்த விஷயம். ஒவ்வொரு நாளும் குறைந்தது 30-40 சுற்றாவது சுற்றி வந்து விடுவான்.

கழுத்தைச் சாய்த்துக் கொண்டு, ஹூம்காரம் செய்தபடியே நடந்து கொண்டிருப்பான். எதிரே யாராவது வந்தால், அவர்களை மறித்தபடி நின்று ஒரு ஹூம்காரம் – வணக்கம் சொல்வது போல! பின்னர் அவன் வழி அவன் நடப்பான். பேச்சு கிடையாது. அவனுடைய தந்தையோ, தாயோ தினமும் அவனுடன் பூங்காவிற்கு வந்து அவன் நடப்பதைக் கவனித்தபடியே பூங்காவில் இருக்கும் ஏதாவது ஒரு பலகையில் அமர்ந்து இருப்பார்கள். தப்பித்தவறி அவன் எங்கேயும் வெளியே சென்று விட்டால், அவன் கழுத்தில் இருக்கும் அடையாள அட்டையில் பெயர், தொலைபேசி எண், விலாசம் என எல்லாம் எழுதி வைத்திருப்பார்கள். பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொள்வார்கள் அவனது பெற்றோர்கள். எந்தக் குறையும் இன்றி அவனைப் பார்த்துக் கொள்வது தான் அவர்களது முதல் வேலை.

தலைநகர் தில்லியின் பிரபல மருத்துவமனைகளில் அவனைக் காண்பித்து பல பரிசோதனைகள் செய்து, மருந்துகள் கொடுத்து கவனித்துக் கொண்டார்கள். ஆனாலும் அவனது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. தனக்குப் பிறகு மகனின் நிலை என்னவாகும் என்பதில் பெற்றோர்கள் இருவருக்குமே பெருத்த கவலை உண்டு. இன்னும் சில ஆண்டுகளில் அவனது தந்தை அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறப் போகிறார். தனக்குப் பிறகு யார் தனது மகனைக் கவனித்துக் கொள்வார்கள் என்பதைப் பற்றி பெற்றோர்கள் இருவரும் தமக்குள் பேசிக் கொள்வது வழக்கமான ஒன்று. அவருக்கு இரண்டு மகள்கள் ஒரே மகன். மகள்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. இருவருமே ஜெர்மனியில் பக்கத்துப் பக்கத்து ஊர்களில் தங்கள் குடும்பத்துடன் இருக்கிறார்கள்.

கடந்த சில நாட்களாக அந்த தந்தை, மகனுடன் ஜெர்மனிக்குப் போகப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தார். ஜெர்மனியில் மகள் வழியாக ஒரு மருத்துவரிடம் பேசி வைத்திருப்பதாகவும், அங்கே மகனுக்கு மருத்துவம் செய்து கொண்டு சில மாதங்களில் இந்தியா திரும்ப நினைத்திருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருந்தாராம். என் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவர் அப்பகுதியின் RWA [Residents Welfare Association]-ல் இருப்பதால் அவரிடம் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார். அவர் சென்று ஒரு வாரம் கூட ஆகவில்லை. ஜெர்மனிக்குச் சென்றவரிடமிருந்து தகவல் வருகிறது. “என் மகன் மோண்[tu]டூ இறந்து விட்டான். இந்த இழப்பை என்னால் தாங்கவே முடியவில்லை” என்பது தான் அத்தகவல். படித்த நண்பருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கூட அதிர்ச்சியான தகவல் தான் அது.

மகளின் வீட்டுக்குச் சென்று இரண்டு மூன்று நாட்களாகவே விருந்தினர் வருகையும், நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பதால் மகிழ்ச்சியும் குதூகலமுமாக இருந்திருக்கிறார்கள். இரண்டு மூன்று நாட்களாக பூங்காவிற்குச் செல்ல முடியாமல், நடக்கவும் முடியாமல் இருந்ததில் மோண்டூவிற்கு அதிகமான கோபம். தனது கோபத்தினையும், இயலாமையையும் வெளிக்காட்ட, வீட்டின் வளாகத்தில் இருந்த நீச்சல் குளம் அருகே அழைத்துச் சென்று இருக்கிறார்கள். நீச்சல் குளத்தினைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்க, பெற்றோரும், உறவினர்களும் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சில் மகனைக் கவனிக்கத் தவறியதில் மோண்டூ நீச்சல் குளத்தின் ஆழமான பகுதியில் விழுந்தது அவர்களுக்குத் தெரியவில்லை.

தண்ணீருக்குள் விழுந்தவனால் வழக்கமாக எழுப்பும் ஹூம்கார ஒலியையும் எழுப்ப முடியவில்லை. சில நொடிகளிலேயே நிறைய நீரைக் குடித்து நீச்சல் குளத்திலேயே மரணம் சம்பவித்து இருக்கிறது. இத்தனை வருடங்கள் கட்டிக் காப்பாற்றிய மகனை ஜெர்மனிக்கு மருத்துவத்திற்காக அழைத்துச் சென்று இழந்து விட்டதாக புலம்புகிறார்கள் மோண்டூவின் பெற்றோர்கள். அதைக் கேட்ட எனது நண்பருக்கும் மனது ஆறவில்லை. “விதி வலியது” என்று சொல்லிக் கொண்டிருந்தார். இந்த நிகழ்வினைக் கேட்டதிலிருந்து எனக்கும் இதே எண்ண ஓட்டம் – என்னதான் ”விதியை மதியால் வெல்லலாம்” என்று மார்தட்டிக் கொண்டாலும், பல சமயங்களில் இந்த விதியை வெல்ல முடிவதில்லை இல்லையா… கேட்டதிலிருந்தே மனதை என்னவோ செய்தது இந்த நிகழ்வு. இனிமேல் பூங்காவில் மோண்டூவின் ஹூம்கார ஒலி கேட்காது!

நண்பர்களே, இன்றைய பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

36 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்க்ட்ஜி

    விதி வலியது என்று பல சமயங்களில் உணர்த்தத்தான் செய்கின்றது இந்த (அழகான ஆனால் மர்மமான!!!!) வாழ்க்கை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி. அவ்வப்போது இதை உணர்த்தும் நிகழ்வுகள் ஆனாலும் பலராலும் இதை புரிந்து கொள்ள முடிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. மனதை மிக மிக மிக பாதித்துவிட்டது வெங்கட்ஜி இந்தக் கதை. எங்கள் வீட்டிலும் இப்படியான நட்சத்திரக் குழந்தை/கள் உண்டு.

    இப்படியான குழந்தைகளை அவர்கள் பழகிய சூழல், பிடித்த சூழலில் இருந்து மாற்றுவது என்பது கொஞ்சம் கடினம். அப்படி ஒரு சூழலுக்கு மாற்ற வேண்டிய நிலை வந்தால் அதற்குக் குழந்தைகளை முதலில் தயார்ப்படுத்த வேண்டும் என்று உண்டு. இதைப் பற்றி நிறைய சொல்லலாம் ஜி.

    என்றாலும் இப்படித்தான் நடக்க இருக்கிறது எனும் போது அச்சமயத்தில் இந்த விஷயம் கூட நம் மனதில் தோன்றாமல் போகும்தான்...

    இம்மாதிரியான குழந்தைகளுடன் கொஞ்சம் அனுபவம் உண்டு, மனதை மிகவும் பாதித்துவிட்டது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நட்சத்திரக் குழந்தைகள் - சரியான பெயர். இந்த நிகழ்வு என்னையும் பாதித்தது. கேட்டதிலிருந்தே மனது சரியில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  3. குட்மார்னிங் வெங்கட்.

    நெகிழ்த்தியாகவும் பாவமாகவும் இருக்கிறது சம்பவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. ஹாஹா... நெகிழ்ச்சி என்று தான் நான் படித்தேன் ஸ்ரீராம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. ​அவர் ஜெர்மனியில் சென்று மரணம் அடைந்ததற்கு ஏதோ ஒரு காரணம் இருந்திருக்கும். சென்ற பிறவியில் அவர் அந்த ஊர்க்காரராய் இருந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பையனின் பெற்றோருக்கு கடைசி காலமோ என்னவோ...இல்லை அவங்க தங்கள் மகளுடன் இருக்கணும்னு இருக்கோ என்னவோ...

      நீக்கு
    2. காரணம் இருக்கலாம். “அவனே” அறிவான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. கடைசி காலத்தில் தங்கள் மகளுடன் இருக்கணும்னு இருக்கோ - இருக்கலாம் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. சொல்வதற்கு என்ன இருக்கின்றது...

    விதி வலியது.. அவ்வளவுதான்...

    இறைவன் நல்லகதியருளட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதி வலியது - அதே தான் துரை செல்வராஜூ ஜி. அனைவருக்கும் நல்லகதி அருள பிரார்த்திப்போம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

  6. மனம் வருந்துகிறது இப்படித்தான் பாடகி சித்ராவின் குழந்தையும் இறந்து போனது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மகிழ்ச்சி மதுரைத் தமிழன்.

      ஆமாம் பதிவு எழுதும்போதே பாடகி சித்ரா அவர்களின் குழந்தை பற்றியும் நினைவுக்கு வந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. நற்காலை வணக்கம் வெங்கட்.
    இறைவன் பெற்றோருக்கு ஆறுதல் அளிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா.... பெற்றொர்களுக்கு ஆறுதல் அளிக்க இறைவன் அன்றி வேறு யாரால் இயலும்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. உண்மைதான் ஜி விதியின் வழியிலிருந்து யாரும் மாற்றி நடக்க இயலாது.

    அபுதாபியில் நான் மூன்றுமுறை பெரிய விபத்திலிருந்து தப்பி இருக்கிறேன் காரணம் என்ன ?

    எனது மரணம் இந்தியாவில் என்பதுதானே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அபுதாபியில் மூன்று விபத்து - ஆண்டவன் உங்கள் பக்கம்...

      விதியின் வழியிலிருந்து யாரும் மாறி நடக்க இயலாது என்பது உண்மை தான் கில்லர்ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. இதுபோல, பாடகி சித்ராவுக்கு பலப் பல வருடங்கள் கழித்துப் பிறந்த குழந்தை. ரொம்ப அருமையா வச்சிருந்தாங்க. ஒரு நிகழ்ச்சிக்கு கணவன் மனைவி இருவரும் குழந்தையோடு துபாய் சென்றார்கள். அங்க இந்த குழந்தை ஹோட்டல் நீச்சல் குளத்தில், தண்ணீரில் விழுந்து இறந்துவிட்டது (சிறிய கவனக்குறைவினால்).

    விதியை யார்தான் மீற முடியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதியை யார் தான் மீற முடியும்? எனக்கும், பாடகி சித்ரா அவர்கள் குழந்தை பற்றிய நினைவு இப்பதிவு எழுதும்போது வந்தது நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. மோண்[tu]டூ வை இழந்து தவிக்கும் பெற்றோர் நிலை மிகவும் கஷ்டமான நிலை.
    22 வயது வரை பாதுகாத்த மகனை இப்படி குணபடுத்த போன இடத்தில் தொலைத்து விட்டு நிற்கும் பெற்றோர் நிலை மனதை கனக்க வைத்து விட்டது.

    விதி வலியது தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத்தனை வருடங்கள் பாதுகாத்தது இதற்குத் தானா என்ற எண்ணம் அந்தப் பெற்றோருக்கு எப்போதும் இருக்கும் கோமதிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. மிகவும் துயரமான சம்பவம். இது ஒரு தற்செயலாக நடந்த சம்பவம் என்றாலும் அவனுடைய தாய் தந்தையர்க்கு ஏற்பட்டிருக்கும் குற்ற உணர்ச்சி தவிர்க்க முடியாத ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துயரமான சம்பவம் தான் இராமசாமி ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    விதியின் உண்மை கதை மனதை காயப்படுத்துகிறது. விதி என்றுமே வலியதுதான்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதி என்றுமே வலியது தான் என்பதை இப்படியான நிகழ்வுகள் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. நாம் தான் புரிந்து கொள்வதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  15. படித்ததும் மனம் கனத்தது. இங்கேயே அவர் இருந்திருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் நினைத்தபடி நடப்பதில்லையே முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. விதி வலியதுதான்! இந்த பதிவை ஆகஸ்ட் மாத தேன்சிட்டு இதழுக்கு பயன்படுத்திக் கொள்கிறேன்! ஆட்சேபனை இருப்பின் 9444091441 என்ற வாட்சப் எண்ணில் தெரிவிக்கவும்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதி வலியது - உண்மை தான் தளிர் சுரேஷ். இப்பதிவினை தேன்சிட்டு இதழில் வெளியிடுவது குறித்த தகவலுக்கு நன்றி சுரேஷ். உங்கள் முயற்சிகள் தொடரட்டும். வாழ்த்துகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....