படம்: இணையத்திலிருந்து...
அனைத்து
நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைக்கு சனிக்கிழமை. அலுவலகம் விடுமுறை
என்பதால் பொறுமையாக எழுந்திருக்கலாம். ஆனாலும் மற்ற நாட்களில் வராத விழிப்பு,
விடுமுறை நாட்களில் சற்று சீக்கிரமாகவே வந்து விடுகிறது! அதுவும் எல்லா சனி,
ஞாயிறுகளிலும் இப்படியே என்றால் என்னாவது! விழித்தெழுந்து காஃபி/தேநீர் அருந்திய
படியே கொஞ்சம் வலை மேய்ந்தால் மீண்டும் தூக்கம் கண்களை இழுக்க, அப்படியே தூங்கி
விடுகிறேன் – பல சமயங்களில் இப்படித் தூங்கி எழும்போது காலை பத்து மணிக்கு மேல்
ஆகிவிடுகிறது! ”டேய்…
சோம்பேறி… எழுந்திருடா, எழுந்து வேலையைப் பாரு..” என எனக்கு நானே
சொல்லிக் கொண்டு எழுந்து கடகடவென வேலைகளைப் பார்ப்பது நடக்கிறது! சரி நான்
தூங்குவது ஒரு புறம் இருக்கட்டும். இன்றைக்கு சமீபத்தில் என்னைப் பிடித்திருந்த ஒரு
மோகம் பற்றி பேசலாம் வாங்க…
ஒன் பாட் சமையல் மோகம்:
வாரத்தில்
இரண்டு மூன்று நாட்களில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போதே எட்டு மணிக்கு
மேல் ஆகிவிடுகிறது. கொஞ்சம் ஆஸ்வாசப்படுத்திக் கொண்டு, சாதம் வைத்து,
குழம்பு/ரசம், பொரியல் என சமைத்து சாப்பிட வேண்டும் என்றால் கொஞ்சம் கஷ்டம் தான்.
கடும்கோடையில் சமையலறையில் சமைத்து முடிப்பதற்குள் வியர்வை மழையில் குளிக்க
வேண்டியிருக்கிறது. அப்படி வியர்வையில் குளித்ததற்கு
மீண்டும் ஒரு குளியல் போட்டால் தான் நிம்மதியாகச் சாப்பிட முடியும்! கொஞ்சம்
சோம்பேறித்தனம் வந்தாலும் போச்சு! வெளியில் சாப்பிடலாமா, இல்லைன்னா பால்/பழம்
சாப்பிட்டு தூங்கி விடலாமா என மனதில் எண்ண ஓட்டம் வந்து விடும். அப்படி பால்/பழம்
மட்டும் சாப்பிட்டுத் தூங்கினால் நள்ளிரவில் பசி வந்து வயிறு சபிக்கும் – “ஏண்டா பாவி,
சரியான சோம்பேறியா இருக்கியே… ஏண்டா என்னை காயப் போட்டு கஷ்டப் படுத்தற?”
என்று கேள்விக் கணைகள் தொடுக்கும்!
நள்ளிரவில்
விழிப்பதில் இன்னுமொரு கஷ்டம் – மனது அலைபாயும். தேவையற்ற சிந்தனைகள் தூங்க
விடாது! ஏற்கனவே பசி, இதில் சிந்தனைகளும் சேர்ந்து கொண்டால், விடிய விடிய விழிப்பு
தான் – அர்த்த ராத்திரியில் விளக்கை போட்டுக் கொண்டு வலை மேய்ந்தால், அடுத்த நாள்
அலுவலகத்தில் 1000 என எழுதுவதாக நினைத்து 10000 என எழுதி விட வாய்ப்புண்டு! ஒரு
சைஃபர் தானே அதிகமா போச்சு அதனால் என்ன என சும்மா இருந்து விடமுடியாது! அதனால்
சோம்பேறித்தனத்தை தள்ளி வைத்து விட்டு சமைத்து விடுவது தான் வழக்கம். இது பற்றி
இல்லத்தரசியிடம் பேசிக் கொண்டிருந்த போது “ஒன் பாட் சமையல்” செய்யறது சுலபம்.
அப்படிச் செய்து சாப்பிடலாமே எனச் சொன்னதோடு எனக்காக நிறைய ஒன் பாட் சமையல்
காணொளிகளை வாட்ஸ்-அப்பில் அனுப்பி வைத்தார்.
படம்: இணையத்திலிருந்து...
Hebber’s
Kitchen, Padhu’s Kitchen, Archana’s Kitchen, Manjula’s Kitchen என பலப் பல
வீடுகளின் சமையலறையில் அவர்கள் அழைப்பில்லாமலேயே நுழைந்து வெளி வர முடிகிறது!
எல்லா தளங்களிலுமே ஒன் பாட் என்று சொல்கிறார்களே தவிர – ஒரே ஒரு பாத்திரத்தில் சமைக்கும்
சமையல் வகைகள் ரொம்பவே குறைவு! பத்து பாத்திரம் தேவையாக இருக்கிறது! சரி அதை
விடுங்கள் ஒன் பாட் என்று சொல்லி மின்சாரம் மூலம் இயங்கும் ”Wonder Chef”
குக்கர்களின் விளம்பரம் வருகிறது – அதிக விலையில்லை லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன் –
6999/- மட்டுமே! அதை ஏழாயிரம்னு சொன்னா சாமிக்குத்தம் ஆயிடுமாம்! அந்த ராத்திரி
வேளையில, புதுசா வொண்டர் செஃப் வாங்கி அதற்கப்புறம் தான் சமைக்கணும்னா
முடியுமா? சரி நம்ம கிட்ட தான் சாதாரண
குக்கர் இருக்கே அதுல சமைக்கலாம்னு கோதாவுல இறங்கிட வேண்டியது தான்!
இப்படி ஒன்
பாட் சமையல் வீடியோ அனுப்பினதுல இருந்து, ஒரே ஒன் பாட் சமையல் ஆராய்ச்சி தான்.
இணையத்தில் தேடித் தேடி ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்று சமைத்து சாப்பிடுவது கடந்த சில
நாட்களாக நடக்கிறது! ஆலு-பீன்ஸ் சாதம், மூங்க் தால் கிச்சடி, தால் சாவல், சோளே
சாவல் என என்னென்னமோ சமைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சில சமையல் வகைகளின்
பெயரே வாயில் நுழைவதில்லை –எல்லாமே ஒன் பாட் சமையல் தான். கொஞ்சம் தண்ணீர் அதிகமா
இருந்தா குழம்பு மாதிரி ஆயிடும், இல்லை தண்ணீர் குறைந்து விட்டால் ஒழுங்கா வேகாமல்,
கஞ்சி போட்ட துணி கணக்கா விறைப்பாக இருந்து தொண்டையைக் கிழிக்கும்! தொடர்ந்து
இப்படி இரண்டு மூணு நாள் சாப்பிட்ட பிறகு வயிறு சொன்னது – “இப்படி என்னைப் போட்டு படுத்தறதுக்கு, பேசாம
பால் பழமே கொடுத்திருக்கலாம்!”
”தன்
முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன்” மாதிரி நானும் ஒன்பாட் சமையல்
வகைகளை செய்து பார்த்துக் கொண்டிருந்தேன் – பத்து நாளுக்குப் பிறகு தான் ஞானோதயம்
வந்தது – இந்த ஒன் பாட் சமையல்லாம் கதைக்கு உதவாது! அதனால ஒழுங்கு மரியாதையா
எப்பவும் போல சமையல் செய்யறது தான் நல்லதுன்னு ஞானோதயம் வந்தது. புதுசு புதுசா
முயற்சி செய்யறது நல்லது தான். ஆனால் நமக்கு நன்கு பழகிவிட்ட சமையலிலிருந்து
மாறுபட்டுச் செய்வது என்பது அனைவருக்கும் ஒத்துக் கொள்வதில்லை. ஒன் பாட் சமையல்
என்று சொன்னாலும் ஒன்பது பாத்திரங்கள் வந்து விடுகிறது தேய்க்க – சமைப்பதை விட
பாத்திரம் தேய்ப்பது நிறைய பேருக்கு பிடிக்காத வேலை! அம்மணிகிட்ட சொன்னா, ”எல்லா
சமையலையும் ஒரே பாத்திரத்தில் சமைக்க முடியுமா என்ன?, பாத்திரம் விழத்தான்
செய்யும் – பேருக்கு ஒன் பாட்னு சொன்னா, ஒரு பாத்திரத்துக்கு மேல் கூடவே
கூடாதுன்னு எப்படி?” ந்னு நம்மளையே ஓட்டறாங்க!
நீங்களும் ஒங்க
ஒன் பாட்டும் – போங்கம்மான்னு என் பழைய சமையலுக்கு திரும்பிட்டேன்! நேத்து மெனு –
கத்திரிக்காய் கள்ளப்பருப்பு கூட்டு, சாதம், உருளைக்கிழங்கு ஃப்ரை, தயிர்,
ஊறுகாய்! இன்னிக்கு என்ன மெனு? சேப்பங்கிழங்கு போட்டு மோர்க்குழம்பு,
வெண்டைக்காய் பொரியல், செய்யலாம்னு இருக்கேன்! சாப்பிட வாங்களேன்!
மீண்டும்
சந்திப்போம்… சிந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!
பதிலளிநீக்குஆதியின் பதிவோ என்று நினைத்தால் ஆஹா வெங்கட்ஜி!!!
இந்த ஒன் பாட் பற்றிக் கேள்விப்பட்டேன். பார்க்கிறென்
கீதா
இனிய காலை வணக்கம் கீதாஜி!.
நீக்குஆஹா சமையல் என்றாலே ஆதி தானா! நாங்களும் சமைப்போம்ல!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வெங்கட்ஜி! பல வருடங்கள் முன்னாலேயே ஒரே ஒரு ரைஸ்குக்கர் வைத்துக் கொண்டு இப்படி செய்ததுண்டு. பிசிபேளா, கதம்ப சாதம், கிச்சடி, வெஜிட்டபிள் கிச்சடி, வெஜிட்டபில் உப்புமா என்று பல செய்திருக்கோம். அதுவும் இதே பங்களூரில், இன்னும் ஊர் சுற்றிய இடங்களில் எல்லாம் .எல்லாப் பாத்திரமும் கொண்டு போகாம...
பதிலளிநீக்குசாதாரண குக்கரிலேயே செய்யலாம். நிறைய
நீங்க சொல்லிருப்பது போல் பார்த்து அளவாகத் தண்ணீர் விட வேண்டும்
கீதா
ஆமாம் கீதாஜி. சாதாரண ரைஸ் குக்கரில் செய்யலாம்! இங்கே சில வட இந்திய சப்ஜி வகைகள் இப்படித்தான் ஒன் பாட் குக்கிங் தான்! தென்னிந்திய உணவு வகைகளை இப்படி ஒன் பாட்-டில் நிறைய செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். நானும் முயற்சித்தேன். தண்ணீர் அளவாக விட வேண்டும் - அதில் தான் சூட்சுமம் இருக்கிறது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
Hebber’s Kitchen, Padhu’s Kitchen, Archana’s Kitchen, Manjula’s Kitchen நானும் இவற்றைப் பார்ப்பதுண்டு வெங்கட்ஜி.
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா ஹா கடைசில பேக் டு ஸ்கொயர் ஒன்...
ராத்திரில முழிப்பு வந்துருச்சுனா அப்படியேதான் வெங்கட்ஜி...மனம் வேண்டாதவற்றை எண்ணத் தொடங்கிவிடும்..
படத்துல இருக்கற குக்கர் பத்தி சொல்லப் போறீங்கனு நினைச்சேன் ஹிஹிஹிஹி...அதுதானே இப்ப ட்ரென்ட்...
கீதா
இப்படி பல கிட்சன்கள் இணையத்தில் இருக்கின்றன இல்லையா! கொஞ்சம் வசதி தான் - புதிதாக எதையாவது செய்து பார்க்க நினைத்தால் இதில் ஏதோ ஒரு தளத்தில் நுழைந்து வரலாம் - அது வசதி தான் கீதாஜி!
நீக்குஎஸ். பேக் டு ஸ்கொயர் ஒன்!
ராத்திரி விழிப்பு - ஒன்றும் செய்வதற்கில்லை - வயது அதிகமாக அதிகமாக இப்படியான தொந்தரவுகள் வந்து விடுகின்றன.
குக்கர் - விலையைப் பார்த்த பிறகு - சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என விட்டு விட்டேன்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
குட்மார்னிங் வெங்கட்.
பதிலளிநீக்குஒன் பாட் சமையல்....? சாத்தியமில்லாததாய் இருக்கிறதே...!
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
நீக்குஒன் பாட் சமையல் - சில வகைகள் சாத்தியம் தான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இரவு அவ்வளவு நேரத்துக்குப் பிறகு வந்து அதன்பிறகு சமைக்க ரொம்பப் பொறுமை வேண்டும். அதைவிட சாப்பிட... நீங்கள் சொல்லி இருக்கும் ரெசிப்பிக்கள் உடனே டெல்லி பிளைட் பிடிக்கும் ஆவலை ஏற்படுத்துகின்றதான்.....!
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம். நிறையவே பொறுமை தேவை. பல நாட்கள் அப்படித்தான் ஆகிறது. அதனால் தான் இணையப் பக்கத்திலும் அவ்வளவு உலவ முடிவதில்லை.
நீக்குசொல்லி இருக்கும் ரெசிப்பிக்கள் உடனே டெல்லி ஃப்ளைட் பிடிக்கும் ஆவலை ஏற்படுத்துகின்றன - ஆஹா... வாங்க வாங்க அப்படியே தில்லியும் சுத்திப் பார்த்துட்டு போகலாம்! :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வெயில் நேரத்தில் சமைத்து சாப்பிடுவது மிகவும் கஷ்டம் தான்.
பதிலளிநீக்கு//நீங்களும் ஒங்க ஒன் பாட்டும் – போங்கம்மான்னு என் பழைய சமையலுக்கு திரும்பிட்டேன்!//
நீங்களும் பழகி விட்டால் இதன் நன்மைகளை போடுவீர்கள் பதிவுகளாய்.
//பாத்திரம் விழத்தான் செய்யும் – பேருக்கு ஒன் பாட்னு சொன்னா, ஒரு பாத்திரத்துக்கு மேல் கூடவே கூடாதுன்னு எப்படி?” ந்னு நம்மளையே ஓட்டறாங்க!//
ஆதி ஓட்டுடியதை ரசித்தேன்.
பல வகை உணவுகளை ஒரே பாத்திரத்தில் சமைக்கலாம், சமைத்த உணவை எடுத்து வைக்க பாத்திரங்கள் வேண்டும் தானே!
ஆமாம் கோமதிம்மா - கடும் கோடையில் இப்படி கிச்சனில் வேலை செய்வது கடினமான வேலை தான்.
நீக்குஒன் பாட் - பழகலாம்! கொஞ்சம் கை வர வேண்டும் இந்த விஷயம். சாதாரணமாக சமைப்பது பல வருடங்கள் செய்ததால் கை வந்து விட்டது.
ஆதி ஓட்டுவது புதிதல்லவே! பல வீடுகளில் நடப்பது தானே! :))))
சமைத்த உணவை எடுத்து வைக்க பாத்திரங்கள் வேண்டும் தானே - அதே தான் கோமதிம்மா. எப்படி இருந்தாலும் பாத்திரங்கள் பயன்பாட்டை குறைக்க முடியாது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
6999/- மட்டுமே! அதை ஏழாயிரம்னு சொன்னா சாமிக்குத்தம் ஆயிடுமாம்//
பதிலளிநீக்குஹா.. ஹா.. இதில் அவன் நம்மிடம் வாங்குவது ஏழாயிரம் ரூபாய். ஒரு ரூபாய் பாக்கியை தரமாட்டான்.
நாமலும் கேட்கமாட்டோம் காரணம் நமது கௌரவம் போய் விடுமே....
ஒரு ரூபாய் நிச்சயம் கிடைக்காது பணமாகத் தந்தால் - ஆன்லைனில் சரியாகத் தரலாம்! கடைகளில் கேட்க நமக்கு கௌரவம் - ஹாஹா.... சரியாகச் சொன்னீர்கள் கில்லர்ஜி! மனதுக்குள் கேட்க நினைத்தாலும் விட்டு விடுவார்கள் - அதுவும் பெரிய பெரிய கடைகளில். ஆனால் சிறு வியாபாரிகளிடம் பேரம் பேசி ஒன்றுக்குப் பாதியாக அடித்து குறைந்த விலையில் வாங்குவார்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சமையல் மாற்று செய்யுங்கள். வெண்டைக்காய் மோர்க்குழம்பு, சேப்பங்கிழங்கு மொறுமொறு வறுவல் (கொஞ்சம் கடலைமாவு, அரிசிமாவு பிரட்டி மிளகாய)
பதிலளிநீக்குஇப்படியும் மாற்றலாம்! செய்து விடலாம் அடுத்த முறை - இப்போது சமையல் பாதியில்! இருக்கிறது ஜெயக்குமார் ஐயா. ஹாஹா....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஒன் பாட் சமையல் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று நானும் நினைத்துக் கொள்கிறேன். உங்கள் கருத்து கொஞ்சம் டிஸ்கரேஜிங்காக இருக்கிறதே😕😟
பதிலளிநீக்குஅடடா.. என் பதிவினால் டிஸ்கரேஜ் ஆக வேண்டாம் பானும்மா.... நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு இக்கலை கைவரலாம்!. பிடித்தும் போகலாம். என்னால் உங்கள் முயற்சி கெடக்கூடாது. ஆகவே செய்து பாருங்கள் ப்ளீஸ்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஒன் பாட் சமையல் - ம்ஹிம் சான்ஸே இல்லை...
பதிலளிநீக்குசான்ஸே இல்லை! :) சில உணவுகள் இப்படிச் செய்யலாம் தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஒன் பாட் சமையல் பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன் வெங்கட் ஜி
பதிலளிநீக்குஆஹா இது உங்களுக்குப் புதிய தகவலா? மகிழ்ச்சி ராமசாமி ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
Opos 2லீற்றர் குக்கரில் செய்து பாருங்கள்.
பதிலளிநீக்கு2 லிட்டர் குக்கர் - என்னிடம் ஒரு சிறிய குக்கர் உண்டு. அதில் தான் செய்து பார்த்தேன் மாதேவி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
எனக்கு ஒன் பாட் சமையல் என்னன்னு சொல்லட்டுமா வெங்கட். ஒரே ஒரு இலுப்பச்சட்டியில் கறி செய்து, அதைக் கழுவி விட்டு,குழம்பு செய்து,
பதிலளிநீக்குகுக்கரில் சாதம் வைப்பதுதான்.
செராமிக் டிஷ்ஷில் எடுத்து வைத்துவிட்டால் ஃப்ரிட்ஜில் வைப்பதும் சுலபம்.
பாத்திரம் அலம்புவதும்
மட்டுப்படும்.
இங்கே பெண் சமைக்கும்போது இரண்டு கறி, ஒரு குழம்பு ,ரசம் என்று நூறு
பாத்திரம் விழும்.
டிஷ் வாஷர் அத்தனை அழுக்கையும் போக்காது.
ஒரு தரம் நாம் தேய்த்து பிறகு அதில் அடுக்க வேண்டும்.
ஆளைவிடு சாமி.
சீக்கிரமே தில்லியில் ஆந்தி வரட்டும். வெப்பம் குறையும்.
வயிறு நிறைய சாப்பிடுங்கள். எங்கள் பெரியவனுக்கும் ,சின்னவனுக்கும் நான் சொல்லும் தினப்படி புத்திமதி.உங்களுக்கும் சொல்கிறேன்.
எங்கள் சின்னவனை விட நீங்கள் ஒரு வயது குறைவு.
நலமுடன் இருங்கள்.
ஒரே இலுப்பச்சட்டியில் - ஆமாம் மா... அத்தைப்பாட்டி, அம்மா என வீட்டில் சிலர் இப்படிச் சமைப்பதைப் பார்த்தது உண்டு.
நீக்குடிஷ் வாஷர் - நம் சமையல் முறைக்கு உகந்தது அல்ல என்றே தோன்றுகிறது.
இரண்டு நாட்களாக கொஞ்சம் மழை பெய்து தில்லியைக் குளிர்வித்து இருக்கிறது.
வயிறு நிறைய சாப்பிடுங்கள்.... தங்கள் அன்பிற்கு நன்றி வல்லிம்மா... சாப்பாட்டில் குறை வைப்பது இல்லை!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
//அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போதே எட்டு மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. // - காலையிலேயே படித்துவிட்டேன். என் பேச்சலர் லைஃப் (5+ வருடங்கள், 2012லிருந்து) நினைவுக்கு வந்தது. ஆனால் நான் இருந்தது ஓரளவு வசதியான (அதாவது லைஃப்) இடத்தில். அதனால் நானே எப்போதும் செய்துகொள்ளணும் என்று இருந்ததில்லை. சாதம், ரசம்/குழம்பு... இவையெல்லாம் வார இறுதியில் மட்டும்தான். அல்லது ஓரிரு நாட்களில்தான். பெரும்பாலும் பழம், கூட்டு மட்டும் செய்வது, தோசை அல்லது அடை என்று முடித்துக்கொள்வேன்.
பதிலளிநீக்குஒன் பாட் சமையல் - எனக்கு சிரிப்புதான் வந்தது. எனக்குத் தெரிந்த ஒன் பாட் சமையல், சாதம் வடிப்பதுதான். அப்புறம் இருக்கவே இருக்கு அருமையான தயிரோ இல்லை உருளை ரோஸ்டோ..
//எனக்குத் தெரிந்த ஒன் பாட் சமையல், சாதம் வடிப்பது தான்// ஹாஹா....
நீக்குசாதம் வைத்து அருமையான தயிரோ இல்லை உருளை ரோஸ்டோ - சிம்பிள் அண்ட் பெஸ்ட் மெனு இல்லையா நெல்லைத் தமிழன். சுவையானதும் கூட!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீங்கள் OPOS செய்து பார்க்கவில்லையா? பேஸ்புக்கில் இதற்கென ஒரு குழு இருக்கிறது.அதற்கென்று அவர்களிடம் கிடைக்கும் ஜெர்மன் குக்கர் வாங்க வேண்டும். ராமகிருஷ்ணன் என்பவர் தென், வட இந்திய சமையல்களைச் செய்து லைவ் வீடியோ போடுகிறார். நான் நிறைய செய்கிறேன். நன்றாக வருகிறது.
பதிலளிநீக்குOPOS - தெரியாது ரஞ்சனிம்மா... ஃபேஸ்புக் பக்கம் இப்போது நான் இல்லை! அவர்கள் பக்கம் பார்க்க முடிந்தால் பார்க்கிறேன். நீங்கள் அப்படிச் செய்து பார்ப்பது அறிந்து மகிழ்ச்சி.
நீக்குநீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வருகை. மகிழ்ச்சி தந்தது ரஞ்சனிம்மா...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஜெர்மன் என்று தவறாக வந்துவிட்டது. நம்மூர் பட்டர்ஃபளை குக்கர் தான்.
பதிலளிநீக்குஅட பட்டர்ஃப்ளை குக்கர் தானா.... என்னிடத்திலும் ஒரு சிறு குக்கர் உண்டு. அதில் தான் இந்த மாதிரி ஒன் பாட் சமையல் முயற்சித்தேன் ரஞ்சனிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீங்கள் OPOS செய்து பார்க்கவில்லையா? பேஸ்புக்கில் இதற்கென ஒரு குழு இருக்கிறது.அதற்கென்று அவர்களிடம் கிடைக்கும் ஜெர்மன் குக்கர் வாங்க வேண்டும். ராமகிருஷ்ணன் என்பவர் தென், வட இந்திய சமையல்களைச் செய்து லைவ் வீடியோ போடுகிறார். நான் நிறைய செய்கிறேன். நன்றாக வருகிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.
நீக்கு