அன்பின்
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். சென்ற வாரம் ஜார்க்கண்ட் உலாவில், ஜோஹ்னா அருவி
அருகே கடை வைத்திருக்கும் இரண்டு உழைப்பாளிகள் பற்றிப் பார்த்தோம்.
இந்த வாரமும் சில உழைப்பாளிகள் பற்றி தான் பார்க்கப் போகிறோம் – ஆனால் இது வேறு
வித உழைப்பு. அதற்கு முன்னர் நல்லதொரு பொன்மொழியுடன் இன்றைய பதிவை ஆரம்பிக்கலாமா!
”வெற்றி என்பது ஒரு பயணம் – அதற்கு எல்லைகளே இல்லை” –
Ben
Sweetland
ஜார்க்கண்ட்
மாநிலம் பல கனிம வளங்களை தன்னகத்தே கொண்டது. பீஹார் மற்றும் ஜார்க்கண்ட்
தனித்தனியாக பிரிந்தபோது, ஜார்க்கண்ட் மாநிலத்தில் தான் அத்தனை வளங்கள் இருக்கும்
பகுதிகளும் இருந்தன. பீஹாருடன் சேர்ந்து இருந்தபோது இந்தப் பகுதிகளைச் சுரண்டிச்
சுரண்டி நிறைய காசு சம்பாதித்தாலும், இப்பகுதிகளுக்கு சரியான வளர்ச்சியைக் கொடுக்க
எந்த அரசும் முயற்சி செய்ததில்லை. கூடவே நக்ஸல் பிரச்சனைகளும் இருந்தன என்பதால்
முன்னேற்றம் காணாத இடமாக இருந்தது – சில மாவட்டங்களைத் தவிர! தனியாக பிரிந்து வந்த
பிறகு ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதிலுமே நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் – நான்கு வழிச்
சாலைகள், உணவகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் என பலவும் வந்தன. பிரச்சனைகளும்
கொஞ்சம் கொஞ்சமாகத் தீர்ந்து கொண்டிருக்கிறது.
பீஹார் மற்றும்
ஜார்க்கண்ட் இரண்டு மாநிலங்களிலும் சுற்றி வந்த போது அவற்றின் இடையே இருக்கும்
பெரும் வித்தியாசத்தினை நன்கு உணர முடிந்தது. பீஹார் இன்னும் பல பிரச்சனைகளுடன்
ஊர்ந்து கொண்டிருக்க, ஜார்க்கண்ட் வளர்ச்சிப் பாதையில் பீடு நடை போடுகிறது.
இன்னும் சில ஆண்டுகளில் நிறைய முன்னேற்றம் வந்து விடும் எனத் தோன்றுகிறது. அங்கே
இருக்கும் வளங்கள் மூலம் நல்ல சம்பாத்தியம் இருப்பதால், அரசும் நல்ல பல
திட்டங்களையும் அங்கே செயல்படுத்தி வருகிறது. வேலைவாய்ப்புகளும் அதிகரித்து
இருக்கிறது. முன்பெல்லாம் தில்லி போன்ற பெருநகரங்களை நோக்கி படையெடுத்தவர்கள்
இப்போது வருவதில்லை. பீஹார் மாநிலத்தவர்கள் மட்டுமே இன்னும் வருகிறார்கள்.
ஜார்க்கண்ட் பகுதியிலிருந்து வெளியே வருபவர்கள் குறைந்து விட்டார்கள்.
வளர்ச்சி நிறைய
இருந்தாலும் இன்னும் சில பிரச்சனைகள் அங்கே உண்டு. கனிம வளங்களை திருடுவதையே
தொழிலாக வைத்திருக்கிறார்கள் சிலர். நாங்கள் சென்ற போது நிறைய பேர் சைக்கிள்களில்
நெடுஞ்சாலை/மாநிலச் சாலைகளில் பயணிப்பதைப் பார்க்க முடிந்தது. சாதாரணமாகப்
பயணிப்பது போல இருந்தாலும் அவர்கள் செல்வது திருடுவதற்கு என்பதை எதிர்
சாலையிலிருந்து வருபவர்களை பார்த்து தான் தெரிந்து கொள்ள முடிந்தது. தாங்கள்
திருடுவதில்லை என அவர்கள் சொன்னாலும், அது சரியான பதில் அல்ல! தினம் தினம்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் திருடு போகும் நிலக்கரியின் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல – ரூபாய்
600 கோடி என ஒரு மதிப்பீடு சொல்கிறது. வெறும் சைக்கிள்களில் இப்படிச் சென்று
திருடி விட முடியுமா என உங்களுக்குத் தோன்றலாம். பலவாறும் திருடுகிறார்கள்.
ஜார்க்கண்ட்
மாநிலத்தில் இந்த நிலக்கரித் திருட்டில் ஈடுபட்டிருக்கும் மாஃபியா கும்பல் தங்களது
கரங்களை பல இடங்களிலும் நீட்டி இருக்கிறது. வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரி இரயில்
பெட்டிகள் மூலம் வேறு ஊர்களுக்குக் கொண்டு செல்லும் போது கிராமிய/வனப்பாதைகள்
வழியே செல்லும் – பல இடங்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என கும்பலாக வந்து
வண்டியை நிறுத்தி கொள்ளை 50-100 மூட்டைகள் அளவு அடிப்பார்கள் – பிறகு இரயில்
நகரும். இத்தனையும் சில நிமிடங்களில் நடந்து முடிந்து விடும். கொள்ளையடிக்கப்பட்ட
நிலக்கரி பெரிய பெரிய மாஃபியா தலைவர்களின் இருப்பிடத்திற்குச் சென்று விடும்.
அதற்காக இந்தக் கொள்ளைக் காரர்களுக்குக் கிடைக்கும் கூலி நாளொன்றுக்கு 100-200 என
இருக்க, மாஃபியா தலைவர் அந்த நிலக்கரியை பல மடங்கு விலையில் விற்று நல்ல லாபம்
பார்த்து விடுவார்.
மாஃபியா
கும்பலை ஒன்றுமே செய்ய இயலாது – இது மிகப் பெரிய காட்டரி. அதில் மாஃபியா,
அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்கள் என பலரும்
அடக்கம். கொள்ளையைத் தடுக்க நினைக்கும் பலர் இங்கே பரிதாபகரமான முறையில் கொலை
செய்யப்படுவது சர்வ சாதாரணமாக நடக்கும் விஷயம். ”கண்டுக்காம இருந்தா, உனக்கு நல்லது,
இல்லைன்னா உயிரோடு இருக்க மாட்ட” என்ற மிரட்டல் இருக்கும்போது எந்த
அதிகாரிக்கு மனதில் உறுதி இருக்கும் – இக்கொள்ளையைத் தடுக்க. அதுவும் அவருக்கு
மற்றவர்களின்/அரசின் ஒத்துழைப்பு கிடைக்காது என்று தெரிந்த பிறகு. ஆகவே இந்தப்
பெரிய அளவு கொள்ளைகளை யாருமே கண்டுகொள்வதில்லை. சின்னச் சின்னதாய் திருடுபவர்களைப்
பிடித்து தாங்களும் வேலை செய்கிறோம் என்பதாய் காண்பிடுத்து விடுகிறார்கள்.
பல கிராமத்திய
இளைஞர்கள் மூட்டைகளில் அதிகாரிகளுக்குத் தெரிந்தும் தெரியாமலும் நிலக்கரியைத்
திருடி சைக்கிளின் இரண்டு பக்கங்களிலும் பெரிய பெரிய மூட்டைகளாகக் கட்டி தள்ளிக்
கொண்டே வருகிறார்கள். மாலை/இரவு நேரங்களில் இந்தத் திருட்டுகள் நடப்பது அதிகம்
என்றாலும், பகல் வேளைகளிலும் இப்படி சைக்கிள்களில் நிலக்கரி மூட்டைகளுடன்
வருபவர்களைப் பார்க்க முடிந்தது. நிலக்கரிச் சுரங்கங்கள் நிறைய இருக்கும் ராம்கட்
பகுதியிலிருந்து தலைநகர் ராஞ்சி வரை, சுமார் 80 கிலோமீட்டர் தொலைவினை,
சைக்கிள்களில் 150-200 கிலோ நிலக்கரிச் சுமையுடன் தள்ளியபடி நடந்தே கடக்கிறார்கள்.
வாரத்தில் இரண்டு முறை இப்படி ராம்கட்-ராஞ்சி-ராம்கட் எனச் செல்வது இவர்களுக்கு
வழக்கமாக இருக்கிறது. ரொம்பவும் கடினமான வாழ்க்கை தான். ஆனாலும் இப்படியும்
திருட்டுத் தனம் செய்து உழைக்கத் தான் வேண்டியிருக்கிறது. வேறு வழியில்லை.
ஏன் இப்படி
என்று இவர்களிடம் கேட்டால் “பாபி பேட் கா சவால் ஹே” என்று ஹிந்தியில்
சொல்வார்கள் – ”பாவப்பட்ட இந்த வயிற்றுப் பசிக்காக”
என்ற அர்த்தம் இந்த வாக்கியத்திற்கு... அதுவும் ஒரு வயிறாக இருந்தால் பரவாயில்லை –
ஒருவர் உழைப்பில் குறைந்தது நான்கு வயிறாவது பசியாற வேண்டும்! பதினைந்து வயதில்
ஆரம்பித்து பத்து பதினைந்து வருடங்கள் இப்படி உழைத்தால் முடிந்தது வாழ்க்கை – அதன்
பிறகு அவர்களால் எந்தப் பணியும் செய்ய முடியாது – அதற்குள்ளாகவே அவர்களை மூப்பும்
நோயும் அடித்து விடும். நாங்கள் ராஜ்ரப்பா, பத்ராத்து என ராஜ்கட் பாதையில் சென்ற
போது இப்படி நிறைய சைக்கிளில் நிலக்கரி கொண்டு செல்பவர்களைப் பார்த்தபோது மனது
கனத்தது. அவர்கள் சொல்வது போல “பாபி பேட்” எனும் பாழும் வயிற்றுப் பசி
என்னவெல்லாம் செய்ய வைக்கிறது.
நண்பர்களே, இன்றைய
பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
மீண்டும்
சந்திப்போம்… சிந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
குட்மார்னிங் வெங்கட்.
பதிலளிநீக்குஎன்னுடைய காசிப்பயணத்தின் ரயில்பயணத்தில் அந்த ரயில்வே இளைஞன் பிஹார் பற்றிச் சொன்னது நினைவுக்கு வருகிறது.
காலை வணக்கம் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நம்ம ஊரில் அரசு அதிகாரிகள் ஆசியுடன் நடக்கும் மணல் கொள்ளை நினைவுக்கு வருகிறது. இங்கும்தானேஎதிர்ப்பவர்கள் கொல்லப்படுகிறார்கள்?
பதிலளிநீக்குஆமாம். நம் ஊர் மணல் கொள்ளையும் நிலக்கரி கொள்ளை போலவே. மணல் கொள்ளையால் உண்டாகும் பாதிப்பு இன்னும் அதிகம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
உழைக்காமல் குறுக்கு வழியில் கிடைக்கும் பணம் அவர்களின் உழைப்பை மழுங்கடித்து விடுகிறது. பீகாரில் இப்போது நிதிஷ்குமார் வந்து நிலைமை பரவாயில்லை என்று அந்த ரயில் இளைஞர் சந்தோஷ் சொன்னது நினைவுக்கு வருகிறது. அந்த ஊர்க்காரர்தானே அவர்..
பதிலளிநீக்குமுன்னரை விட பரவாயில்லை என்றாலும் இன்னும் நிறைய மாற்றம் வரவேண்டும். மக்களின் மனங்களும் மாற வேண்டும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கஷ்டப்பட்டு திருடிக்கொடுக்கும் மக்களுக்கு கூலி 200 ரூபாய் மட்டுமே....
பதிலளிநீக்குபின்னணியில் அரசியல்வாதிகள் இருந்தால் எதையும் நடத்தலாம்.
பின்னணியில் அரசியல்வாதிகள் இருந்தால்.... அதே தான் கில்லர்ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ம்...ஒவ்வொருவரின் வாழ்க்கை எப்படி எப்படியெல்லாம் திசை மாறுகிறது...
பதிலளிநீக்குஆனால் பிடிபடுவதென்னவோ அடிமட்ட மக்கள்தாம், ஆந்திரா செம்மரம் வெட்டச் சென்ற கூலித் தொழிலாளர்கள் போல
பிடிபடுவதென்னவோ அடிமட்ட மக்கள் தாம்... உண்மை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
இது கொடுமையான வேதனை...
பதிலளிநீக்குவேதனை தான் தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வேதனை ..
பதிலளிநீக்குவேதனை தான் அனுப்ரேம் ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தேசத்தின் இன்னொரு பகுதியை உங்கள் எழுத்துக்கள் படம் பிடித்துக் காட்டும் பொழுது புதிய சரித்திரத்தை அறிந்து கொண்டாற் போல தெளிவு ஏற்படுகிறது. இவ்வளவு பெரிய நாட்டில் எவ்வளவு பிரச்னைகள்?.. இதெற்கெல்லாம் மக்களின் உதவியோடு தான் அதே மக்களின் நல்லதொரு வாழ்க்கை மேம்பாட்டிற்காக செயல்பட வேண்டியிருக்கும் போலிருக்கு.
பதிலளிநீக்குஇவ்வளவு பெரிய நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள்? இங்கே பிரச்சனைகளுக்குக் குறைவும் இல்லை, முடிவும் இல்லை ஜீவி ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இந்தப் பதிவு தான் மிகவும் சரியாக வந்துள்ளது. வாசிப்பவர்களுக்கு அந்த நிலத்தின் உண்மையான நிலவரத்தை சரியாக சொல்லியிருக்கீங்க.
பதிலளிநீக்கு//இந்தப் பதிவு தான் மிகவும் சரியாக வந்துள்ளது// மகிழ்ச்சி ஜோதிஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
//”பாவப்பட்ட இந்த வயிற்றுப் பசிக்காக”//
பதிலளிநீக்குஇதை படித்தவுடன் நாகேஷ் ஒரு படத்தில் பாடுவது நினைவுக்கு வருது.
//எல்லாமே வயிற்றுக்கு தாண்டா, இல்லாத கொடுமைக்கு தாண்டா
நல்லா இருப்பவன் நாண்யம் தவறுவதும் இல்லாத கொடுமைக்கு தாண்டா?/
மனம் கனத்து போகிறது. இவ்வளவு கஷ்ட பட்டு சுமந்து வருபவர்கள் பெறும் கூலியும் குறைவாக இருக்கிறதே!
//மனம் கனத்து போகிறது// உண்மை தான்மா... சில விஷயங்கள் பார்க்கும்போதே மனதில் ஒரு வித வலி. அப்பகுதியில் இப்படியான மனிதர்கள் அதிக எண்ணிக்கையில் பார்த்த போது, எங்கள் ஓட்டுனர் மும்தாஜ் உடன் இவர்களைப் பற்றியே பேசிக் கொண்டு வந்தேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபொன்மொழி சிறப்பாக உள்ளது. திருட்டு தப்பென்றாலும். வாழ்க்கைப் பிண்ணனியில் அவர்கள் வாழ வாழ்வாதாரம் ஏதும் இல்லையென்ற நிலை கொடியது. பசிக்காக செய்யும் தொழிலே தெய்வமென்று உழைப்பவர்களை கண்டால் மிகவும் பாவமாக உள்ளது. இறைவன் எத்தனை விதமாக மனிதர்களை படைத்துள்ளான். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//வாழ வாழ்வாதாரம் ஏதும் இல்லையென்ற நிலை கொடியது// உண்மை தான் மா... மனிதர்கள் பலவிதம் அவர்களுக்கான வாழ்க்கையும் பலவிதம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.
எப்போதும் இனிய காலை வணக்கம் என்று சொல்லிக் கொண்டு வரும் நான் இன்று இனிய நல்இரவு வணக்கம் என்று சொல்லிக் கொண்டு வந்திருக்கிறேன் ஹா ஹா..
பதிலளிநீக்குஜார்கண்டில் நிலக்கரி கொள்ளை என்றால் தமிநாடு, கர்நாடகா, ஆந்திரா வி எல்லாம் மணற் கொள்ளை....
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கொள்ளை....நம் நாட்டிற்குள்ளேயே நம்மவர்களாலேயே கொள்ளை.
பாவம் வயிற்றுப் பிழைப்பு!
கீதா
வணக்கம் கீதாஜி...
நீக்குஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கொள்ளை... உண்மை தான் ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் அண்ணா.
பதிலளிநீக்குஅருமையான பொன்மொழியுடன் ஆரம்பித்திருக்கிறீர்கள். ஜார்கண்ட் வளர்ச்சிப் பாதையில் உயர்வது அறிந்து மகிழ்ச்சியடைந்தாலும் இயற்கை திருட்டு வருத்தமளிக்கிறது. பணமுதலைகள் செய்யும் கொள்ளையில் வயிற்றுக்காகச் சேரும் ஏழைகள் பாவம்..வருத்தமாக இருக்கிறது.
இயற்கைத் திருட்டு வருத்தம் தரும் விஷயம் தான். பண முதலைகள் கொழுத்துக் கொண்டிருக்க, ஏழைகள் பாடுபடுகிறார்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.
ஒருசாண் வயித்துக்காக திருட்டு பாவப்பட்ட சனங்கள்.
பதிலளிநீக்குநிறுவனங்கள் ஒன்றும் மாற்றுவழியில் வேறு தொழில் செய்யப் பழக்காதா? உதவினால் அவர்கள் வாழ்வும் வேறுபாதையில் செல்ல வாய்ப்பு இருக்கிறதே.
ஒரு ஜாண் வயித்துக்காக.... அது தான் - அவர்களுக்கு இது மட்டுமே தெரியும். வேறு தொழில் செய்ய பழக்கினாலும் இவர்கள் தயாராக இல்லை என்றும் சொல்வதுண்டு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.