வியாழன், 25 ஜூலை, 2019

ஜார்க்கண்ட் – ஜோஹ்னா அருவி - உழைப்பால் உயர்வோம் - உழைப்பாளிகள்


அடுப்பு தயாரா இருக்கு... என்ன வேணும்னு சொன்னா சமைச்சுடலாம்!


அன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். இன்றைக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜோஹ்னா அருவி அருகே சந்தித்த இரண்டு சகோதரர்கள் பற்றி தான் பார்க்கப் போகிறோம். அதற்கு முன்னர் உழைப்பு பற்றிய ஒரு பொன்மொழியுடன் இன்றைய பதிவை ஆரம்பிக்கலாமா!

”கடினமான உழைப்பு, தெய்வ வழிபாட்டுக்குச் சமம்” – லால் பகதூர் சாஸ்த்ரிசுடச் சுட பகோடா ரெடி... வாங்க சாப்பிடலாம்!


சென்ற வாரம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருக்கும் ஜோஹ்னா அருவி பற்றி இங்கே எழுதி இருந்தேன். நாங்கள் அவ்விடத்திற்குச் சென்ற போது வாகன நிறுத்துமிடத்தில் கைகளில் வாகன நிறுத்தத்திற்கான சீட்டுகளுடன் ஒருவர் ஓடி வந்தார். அதைக் கொடுத்ததோடு, ”நம்ம கடைக்கு வாங்க சார், அருவிக்கு போறதுக்கு முன்னாடி கொஞ்சம் உட்கார்ந்து இளைப்பாறிவிட்டு, பகோடா சாப்பிட்டுப் போகலாம்” என்ற அழைப்பு! அவரைத் தொடர்ந்து நாங்களும் செல்ல, ”என்ன சார் குடிக்கிறீங்க? டீயா இல்ல, எலுமிச்சை ஜூஸ் போட்டுத் தரவா? இங்கே பகோடா சாப்பிட்டு பாருங்க சார், என் மனைவி நல்லா பகோடா செய்வா” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். நடுவே வேறு ஒரு வாகனம் வருவது தெரிய, மனைவியிடம் “சாருக்கு வேணுங்கறத குடு, நான் சீட்டு கொடுத்துட்டு வரேன்” என ஒரு ஓட்டம் - ஓடி ஓடி உழைக்கிறார் மனிதர்.


சகோதரர்களுக்கு நடுவே நண்பர்!


ஓட்டமாய் ஓடி மீண்டும் கடைக்குத் திரும்புகிறார் – எங்கள் கைகளில் மனைவி செய்து தந்த பகோடா ஒரு ப்ளேட்டில் கூடவே இரண்டு தேநீர் குப்பிகள். எங்கள் ஓட்டுனருக்குத் தேவையானதை வாங்கிக் கொள்ளச் சொல்ல அவரும் எதையோ சாப்பிட உட்கார்ந்தார். அனைவரையும் ஓடி ஓடிக் கவனித்தார் அந்த உழைப்பாளி. கூடவே அருவி பற்றிய தகவல்கள், கீழே நிறைய படிகள் இறங்கிப் போயிட்டு வரணும் என்பதையும் சொல்லியதோடு, ”திரும்பி வரும்போது நல்ல பசி எடுக்கும் – என்ன வேணும்னு சொன்னீங்கன்னா சமைச்சு வச்சுடுவோம், பசிக்கு திருப்தியா சாப்பிடலாம்” என அடுத்த விற்பனைக்கான வழியைத் தேடுகிறார். தொடர்ந்து ஓட்டம் தான்.


அடர்ந்த மரங்களைத் தாண்டினால் வீடு... 


நாங்கள் எங்களுக்கு உணவு தேவையில்லை இப்போதைக்கு தேநீரும் பகோடாவும் போதும் என்று சொல்லி அருவி நோக்கி புறப்பட்டோம். படிகளில் இறங்கி அருவியின் அழகை இரசித்து மூச்சு வாங்கியபடியே திரும்பிய போது அவர் கேட்காமலேயே அவர் கடைக்கு அருகே சென்று நாற்காலிகளில் அமர்ந்தோம். சற்றே இளைப்பாறிய பிறகு எலுமிச்சை ஜூஸ் குடித்தோம். எனக்கும் நண்பர் பிரமோத் அவர்களுக்கும் இந்த மாதிரி மனிதர்களிடம் பேசுவது பிடித்த விஷயம். அவர் பற்றி, அவரது குடும்பம், குழந்தைகள், உழைப்பு பற்றியெல்லாம் பேசுவது பிடிக்கும். கிராமத்து வீடுகள், அவர்களுக்கு அங்கே கிடைக்கும் வசதிகள் என பலதும் பேசுவோம். வியாபாரத்தினைக் கவனித்தபடியே அவரும் அவருடைய மூத்த சகோதரரும் [இவரும் பக்கத்திலேயே கடை வைத்திருக்கிறார்] எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.


உழைப்பாளிகளில் ஒருவரின் வீடு... 


கொஞ்சம் மலைப்பாதையில் கீழே இறங்கினால் இந்தக் காட்டுப் பகுதியில் தான் எங்கள் வீடு என்று சொல்ல, “உங்கள் வீட்டுக்கு வரலாமா?” என்று நண்பர் கேட்டார். கேட்டவுடன் அவருக்கு அளவிலா மகிழ்ச்சி. ”எங்களிடம் யாருமே இப்படிக் கேட்டதில்லை. உங்களுக்கு இஷ்டமாக இருந்தால் வாங்கள் அழைத்துச் செல்கிறேன்” என்று சொன்னார். தம்பி இரண்டு கடைகளையும் சேர்த்துப் பார்த்துக் கொள்ள, அண்ணன் எங்களோடு புறப்பட்டார். சில படிகள் இறங்கி, காட்டுப் பாதை வழியே கொஞ்சம் தூரம் நடந்து அவர்களது வீடுகள் இருக்கும் பகுதிக்கு வந்தோம். அண்ணன், தம்பி இருவரும் பக்கம் பக்கத்தில் வீடுகள் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அழகான வீடு, உள்ளேயே தரைத் தளமும், சில ஏணிப்படிகள் ஏறிச்சென்றால் இருக்கும் முதல் தளமும் [அதாவது நம் வீடுகளில் இருக்கும் பரண் போல!]


இன்னுமொரு சகோதரரின் வீடு...


தரையும் வீட்டுச் சுவர்களும் அழகாய் சாணி போட்டு மெழுகி வைத்திருக்கிறார்கள். வெளிப்புறத்தில் சுண்ணாம்பு அடித்து இருக்கிறது. வீட்டுக்குள் அப்படி ஒரு குளிர்ச்சி. அவர் குடும்பம், கொஞ்சம் தள்ளி இருக்கும் பள்ளியில் படிக்கும் மகள்கள், அரசாங்கம் தரும் சலுகைகள் என நிறைய பேசினோம். வீட்டையும் சுற்றிக் காண்பித்தார். சில நிமிடங்கள் அவர் வீட்டையும், பக்கத்து வீடுகளையும் வெளியிலிருந்து பார்த்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம். மகளுக்கு படிப்புச் செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என எங்களால் ஆன ஒரு சிறு தொகையைக் கொடுத்து விட்டு அங்கிருந்து மீண்டும் கடைகள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். இரண்டு கடைகளிலும் சுடச் சுட உணவு தயாராகி இருந்தது – அசைவம், சைவம் இரண்டுமே கிடைக்கிறது – கோழிகளைக் கூண்டிலிருந்து எடுத்து சுடச் சுடச் சமைத்துத் தருகிறார்கள்!


எந்தக் கோழின்னு சொன்னா சமைக்கலாம்! ஆனா கோழிதான் ஒரு பயத்தோடு இருக்கிறதோ எனத் தோன்றுகிறது!


அங்கே கிடைக்கும் உணவு எங்களுக்கு உகந்ததாக இல்லை என்பதால், அங்கே மீண்டும் கொஞ்சம் பகோடாவும் எலுமிச்சை ஜூஸும் குடித்து அங்கே இருந்து புறப்பட்டோம். அண்ணன், தம்பி என இருவரும், தத்தமது மனைவியரும் உழைக்க அவர்களது குடும்பம் பிழைக்கிறது. ”உழைப்பால் உயர்வோம்” என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள் அந்தச் சகோதரர்கள். அவர்களுக்கு எங்களது வாழ்த்துகளைச் சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம். எங்கள் வாகன ஓட்டுனர் மும்தாஜும் நல்ல ஓய்வுக்குப் பிறகு புத்துணர்வுடன் இருந்தார். புறப்படலாமா எனக் கேட்க, “நான் ரெடி… நீங்க ரெடியா?” என்றார்! அருவி, மரங்கள் அடர்ந்த வனப்பகுதி, உழைப்பாளிகள் என பலவும் பார்த்து, பேசி அங்கிருந்து புறப்பட்ட போது மனதில் ஒரு திருப்தி. பயணம் செய்வதால் கிடைக்கும் திருப்தி! பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வோம்!

நண்பர்களே, இன்றைய பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

26 கருத்துகள்:

 1. குட்மார்னிங் வெங்கட்.

  உழைப்பாளிகள் மனத்தைக் கவர்கிறார். உத்வேகம் கொடுக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம். உழைப்பாளிகள் உத்வேகம் தருபவர்கள் - பலருக்கும் பாடம் சொல்லித் தருபவர்கள்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. கானகத்தின் நடுவே அவர்கள் வீடு கவர்கிறது. இயக்கையாய் அமைத்த வீடு. குளிர்ச்சிக்கென்ன பஞ்சம்? உள்ளே இன்னொரு தளமும் இருக்கிறது என்பது ஆச்சர்யம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இயற்கைச் சூழலில் வீடு - ஆமாம். அங்கே இருந்த சில நிமிடங்கள் மனதில் நிம்மதி...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!!

  அருமையான வாசகம் முதலில் கண்ணில் பட்டுவிட்டது! நான் அடிக்கடி நினைப்பதும் சொல்வதும். கடினமான உழைப்பு தெய்வவழிபாட்டுக்குச் சமம் என்பது!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் கீதாஜி.

   வாசகம் உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. எனக்கும் நண்பர் பிரமோத் அவர்களுக்கும் இந்த மாதிரி மனிதர்களிடம் பேசுவது பிடித்த விஷயம்//

  ஹைஃபைவ் வெங்கட்ஜி! மிகவும் பிடித்த விஷயம். இந்த மாதிரி மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி , தொழில் பற்றி, அந்த ஊரில் உள்ள வாழ்வியல் முறை பற்றி என்று மிகவும் பிடிக்கும்.

  உங்கள் அனுபவங்கள் எல்லாமே சூப்பர் வெங்கட்ஜி..!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதிய இடங்கள், புதிய மனிதர்கள் இவர்களிடம் பேசுவது பல விஷயங்களை நமக்குக் கற்றுத் தரும் - எனக்கு இதில் நிறைய பிடித்தம் உண்டு - உங்களுக்கும் பிடித்த விஷயம் என்பதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 5. ”எங்களிடம் யாருமே இப்படிக் கேட்டதில்லை. உங்களுக்கு இஷ்டமாக இருந்தால் வாங்கள் அழைத்துச் செல்கிறேன்” //

  ஆமாம் வெங்கட்ஜி! அனுபவம் உண்டு.

  எளிமையான வாழ்க்கை, வீடுகள், காடு என்று இதம் தரும் இடம்.

  உழைப்பாளிகளுக்கு வாழ்த்துகள்! உற்சாகம் தரும் மனிதர்கள்.

  காட்டில் சுற்றி மரங்கள், சாணம் மெழுகப்பட்ட தரை, அமைதி குளிர்ச்சிக்குப் பஞ்சமே இருக்காது. இப்படியானதொரு வீட்டில் தங்கியும் இருக்கிறோம். உணவு மட்டும் தான் கொஞ்சம் பிரச்சனை. மற்றபடி அன்பும் உபசாரமும் அளவுகடந்த ஒன்று! பாசமிக்க மக்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உணவு மட்டும் தான் கொஞ்சம் பிரச்சனை - ஆனால் அன்புகடந்த பாசம் உண்டு! உண்மை. அங்கே பழங்களும், பழச் சாறுகளும் உண்டு மகிழ்ச்சி அடைந்த நாட்கள் உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 6. இப்படி யணங்களில் புதிய மனிதர்களிடம் உரையாடுவது நல்லதொரு மகிழ்ச்சியைத் தரும் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான் கில்லர்ஜி. பயணங்களில் இப்போதெல்லாம் பலர் பேசுவதே இல்லை. தங்களது அலைபேசியில் மூழ்கி விடுகிறார்கள்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. சைவ உணவு பழக்கம் உள்ளவர்களுக்கு இது போன்ற சுற்றுலா என்பது பல சமயங்களில் கொடுமையாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உணவுப் பழக்கம் பல இடங்களில் தொல்லை தருவது. பயணங்களில் நிறைய விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். அசைவ உணவு மட்டுமே கிடைக்கும் இடங்களில் பழங்களை உண்டு நாள் கடத்தியதுண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.

   நீக்கு
 8. வட கிழக்கு மாநில சுற்றுப்பயணம் நான் தொடங்கும் போது உங்களைத் தொடர்பு கொள்வேன். மற்க்க வேண்டாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வட கிழக்கில் நிறைய சுற்றுலாத் தலங்கள் உண்டு. நீங்கள் செல்லும்போது நிச்சயம் தொடர்பு கொள்ளுங்கள். எனக்குத் தெரிந்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.

   நீக்கு
 9. பல புதிய அனுபவங்களைத் தருகின்ற உங்களின் பதிவுகளைப் போல இதுவும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 10. உழைப்பாளிகள் மிகவும் மகிழ்ந்திருப்பார்கள்... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை. அவர்களுக்கும் மகிழ்ச்சி தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 11. உழைப்பாளிகளுக்கு நல்ல வாழ்க்கை அமையட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது பிரார்த்தனைகளும் - அவர்கள் வாழ்வில் வெற்றி பெற...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 12. உழைப்பாளிகளை வாழ்த்துவோம். வெஜ்/நான் வெஜ் கடையா----பஜ்ஜியைப் பார்த்து ஆசை வந்தது. பிறகு படித்த பிறகு ஆசை போயிந்தி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தம்பி கடை வெஜ் - அண்ணன் கடை நான் வெஜ்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 13. அவர்கள் வீட்டின் குளிர்ச்சி எங்கள் மனதிற்கும் தாவுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மகிழ்ச்சி முருகானந்தன் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....