செவ்வாய், 2 ஜூலை, 2019

தேசிய அருங்காட்சியகம் - நிஜாம் நகைகள் – ஒரு பார்வைதலைநகரின் ஜன்பத் சாலை மிகவும் பிரபலமானது! 10 ஜன்பத் எனும் முகவரி பலரும் அறிந்தது. ஆனால் அந்த முகவரி பற்றியோ, அல்லது அங்கே வசிப்பவர்கள் பற்றியோ நான் எதுவும் எழுதப் போவதில்லை. அது அரசியல் – எனக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்!
அதே ஜன்பத் சாலையில் இருக்கும் ஒரு இடம் தேசிய அருங்காட்சியகம்! இந்த தேசிய அருங்காட்சியகம் தன்னகத்தே பல அரிய பொக்கிஷங்களையும், காலத்தினால் வீழ்ந்த, அழிந்து போன பல மன்னர்களின் கதைகளையும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் இன்னமும் காட்சிக்கு வைத்திருக்கும் ஒரு இடம். அருங்காட்சியகங்கள் தனக்குள்ளே பல விதமான விஷயங்களை அடக்கி வைத்துள்ளன. அங்கே சென்று பார்வையிடுவது பலருக்கும் கொஞ்சம் கஷ்டமான விஷயம். எந்த காலத்திலோ, யார் யாரோ பயன்படுத்திய வரலாற்றுப் பொக்கிஷங்களை நான் பார்த்து என்ன ஆகப் போகிறது என்ற எண்ணம் பலருக்கும் இருக்கலாம்! நான் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அங்கே இருக்கும் அருங்காட்சியகத்தினைப் பார்க்கத் தவறுவதில்லை.

தலைநகரிலேயே ஒன்றிரண்டு அருங்காட்சியகங்கள் உண்டு. அவற்றில் ஒன்று தான் ஜன்பத் சாலையில் இருக்கும் தேசிய அருங்காட்சியகம்.  கடந்த சில மாதங்களாக அங்கே ஹைதை நிஜாம் மன்னர்கள் பயன்படுத்திய பல பொக்கிஷமான, விலை உயர்ந்த நகைகளை காட்சிக்கு வைத்திருந்தார்கள். சில மாதங்கள் மட்டுமே அந்த நகைகள் காட்சிக்கு வைத்திருப்பார்கள். பிறகு அவை பத்திரப்படுத்தப்பட்டு, பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படுவதில்லை. மகளும் மனைவியும் இங்கே வந்திருந்தபோது அவர்களையும் அழைத்துக் கொண்டு இந்த தேசிய அருங்காட்சியகத்திற்கு சென்று வந்தேன்.  முக்கியமாக இந்த நிஜாம் நகைகள் வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்று வந்தோம். அருங்காட்சியகத்தின் மற்ற பகுதிகளுக்கு ஒரு நுழைவுக்கட்டணமும், நிஜாம் நகைகள் வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு தனியாக நுழைவுக்கட்டணும் செலுத்த வேண்டியிருந்தது.
இந்த நிஜாம் நகைகள் எப்படி இந்திய அரசாங்கத்திற்கு வந்தது என்பதற்கு ஒரு சிறு அறிமுகம்.  நிஜாம் மன்னர்களின் கடைசி வாரிசு ஒரு ட்ரஸ்ட் அமைத்து, இந்த நகைகளை மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தார். அனைத்து நகைகளும் ஹாங்காங் பேங்கின் பாதுகாப்பு பெட்டகங்களில் இருந்தன. 1995-ஆண்டு தான் இந்த நகைகள் அனைத்தும் இந்திய அரசின் வசம் வந்தது – அதற்குப் பின்னால் பல சட்டங்களும், நீதிமன்ற வழக்குகளும் நடந்தன. 1995-ஆம் ஆண்டு 218 கோடி ரூபாய் கொடுத்து இதனை பெற்றிருக்கிறது அரசாங்கம். தற்போது தலைநகர் தில்லியின் ரிசர்வ் வங்கியின் பெட்டகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. கண்காட்சிக்காக தேசிய அருங்காட்சியகத்திற்கு கொண்டு வந்திருக்கும் இந்த நகைகளில் 184.75 கேரட் அளவுள்ள ஜேகப் டைமண்ட் முக்கியமானது. கோஹினூர் வைரத்தினை விட அளவில் பெரியது இந்த வைரம் என்கிறது அருங்காட்சியகத் தகவல்.
மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இந்த நகைகள் வைக்கப்பட்டிருந்தன. தண்ணீர் குடுவைகள் கூட அங்கே எடுத்துச் செல்ல அனுமதியில்லை. உள்ளே அனுமதிக்கப்படும் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அவ்வப்போது மட்டுப்படுத்தப்படும் – ஒரே சமயத்தில் முப்பது முதல் நாற்பது பேருக்கு மேல் உள்ளே இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள். நுழைவுச் சீட்டுகளை சரிபார்த்து உள்ளே அனுப்ப, நிஜாம் பரம்பரையினர் அணிந்த விதம் விதமான நகைகளை நாம் பார்க்க முடிகிறது. ஆங்காங்கே சில ஓவியங்களும், நிழற்படங்களும் நிஜாம் மன்னர்களின் கதைகளையும் அவர்கள் பற்றிய தகவல்களையும் சொல்கிறது. நகைகள் எல்லாம் கண்ணாடி அறைகளுக்குள் வைக்கப்பட்டிருப்பதால் யாரும் தொட்டுப் பார்க்க முடியாது! அது ஒரு விதத்தில் நல்லது! இல்லையென்றால் அனைவருமே தொட்டு, எடுத்து அணிந்து பார்க்கக் கூடும்!முத்து மாலைகள், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட நகைகள், கழுத்தணி, காதணி, மோதிரங்கள், மூக்கில் அணியும் மூக்குத்திகள், கைகள் மற்றும் கால்களில் அணியும் விதம் விதமான நகைகள் என பல விதமான நகைகளை அங்கே காட்சிக்கு வைத்திருந்தார்கள். சில பெண்கள் ஒவ்வொரு இடத்திலும் பல மணித்துளிகள் நின்று தாங்களே அந்த நகைகளை அணிந்து கொண்டால் எப்படி இருக்கும் என கற்பனையில் மிதந்தார்கள் – “எங்கே இந்த மனுஷன் நமக்கு இப்படி ஒரு நகையை வாங்கித் தந்திருக்காரா? ஹூம்…” என்ற பெருமூச்சு சிலரிடம் சப்தமாகவே கேட்டதோ என ஒரு சந்தேகம் எனக்கு! ஆணோ பெண்ணோ, நகை மீது யாருக்குத் தான் ஆசை இல்லை. தில்லியில் பல ஆண்கள் தடிமனான கழுத்தணிகள் அணிந்து செல்வது உண்டு! அவர்களைப் பார்த்தால் ஏதோ மூக்கணாங்கயிறு மாட்டிய எருமை மாடு போலத் தோன்றும் எனக்கு! ஏனோ இப்போது அடிக்கடி எருமை நினைவுக்கு வந்து தொலைக்கிறது!அங்கே வந்திருந்த மூன்று ஆண்கள் – நகைக் கடைக்காரர்கள் போல! ஒவ்வொரு இடத்திலும் நகைகளின் எடை, அதன் வடிவம், நகாசு வேலை என விவரமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களை காவல் பணியில் இருந்தவர்கள் சீக்கிரமாக பார்த்துட்டு வாங்க, அடுத்தவங்களும் பார்க்கணும் எனச் சொல்ல, அவர்கள் நகர்வதாக இல்லை! ”ஆளுக்கு ஐம்பது ரூபாய் காசு கொடுத்து வந்துருக்கோம்ல, எல்லாத்தையும் நல்லாப் பார்த்துட்டு தாம்ல போவோம்!” என்று அடம் பிடித்தார்கள். நகைகளை படம் பிடிக்கலாம் என்றால் காத்திருந்து தான் படம் பிடிக்க வேண்டியிருந்தது. நான் எனது DSLR எடுத்துச் செல்லவில்லை என்பதையும் சொல்லி விடுகிறேன் – கவசகுண்டலம் இல்லாத கர்ணன் போல அன்று மாறி இருந்தேன்!  மகளும் மனைவியும் அவரவர்களது அலைபேசியில் படம் எடுத்தார்கள்.
காட்சிக்கு வைத்திருந்த நகைகள் நிஜாம் நகைகளின் ஒரு சிறு பகுதி மட்டுமே! மொத்த நகைகளும் அரசின் கஜானாக்களில் பத்திரமாக வைத்திருக்கிறார்களாம். காட்சிக்கு வைத்திருந்த நகைகளே கோடிக்கணக்கில் மதிப்பு உள்ளவை எனப் பார்க்கும்போது அந்தக் கால ராஜாக்கள் எத்தனை சொத்து சேர்த்திருக்கிறார்கள் என வியக்காமல் இருக்க முடியவில்லை! அந்தக் கால ராஜாக்களே இப்படி என்றால்… சரி சரி அரசியல் பற்றி ஒன்றும் இங்கே பேசக் கூடாது! மூச்ச்…. நான் பார்த்த நிஜாம் நகைகளை நீங்களும் பார்க்க, சில படங்கள் மட்டும் இங்கே தந்திருக்கிறேன். இரண்டு படங்கள் தவிர மற்ற அனைத்து படங்களும் மகள் எடுத்தவை. அந்த மீதி இரண்டு படங்கள் மனைவியின் கைவண்ணம். பகிர்ந்து இருக்கும் படங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.
பதிவு, படங்கள் பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே! விரைவில் வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

38 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி

  இப்பத்தான் கரன்ட் வந்தது.

  நகைகள் எல்லாம் வெகு அழகு!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதாஜி!.

   கரண்ட் பிரச்சனை அங்கு இருக்கிறது போலும். தலைநகரில் எங்கள் பகுதியில் எப்போதாவது தான் சில நொடிகள்/நிமிடங்கள் கரண்ட் கட்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. “எங்கே இந்த மனுஷன் நமக்கு இப்படி ஒரு நகையை வாங்கித் தந்திருக்காரா? ஹூம்…” என்ற பெருமூச்சு சிலரிடம் சப்தமாகவே கேட்டதோ என ஒரு சந்தேகம் எனக்கு! ஆணோ பெண்ணோ, நகை மீது யாருக்குத் தான் ஆசை இல்லை//

  ஹா ஹா ஹா ஹா....நான் ரசிப்பதோடு சரி ஜி. யாரேனும் என்னை அழைத்துச் சென்றால் செலக்ட் செய்து கொடுப்பேன் அவ்ளவுதான்...

  என்ன அழகான டிசைன்!! ஒவ்வொன்றும். எங்கள் வீட்டில் இருக்கும் நாட்டியக்காரர்கள் பயன்படுத்துவது போல இருக்கிறது. டெம்பிள் ஜ்வெல்லரி தான் வாங்கி அணிகிறார்கள் நடனத்திற்கும் சரி பிற விசேஷங்களுக்கும் சரி.

  ஆனால் இவை எல்லாம் மிகவும் விலை உயர்ந்த அக்மார்க் இல்லையா!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் நகை மீது பெரியதாக ஈர்ப்பு இல்லை கீதாஜி! சம்பாதிக்க ஆரம்பித்த புதிதில் கொஞ்சம் காசு சேர்த்து ஒரு செயினும் மோதிரமும் வாங்கிக் கொண்டேன். ஆனால் அவற்றை அணிந்து கொண்டது சில நாட்கள் மட்டுமே! அப்படியே தூங்கிக் கொண்டிருக்கிறது லாக்கரில்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. தில்லியில் பல ஆண்கள் தடிமனான கழுத்தணிகள் அணிந்து செல்வது உண்டு! அவர்களைப் பார்த்தால் ஏதோ மூக்கணாங்கயிறு மாட்டிய எருமை மாடு போலத் தோன்றும் எனக்கு!//

  ஹா ஹா ஹா ஹா எருமை மாடு பாவம் ஜி!!

  //நான் எனது DSLR எடுத்துச் செல்லவில்லை என்பதையும் சொல்லி விடுகிறேன் – கவசகுண்டலம் இல்லாத கர்ணன் போல அன்று மாறி இருந்தேன்! //

  ஹா ஹா ஹா எனக்கும் என் சாதாரண கேமரா இல்லாமல் போனால் இப்படித்தான் தோன்றும். எங்கு சென்றாலும் அதோடு போவதே வழக்கமாகிவிட்டது. இப்போது மீண்டும் வேலை செய்கிறதா...அதனால்...

  பச்சைக்கலர் நகைகள் எல்லாமே செமையா இருக்கு. ஜேகப் டயம்ன்ட் என்று சொல்லியிருப்பது...

  அனைத்தும் ரசித்தேன் ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏனோ கேமரா இல்லாமல் போவது இப்போது பிடித்திருக்கிறது கீதாஜி!

   ஜேகப் டைமண்ட் - முதலில் போட்டிருக்கும் படம் - இணையத்திலிருந்து எடுத்தது. அதைச் சுற்றி பாதுகாப்பு அதிகம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. நகைகளின் விலையை படித்து பெருமூச்சுதான் வருகிறது ஜி.

  படங்கள் ஸூப்பர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விலை - பெருமூச்சு தான். இப்போதைய மதிப்பில் இன்னும் அதிகம் தான் கில்லர்ஜி...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. குட்மார்னிங்.

  இன்றைய பதிவு மிகவும் காஸ்டலி பதிவு. விலை உயர்ந்த பதிவு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

   காஸ்ட்லி பதிவு - ஹாஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. நகைகளைப் பார்க்க பிரமிப்பூட்டுகின்றன. நீங்கள் சொல்வது போல அவர்களின் சிறு நகை அளவே இவ்வளவு இருந்தால் மொத்த சொத்து எவ்வளவு இருந்திருக்கும்? அடேங்கப்பா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில நகைகளே இவ்வளவு என்றால் மொத்த சொத்து எவ்வளவு இருந்திருக்கும்! வியப்பு தான் ஸ்ரீராம். பல கோடிகளில் புரண்டிருக்கிறார்கள் இந்த ராஜாக்கள்! வடக்கே சில அரண்மனைகளை பார்க்கும்போதும் இப்படி வியப்பு தான் மிஞ்சியது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. எனக்கு(ம்) நகை அணிவதில் விருப்பம் கிடையாது. எனக்கு மாமியார் போட்ட மோதிரங்கள், அப்பா தந்த மோதிரம் எல்லாம் உள்ளேதான் இருக்கிறது. அணிவதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் அப்படியே. நகைகள் மீது அத்தனை ஈர்ப்பு இல்லை ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. மரகதங்கள் பதித்த நகைகள். ஆனால் தங்கம் கண்ணில் படவில்லை. இஸ்லாமியர்கள் வெள்ளிக்குக் கொடுக்கும் மதிப்பு தங்கத்துக்குக் கொடுப்பதில்லை என நினைக்கிறேன்.

  பஹ்ரைனில் அரபிப் பெண்கள் திருமணத்துக்கு அணியும் (வாடகைக்குப் கொடுக்கும் நகைக் கடைகளும் உள்ளன) நகைகள் மிக மிகப் பெரியவை. சில 4 கிலோ எடையுள்ள தங்க நகைகள்.

  எனக்கும் நகைகளில் ஆசை உண்டு. அதிலும் கட்டைவிரல் தடிமனில் கழுத்து செயின் போட்டுக்கொள்ள ஆசை. அங்கு ஏதோ வாங்க விட்டுப்போய்விட்னது. இங்கு போட்டுக்கொண்டால் கழுத்து இருக்காது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கத்தினை விட வெள்ளிக்கும், கற்களுக்கும் அதிக மதிப்பு கொடுப்பார்கள் எனத் தோன்றுகிறது நெல்லைத் தமிழன்.

   கட்டைவிரல் தடிமனில் செயின் போட்டுக்கொள்ள ஆசை - இங்கே போட்டுக் கொண்டால் கழுத்து இருக்காது... :( உண்மை. சமீபத்தில் நண்பர் ஒருவர் இப்படி செயின் போட்டுக் கொண்டு குர்தா அணிந்து பால் வாங்கப் போனார். செயின் பறிபோனது - அவருக்கு அடியும் பட்டது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. நான் லண்டனில் பார்த்த வைர நகைகள், தங்கத்தைப் போல் எங்கும் கண்டதில்லை.

  வந்தியத்தேவனுக்கு கழுத்திலிருந்து இடுப்பு வரை கச்சைபோல் ஓவியர் வரைந்திருப்பாரே.. கிட்டத்தட்ட புஜங்களின் தடிமனில். அதேமாதிரி சொக்கத் தங்கத்தில் பிலிப்பைன்ஸ் மியூசியத்தில் பார்த்துள்ளேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் அனுபவங்களையும் இங்கே பகிர்ந்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன். எத்தனை நகைகள் - சில வட இந்திய இராஜாக்களின் மாளிகைகளில் வைத்திருக்கும் நகைகளைப் பார்த்து மலைப்பு தான் வந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. வியப்பு மேலிட வைத்த நகைகள் தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 12. வரலாற்றுப் பொக்கிஷங்கள்.. நகைகளின் அழகும் வேலைப்பாடும் கண்ணைப் பறிக்கின்றன. நகைக்கடைக்காரர்கள் நிச்சயம் இதிலிருந்து டிசைன் ஐடியாக்களைப் பெற்று புதிய நகைகளை உருவாக்க வாய்ப்பு உள்ளது. படங்கள் யாவும் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் பல புதிய டிசைன்களுக்கான ஐடியாக்கள் கிடைக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   நீக்கு
 13. பதில்கள்
  1. ஆமாம் குமார். நகைகள் அழகு தான். மதிப்பிலும் அதிகம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. வியப்பூட்டும் நகைகள். எல்லாம் ரத்தினங்கள், வைரங்கள் போலத் தெரிகின்றன. எல்லாவற்றிலும் வித்தியாசமான எனக்கு இந்த நகைகளிலும் அதிகம் பற்றுதல் இல்லை. எந்தக் கல்யாணத்திற்கும் கையில், கழுத்தில் இருக்கும் ஒற்றைவடம், ஒற்றை வளையலோடு போயிடுவேன். யாரும் எதுவும் கேட்டதில்லை! அதையும் சொல்லணுமே! மேலும் காலம் இருக்கும் இருப்பில் நகைகளைப் போட்டுக்கொண்டு வெளியே போக முடியுமா என்ன? ஷாப்பிங்க் என்றாலே அலர்ஜி எனக்கு! இதெல்லாம் படங்களில் பார்க்க நன்றாக இருக்கின்றன. வைச்சுப் பாதுகாப்பது கஷ்டம்! :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாவற்றிலும் வித்தியாசம் - ஹாஹா... நகைகளை வைத்துப் பாதுகாப்பது கடினமான வேலை தான் கீதாம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 15. ஒவ்வொரு நகைக்கும் பின்னால் ஒவ்வொரு கதை இருக்கும். அது சரி, அந்த ஜேகப் வைரம்? அதைப் படம் எடுக்கலையா? இல்லாட்டிப் பார்க்கலையா? இதைப்பற்றி ஏதோ படித்தமாதிரி அரைகுறை நினவு! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு நகைக்குப் பின்னாலும் ஒரு கதை - இருக்கலாம் கீதாம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 16. ஒவ்வொன்றும் ஒரு அழகு ..ரசித்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.

   நீக்கு
 17. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 18. கண்கூசுகிறது நகைகளைப் பார்த்து.
  நீலக் கற்களும் பச்சையும் அதிகமாகக் காணப்படுகின்றன. முத்து மாலை பளிஸ்.
  முதலில் இருப்பதுதான் ஜேகப் டயமண்டா.
  எல்லாமே அழகாக இருக்கின்றன.
  தங்கம் அதிகம் காணப்படவில்லை.

  சிறிய அளவே இவ்வளவு என்றால்
  மொத்தமும் எத்தனை மதிப்பு இருக்குமோ.

  கீதா சொல்வது போல எனக்கும் ஆசை விட்டு விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கற்கள் பதித்த நகைகள் எனும்போது அதிகமாக இருந்தால் கண்கள் கூசத் தான் செய்கிறது வல்லிம்மா... எனக்கும் நகைகள் மீது அதிக ஆசை இருந்ததில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 19. படங்கள் அத்தனையும் அழகாக இருக்கின்றன் நகைகளும்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....