புதன், 24 ஜூலை, 2019

ஜோல்னாவிற்குள் என்ன - பத்மநாபன்அன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். சற்றே இடைவெளிக்குப் பிறகு பத்மநாபன் அண்ணாச்சி அவர்களின் ஒரு பதிவு. விவேகானந்தா கேந்திரா அனுபவம் ஒன்றை எழுதி இருக்கிறார். படிக்கலாம் வாங்க! – வெங்கட், புது தில்லி


பண்பொழிலைப் பாடுவேனோ! பாம்பைத்தான் தேடுவேனோ!
 
அந்த ஜோல்னாப்பையை மட்டும் இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. விவேகானந்தா கேந்திரப் பணியில் எனது நாட்களை திரும்பிப் பார்த்தால் பச்சைநிற ஜோல்னாப்பை இல்லாமல் நானில்லை. இரண்டு பிரிவுகள் கொண்ட அந்தப்பையின் ஒரு பிரிவில் ஒரு வேட்டி ஒரு சட்டை வகையறா மற்றும் ஒரு குற்றாலம் துவர்த்து(துண்டு) பாந்தமாய் இருக்கும். மற்றொரு பிரிவில் விவேகானந்தா கேந்திரம் சம்பந்தமான காகிதங்கள், விவேகவாணி பத்திரிகை மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பண்பாட்டுப் போட்டிகளில் வழங்குவதற்காக பெயர் நிரப்பப்படாத சான்றிதழ்கள் நிரம்பி இருக்கும்.

ஒருமுறை செங்கோட்டை அருகில் நான்கு நாட்கள் இளைஞர் முகாம். அந்தப் பகுதியில் முகாம் என்றால் எனக்குள் ஒரு உற்சாகம் பிறக்கும் பாருங்கள்! அருமையான இயற்கை வளம் நிறைந்த சிற்றூர்கள் நிறைந்த அருமையான உலகம் அது. இலஞ்சி, பண்பொழில், தவணை என்ற அழகிய ஊர்கள் இன்னும் நினவில் உள்ளது.

எங்கள் ஊரிலிருந்து எனது நண்பனின் சகோதரி இந்த பண்பொழில் ஊருக்கு திருமணமாகி சென்றார். அவரின் அம்மா அடிக்கடி "என் மகளை பம்பிளியில கட்டிக் கொடுத்திருக்கேன்! பம்பிளியில கட்டிக் கொடுத்திருக்கேன்!" என்று சொல்லிக் கொண்டிருப்பார். நானும் அந்த ஊர் ஏதோ சென்னைக்கு பக்கத்தில் உள்ளது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் பின்னாளில் ஒருநாள் கேந்திரப் பணி சம்பந்தமாக பண்பொழில் சென்ற போது ஒரு குரல், "எப்போ தம்பி! நீ பத்தனாவன்தானே!" எப்படிப்போ இருக்கே! வீட்டுக்கு வாப்போ! சாப்பிட்டுக்கிட்டு போலாம்!" என்று பாசத்தைக் காட்டியது. பம்பிளியில் கட்டிக் கொடுத்திருந்த அந்த அக்காதான் பாசம் காட்டியவர். அப்போதுதான் தெரிந்தது அவ்வளவு அழகான பண்பொழிலை எங்கள் ஊர் பம்பிளி ஆக்கியிருந்தது.

அது போல் இலஞ்சி என்னும் அழகான ஊர். இலஞ்சி முத்துக்குமாரசுவாமி இன்னும் அழகு!

மற்றொரு சிற்றூர். பெயர் மறந்து விட்டது. தவணை என்ற ஊர் என நினைக்கிறேன். அப்போது பஸ் வசதி இல்லாத ஊர்.  ஜீப்பில் மலை மீது ஏறி அந்த ஊர் சென்றதாக நினைவு. மாலை இருட்டும் நேரத்தில் அங்கு சென்று சேர்ந்தோம். இரவு அந்த ஊர் பொது இ(ம)டத்தில் தூங்கி மறுநாள் அதிகாலை எழுந்து பார்த்தால் சுற்றிலும் தூரத்தில் நான்கு பக்கமும்  மேற்குத் தொடர்ச்சி மலை  பொதிகையாய் பூரித்தது. மலையில் அங்கங்கே வைரத்தொங்கல்களாய் பல அருவிகள். அருகில் இருந்த உள்ளூர் நண்பர் தூரத்தில் ஒரு அருவியைக் காட்டி அதுதான் குற்றால அருவி என்றார். நான் இன்னொரு அருவியைக் காட்டி அது என்ன அருவி என்று விசாரிக்க, அவையெல்லாம் திடீரென்று தெரியும். திடீரென்று மறைந்து விடும். மலையில் பெய்யும் மழையைப் பொறுத்து அருவிகள் தெரியும் என்றார். அப்போது ஒரு மூன்று நான்கு அருவிகளாவது தூரத்து மலைகளில் காட்சியளித்தன.

இப்படிப்பட்ட அழகான ஊர்களில் நான்கு நாட்கள் முகாம் என்றால் கசக்கவா செய்யும். அப்போது முகாம் நடந்தது ஊருக்குப் பொதுவான ஒரு பழைய பஜனைமடத்தில். அந்த பஜனைமடம் ஊரிலிருந்து சற்று தள்ளி காட்டுப்பகுதியில் இருந்தது. கோவிலைச் சுற்றிலும் மரம் செடி கொடிகள் அடர்ந்து அமைதி அழகு அச்சம் என்று ஒருவித கலவையாக இருக்கும். நான்கு நாட்கள் முகாமில் ஊரில் உள்ள கோவில் மற்றும் குளங்கள் இவற்றில் சுற்றி உள்ள புதர்கள் மற்றும் தேவையற்ற செடி கொடிகளை அகற்றி உழவாரப்பணி செய்வது முக்கிய பணி. இரவு பகல் என நான்கு நாட்களும் அருமையான இளைஞர்களுடன் அந்த ஊரில் இனிமையாக கழிந்தது. 

முகாம் முடிந்து உடனடியாக அடுத்த பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.   அடுத்தநாள் கல்லிடைக்குறிச்சி அருகில் உள்ள ஒரு சிறிய ஊரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அங்குள்ள மாணவ மாணவிகளுக்கு பண்பாட்டுப் போட்டிகள் நடத்தி விவேகானந்தா கேந்திரம் சார்பாக புத்தகப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்க ஆவன செய்ய வேண்டும்.

பள்ளித் தலைமையாசிரியர் அல்லது ஊர் முக்கிய பிரமுகர் அவற்றை வழங்க ஏற்பாடு செய்திருப்போம். போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பை அந்தப் பகுதி கேந்திரத்தொண்டர் செய்திருந்தார். பரிசுப்புத்தகங்கள் ஏற்கனவே அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நான் முகாம் பொருட்களையும் ஜோல்னாப்பை தவிர்த்த எனது மற்ற உடைமைகளையும் கேந்திர   ஜீப்பில் ஏற்றி வள்ளியூர் அனுப்பிவிட்டு அடுத்த நாள் காலை கல்லிடைக்குறிச்சிக்கு பஸ்ஸில் செல்லலாம் என திட்டம். அன்று இரவு இளைஞர்கள் சிலரும் ஊரில் உள்ள நண்பர்கள் சிலரும் அந்தப் பஜனைமடத்திலேயே தங்கி அடுத்தநாள் காலை கல்லிடைக்குறிச்சிக்கு வழியனுப்பி வைத்தார்கள்.

கிட்டத்தட்ட ஒரு முப்பது நாற்பது கிலோமீட்டர் பஸ்ஸில் பயணித்து ஜோல்னாப்பையும் கையுமாக கல்லிடைக்குறிச்சி வந்து சேர்ந்தேன். 

அங்கிருந்து இன்னொரு பஸ் பிடித்து அந்த சிறிய ஊரை அடைத்தேன். சிறிய கிராமம் ஆதலால் பள்ளியை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படவில்லை. எனக்கு முன்னரே அந்தப் பகுதி கேந்திர நண்பரும் விவேகானந்தா கேந்திரா பாலர் பள்ளி ஆசிரியைகள் இருவரும் வந்திருந்து போட்டி ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்கள். பள்ளி நன்கு சுத்தமாக பராமரிக்கப்பட்டிருந்தது. பள்ளியின் ஒரு அறையில் எனது பொக்கிஷமான ஜோல்னாப்பையை தரையில் ஒரு மூலையில் வைத்து விட்டு நானும் ஜோதியில் ஐக்கியமானேன்.

பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, வினாடி வினாப் போட்டி, நினைவுத் திறன் போட்டி என்று பல போட்டிகள் தொடக்க, மத்திய மற்றும் உயர் வகுப்பு பிரிவு வாரியாக நடத்த வேண்டும். பேச்சுப்போட்டிகளுக்கு நல்ல தேர்ந்தெடுத்த இலக்கிய, சமூகப் பொறுப்புள்ள தலைப்புகளும் பாட்டுப் போட்டி என்றால் பக்திப்பாட்டுகள் பாரதியார் பாரதிதாசன் பாடல்கள் என்று கட்டுப்பாடுகள் உண்டு. அப்போதெல்லாம் கிராமங்களில் இந்த மாதிரி போட்டிகளில் பங்கேற்க பள்ளிகளும் பெற்றோரும் குழந்தைகளை உற்சாகப்படுத்தியதால் பல சமயங்களில் காலை ஆரம்பிக்கும் போட்டிகள் மாலை வரைகூட தொடரும். அதுவும் விவேகானந்தா கேந்திரா பண்பாட்டுப் போட்டிகள் என்றால் அக்கம் பக்கத்து பள்ளிகளும் குழந்தைகளை அனுப்பி வைப்பர்.

அன்று போட்டிகள் தொடங்கி ஒவ்வொரு போட்டிகளாக முடிந்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவர்களுக்குரிய சான்றிதழ்களில் பெயர் முதலானவற்றை எழுதி வைக்கலாம் என்று எங்கள் ஆசிரியைகளில் ஒருவரை அழைத்து எனது ஜோல்னாப்பையில் இருந்து சான்றிதழ்களை எடுத்து வரும்படி கூற அவரும் பைக்குள் கைவிட்டு துழாவி சான்றிதழ்க் கட்டினை எடுத்தவர் அதை அப்படியே கீழே வீசிவிட்டு அய்யோ என்று அலறிக் கொண்டே ஓடி வந்தார். சார் உங்க பைக்குள் பாம்பு இருக்குது என்று பரபரத்தார்.  ஓடிச்சென்று பையைத் தூக்கிப் பார்த்தபோது ஒரு குட்டிப் பாம்பு உடம்பில் கறுப்பு புள்ளிகளுடன் சுருண்டு கிடந்தார்.  சான்றிதழ்களை எடுத்தபோது அவற்றோடு வெளியே வந்த பாம்பார் அப்படியே பையின் அடியில் போய் சுருண்டு கிடந்தார். அதற்குள் கம்பு கட்டையோடு வந்த ஒரு புண்ணியவான் அதை அப்படியே பரலோகத்திற்கு அனுப்பினார். அதன்பின் அந்த பூதவுடலை வைத்து ஒரு பெரிய ஆராய்ச்சி நடைபெற்றது. அதன் குலம் கோத்திரம், சாதி சங்காத்தம் எல்லாம் ஆராய்ந்து அது ஒரு ஒண்ணும் தெரியாத விஷம் கிஷம் எதுவுமில்லாத பச்சப்புள்ளைன்னு முடிவுக்கு வந்தோம்.

அந்த நாலுநாள் முகாம் சமயம் அந்த பழைய பஜனைமடம் பக்கமுள்ள காட்டுப் பகுதியில் இருந்து அதன் அம்மாவின் கண்களில் இருந்து தப்பி எப்படியோ என் ஜோல்னாப்பையில் தஞ்சம் புகுந்து நாற்பது கிலோமீட்டர் என்னோடு டிக்கெட் எடுக்காமல் பயணித்து கல்லிடைக்குறிச்சி வந்து பால்வாடி ஆசிரியையை பயமுறுத்தி பரிதாபமாய் உயிர் விட்டிருக்கிறது.

அந்த ஜோல்னாப்பைக்குள் எத்தனை முறை கைவிட்டு துளாவியிருப்பேனோ தெரியவில்லை. யார் செய்த புண்ணியமோ அம்மா பாம்பு என்னுடன் பயணம் செய்யவில்லை. குட்டிப் பாம்பிற்குப் பதில் அம்மா பாம்பு பயணம் செய்திருந்தால்   பெரும்பழிச் சொல்லுக்கு ஆளாகியிருக்கும். ஆம். கட்டிய கணவனை விட்டு விட்டு முகாம் நடத்த வந்த அழகான இளைஞனுடன் ஓடிப்போன பாம்பு என்ற பெரும்பழி ஏற்பட்டிருக்காதா!

நண்பர்களே, இன்றைய பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…

நட்புடன்

பத்மநாபன்
புது தில்லி

30 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

  ஓ இன்று பப்பநாபன் அண்ணாச்சியின் பதிவா !! எவ்வளவு நாள் ஆயிற்று பார்த்து. வருகிறேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதாஜி!

   ஆமாம்... என்னைப் போலவே அவரும் கொஞம் ப்ரேக்! மாதத்திற்கு ஒரு பதிவாவது எழுதுபவர் கடந்த மாதம் எழுதி அனுப்பவில்லை. இனி அனுப்புவார் என நம்பிக்கை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. நானே நினைத்தேன். எங்கே காணோமே என்று...

  குட்மார்னிங்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

   சற்றே இடைவெளிக்குப் பிறகு வந்து விட்டார் பத்மநாபன் அண்ணாச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. ஊர்ப்பெயர்கள்தான் அழகாய் இருக்கிறதென்று பார்த்தால் ஊர் பற்றிய வர்ணனை அசத்துகிறது.. வரிசையாய் அருவிகளா... அட...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் படிக்கும்போதே அந்த ஊர்களுக்குச் சென்று இயற்கை எழிலோடு இணைந்து இருக்கத் தோன்றுகிறது ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. ஆமாம் ஸ்ரீராம் அந்தப் பகுதிகள் ரொம்ப ரொம்ப ரொம்ப அழகாக இருக்கும். ராஜி கூட பதிவு போட்டிருந்தாங்க அந்த முருகன் கோயில் பற்றியும் அருவி பற்றியும்...

   எப்போதோ சென்றது. மீண்டும் செல்ல நினைக்கும் லிஸ்டில் உண்டு. எங்கள் வீட்டுக் குழு எப்போது தீர்மானிக்கிறதோ...

   கீதா

   நீக்கு
  3. இப்பகுதிகளுக்கு நானும் சென்றதில்லை கீதாஜி. அங்கே செல்லும் வாய்ப்பு அமைந்தால் மகிழ்ச்சி அடைவேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. அந்தப் பாம்புக்கு என்ன கர்மவினையோ, பிறந்த ஊரைவிட்டு அவ்வளவு தூரம் சென்று உயிர்விட... ஏதாவது காரணம் இருக்கும்!!

  பீதியான அனுபவம்தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாம்பின் கர்மவினை இப்படி இருக்கிறது போலும்... என்ன காரணம் என்பதை “அவனே” அறிவான் இல்லையா ஸ்ரீராம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. என்ன செய்வது...

  அந்தப் பா...ஆம்புக் குட்டிக்கு கட்டையும் தடிக்கம்பும் தான் கதிமோட்சம் போலிருக்கிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் பாவம் அந்த பாம்புக் குட்டி - அதற்கு இப்படி ஒரு விதி இருந்திருக்கிறது போலும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

   நீக்கு
 6. செங்கோட்டையும் அதைச் சுற்றிய ஊர்களும் மிக மிக அழகாக இருக்கும். செங்கோட்டை டு கொல்லம் மற்றும் பார்டரில் இருக்கும் தென்மலா பகுதி செமையா இருக்கும். நல்ல சுற்றுலாவுக்கு ஏற்ற இடங்கள்...நிறைய அருவிகளும் உண்டு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருநெல்வேலி, கன்னியாகுமரி சென்று உள்ளேன். செங்கோட்டை, தென்காசி, தூத்துக்குடிக்கு சென்றதில்லை கீதாஜி. செல்ல வேண்டும் என்ற அவா உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. அண்ணாச்சியின் வரிகள் பல சிரிக்க வைத்துவிட்டன.

  பாம்பு ஆஹா எங்க ஊர்ல கிராமத்துல பாக்காத பாம்பானு தோன்றியது. வீட்டு படுக்கையில், போஸ்ட் பாக்ஸில் எல்லாம் குடி கொண்டிருக்கும். தினமும் இரண்டு பாம்பாவாது மினிமம் கண்ணில் படாமல் இருக்காது. எங்கேனும் சுருண்டு கிடக்கும் வீட்டின் பின்புறம் அல்லது கொட்டிலில் என்று. அதுவும் விறகு, தென்னம் பாளை, ஓலை, அடுக்கி வைத்திருந்தால் பார்த்துதான் எடுக்க வேண்டும். அதனாலேயே நாங்கள் எங்கள் பள்ளிப் பைகளைக் கூட (அலுமினியம் பெட்டி இருந்தவரை கவலை இல்லை. பெட்டி மூடி வைத்துவிடுவோம். பைகள் கொண்டு செல்லத் தொடங்கியதும் கையை உள்ளே விடவே மாட்டோம். எல்லா சாமானையும் கீழே கொட்டிவிட்டுத்தான் எடுப்போம்!!!!!!!!!!!!!!!!!!!

  அண்ணாச்சி காட்டில் உள்ள பஜனை மடத்தில் இருந்து அதுவும் அங்கு உழவாரப் பணி செய்ததால் செடிகளுக்கு இடையில் இருந்தவை செடிகள் அகன்றதும் இடம் தேடி வந்திருக்கும்.

  பாவம் பாம்புக் குட்டியை அப்படியே பக்கத்தில் இருக்கும் வயலோ, தோட்டமோ அல்லது ஊருக்கு ஒதுக்குபுறத்திலோ கொண்டு விட்டிருக்கலாம்.

  நாங்கள் பாம்பை அடித்தது இல்லை விரட்டி விடுவோம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அலுமினியப் பெட்டி - முதல் இரண்டு மூன்று வருடங்கள் நானும் பள்ளிக்கு இதைத் தான் கொண்டு சென்றேன் - கூடவே ஒரு அலுமினியத் தூக்கில் தயிர் சாதமும் ஊறுகாயும்! இனிய நினைவுகள் அவை.

   பாவம் பாம்புக் குட்டியை ஒதுக்குப் புறமாக விட்டிருக்கலாம்! - லாம்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 8. சுவாரஸ்யமாக இருந்தது பத்மநாபன் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 9. இயல்பான மொழி...ஆனால் நாரோயில் தமிழ் கொஞ்சம் மிஸ்ஸிங்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதில் நாரோயில் தமிழ் கொஞ்சம் மிஸ்ஸிங்! ஆமாம் நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. பாம்போடு குடித்தனமெல்லாம் நடத்தியதில் இதெல்லாம் ஜுஜுபி என்று தோன்றியது. ஆனாலும் குட்டிப் பாம்பு தானே! அடித்திருக்க வேண்டாம். அப்படியே பையைத் தூக்கிச் சென்று செடிகள் ஓரமாக் கீழே விட்டிருக்கலாம். பாவம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் வீட்டிலும் நிறைய பாம்புக் கதைகள் உண்டு! :) அப்படியே பையைத் தூக்கிச் சென்று ஓரமாக கீழே விட்டிருக்கலாம் - லாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 11. அருவிகளைக் காண பாம்பாரும் வந்துவிட்டாரோ :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 13. பதில்கள்
  1. ஆமாம் கரந்தை ஜெயக்குமார் ஐயா. அழகான பெயர்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  நல்ல அனுபவ கதை ரசித்தேன். அழகான ஊரின் பெயர்கள். தூரத்தே தெரியும் அருவிகள் என் கற்பனையிலும் கண்டு ரசித்தேன். பாம்புடன் இனிய பயணம். இடையிடையே நல்ல நகைச்சுவைகளுடன் மிகவும் நன்றாக உள்ளது. தங்கள் நண்பருக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பத்மநாபன் அண்ணாச்சிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் தான் கமலா ஹரிஹரன் ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....