புதன், 17 ஜூலை, 2019

ஜார்க்கண்ட் உலா – ஜோன்ஹா அருவிஆஹா.... இந்த சூழலில் இருந்தால் எவ்வளவு இன்பம்....

மலைச்சாரல்....

ஜார்க்கண்ட் உலா என்ற பெயரில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சில இடங்களுக்கு உங்களை பதிவுகள் மூலம் அழைத்துச் சென்றது நினைவிருக்கலாம்! அப்படி கடைசியாக உங்களை அழைத்துச் சென்றது பத்ராது எனும் இடத்திற்கு! அழைத்துச் சென்றது கீழே உள்ள பதிவின் மூலம்!
இனிமையான பாதையில் ஒரு பயணம்....


இந்தக் கிராமியப் பாதையில் பயணிப்பது ஒரு சுகானுபவம்....

இப்பதிவு எழுதி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஜார்க்கண்ட் உலா என்ற தலைப்பில் எழுதிய இந்தப் பதிவுகள் ஒவ்வொன்றும் தனிப்பதிவு தான் என்பதால் இடைவெளி இருந்தாலும் தப்பில்லை! ஆனாலும் இவ்வளவு இடைவெளியா! சரி பரவாயில்லை. இன்றைக்கு ஜார்க்கண்ட் உலாவில் உங்களை இன்னுமொரு அருவிக்கு அழைத்துச் செல்லப் போகிறேன். அடிக்கும் வெயிலுக்கு அருவிக் குளியல் கொஞ்சம் இதமாய் இருக்குமல்லவா!பள்ளியிலிருந்து வீடு திரும்பும் சிறுமிகள் - கொஞ்சம் ஆபத்தான பயணம் இல்லையா?....


சாலையோரத்தில் சைக்கிள் பயணமாக வீடு திரும்பும் சிறுமி....

ஜோன்ஹா அருவி – ராஞ்சி நகரிலிருந்து புருலியா செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 45 கிலோமீட்டர் பயணித்தால் இந்த ஜோன்ஹா அருவியை அடைந்து விடலாம்! கிராமியப் பாதையில், இரண்டு புறமும் மரங்கள் அமைந்திருக்க பயணிப்பது ஒரு சுகானுபவம். ஜார்க்கண்டில் நிறையவே இப்படி பயணிக்க வாய்ப்பு கிடைக்கிறது. கிராமத்து வீடுகள், பள்ளிக்குச் செல்லும்/வீடு திரும்பும் குழந்தைகளைப் பார்த்தபடியே பயணித்தோம். சில படங்களும் எடுத்துக் கொண்டேன். அருவி இருக்கும் பகுதிக்கு வரும்போதே வழியில் வாகன சோதனையும் நுழைவுக் கட்டணமும் வாங்கி விடுகிறார்கள் – அதிகமில்லை ஒரு வாகனத்திற்கு ஐம்பது ரூபாய் தான்! சாலையோரங்களில் மலைப்பகுதியில் விளைந்த பெரிய பெரிய பப்பாளி பழங்களை விலைக்கு விற்கிறார்கள். இவற்றை எல்லாம் பார்த்தபடியே வாகனத்தில் பயணிக்கிறோம். முடிந்த அளவிற்கு வாகனத்தில் பயணம். அதற்குப் பிறகு நடை தான்!


மலைப் பப்பாளி...


சாலையோரத்து கிராமிய வீடுகள்....இயற்கைச் சூழலில் ஒரு அழகிய வீடு... 

இந்த அருவியும் மேலிருந்து பார்க்கையில் உங்களுக்குத் தெரியாது. படிகள் [மொத்தம் 722!] மூலம் கீழே இறங்கிச் செல்ல வேண்டும்! இறங்கிச் செல்வது பெரிய விஷயம் இல்லை. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அருவிகள் பலவும் இப்படி கீழே சென்று தான் பார்க்க வேண்டியிருக்கிறது. படிகள் மூலம் இறங்கிச் செல்வது கூட பெரிய விஷயமில்லை. சுகமான இயற்கைச் சூழலை அனுபவித்து மீண்டும் படிகள் வழியே ஏறி வருவது தான் கொஞ்சம் கடினமான விஷயம்.  ஆனாலும் இந்த அனுபவம் கிடைக்க கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும் இல்லையா. படிகளில் செல்லும் போது வழியெங்கும் அப்பகுதி மக்கள் கீழே விழுந்த மரங்களிலிருந்து சின்னச் சின்னதாய் பொருட்களை செய்து விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் பார்த்தபடியே கீழே இறங்கினால் அருவிக்கு அருகில் வந்து விடலாம்!


நான் அழகா இருக்கேன்ல!....


ஆஹா... எங்கெங்கும் மரங்கள்....படிகள்... படிகள்.... இறங்குவது பெரிதல்ல! மீண்டும் திரும்ப வேண்டுமே!....

கூங்கா மற்றும் ராரூ எனும் நதிகளின் பாதையில் அமைந்திருக்கிறது இந்த அருவி. சுமார் 141 அடி உயரத்திலிருந்து பாறைகள் வழி கீழே வருகிறது. பிறகு கொஞ்சம் சமவெளியில் பயணித்து மீண்டும் கீழே [எட்டு அடி!] விழுந்து அங்கிருந்து கீழே பயணிக்கிறது. இந்த இடத்தில் நிறைய பேர் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். பாறைப் பகுதி என்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தான் இருக்க வேண்டும். ஆனால் சுற்றுலாவாக வரும் பெரும்பாலான இளைஞர்கள் அங்கே ரொம்பவே அஜாக்கிரதையாக இருக்கிறார்கள். ஒன்றிரண்டு பேர் கீழே வழுக்கி விழுவதைப் பார்க்க முடிந்தது. ஒரு இளைஞர் தன்னுடன் வந்தவரை குண்டுக்கட்டாகத் தூக்கி தண்ணீரில் போட அவர் மூச்சுத் திணறி கடும் அவதிப்பட்டார்! எல்லாம் ஒரு ஜாலி தான் இவர்களுக்கு! பார்க்கும்போது கொஞ்சம் பதட்டமாக இருந்தது என்றாலும் ஒன்றும் சொல்ல இயலாது!


காதலும் கப்பலும்!....


அழகிய மரப்பூக்கள்!.....


எதைக் கொண்டு செய்கிறோம் என்பது முக்கியமல்ல! செய்யப்படும் பொருள் முக்கியம்!....

இந்த ஜோன்ஹா அருவிக்கு கௌதம் dhதாரா என்ற பெயரும் உண்டு. இங்கே இருக்கும் ஒரு மலையுச்சியில் ராஜா பல்தேவ்தாஸ் பிர்லா அவர்களின் மகன் கௌதம புத்தருக்கு ஒரு கோவில் அமைத்திருப்பதால் இந்த பெயர்! ஆனால் நாங்கள் சென்ற போது அருவிக்கு மட்டும் தான் சென்றோம். கோவிலுக்குச் செல்லவில்லை. இந்த மலைப்பகுதியில் அருவி, சுற்றிலும் மரங்கள், மலை, இயற்கை எழில் என பார்த்துக் கொண்டே இருந்ததில் வேறு எங்கும் போக வேண்டும் என்ற எண்ணமே வரவில்லை.  ரம்மியமான சூழலில் நீண்ட நேரம் இருந்து அங்கிருந்து புறப்பட மனமே இல்லாமல் தான் புறப்பட்டோம். கூடவே 722 படிகள் வழி மேலே ஏற வேண்டுமே என்ற எண்ணமும் மனதுக்குள் வந்து இம்சிக்கவும் செய்ததே!


ஜோன்ஹா அருவி....


இது செல்ஃபி ஜோன் அல்ல! எனும் அறிவிப்பு. ஆனால் நாங்க கேட்க மாட்டோமே!.... 


என்னையும் ஒரு படம் பிடிச்சாச்ச்!  இது செல்ஃபி அல்ல! படம் எடுத்துத் தந்த நண்பருக்கு நன்றி....

இந்த அருவியில் பெரும்பாலும் தண்ணீர் வரத்து இருக்கும் என்றாலும், மழை நாட்களில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும். அக்டோபர் முதல் ஃபிப்ரவரி வரை இங்கே செல்வது நல்லது. நாங்கள் சென்றது நவம்பர் மாதத்தில் என்றாலும் அவ்வளவு தண்ணீர் வரத்து இல்லை. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இந்தப் பகுதியில் விழா நடத்துகிறார்கள். வாரத்தில் இந்த இரண்டு நாட்களில் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமாம். நாங்கள் சென்ற போது சில பள்ளி/கல்லூரி மாணவ/மாணவிகள் வந்திருந்தார்கள். ஒரே ஆட்டம் தான். ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தார்கள். வாழ்க்கையில் தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்கட்டும்.


ஆஹா... இதமான குளியல்! இதை விட்டு எழுந்திருக்க மனசு வருமா என்ன....பார்த்துப் போவே... கொஞ்சம் வழுக்கினாலும் போச்ச்!...


நண்பர்கள் - அப்படியே தூக்கி தண்ணியில் போட ரெடியாக!...

இந்த அருவி இருக்கும் பகுதியில் ஒன்றிரண்டு கடைகள் உண்டு. சுடச்சுட உணவு தயாரித்துக் கொடுக்கிறார்கள். கூடவே தேநீர், எலுமிச்சை ஜூஸ், பகோடா என சிற்றுண்டிகளும் உண்டு.  இப்பகுதியில் பார்த்த/சந்தித்த ஒரு உள்ளூர் குடும்பத்தினரைப் பற்றி தனிப்பதிவாக எழுதுகிறேன்.   ஜார்க்கண்ட் உலாவில் வேறு ஒரு இடம் பற்றிய தகவல்களோடு மீண்டும் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

30 கருத்துகள்:

 1. அவனவன் தண்ணியைக் காணோமே என்று பரிதவிக்கும்போது அருவி படங்கள் பார்க்கவும், பசுமையான மரங்களைப் பார்க்கவும் எவ்வளவு இனிமையா இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தண்ணீரும் பசுமையான மரங்களும் பார்க்க மகிழ்ச்சி தான் நெல்லைத் தமிழன். தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை என்றால் இந்த நாட்களில் பல இடங்களில் வெள்ளம் - பீஹார், ஹிமாச்சல், உத்திராகண்ட், அசாம் என வெள்ளத்திலும், மழை பொழிவால் விளையும் நிலச் சரிவுகளாலும் பாதிப்பு அடைந்திருக்கிறார்கள்... என்ன சொல்வது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. குட்மார்னிங்.

  அழகிய காட்சிகள் வரவேற்கின்றன போல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம். ஆமாம் அழகான வரவேற்பு தான் அங்கே...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. //அடிக்கும் வெயிலுக்கு //

  அதிர்ஷ்டவசமாக நேற்று இரவிலிருந்து லேசான மழை தொடர்கிறது இங்கு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் இங்கேயும் இரண்டு மூன்று நாட்களாக கொஞ்சம் மழை பெய்து குளிர்வித்து இருக்கிறது சூழலை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. அந்த வீடு மிக அழகாக இருக்கிறது. அனைத்துப் படங்களையும் ரசித்தேன்.

  யூ டியூபில் கிஷோர் பாட்டு கேட்டுக்கொண்டே பதிலடிக்கிறேன். கிஷோர் பாடிக்கொண்டிருக்கிறார்.. :ஆஜ்கி பாத் வாரே வாஹ்...ஆ...ஆ..."

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா.... கிஷோர் பாட்டு கேட்டபடியே வலைப்பூ மேய்வது சுகம் தான் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. என்ன பாட்டு என்று கண்டுபிடித்துச் சொல்வீர்கள் என்று நினைத்தேன்!!!!

   நீக்கு
  3. ஹாஹா.... பாடல்களைக் கண்டு பிடிக்கும் அளவிற்கு எனக்கு பாடல்கள் தெரியாது ஸ்ரீராம். கேட்பதோடு சரி. பல பாடல்கள் முழுவதும் நினைவில் பதியாது....

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  4. பாடல் பற்றிய தகவல் தந்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

  ஐந்தரைக்கு வந்து பார்த்து விட்டுப் போனேன். முந்தைய பதிவுதான் வந்திருந்தது.

  படங்கள் அனைத்தும் செம. நினைவிருக்கு ஜி ஜார்கன்ட் பற்றிய உங்கள் பதிவு.

  அருவி செம அழகு என்றால் அந்த வீடு ரொம்ப அழகாக இருக்கிறது. மீண்டும் வருகிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐந்தரைக்கு சரியாக வெளிவரும் படித்தான் ஷெட்யூல் செய்திருந்தேன். உங்களால் ஏன் படிக்க முடியவில்லை எனத் தெரியவில்லை கீதாஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. அந்தப்பக்கமெல்லாம் பயணம் வாய்க்குமான்னு தெரியலை. உங்க பயணம் பார்த்தே நானும் கூட வந்தமாதிரி இருக்கு ! நல்லா இருங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தப் பக்கம் பயணம் போக வாய்ப்பு அமையட்டும் - சில இடங்கள் நன்றாக இருக்கின்றன துளசி டீச்சர். படிகளில் ஏறி இறங்குவது கொஞ்சம் கடினம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. ஜோன்ஹா அருவி ஜோராகத்தான் இருக்கு ஜி தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜோரான அருவி தான் கில்லர்ஜி.... தொடர்வதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. உங்கள் பதிவுகள் அனைத்தும் மின் அஞ்சல் வழியே வந்து கொண்டேயிருக்கின்றது. எதையும் அழிப்பதில்லை. காரணம் இவையெல்லாம் என் லட்சியங்களின் ஒரு பகுதி. வாய்ப்பு வரும் போது இதனை ஆதாரமாக வைத்துக் கொண்டு சுற்ற உதவும். ஜெயமோகன் தளத்தை தொடர்ந்து வாசிக்கவும். சுற்றுலாக கட்டுரைகள் எப்படி எழுதுகின்றார் என்பதனை கவனிக்கவும். நீங்க இன்னமும் கொஞ்சம் மேம்பட்டு பல விசயங்களையும் கோர்த்து உழைப்போடு எழுத வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் பதிவுகளை நீங்களும் தொடர்ந்து படிப்பதில் மகிழ்ச்சி ஜோதிஜி. இன்னும் சிறப்பாக எழுத ஆசை தான் - உழைப்போடு எழுத முயற்சிக்க வேண்டும். கிடைக்கும் நேரத்தில் தான் பதிவு எழுத முடிகிறது. அதனால் எழுதும் பதிவுகளின் தரம் குறைவாக இருக்கிறது எனத் தோன்றுகிறது. ஜெயமோகன் தளம் - அவ்வளவாக படிப்பதில்லை. இனி படிக்க வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. அருவி பார்க்க அழகு. கண்களுக்கு குளிர்ச்சி.

  //நான் அழகா இருக்கேன்ல!....//

  இதில் என்ன கண்ணா சந்தேகம்? அமைதியான தெய்வீக அழகு கண்ணா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெய்வீக அழகு - உண்மை தான் கோமதிம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. சிறிய அருவிதான். அழடான இபம்.
  அடர்ந்த மரங்கள் இரூப்பது சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறிய அருவி தான் மாதேவி. ஆனால் நன்றாக இருக்கிறது அவ்விடமும் சூழலும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. அருவி செம அழகு. உங்கள் கேப்ஷன் அருமை.

  கைவேலைப்பாடுகள் ரொம்ப அழகா செய்யறாங்க...இது மரத்தின் பித் லிருந்து செய்யறது இல்லையா லைட் வெயிட்டா இருக்கும். அஸ்ஸாமிலும் கூட இது ஃபேமஸ் இல்லையாஅ.

  சென்று குளித்து எஞ்சாய் செய்ய வேண்டும் போல இருக்கிறது.

  எல்லாப்படங்களும் செம.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கீதாஜி. லைட் வெயிட் தான் இவை. ஆனால் அழகாக இருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  அருவி படங்கள் மிக அழகு. சுற்றிலும் இயற்கை வனப்புகளும், அருவி விழும் இடங்களும், செல்லும் பாதைகளும் கண்களை கவர்கிறது. அழகான படங்களுக்கு அருமையான ரசனை மிகுந்த வரிகளை தந்துள்ளீர்கள். நீங்கள் கொடுத்திருந்த முந்தைய பதிவையும் பார்த்திருக்கிறேன்.

  அழகான படங்கள். மரத்தினால் செய்யப்பட்ட வேலைப்பாடுகள் நன்றாக உள்ளது. பாறைகள் வழுக்கும் தன்மை உடையதால் அங்கெல்லாம் ஜாக்கிரதையாகத்தான் செல்ல வேண்டும். இளவயது என்பதினால், அவர்கள் பயத்தின் வசபடவில்லை போலும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாறைகள் வழுக்கும் தன்மை உடையதால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆனால் மகிழ்ச்சியில் எல்லாம் மறந்து விடுகிறது கமலா ஹரிஹரன் ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. ஜோன்ஹா அருவி படத்தில் இவ்வளவு குளிர்சியாக இருக்கிறது. நேரில் பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்ய முடிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேரிலும் நன்றாகவே இருக்கும் இராமசாமி ஜி!. எங்களுடன் நீங்களும் வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....