புதன், 31 ஜூலை, 2019

ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…


சின்னச் சின்ன ஆசை...


அன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். ”ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை”ன்னு ஒரு பழைய பாட்டு உங்களுக்கு எல்லாருக்குமே தெரிஞ்சுருக்கும். சிவச்சந்திரன் மற்றும் ஸ்ரீப்ரியா நடிப்பில், எஸ்.பி.பி-வாணி ஜெயராம் குரலில், ஷங்கர் கணேஷ் இசையமைப்பில் “என்னடி மீனாக்ஷி” என்ற படத்தில் வரும் பாட்டு. இங்கே அந்தப் பாடலைப் பற்றி பேசப் போவதில்லை. எனக்கு இருந்த – ரொம்ப நாளாக – இல்லை இல்லை ரொம்ப வருடங்களாக இருந்த ஒரு ஆசை பற்றி தான் இன்றைக்குப் பார்க்கப் போகிறோம். அதற்கு முன்னர் கண்ணதாசன் ஆசை பற்றி சொன்ன ஒரு விஷயத்துடன் இன்றைய பதிவை ஆரம்பிக்கலாமா!

”எதையாவது அடைய ரொம்ப ஆசைப்படும்போது, அதை இப்போது வைத்திருப்பவர் சந்தோஷமாகத்தான் இருக்கிறாரா என நிச்சயப் படுத்திக்கொள்ளுங்கள் ” – கண்ணதாசன்
 
புத்தகங்கள் வாசிப்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். அதுவும் தலைநகர் தில்லி வந்த பிறகு எனக்கு வாய்த்த அறை நண்பர் நிறைய படிப்பவர் – ஒவ்வொரு இரவும் ஏதாவது புத்தகத்தினை எடுத்து வாசிக்க ஆரம்பித்தால் முடித்த பின்னர் தான் உறங்குவார். எனக்கும் அவரிடமிருந்து வாசிக்கும் பழக்கம் தொற்றிக் கொண்டது. வாடகை நூலகத்திலிருந்து இருவரும் புத்தகங்கள் எடுத்து ஒவ்வொரு நாளும் ஒரு புத்தகம் எனப் படிக்க மாதத்திற்கு 30 புத்தகங்கள் – சாதாரணமாக வாடகைக்கு வாங்குபவர்கள் மாதத்திற்கு 5 அல்லது 6 புத்தகங்கள் எடுத்துப் படிக்க நாங்கள் 30 புத்தகங்கள் படித்தோம் – நூலகம் வைத்திருந்தவருக்கு கட்டுப்படியாகாமல் போக எங்களிடம் அதிக காசு கேட்க ஆரம்பித்தார்! அப்படி படிக்க ஆரம்பித்தது.

ஊருக்கு வரும்போதெல்லாம் அவர் தமிழ் மொழியில் பல புத்தகங்களை வாங்கி வர, நானும் வாங்கி வருவது வழக்கமானது! நிறைய புத்தகங்கள் சேர்ந்து கொண்டே இருந்தது. அறை நண்பர் வங்கிப் பணியில் இருந்தவர் என்பதால் நான்கு ஆண்டுகளில் தமிழகத்திற்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்றார் – அவருடைய புத்தகங்களை எடுத்துச் செல்ல முடியாது என்பதால் என்னிடமே அனைத்தையும் விட்டுச் சென்றார் – என் புத்தகங்கள், அவர் புத்தகங்கள் என புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அவற்றை பராமரிப்பது ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. சில புத்தகங்களை ஊரில் கொண்டு போய் வைத்தேன். சிலவற்றை இங்கே நண்பர்களுக்கு பரிசாகக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டேன்.  சில வருடங்களுக்குப் பிறகு பராமரிப்பது கஷ்டம் என்பதால் புத்தகங்கள் வாங்குவதை வெகுவாகக் குறைத்துக் கொண்டேன்.

புதிய புத்தகங்கள் பற்றிய அறிவிப்பு வரும்போதெல்லாம், புத்தகங்களின் அறிமுகம் வலைப்பூக்களில் பார்க்கும்போதெல்லாம் புத்தகம் வாங்கலாம் எனத் தோன்றும் – பராமரிப்பு கஷ்டங்கள் மனதில் தோன்ற, “சரி ஊருக்குப் போய் செட்டில் ஆன பிறகு வாங்கிக் கொள்ளலாம்” என மனதை மாற்றிக் கொள்வேன். ஆனாலும் சில புத்தகங்களை வாங்குவதை நிறுத்த முடியவில்லை – எனக்காகவோ, இல்லத்தரசிக்காகவோ இப்படி புத்தகங்கள் வாங்கி விடுவது வழக்கமாக இருக்கிறது. சரி புத்தகமாக வாங்காமல் மின்நூலாக தரவிறக்கம் செய்து கணினியில் படிக்கலாம் என சில வருடங்கள் கடந்தது. அந்த நாட்களில் தான் அமேசான் கிண்டில் அறிமுகம் செய்யத் துவங்கியது. ஆஹா இது நல்ல வசதியாயிற்றே, வாங்கிக் கொள்ளலாம் என விலையைப் பார்த்தால் மயக்கம் வந்தது.   

ஒவ்வொரு முறை புதிய கிண்டில் அறிமுகம் செய்யும்போதும் வாங்கலாம் என அமேசான் தளத்திற்குச் சென்று அங்கே பார்ப்பதும், விலையைப் பார்த்து விட்டு, “சீச்சி இந்தப் பழம் புளிக்கும்” என்று வாங்காமல் திரும்புவதும் தொடர்ந்து கொண்டே இருந்தது. கிண்டில் வாங்கிப் பயன்படுத்தும் பலரையும் பார்க்கும் போது மனதில் கொஞ்சம் பொறாமை உணர்வு கூட வந்ததுண்டு. நண்பர் ஒருவர் இந்த கிண்டில் வாங்கிய போது [அவர் ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமே வாசிப்பவர் – இங்கேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால் தமிழ் படிப்பது அவருக்குக் கஷ்டம் – ஒரு பக்கம் படிக்கவே அரை மணி நேரம் ஆகும் – எழுத்துக் கூட்டி தான் படிப்பார்] அவரிடம் வாங்கி கொஞ்சம் ஆசை தீர ஒன்றிரண்டு பக்கங்கள் ஆங்கில நாவல்கள் படித்ததுண்டு.

பல முறை அமேசானில் தீபாவளி, சுதந்திர தினம் என தள்ளுபடி விற்பனை செய்யும்போதும் இந்த முறை வாங்கியே தீருவது என தளத்தில் நுழைவேன் – பின்னர் வாங்காமல் திரும்பி விடுவேன்! கணினியில் படிக்கலாம், ஆண்ட்ராய்டு அலைபேசியில் தரவிறக்கம் செய்து படிக்கலாம் என்றெல்லாம் என்னை நானே சமாதானம் செய்து கொண்டு வாங்காமல் விட்டு விடுவேன்! சமீபத்தில் அப்படி ஒரு தள்ளுபடி விற்பனை வர, ஆசையை அடக்க முடியவில்லை – கிட்டத்தட்ட 1700 ரூபாய் தள்ளுபடி கிடைத்தது – அதற்கு மேல் வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தினால் மேலும் 10% தள்ளுபடி கிடைக்க, இந்த முறை விடக்கூடாது என கிண்டில் வாங்கி விட்டேன்! நண்பர் வீட்டு முகவரிக்கு வந்து சேர, அன்றைக்கே அதை எடுத்துக் கொண்டு வந்து மின்னஞ்சல் முகவரி உள்ளீடு செய்து கணக்கைத் துவங்கி விட்டேன்!


படம்: இணையத்திலிருந்து...

முதன் முதலில் தரவிறக்கம் செய்தது என்ன நூல் தெரியுமா? கல்கியின் பொன்னியின் செல்வன் – முதலாம் பாகம்! ஜெயகாந்தன் சிறுகதைகள் – பகுதி 1, என கொஞ்சம் கொஞ்சமாக மின்புத்தகங்களை தரவிறக்கம் செய்து படிக்க ஆரம்பித்து விட்டேன். தினம் தினம் சில பக்கங்களாவது இப்படி படிப்பதை மீண்டும் வழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு Kindle Unlimited பக்கமெல்லாம் போகவில்லை! விலையிலா புத்தகங்களே ஆயிரக் கணக்கில் இங்கே கொட்டிக் கிடக்கிறது. அவற்றில் வாசிக்க வேண்டிய புத்தகங்களும் நிறையவே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்க ஆரம்பித்து இருக்கிறேன். கிண்டில் வழி படிக்க சில நூல்களை எனக்கு பின்னூட்டம் வழிச் சொன்னால் மகிழ்ச்சி அடைவேன்!

பதிவின் ஆரம்பத்தில் கண்ணதாசன் சொன்ன வாக்கியத்தினை நான் நினைவில் கொள்ளவில்லை! கிண்டில் வைத்திருப்பவர்கள் சந்தோஷமாகத் தான் இருக்க வேண்டும் என நானே முடிவு செய்து விட்டேன் – காரணம் சமீபத்தில் கிண்டில் வாங்கிய நான் சந்தோஷமாகத் தான் இருக்கிறேன்! ஹாஹா…

நண்பர்களே, இன்றைய பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

38 கருத்துகள்:

  1. கிண்டில் அருமையானது
    பயன்படுத்தி வருகின்றேன்
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா நீங்களும் இதைப் பயன்படுத்துகிறீர்களா? நல்ல நூல்கள் சிலவற்றை சொல்லுங்களேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. //எதையாவது அடைய ரொம்ப ஆசைப்படும்போது, அதை இப்போது வைத்திருப்பவர் சந்தோஷமாகத்தான் இருக்கிறாரா என நிச்சயப் படுத்திக் கொள்ளுங்கள் – கண்ணதாசன்//

    ஒரு வீட்டை வாங்க ஆசைப்படுகிறோம் பணத்தைக் கொடுத்து வாங்குகிறோம்.

    இதில் நான் முரண்படுகிறேன் ஜி

    விற்பவர் பணம் வாங்கி கொண்டாலும் குடும்பம் நலிந்து போன காரணத்துக்காககூட விற்கலாம் அவர் மனம் முழுமையான சந்தோஷத்துடன் வீட்டை கொடுப்பாரா ?

    இது தெரிந்தும் நாம் வீட்டை வாங்கத்தானே செய்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசைகள் - வீடு வாங்கும் ஆசை - வாங்கித் தானே ஆக வேண்டியிருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. எனக்கும் கிண்டில் வாங்கவேண்டும் என்ற ஆவல். உங்களுடய மகிழ்சியை பார்த்தபிறகு ஆவல் அதிகரித்திருக்கின்றது வெங்கட் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிண்டில் நல்லது. வாங்கலாம். ஆங்கிலத்தில் நிறைய புத்தகங்கள் கிடைக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  4. /”எதையாவது அடைய ரொம்ப ஆசைப்படும்போது, அதை இப்போது வைத்திருப்பவர் சந்தோஷமாகத்தான் இருக்கிறாரா என நிச்சயப் படுத்திக்கொள்ளுங்கள் ”// - இன்னொரு தளத்தில் என்னன்னா.. நடிகைகளைப் பற்றிப் பேச்சு... இங்க வந்தால் கண்ணதாசன் aptஆக ஒரு பொன்மொழி சொல்றார்... ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடிகைகளும் கண்ணதாசன் பொன்மொழியும் :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. //சமீபத்தில் கிண்டில் வாங்கிய நானே சந்தோஷமாக இருக்கிறேன்// - ஆறு மாதம் கழித்து உங்கள் அனுபவத்தைக் கேட்ட பிறகு நான் வாங்கலாம் என்று நினைக்கிறேன். என்ன இருந்தாலும், 'மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள்' காலம் கழிந்த பிறகுதானே உங்கள் உண்மை எண்ணம் தெரியும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் - மோகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது! :))) ஆறு மாதம் கழித்து எப்படி இருக்கும் - பொறுத்திருந்து பார்க்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. என் மருமகள் கிண்டில் வைத்து இருக்கிறாள் நிறைய ஆங்கில நாவல்கள் படிப்பாள். படிக்க வசதி.

    //கிண்டில் வைத்திருப்பவர்கள் சந்தோஷமாகத் தான் இருக்க வேண்டும் என நானே முடிவு செய்து விட்டேன் – காரணம் சமீபத்தில் கிண்டில் வாங்கிய நான் சந்தோஷமாகத் தான் இருக்கிறேன்! ஹாஹா…//

    அதுதான் வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்கில புத்தகங்கள் நிறைய கிடைக்கிறது. தமிழ் மொழியில் நூல்கள் குறைவு என்றாலும் நல்ல பல புத்தகங்கள் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. தொடர்ந்து படிக்க வசதி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  7. வணக்கம் வெங்கட்.

    கண்ணதாசனின் வார்த்தைகள் அர்த்தமுள்ளவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம். கண்ணதாசன் வார்த்தைகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. //வாசிக்க ஆரம்பித்தால் முடித்த பின்னர் தான் உறங்குவார்.//

    கொடுத்து வைத்தவர். எனக்கு ஆரம்பிக்கும்போதே தூக்கம் வந்து விடுகிறது இப்போதெல்லாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆரம்பிக்கும்போதே தூக்கம் வந்து விடுகிறது இப்போதெல்லாம்.// - இதுக்கும் கொடுத்து வைத்திருக்கணும். பலபேருக்கு தூக்கமே சரியாக வருவதில்லை.

      நீக்கு
    2. கொடுத்து வைத்தவர் - தூக்கம் வரவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. அதானே - தூங்குவதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் - ஸ்ரீராம் கொடுத்து வைத்தவர்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  9. தள்ளுபடி சரி, விலை என்ன? சமீபத்தில்தான் ஜோதிஜி தனது பதிவில் கிண்டில் பற்றிச் சொல்லியிருந்தார். அவர் உங்களுக்கு இன்னும் சில யோசனைகள் சொல்லக்கூடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதம் விதமான மாடல்களில் கிடைக்கிறது. எட்டாயிரம் முதல் இருபதாயியிரம் வரை கூட உண்டு. குறைந்த பட்சம் 6000/- ரூபாயில் கூட இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. இப்பொழுதுதான் கிண்டிலில் படிக்க ஆரம்பித்துள்ளேன். அலை ஓசை முடித்து தற்போது சிவகாமியின் சபதம் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா அலை ஓசை முடித்து சிவகாமியின் சபதம்... நான் பொன்னியின் செல்வன் படித்துக் கொண்டிருக்கிறேன். வேறு சில படித்து முடித்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  11. கிண்டில் கண்ணுக்கு இதமாக இருக்கிறதா.
    என் பழைய ஐபாடில் கிண்டில் இருந்தது.
    நிறைய ஆங்கிலப் புத்தகங்கள்
    படித்துக் கொண்டிருந்தேன். இப்ப இருக்கும் ஐபாடில் கிண்டில் அந்த வசதி
    இல்லை.
    உங்கள் அனுபவம் பார்த்துவிட்டு நான் வாங்கிக் கொள்கிறேன்.
    உங்கள் அனுபவம் சிறக்கட்டும். நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணுக்கு இதமாக - ஆமாம் மா. இப்போது Backlight-உடன் வருபவை நன்றாக இருக்கின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  12. எனக்கு 2010இல் பையர் அமெரிக்காவில் இருந்து ஒரு பேசிக் கிண்டில் வாங்கி கொண்டு வந்தார். சிறிது நாள் உபயோகத்தில் அது கேடாகிவிடவே, திரும்பவும் அமெரிக்கா கொண்டு போய் வேறு ஒரு கிண்டில் விலையில்லாமல் வாங்கினார் (குவாரெண்டீ பீரியட். ). அதற்கு அப்புறம் கிடைத்தது சுமார் 8 வருடங்கள் நிலைத்தது. கிண்டிலில் உள்ள ஒரு குறை என்னவென்றால் பேட்டரி மாற்றமுடியாது. பாட்டரி வீரியம் தீர்ந்தவுடன் தூக்கிப்போட்டு விட வேண்டியதுதான்.

    தற்போது பையர் ஒரு அமேசான் fire tablet வாங்கி கொடுத்துள்ளார். கிண்டில் app உண்டு. கிண்டில் போலவும் உபயோகிக்கலாம். மேலும் டேப்லெட் போன்றும் உபயோகிக்கலாம். இதில் அலக்சா (Alexa) வாய்ச்சொல் கட்டளை நிறைவேற்றும் செயலியும் உண்டு. ஆனால் ஒரே குறை. நம்ம ஊர் இன்டர்நெட் ஸ்பீடுக்கு ஒத்து வரவில்லை. மிக ஸ்லோ.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயகுமார் கிண்டில் என்றால் கவனம் சிதறாது. படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவோம். டேப் என்றால் நீங்க சொன்ன வசதிகள் எல்லாம் சரி தான். மனம் அலைபாயும். யூ டியுப் பக்கம் சென்று விடுவோம். பையர் உங்களுக்கு பரிசு கொடுக்குற அளவுக்கு இருக்கிறார் என்றால் நீங்க கொடுத்து வைத்தவர் தான்.

      நீக்கு
    2. பேட்டரி - மாற்ற முடியாதது என்பது ஒரு குறை தான். ஆனாலும் பல வருடங்கள் வருகிறது என்பதால் பரவாயில்லை. இப்போது வரும் பல ஆண்ட்ராடு அலைபேசிகள் ஒரு வருடத்திற்கு மேல் ஒழுங்காக இருப்பதில்லை!

      அமேசான் ஃபைர், அலெக்சா போன்ற பலதும் உங்களைப் பற்றிய தகவல்களை, உங்கள் விருப்பங்களை, இன்னும் பலவற்றை கூகிள் சேமித்துக் கொள்ள ஒரு வழி. ஆர்ட்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் என இப்போது பரவலாகப் பேசப்படும் ஒரு விஷயம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
    3. உண்மை தான் டேப் எனும்போது அதில் பலவும் இருப்பதால் படிப்பதில் கவனம் செல்லாது - மாறி/மாற்றிக் கொண்டே இருப்போம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. விரைவில் வாங்கும் நிலை வரட்டும்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  14. நாகராஜ் மாதம் 166 ரூபாய் தான். பெரிய தொகை அல்ல. புதிய புத்தகங்கள் வாசிக்க உதவியாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொகை பெரிதல்ல தான். புதிய புத்தகங்கள் வாசிக்க உதவியாக இருக்கும் என்பது நல்ல தகவல். ஒரு மாதம் கட்டிப் பார்க்க வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.

      நீக்கு
  15. கிண்டில் இன்னும் வாங்கவில்லை. எல்லாம் மகளின் திருமணம் முடித்துதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலம் கூடி வரட்டும். மகளின் திருமணம் சிறப்புற நடக்க எனது வாழ்த்துகளும்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  16. வாழ்த்துகள் வெங்கட்ஜி! எஞ்சாய் ரீடிங்க்!

    எனக்கும் புத்தகங்கள் வாசிக்க மிகவும் பிடிக்கும் ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது. இப்போது கணினியில் தரவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு வாசிக்கிறேன்.

    மகனிடம் கிண்டில் அவன் அத்தை 4 வருடங்களுக்கு முன் பரிசாகக் கொடுத்தது இருக்கிறது. அவன் அதில் தன் வெட்னரி புத்தகங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் எல்லாம் வைத்துக் கொண்டு பயணங்களின் போது வாசிக்க உதவியாக இருக்கிறது என்றும் சொல்வதுண்டு.

    எனக்கும் அவன் செட்டில் ஆனதும் வாங்கித் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறான். அப்போது அததன் டெக்னாலஜி எப்படி வளர்ந்திருக்குமோ!?

    மீண்டும் வாழ்த்துகள் ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பு ஆர்வம் பலருக்கும் அமைந்து விடுவதில்லை. கணினியில் படிக்க முடிவதில் மகிழ்ச்சி.

      கிண்டில் பயன்பாடு மகனுக்கு உதவியாக இருப்பதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  17. புத்தக வாசிப்பில் இருக்கும் சுவை ஏனோ மின்னூல்கள் மூலமாகக் கிடைப்பதில்லை. பல்வேறு மின்னூல்களைக் கைப்பேசி, மடிக்கணிணியில் சேமித்து வைத்திருந்தாலும், அவற்றை வாசிக்க மனம் முன்வருவதில்லை. காகித வாசனையை முகர்ந்து வாசித்துப் பழகிய எனக்கு டிஜிட்டல் வடிவில் அவ்வளவு விருப்பமில்லை. மின்னூல் வாசிப்பு கண்களுக்கு நல்லதல்ல, கண்பார்வையில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஆனால் புத்தகங்களை கையாள்வதை விட மின்னூலே சௌகரியமானதாகத் தெரிகிறது, குறிப்பாக அலுவலகப் பயணத்தின் போது எளிதாகக் கையாள முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் அருள்மொழிவர்மன். காகிதங்களில் இருக்கும் புத்தகங்களைப் படிப்பதில் இருக்கும் சுகம் இந்த மின்னூல்களில் இருப்பதில்லை. ஆனாலும் பயணத்தில் படிக்க, புத்தகங்களைப் பராமரிக்க இயலா இந்த நாட்களில், இந்த வகை மின்னூல்கள் ஏதுவாக இருக்கின்றன. இரண்டும் இரண்டு சௌகர்யங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....