சனி, 13 மார்ச், 2021

காஃபி வித் கிட்டு - 102: மோகன்தால் லச்கோ - ராஜா காது - பட்டசித்ரா - அழகு - தானம் - தோரே நைனா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு காஃபி வித் கிட்டு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட மகளிர் தினம் 2021  பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை ரசித்ததொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


அறிவு உங்களுக்கு அதிகாரத்தை வழங்கலாம்.  குணம் தான் உங்களுக்கு மரியாதையைப் பெற்றுத் தரும்.


*****


இந்த வாரத்தின் உணவு - மோகன்தால் லச்கோ:



படம்: இணையத்திலிருந்து...

உங்களில் சிலருக்கு இந்த மோகன்தால் என்பது தெரிந்திருக்கலாம்! மைசூர்பாக் போன்றே இதுவும் கடலை மாவில் செய்யப்படுவது! அதில் கூடுதலாக ஒரு வகை மோகன்தால் லச்கோ எனும் இனிப்பு.  குஜராத் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் இந்த இனிப்பு மிகவும் பிரபலம்.  சமீபத்தில் இந்த மோகன் தால் லச்கோ சுவைக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது! ஆஹா… என்ன சுவை!  இரண்டு முறை கேட்டு வாங்கி சாப்பிட்டேன் என்றால் பாருங்களேன்!  படம் இணையத்திலிருந்து!  செய்முறை தேவை என்றால் இந்த சுட்டியில் பார்க்கலாம் - மொழி புரிந்தால்! :) (ஆனாலும் குறும்பு!)


ராஜா காது கழுதை காது - வீட்டில் சமையலே கிடையாதா?:



படம்: இணையத்திலிருந்து...


சமீபத்தில் அன்றைய நடைப்பயணம் முடித்து வீடு திரும்புகையில் பால் வாங்க கடைக்குச் சென்றேன்.  அங்கே இரு இளம்பெண்கள் - Obesity பிரச்சனை இருக்கலாம் - உடல் இளைக்க, நடைப்பயணம் முடித்து அந்தக் கடையில் நின்று கொண்டிருந்தார்கள். குர்குரே போன்ற ஏதோ ஒரு தின்பண்டத்தினை ஏழெட்டு பாக்கெட்டுகளை அந்தப் பெண்கள் வாங்க, கடைக்காரர் அவர்களிடம் கேட்ட கேள்வி - ”வீட்டிலே சமையலே கிடையாதா? நடைப்பயணம் முடித்து இப்படி இதைச் சாப்பிட்டால், உடல் எடை எப்படி குறையும்?”  கேட்ட எனக்கு சிரிக்கத் தோன்றினாலும் சிரிக்கவில்லை - கடையில் இருந்த வரை! 


இந்த வாரத்தின் நிழற்படம் - பட்டசித்ரா - ஓவியம்:





இந்த வாரத்தின் நிழற்படமாக ஒரு ஓவியம் - ஒடிசாவின் பட்டசித்ரா ஓவியம் ஒன்று - சமீபத்தில் பார்த்ததை படமாக எடுத்திருந்தேன். அழகான ஓவியங்களை, Tussar Silk துணிகளில் வரைந்து பிறகு தடிமனான காகிதத்தில் ஒட்டி விற்பனை செய்வார்கள்.  இந்த ஓவியம் சுமார் 45 X 9 செமீ துணியில் வரையப்பட்டது!  விலை - அதிகமில்லை - ரூபாய் 750/- மட்டும்!


இந்த வாரத்தின் விளம்பரம் - More to Give - உறுப்பு தானம்



படம்: இணையத்திலிருந்து...


இந்த வாரம் நான் பார்த்து ரசித்த விளம்பரமாக More to Give - Fortis Healthcare - உங்களுக்கும் பிடிக்கலாம்! உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நம் நாட்டில் மிகக் குறைவு. அதற்கான பல முன்னெடுப்புகளை அரசாங்கம் எடுத்தாலும் உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் குறைவே.  உடல் உறுப்பு தானம் விஷயத்தில் நிறைய டகால்டி வேலைகளும் நடப்பதாக அவ்வப்போது செய்திகள் வருகின்றன.  அதை ஒரு புறம் வைத்துவிட்டு, உடல் உறுப்பு தான் பெற்ற ஒரு பெண், தனக்கு இதய தானம் பெற்ற பிறகு கொடுத்தவரின் வீட்டுக்குச் சென்ற போது என்ன நடந்தது என்பதை அழகாக இந்த விளம்பரத்தில் சொல்லி இருக்கிறார்கள்.  மனதைத் தொடும் விதமாக விளம்பரத்தினை எடுத்திருக்கிறார்கள். பாருங்களேன்!



இந்த வாரத்தின் பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு - என் அழகுக்குக் காரணம்


யூனிலீவர் தயாரிப்பில் ஒன்றான லக்ஸ் சோப் தெரியாதவர்கள் யார்? பயன்படுத்தாதவர் யார்? இந்த சோப் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது 1899-ஆம் ஆண்டில் – அதுவும் Sunlight Flakes என்ற பெயரில் என விக்கிபீடியா தகவல் சொல்கிறது. பிறகு 1900-ஆம் ஆண்டு லக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. லக்ஸ் என்ற சொல் லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டது. ஆடம்பரம் என்ற அர்த்தம் தொனிக்கும் வார்த்தை தான் அது!


முதன் முதலில் இந்த பெயரில் வந்த சோப் துணி துவைக்கும் சோப் தான்! அதையே சில பெண்கள் தங்களது சரும சோப்பாக பயன்படுத்தியதால், மேலும் பல முன்னேற்றங்கள் கண்டு லக்ஸ் டாய்லட் சோப் தயாரிக்கத் துவங்கினார்களாம்! பெரும்பாலும் முன்னணி சினிமா நடிகைகளை மட்டுமே தங்களது விளம்பரங்களில் நடிக்க வைப்பது அவர்களது வழக்கமாக இருந்திருக்கிறது!


”என் அழகுபடுத்தும் முறை வெகு சுலபம்” என்கிறார் சௌந்தர்யவதி ருக்மணி தேவி. “நான் தவறாமல் லக்ஸ் டாய்லட்  சோப்பினால் கழுவுகிறேன் அவ்வளவுதான். அதன் சுறுசுறுப்பான நுரை எனது மேனியைப் பட்டைப்போல் வழவழப்பாகவும் மிருதுவாகவும் செய்கின்றது. உங்களுடைய மேனியை மலர்ச்சியாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்ள நீங்கள் லக்ஸ் டாய்லட் சோப் உபயோகியுங்கள்” என்கிறார் ருக்மணி தேவி!


முழுப்பதிவையும் படிக்க சுட்டி கீழே!


என் அழகுக்குக் காரணம்


இந்த வாரத்தின் ரசித்த பாடல் - தோரே நைனா (Tore Naina):


தில்லி நண்பர் விஜயராகவன் அவர்களின் மகனும் (அனிருத் ஐயர்)  நண்பர்களும் இணைந்து உருவாக்கிய ஒரு பாடல் - பாடலுக்கு வரிகள் பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் அவர்கள்.  மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது பாடலும் இசையும்.  ஹிந்தி பாடலாக இருந்தாலும் பாடல் புரியவில்லை என்றாலும் இசைக்காக நீங்களும் கேட்டு/பார்த்து ரசிக்கலாம்!  பாருங்களேன்…




யூட்யூபில் இந்த இணைப்பின் வழி பார்க்கலாம்! 


*****


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


16 கருத்துகள்:

  1. குர்குரே - நிறைய பேர்கள் இபப்டிதான் இருக்கின்றனர்!

    விளம்பரம் நெகிழ்த்தியது.

    பாடல் கேட்டேன்.

    சுவையான கதம்பம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. மோகன்தால் முன்பு சாப்பிட்டிருக்கிறேன். நல்லா இருக்கும்.

    பலர் நடைப் பயிற்சியில் 200 கலோரி குறைத்துவிட்டு, 500 கலோரிக்கு டிபன் காபி சாப்பிடுவது சகஜம்தான்.

    பட்டசித்ரா மிக அருமை. வாய்ப்பிருந்தால் வாங்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோகன் தால் - சுவைத்திருப்பது அறிந்து மகிழ்ச்சி. நன்றாகவே இருக்கும்.

      நடைப்பயிற்சி செய்து மூக்க முட்ட ஒரு சாப்பாடு! :) பிறகென்ன பயன்!

      பட்டசித்ரா - விரைவில் வாங்கும் வாய்ப்பு உங்களுக்கு அமையட்டும் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. மோகன்தாஸ் என்று படித்து விட்டேன் ஹா.. ஹா..

    நடைப்பயிற்சி செய்யும் பெண்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.

    லக்ஸ் - லக்ஷரி- ஆடம்பரம் எல்லாம் சரியாக வருகிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்திருந்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. இனிப்பு, ஓவியம் எல்லாம் அருமை.
    உறுப்புதானம் காணொளி நெகிழ வைத்து விட்டது.
    நானும், என் கணவரும் கண்தானம் செய்ய பதிவு செய்து வைத்து இருந்தோம்.
    திடீர் என்று இறைவன் அழைத்து கொண்டதில் நினைவுக்கு வராமல் போய் விட்டது . நினைவுக்கு வந்த போது சொல்லமுடியாத வருத்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிப்பு, ஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      உறுப்பு தானம் விளம்பரம் - மனதைத் தொடும் விதமாகவே எடுத்திருக்கிறார்கள். நானும் கண் தானம் செய்த பதிவு செய்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  5. குர்குரே தடை செய்யப்பட்டதாக ஞாபகம்...

    பாடல் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குர்குரே - கிடைக்கிறது தனபாலன். தடை செய்யப்பட்டாலும் விலக்கு வாங்கி இருப்பார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிபின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. ”வீட்டிலே சமையலே கிடையாதா? நடைப்பயணம் முடித்து இப்படி இதைச் சாப்பிட்டால், உடல் எடை எப்படி குறையும்?”.....அதிகம் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகளை ரசித்தமைக்கு நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அன்பு வெங்கட்,
    மிக அர்த்தமுள்ள பதிவு. இதய தானத்துக்கேற்ற உணர்ச்சி பூர்வமான பதிவு.

    என் கண்களும் பயன் பட்டால் நன்றாக இருக்கும்.

    லக்ஸ் ,ரெக்சோனா எல்லாம் அப்பா வாங்க மறுத்து விடுவார்:)
    திருமணம் ஆன பிறகு சிந்தால் தான்!!!
    அழகு சௌந்தர்யம். அடடா என்ன வார்த்தைகள்
    உபயோகத்திருக்கிறார்கள்.
    ருக்மிணி தேவியே நடித்திருக்கிறாரா!!!!
    அந்தப் பதிவைப் பார்க்கிறேன்.நன்றி மா.

    பதிலளிநீக்கு
  9. குர்குரே ரொம்ப டெம்டிங்க்.
    மெரினாவில் நடப்பவர்களை
    அடுத்தாற்போல் சரவண பவனில் பார்க்கலாம்!!!!
    சரவணபவனின்ல் சாப்பிடவே நடக்கிறார்களோ
    என்னவோ:)

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....