புதன், 31 மார்ச், 2021

சாப்பிட வாங்க - மூங்க்(g) (dh)தால் பராட்டா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


இன்று இருக்கும் நிலைமையைப் பார்த்து, நாளையைத் தீர்மானித்து விடாதே… ஏனென்றால் உன் நிலைமையை மாற்ற, உன்னை உருவாக்கிய கடவுளுக்கு ஒரு வினாடி போதுமானது.


******






இந்த வாரம் மீண்டும் ஒரு சாப்பிட வாங்க பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  பராட்டா - இதில் தான் எத்தனை எத்தனை வகைகள்! பொதுவாக ஆலு பராட்டா, பனீர் பராட்டா போன்றவை தான் பலருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், வடக்கில் இருக்கும் பராட்டா வகைகள் நமது ஊரில் பலருக்கும் தெரிவதில்லை.  இன்று வரை வட இந்திய பராட்டாவிற்கும் நம் ஊர் புரோட்டாவிற்குமே வித்தியாசம் தெரியாமல் தான் பலரும் இருக்கிறார்கள்.  முடிந்தால், வட இந்திய பராட்டா வகைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு மின்புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்குண்டு.  இந்த வாரம், வட இந்திய பராட்டா வரிசையில் நாம் பார்க்கப் போவது மூங்க்(g) (dh)தால் பராட்டா! மூங்க்(g) (dh)தால் என்றால் நம் ஊரின் பாசிப்பருப்பு தான்.  இந்தப் பாசி பருப்பு மற்றும் கோதுமை மாவு கொண்டு தான் இந்தப் பராட்டாவினை தயார் செய்வது எப்படி என்று இன்று பார்க்கப் போகிறோம். என்ன தேவை, எப்படிச் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாருங்கள். 


தேவையான பொருட்கள்:


கோதுமை மாவு - 1 ½ கப்

பாசிப் பருப்பு - ½ கப்

சமையல் எண்ணெய் - சிறிதளவு. 

உப்பு - தேவையான அளவு 

சீரகம் - சிறிதளவு

மஞ்சள் பொடி - சிறிதளவு

கொத்தமல்லி பொடி - சிறிதளவு

சீரகப் பொடி - சிறிதளவு

பெருங்காயம் - சிறிதளவு

மிளகாய் பொடி - சிறிதளவு

Gகரம் மசாலா - சிறிதளவு

நெய் - தேவையான அளவு


எப்படிச் செய்யணும் மாமு?


பாசிப்பருப்பினை சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். 


கோதுமை மாவில், சிறிதளவு எண்ணெய், உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு மிருதுவாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.  மாவைப் பிசைந்து மூடி வைத்தல் நலம்! 





ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும், சீரகம் சேர்த்து அது பொரிந்ததும், பெருங்காயம் சிறிதளவு சேர்த்து, பிறகு ஊற வைத்து இருக்கும் பாசிப்பருப்பினைச் சேர்த்துக் கொள்ளவும். அதன் பிறகு தேவையான அளவு உப்பு, மஞ்சள் பொடி, சீரகப் பொடி, கொத்தமல்லிப் பொடி, சீரகப் பொடி, மிளகாய்ப் பொடி, Gகரம் மசாலா ஆகியவற்றையும் சேர்த்து, நன்கு கலந்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். வாணலியில் ஒரு மூடி போட்டு ஆறு - ஏழு நிமிடங்கள் வேக விடவும்.  அவ்வபோது மூடியை எடுத்து கலக்கி விடவும்.  சேர்த்த தண்ணீர் முழுவதும் சுண்டிய பிறகு அடுப்பை நிறுத்தி விடவும்.  இந்தக் கலவையை, சூடில்லாமல் ஆற விடவும்.  


தேவையென்றால் கரண்டியால் மசித்து விடலாம். இல்லை என்றால், மிக்ஸர் ஜாரில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டிக் கொள்ளலாம் - சூடு தணிந்த பிறகு! 


பிசைந்து வைத்திருக்கும் கோதுமை மாவை எடுத்து தேவையான அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.  சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ளவும்.  










தேய்த்த சப்பாத்திகளில் பருப்புக் கலவையை கொஞ்சம் எடுத்துக் கொண்டு, மூடிக் கொண்டு மீண்டும் சப்பாத்தியாக இடவும்.  இந்த முறை உங்களுக்கு வரவில்லை - உள்ளே வைத்த பருப்புகள் வெளியே எட்டிப் பார்க்கின்றன என்றால், உருண்டைகளை சரிபாதியாகப் பிரித்து இரண்டு சப்பாத்திகளாக இட்டு, ஒரு சப்பாத்தி மேல் பருப்புக் கலவையைப் பரப்பி, சப்பாத்தி ஓரங்களில் தண்ணீர் தொட்டு தடவி, மேலே இன்னொரு சப்பாத்தி கொண்டு மூடி விடுங்கள்.  மீண்டும் அதிக அழுத்தம் கொடுக்காமல் குழவியால் சப்பாத்தியை தேய்த்து விடுங்கள்.  


ஒரு தவாவில்/இரும்பு தோசைக்கல்லில் சிறிதளவு நெய் விட்டு சூடான பிற்கு தேய்த்து வைத்திருக்கும் பராட்டாவினை போடுங்கள்.  மிதமான சூட்டில் அடுப்பை வைத்துக் கொள்வது நலம். தோசை திருப்பியால் திருப்பிப் போட்டு, நெய் தடவி விடுங்கள்.  இரண்டு பக்கமும் திருப்பி, நன்கு வேக வைத்துக் கொள்ளுங்கள்.  


மீதமிருக்கும் உருண்டைகளையும் சப்பாத்திகளாக இட்டு, பருப்புக் கலவை நிரப்பி ஒவ்வொன்றாக பராட்டாக்களை தோசைக்கல்லில் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்!  அவ்வளவு தாங்க! இந்த மூங்க்(g) (dh)தால் பராட்டா!





(B)பூந்தி ராய்தா அல்லது தயிர், ஊறுகாய், கொத்தமல்லி/புதினா சட்னி ஆகியவற்றுடன் இந்த மூங்க்(g) (dh)தால் பராட்டா-வினை ருசிக்கலாம்! 


******


நண்பர்களே, இந்த நாளில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட மூங்க்(g) (dh)தால் பராட்டா குறித்த உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் பகிர்து கொள்ளுங்கள்.  நாளை வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


22 கருத்துகள்:

  1. பாசிப்பருப்பு மசித்தாலும், அரைத்துக் கொண்டாலும் கொரகொரவென்றே இருக்க வேண்டும் போல...  அடை போல...    எனவே அடைபெசரட் பராட்டா!    ஆசையாகத்தான் இருக்கிறது.     ஒருமுறை முயற்சி செய்து பார்த்து விடவேண்டும் என்று வழக்கம் போலவே நினைத்துக் கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். ஒன்றும் பாதியாக அரைத்துக் கொண்டால் போதும்.

      அடை பெசரட்! :) முடிந்தால் செய்து பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. அருமையான செய்முறை. பராட்டாக்களை வகைவாரியாகத் தொகுத்துக் கொடுங்கள். சில வகைகள் எனக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பார்த்து வைச்சுக்கலாமே! மூங்க் தால் பராத்தாவெல்லாம் இப்போது கொஞ்சம் சாப்பிடக் கடினமானதாக ஆகிவிட்டது. முன்னைப் போல் பண்ணுவதில்லை. சில நாட்கள் மதிய வேளைக்கு எப்போதேனும் நினைத்துக் கொண்டு பண்ணுவேன். அன்னிக்கு இரவுக்கு மோர் சாதமாக வைத்துவிடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பராட்டாக்கள் செய்முறை - முடிந்த போது தொடர்கிறேன் கீதாம்மா.

      பராட்டாக்கள் கொஞ்சம் ஹெவி தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வாசகம் அருமை.

    மூங்க்(g) (dh)தால் பராட்டா செய்து பார்க்க வேண்டும்.
    பகிர்வு அருமை.

    //வட இந்திய பராட்டா வகைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு மின்புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற எண்ணம்//

    எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      முடிந்த போது செய்து பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. வாசகம் அருமை. அனைத்தும் "அவன்" செயல்தானே என்ற எண்ணம் வலுப்படுகிறது.

    மூங்க் தால் பரோட்டாவின் விரிவான செய்முறை, அழகான படங்களோடு நன்றாக உள்ளது. ஒன்றிரண்டு சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடுமென நினைக்கிறேன். சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் சொல்வது போல அடை பெசரட் பரோட்டா.... ஒருதடவை இந்த முறையில் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். தாங்களும் வட இந்திய பரோட்டா செய்முறைகளை தொகுத்து வெளியிடுங்கள். நாங்களும் நிறைய பரோட்டா வகைகளை தெரிந்து கொள்ள சௌகரியமாக இருக்கும். உங்கள் அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகம், பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. கொஞ்சம் பராட்டாக்கள் ஹெவியானது தான். இரண்டு சாப்பிட்டால் போதுமானது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. செய்முறை விளக்கம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. அழகாக இருக்கே.... வட இந்திய பராத்தாக்கள் அனைத்தையும் எழுதலாம்.

    படம்தான் முதலில் கன்ஃப்யூசிங் ஆக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பராத்தாக்கள் செய்முறை தொடரும் எண்ணம் உண்டு நெல்லைத் தமிழன். பார்க்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பரோட்டா செய்முறை எளிதாகத்தான் இருக்கிறது. நினைவில் வைத்து செய்ய வேண்டுமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது செய்து பாருங்கள் எழில் சகோ. நினைவில் வைத்துக் கொள்வதும் சுலபம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அன்பு வெங்கட் ,
    நல்ல வாசகத்துக்கு மிக நன்றி.
    பல விஷயங்களைக் கடந்து போவது
    நாளை நமதே என்ற நம்பிக்கையால் தான்.
    மூங்க் தால் பரோட்டா மிக மிக சூப்பர்.

    அழகான படங்கள்.
    ஒரு ரொட்டி மேல் இன்னோரு ரொட்டி வைத்தால்
    நன்றாகச் செய்ய முடியும் என்று தோன்றுகிறது.

    பாசிப்பருப்பு மாவாக வெந்து விட்டால்
    மாவு கசிந்து விடும்.

    புத்தகம் வெளி வரும்போது சொல்லுங்கள். அனைவருக்கும் பயன் படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லிம்மா.

      வாசகம், மற்றும் செய்முறை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. புத்தகம் வெளியிட்டால் தகவல் பகிர்ந்து கொள்வேன் மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. இன்று இருக்கும் நிலைமையைப் பார்த்து, நாளையைத் தீர்மானித்து விடாதே… ஏனென்றால் உன் நிலைமையை மாற்ற, உன்னை உருவாக்கிய கடவுளுக்கு ஒரு வினாடி போதுமானது.
    உண்மை.

    மூங்க்(g) தால் பராட்டா பார்க்கவே சுவைக்கிறது, செய்முறை சுலபமாக சொல்லிவிட்டீர்கள் செய்யும்போது முதல்முறையே சரியாக வருமா என தெரியவில்லை, முயற்சிக்கின்றேன்.

    தகவல் பரிமாற்றத்திற்கு நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், பதிவின் வழி பகிர்ந்த விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோயில்பிள்ளை. முடிந்த போது செய்து பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. மூங்தால் பரோட்டா படங்களோடு மிகச் சிறப்பாக  வந்திருக்கிறது. ஒரு முறை இதை செய்து காட்டிய பங்கஜ் கபூர், பரோட்டாவை சாப்பிட்டு விட்டு, ஒரு கப் லஸ்ஸி குடித்து விட்டு சுகமாக தூங்குங்கள் என்றார்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் குறித்த தங்கள் கருத்து கண்டு மகிழ்ச்சி பானும்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....