சனி, 15 ஆகஸ்ட், 2020

காஃபி வித் கிட்டு – குண்டூசி – சுதந்திரம் – மாற்றம் – ரசித்த பாடல் – உழைப்பு – இலவச மின்னூல்

 


காஃபி வித் கிட்டு - 81 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல! செலவழிப்பது அதே குண்டூசியால் பலூன் உடைப்பது போல! 

யாரோ சொன்னது! ஆனால் பொருத்தமானதாகவே இருக்கிறது இல்லையா? 

இந்த வாரத்தின் வாழ்த்து – சுதந்திர தினம்: 



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த சுதந்திர தின நல்வாழ்த்துகள்! 

தில்லியின் மழை: 

தில்லி நகரின் மழைப் பொழிவு என்பது எப்போதுமே குறைந்த அளவாகத் தான் இருந்திருக்கிறது! தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மழை பொழிந்தாலே வெள்ளக்காடாக தில்லி மாறி விடும் என்பதை ஒவ்வொரு வருடமும் நான் பார்த்திருக்கிறேன் – கடந்த முப்பது வருடங்களில் ஒவ்வொரு மழைக்கும் தில்லியின் சில பகுதிகளில் குறிப்பாக இரயில்வே லைன் மேலே இருக்க, சிறிது பள்ளமாக கீழே சாலை இருக்கும் பகுதிகளில் எப்போதுமே மழை நீர் தேங்கி அங்கே வாகனங்கள் மாட்டிக் கொள்வது வருடா வருடம் நடக்கும் நிகழ்வு – குறிப்பாக கனாட் ப்ளேஸ் பகுதியில் இருக்கும் மிண்டோ ப்ரிட்ஜ் பகுதியில் எப்போதும் மழைநீர் ஆறாக ஓடி வர, அந்த செயற்கை ஆற்றை சுலபமாகக் கடந்து விட முடியும் என்று ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு சில முட்டாள் வாகன ஓட்டிகள் வாகனத்தினைச் செலுத்தி மாட்டிக் கொள்வது தொடர்ந்து நடக்கும் விஷயம். சில உயிரிழப்புகளும் அதனால் ஏற்பட்டிருக்கிறது என்பது வருத்தம் தரும் விஷயம். அந்த இடத்தில் வந்து சேரும் மழை நீரை அப்புறப்படுத்த பலம் வாய்ந்த மோட்டார்கள் உண்டு என்றாலும் எல்லா வருடமும் இந்தப் பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது. அங்கே ஒரு மேம்பாலம் அமைத்தால் இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கலாம் என்று நமக்குத் தோன்றினாலும், இத்தனை வருடங்களாக ஏனோ அரசுக்கு அந்த எண்ணம் வரவில்லை – இல்லை என்றால் அதில் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கலாம்! மழை நீர் அதிகமாக இருக்கும் சமயத்தில் அந்தச் சாலையை மூடி விடுவது உத்தமம்! 

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்: 

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக “ரால்கோ” டையர் விளம்பரம் ஒன்று – மனதைத் தொட்ட விளம்பரம் – வசனங்கள் இல்லாமல் காட்சிகள் மட்டுமே! ஆனால் மிகவும் சிறப்பாக எடுத்திருக்கிறார்கள் இந்த விளம்பரத்தினை! பாருங்களேன்.

 

இந்த வாரத்தின் ரசித்த பாடல்: 

காலை நேரங்களில் இணையத்தினை உசுப்பி, saregama யூட்யூப் சேனலில் எதையாவது ஒரு தொகுப்பினைக் கேட்டுக் கொண்டே வேலை செய்வது வழக்கமாக இருக்கிறது. அப்படி சமீபத்தில் எம்.எஸ்.வி. அவர்களின் ஒரு தொகுப்பினைக் கேட்ட போது இந்த பாடல் கேட்டேன் – முதன் முதலாகக் கேட்கிறேன் என்றே தோன்றுகிறது. அந்தப் பாடல் இந்த வாரத்தின் ரசித்த பாடலாக - கே.ஜே. யேசுதாஸ் பாடல்! என்ன படம், யார் இசை, யார் பாடலாசிரியர் என்ற கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை! ஏனெனில் எனக்குத் தெரியாது! பாடல் கேட்க நன்றாகவே இருக்கிறது. பாருங்களேன்!


பின்னோக்கிப் பார்க்கலாம்: 

எனது வலைப்பூவில் இதே நாளில் 2014-ஆம் வருடம் எழுதிய ஒரு பதிவு – ஃப்ரூட் சாலட் பதிவு ஒன்று அப்பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.

'பொம்பளையா இருக்க... வயசான காலத்துல உனக்கு ஏன் இந்த வீண் வேலை. புள்ளைங்க சம்பாதிச்சுக் கொடுங்கறதை வெச்சுகிட்டு, சாப்பிட்டு நிம்மதியா இருக்க வேண்டியது தானே?' என, பலரும் புத்திமதி கூறினர். இது வெறும் படகு மட்டுமில்ல. நானும், என் வீட்டுக்காரரும் வாழ்ந்த நினைவுச்சின்னம். என் உசுரு போனாலும், அது இந்தப் படகுல தான் போகணும். படகு ஓட்ட ஆரம்பிச்சபோது, துடுப்பு போட்டு ஓட்டிக்கிட்டு இருந்தேன். தற்போது, 80 வயது ஆவதால், இந்தக் கரையிலிருந்து, அந்த கரைக்கு ஒரு நீண்ட கயிற்றை கட்டி, அது மூலமா புடிச்சி இழுத்து, இக்கரைக்கும், அக்கரைக்கும் வர்றதுமா, என்னோட படகுப் பயணம் தொடர்ந்துக்கிட்டு இருக்கு.” 

முழுபதிவும் படிக்க ஏதுவாக சுட்டி கீழே. 


இந்த வாரத்தின் இலவச மின்னூல் தகவல்: 



இந்திய நேரப்படி, இன்று மதியம் 12.30 மணியிலிருந்து, வரும் 20-ஆம் தேதி மதியம் 12.29 வரை எனது ”பாந்தவ்கர் வனம்” மின்னூலினை அமேசான் தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்! மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர், பாந்தவ்கர் பகுதிகளுக்குச் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்கள் இந்த மின்னூலிலுண்டு! விருப்பம் இருப்பவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான சுட்டி கீழே...


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் சந்திக்கும் வரை... 

நட்புடன் 


வெங்கட் நாகராஜ் 
புது தில்லி

24 கருத்துகள்:

  1. மழையின் போது, மேம்பாலம், அது இது என அறிக்கை வேண்டுமானாலும் விடுவார்கள்...

    விளம்பரம் நல்லாயிருக்கு...

    படம் : பேரும் புகழும்
    வருடம் : 1976
    இயற்றியவர் : கண்ணதாசன்
    இசை : எம். எஸ். விஸ்வநாதன்

    மின்னூல் தரவிறக்கம் செய்து கொள்கிறேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிக்கை விடுவதில் எல்லா அரசியல்வாதிகளும், கட்சி பாகுபாடின்றி, எல்லோருமே வல்லவர்கள் தான் தனபாலன்.

      விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      ரசித்த பாடல் இடம் பெற்ற படம் மற்றும் தகவல்களைத் தந்தமைக்கு நன்றி தனபாலன்.

      மின்னூல் - தரவிறக்கம் செய்து கொள்வதற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. இதே வாசகம் போல... நானும் 2014-ல் எழுதி இருந்தது ஞாபகம் வருகிறது.

    குடிகார கணவனை திருத்துவது காற்றில்லாத பலூனை வாயால் ஊதி நிரப்புவது போன்றது.

    நல்ல கணவனை குடிகாரனாக்குவது காற்றுள்ள பலூனை குண்டூசி கொண்டு குத்துவது போன்றது.

    மின்நூல் தறவிரக்கம் செய்து கொள்வேன் ஜி.

    நாம் அரசை குறை சொல்லி பயனில்லை இனிமேலும் நல்லவர்கள் ஆட்சிக்கு வருவார்கள் என்று நினைப்பது தவறு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! வாசகம் நீங்களும் இதே போல எழுதி இருப்பதை அறிந்து மகிழ்ச்சி. நல்ல பொருத்தம்!

      மின்னூல் - தரவிறக்கம் செய்து கொள்வதற்கு நன்றி கில்லர்ஜி.

      அரசு மட்டுமே காரணமல்ல! ஓட்டுப் போடும் மக்களும் தான்! நல்லவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை - வந்தாலும் மாறி விடுவார்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. அன்பின் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள் துரை செல்வராஜூ ஜி.

      நீக்கு
  4. இந்த வார காஃபி வித் கிட்டு நன்று.

    இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      உங்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  5. சுதந்திர தின வாழ்த்துகள். குறும்படம் உடனே பார்த்துவிட்டேன், வசனம் இல்லை என்றதால்! :) அருமை, கண்ணீரே வந்துவிட்டது! மின்னூல் வெளியிடணும்னு சொன்னதோடு சரி, அதற்கான வேலைகள் பாதியிலேயே நிற்கின்றன. தொடர முடியாமல் ஏதேதோ! எப்போ முடியுமோ பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்! :) உங்க புத்தகங்களையும் கின்டில் மூலம் படிக்க முடியலை. சரியாக வரதில்லை. க்ளிக் செய்தால் புத்தகம் வராமால் வேறே ஏதோதோ வருது. இணையமா, கணினியா, எதில் பிரச்னைனு தெரியலை. பதிவின் மற்ற விபரங்களும் நன்றாக இருக்கின்றன. பதிவைப் பத்திச் சொல்லாமல் புலம்பிட்டு இருக்கேன் போல! :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

      குறும்படம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      மின்னூல் - விரைவில் உங்கள் மின்னூல்களும் வெளிவரட்டும்.

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. டெல்லி மழை . பழைய ஞாபகத்தைக் கிளறிவிட்டது. விளம்பரம் நன்றாகவே இருந்தது இந்தத் தமிழ்ப் பாடல் நான் கேட்ட ஞாபகம் இருக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டெல்லி மழை - உங்கள் நினைவுகளை மீட்டெடுக்க உதவியதில் மகிழ்ச்சி.

      விளம்பரம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தமிழ்ப்பாடல் - நான் கேட்டதில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி.

      நீக்கு
  7. அன்பு வெங்கட்,
    பதிவு மிக அருமை. வாசகம் சிந்திக்க வைக்கிறது.
    சாலையில் பாதை தேடும் அந்தப் பெண்ணின் நிலைமை கண்களைக்
    கலங்க வைத்தது.
    இவர்களை ஏற்பதில் என்ன தடை இருக்க முடியும். தவிக்க விடுவது மஹாபாவம்.

    தில்லி மிண்டோ பாலம் , மாமாவின் கடிதங்களில் பார்த்திருக்கிறேன்.
    அவர்கள் கன்னாட்ப்ளேஸில் இருந்து நானக்புராவுக்கு மாறிவிட்டார்கள்.

    ஒன்றும் வழி செய்யாவிட்டாலும் அந்தப் பாதையை தற்காலிகமாக
    மூடுவது சிறப்பு.

    எனக்கும் மின்னூல்களைத் திறப்பது கடினமாக
    இருக்கிறது.
    பப்ளிஷ் பண்ணும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

    யேசுதாஸ்+முத்துராமன் நல்ல காம்பினேஷன் .நன்றி மா.
    இனிய சுதந்திர நன்னாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      மாமாவின் கடிதங்களில் பார்த்த மிண்டோ பாலம்! இன்றைக்கும் அப்படியே தான் இருக்கிறது மா.

      மின்னூல் - பழகிவிட்டால் சுலபம் தான் மா. உங்களுக்குத் தேவை அமேசானில் ஒரு கணக்கும், அலைபேசியில் கிண்டில் App-ம் மட்டுமே!

      உங்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதிவு அருமை. மேம்பாலம் கட்ட யோசிக்காமலா இருந்திருப்பார்கள், பூனைக்கு யார் மணி கட்டுவது, அதில் வரும் மணியை யாரெல்லாம் எப்படியெல்லாம் பங்கு போட்டுகொள்வது என்பதில் உடன்பாடு ஏற்பட்டிருக்காது, மற்றபடி மக்கள் நலனாவது ….மழை நீராவது.

    விளம்பரம் சிறப்புதான் அதையேன் "அந்தப்பெண்ணை" முன்னிறுத்தி வரவேண்டும்?

    இந்த பாடலை கேட்டிருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூனைக்கு யார் மணி கட்டுவது? இதைக் கேட்டே 74 வருடங்கள் ஓடிவிட்டன!

      விளம்பரம் - நன்றி. சாதாரண பெண்ணாக இருந்திருந்தால் இந்தப் பிரச்சனை அவருக்கு வந்திருக்காது!

      பாடல் - நீங்கள் கேட்டிருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோயில்பிள்ளை.

      நீக்கு
  9. வாசகம் நன்றாக இருக்கிறது.

    டில்லி மழை இந்தமுறை கொஞ்சம் அதிகமோ!

    பாடல் விவரங்கள்  கொடுத்து விட்டார்.  சுதந்திர தின வாழ்த்துகள்.  மின்னூலுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      டில்லி மழை - ஒன்றிரண்டு வருடங்களாகவே அதிகம் தான்.

      பாடல் விவரங்கள் - தனபாலன் அல்லது நீங்கள் தருவீர்கள் என எதிர்பார்த்தேன்.

      சுதந்திர தின வாழ்த்துகள் - நன்றி ஸ்ரீராம்.

      மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. அனைத்தும் அருமை. தலைநகர் தில்லியில் இப்ப்டி வெள்ளம் போன்று ஏற்படுவது என்ன சொல்ல?

    பாடல் நிறைய கேட்டிருக்கிறேன்.

    விளம்பரம் என்றாலும் வேதனையாக இருந்தது

    மின்னூலிற்கு வாழ்த்துகள். தரவிறக்கம் செய்து கொண்டேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      விளம்பரம் - வேதனை தான்.

      மின்னூல் - வாழ்த்தியமைக்கும் தரவிறக்கம் செய்து கொண்டதற்கும் நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. விளம்பரப்படம் மனதை வேதனை செய்தது. சுதந்திரம் என்கிறோம்!!?

    ஜி பாடல் எனக்கு மிகவும் பிடித்த கயாணி ராகப் பாடல். தாசேட்டன் பாடியது! ரசிக்கும் பாடல். நிறைய கேட்டிருக்கிறேன்.

    மின்னூலுக்கு வாழ்த்துகள்.

    வாசகம் நல்ல வாசகம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம் - இன்றைக்கும் இப்படியும் சிலர்.

      வாசகம், பாடல் - உஙக்ளுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. பதிவு சிறப்பு. புது மின்னூலுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி ஏகாந்தன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....