அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பதிவை, நல்லதொரு வாசகத்துடன்
ஆரம்பிக்கலாம்.
இனிமேலாவது மாறிவிட வேண்டும், இனிமேலாவது மாற்றிக் கொள்ள
வேண்டும், இனிமேலாவது மாற்றம் வேண்டும் என்பதாக மாறிக் கொண்டேயிருக்கிறது நாட்கள்
மட்டும்.
*****
இன்றைய பதிவாக நாம் பார்க்கப் போவது நண்பர் பத்மநாபன் அவர்களின்
அனுபவம் ஒன்று. வட்டார வழக்கில் அவர் எழுதிய பதிவுகள் அனைத்துமே எனக்கு மிகவும்
பிடித்தவை. கிருஷ்ண ஜெயந்தி சமயத்தில் ஊரில் நடந்த விஷயத்தினை இங்கே எழுதி
இருக்கிறார் – இழையோடும் நகைக்ச்சுவையுடன் வாங்க படிக்கலாம்! ஓவர் டு பத்மநாபன்
அண்ணாச்சி – வெங்கட் நாகராஜ், புது தில்லி.
*****
கிருஷ்ணா கிருஷ்ணா - பத்மநாபன்
இந்த கொரானா வந்தாலும் வந்தது. ஒரு கூத்து உண்டுமா, ஒரு கொண்டாட்டம் உண்டுமா!
கோவிலில கொடை கிடையாதுங்கான், கூட்டம் கூடாதேங்கான். இந்த கோவில் கொண்டாட்டம்
இல்லாம பாதிப்பேரு பைத்தியம் புடிச்ச மாதிரியில்லா அலையான்.
ஊருலே எல்லாம் அம்மன்
கோவில் கொடைவிழா, சாஸ்தா கோவிலில பங்குனி உத்திரம், கந்த சஷ்டியை ஒட்டி
காவடிகட்டு, ஒடுக்கத்து வெள்ளிக்கிழமையானா வெள்ளிமலைக்கு 'வேல் முருகா!
வேலாயுதா'ன்னு ஒருநடை நடந்து போய் அங்க பனைவோலை பட்டையில ஊத்துக கஞ்சியோடு,
பரங்கிக்காயும் கொண்டைக்கடலையும் போட்ட கூட்டுக்கறி, சிவன்கோவிலில பத்து நாளு ராம
நவமி விழா அப்படி இப்படின்னு வருஷத்தை சந்தோஷமா கடத்திப் போடுவோம்.
கிருஷ்ண
ஜெயந்தியானா கிருஷ்ணர் பொறந்துருவாரு. வாய் நிறைய ராமா! ராமா! ன்னு
சொல்லிக்கிட்டே பஜனை மடத்தில பூஜை செய்கிற எங்க ஹிந்தி வாத்தியார் அம்மாச்சன்
கிருஷ்ண ஜெயந்திக்கு ஹரே கிருஷ்ணா! ஹரே கிருஷ்ணா! ன்னு அன்னைக்கு பூரா பூஜை
செய்வாரு. தினசரி அவரு பஜனைமடத்தில காலையில ராமருக்கும் கிருஷ்ணனுக்கும் பூசை
செய்ய மறக்க மாட்டாரு.
இவரு காலையில வருகத பாத்தாப் போதும் பஜனைமடம் பக்கத்தில
உள்ள வீட்டுல உள்ள ஒரு பொடியன், "யம்மோவ்! வசனமடம் சாமிக்கு கிணிங் கிணிங் காட்டற
தாத்தா வந்துட்டாரு"ன்னு இவன் கிணிங் கிணிங் காட்டிக்கிட்டு ஓடுவான். அவன் அம்மா
அவனுக்கு ஒரு ஜட்டியை மாட்டி விட்டதும் பஜனை மடத்தக்கு சுண்டல் வாங்க ஓடுவான்.
பூசை முடிஞ்சதும் கொஞ்சம் நெல் பொரியும் சுண்டலும் கிடைக்குமுல்லா.
சனிக்கிழமைதோறும் பஜனையோடு சுண்டலும் பஞ்சாமிர்தமும் உண்டு. அதனால கொஞ்சம்
கூட்டம் வரும்.
கிருஷ்ண ஜெயந்திக்கு பத்து பதினைஞ்சு நாளுக்கு முன்னாலயே நாலஞ்சு
இளவட்டங்கள் ஒண்ணு சேர்ந்து ஊர்ல பணம் பிரிச்சு கொண்டாட தயாராயிருவாங்க. பிரதானம்
உறியடிதான். உறியடிக்க கிருஷ்ணர் வேணுமே! என்னை மாதிரி சொங்கி மங்கியெல்லாம்
அப்படியே சைடு வாங்கிருவோம். பின்னே, அதுக்கெல்லாம் நல்ல தெம்பும் திராணியும்
வேணும். அதுவும் நம்ம ராசண்ணன் மாதிரி உறியை ஊஞ்சலாட வைக்கிறவரு இருந்தால்
கிருஷ்ணன் உறியடிச்சு வெண்ணெய் எடுக்கதுக்கு முன்னாடி மூக்கால தண்ணி
குடிச்சிருவாரு. அதனால கொஞ்சம் இளவட்டமா நல்ல முண்டும் முடிச்சுமா உள்ளவங்கதான்
முன் வருவாங்க.
"இந்த வருஷம் யாருடே உறியடிக்க போறா!" சுப்பையண்ணன் கேட்டான்.
"யண்ணே! நம்ம செவ்வாணு(சிவதாணு) நாந்தான் அடிப்பேண்ணு நிலைக்கு நிக்காண்ணே!"
"அவனா! அவன் கல்யாணம் ஆன பயல்லாடே! நம்ம ராசண்ணன் வேற ஊருல உண்டு! அவருதான் உறி
உடுவாரு! லேசுல உட்டுக் குடுக்க மாட்டாரு. இவன் கடைசி வரை நிப்பானா. இடையில
ஓடிரக் கூடாது பாத்துக்கோ. புதுப் பொண்டாட்டி முன்னால வித்த காட்ட நினைக்கான் போல
இருக்கு. சரி, அவன் ஆசையக் கெடுப்பானேன். அவன அம்மாச்சனப் போய் பாக்கச் சொல்லு."
ஆளு தேர்வானதும் அம்மாச்சன் பாடம் நடத்துவாரு. "எலே! கிருஷ்ணர் வேஷம் போடுகது
சும்மா இல்ல பாத்துக்கோ! மூணு நாளு நல்ல விரதம் இருக்கணும். இந்த பீடி சிகரெட்டு
எல்லாம் கண்ணுலயும் பாக்கப்படாது. காலையில இங்க வந்து சாமி கும்பிட்டப்பறம்தான்
வாயில தண்ணிபடணும் பாத்துக்கோ! இந்த மூஞ்சில இருக்க முடியெல்லாம் மழிச்சு
உட்டுரு. என்னது, மீசை வச்சுக்கிடலாமான்னா. கேக்கதப் பாரு. எங்கயாவது கிருஷ்ணரு
மீச வச்சிருக்கத பாத்திருக்கயாடே. கேக்கான் பாரு. ஓழுங்கா மீசை கீசையெல்லாம்
எடுத்துப் போடு."
"சரி, பாட்டா! நான் போன கார்த்திகையில ஐயப்பனுக்கு மாலை போட்டு
ஒரு மண்டலம் விரதம் இருந்தமில்லா. கிருஷ்ணருக்கு மூணு நாளுதானே. ஐயப்பனுக்கு மீசை
தாடி வளத்தேன். கிருஷ்ணனுக்கு மீசை தாடியை செரைக்கச் சொல்லுகீரு."
கிருஷ்ண
ஜெயந்தியண்ணைக்கு உறியடி ஏற்பாடெல்லாம் விறு விறுண்ணு நடக்கு. ரெண்டு பக்கமும்
பத்து பதினைஞ்சு அடி உயர காத்தாடி(சவுக்கு) மரக்கட்டைகளாலே உறியடிப் பந்தல்
செய்து நடுவுல உறி சிக்காம இருக்க கப்பியில நல்ல கிரீஸு குரீஸெல்லாம் போட்டு நல்ல
கலர் பேப்பரு, அப்புறம் தோவாளையில இருந்து வாங்கிகிட்டு வந்த செவந்திப்பூ
கிரேந்திப்பூ சரத்தினால உறிப்பந்தல அலங்கரிச்சு எல்லாம் ரெடி பண்ணியாச்சு.
ராத்திரி ஏழுமணிக்கெல்லாம் பூசை முடிஞ்சு உறியடி தொடங்கும். கிருஷ்ணர் படத்துக்கு
பக்கத்தில உறியை நல்ல அலங்கரிச்சு கயிறெல்லாம் போட்டு இறுக்கி கட்டி வச்சுருக்கு.
எனக்கு இந்த உறிக்குள்ள என்ன இருக்கும்னு ஒரே குடைச்சலு. பக்கத்தில
நின்னுக்கிட்டு இருந்த மாதவன்கிட்ட கேட்டேன். ஒரு தேங்காய், கொஞ்சம் வெண்ணெய்,
கொஞ்சம் சில்லரை, ஒரு நூறு ரூவா நோட்டு இருக்கும்னான்.
பக்கத்துல உள்ள ஒரு
வீட்டுல செவ்வாணுக்கு கிருஷ்ணர் மேக்கப்பு தொடங்கியாச்சு. எங்க ஊர் ஆஸ்தான
மேக்கப்மேன் வைரம் அண்ணன் செவ்வாணு மூஞ்சியை திருப்பி திருப்பி பாத்துக்கிட்டு,
"ஏந்தலயெழுத்து. இந்த மூஞ்சிக்கெல்லாம் கிஸ்ணன் வேஷம் போட்டு விட வேண்டி இருக்கு.
எலே, கிஸ்ணன் எவ்வளவு லச்சணமா இருப்பான் தெரியுமா!"
"பேசாம வேசத்தை போட்டு
விடுண்ணே. நல்லா இருக்காண்ணு கடைசியில பார்ப்போம்! ஆசையா வச்சிருந்த மீசை
தாடியையே தியாகம் பண்ணி யிருக்கேன். நீ கிஸ்ணனையே நேர்லயே பாத்து பேசிக்கிட்டு
வந்தவன் மாதிரில்லா லெக்சர் அடிக்கே."
"சரி! சரி! கூன் போடாம நிமிந்து இருடே!
முதல்ல குடுமியை போடுவோம். போன வருஷம் யாருடே கிஸ்ணன்? சுப்பையனா! சூப்பரா
கிஸ்ணன் மாதிரியே வேஸம் போட்டு விட்டேன். அவன் கலருக்கு அப்படியே கிஸ்ணன்
மாதிரியே இருந்தாமுல்லா."
"எலே! செவ்வாணு! உறியடிக்க நல்ல டெக்னிக்கு
சொல்லித்தாரேன் கேட்டுக்கோ. நாலு மூலையில இருந்தும் மூஞ்சியில கலர் தண்ணி
அடிப்பானுக. அதுல இருந்து மட்டும் தப்பிச்சிரு. கண்ணுலயும் வாயிலயும் தண்ணி
போய்ட்டுண்ணா உறியடிக்கதுக்கு முன்னால மூக்கால 'க்ஷ' வரைஞ்சுருவே பாத்துக்கோ"
"சரிண்ணே! நம்ம மணிகண்டணும், கட்டை வைத்தியும் ரெண்டு பக்கம் தண்ணி ஊத்துவா.
ரெண்டு பேருகிட்டயும் பாத்து ஊத்துங்க மக்கான்னு சொல்லி வச்சுருக்கேன்."
அவனுங்க
ரெண்டு பேருந்தான் இந்த கிஸ்ணனை வச்சு செய்ய போறாண்ணு இவனுக்கு தெரியாது. பின்னே,
அவனுக உறியடிச்சப்போ செவ்வாணு இரக்கம் காட்டாம தண்ணியை அடிச்சத மறக்கவா
செய்வானுக.
மேக்கப் போட்டு முடிஞ்ச கிஸ்ணனைப் பாத்து மேக்கப் போட்ட வைரண்ணனுக்கே
சிரிப்பு வந்துட்டுது. சூப்பரா இருக்குண்ணு நமுட்டு சிரிப்போட கிஸ்ணனை அனுப்பி
வச்சான். நல்லவேளை! ஒரிஜினல் கிருஷ்ணர் மதுராவில கோகுலத்தில பிஸியா இருந்தாரு.
இந்த கிஸ்ணனைப் பாத்திருந்தார்ணா இனிமே ராஜாக்கமங்கலத்தில உறியடிங்கிற பேச்சே
எடுக்கக் கூடாதுண்ணு சொல்லியிருப்பாரு.
உறியை கொண்டு வந்து உறியடி பந்தல்ல
கட்டியாச்சு. ராசண்ணன் உறியை ஏத்தி இறக்கி ஊஞ்சலாட்டி வுட்டெல்லாம் ரிகர்சல்
பாக்கறாரு. நல்ல கூட்டம். நம்ம கிஸ்ணன் அதான் செவ்வாணு பொஞ்சாதி கமலம் நல்ல
மினுக்கி எடுத்து கே ஆர் விஜயா மாதிரி வாயெல்லாம் சிரிப்பா வந்து லேடீஸ் ஸைடுல
இடம் தேடுகா. இதப் பாத்த இங்கிலீஷ் தாயாத்தா "ஏட்டி கமலம், ஒம் புருஸனா உறியடிக்க
போறான். இங்க வா. முன்னால வந்து இரு." கமலத்துக்கு வழி விடாத ரண்டு பொம்பளகளைப்
பாத்து இங்கிலீஸ் தாயாத்தா ரண்டு இங்கிலீஸை எடுத்து வுட்டதும் வழி கிடைச்சது.
இல்லாட்டா இன்னும் நாலு இங்கிலீஸு கேட்டு காது கிழிஞ்சுரும். கமலத்துக்கு
வாயெல்லாம் சிரிப்பு.
கிருஷ்ணர் களத்துக்கு வந்துட்டாரு. அவரைப் பாத்ததும்
கமலத்துக்கு ஒரே சிரிப்பு சிரிப்பா வருகு. மீஸையும் தாடியுமா பாத்த மனுஷன இப்படி
மொட்டை மூஞ்சியில நீலக்கலரெல்லாம் பூசி, கமலத்துக்கு சிரிப்பு தாங்கல்ல.
கிருஷ்ணர் கமலத்தை ஒரு ரொமான்டிக் லுக்கு விட்டு சிரிச்சுக்கிட்டே களத்தில
இறங்கிட்டாரு.
ராசண்ணன் மீசையை முறுக்கி விட்டு கிட்டே கயிறை பிடிக்காரு. நாலு
மூலையிலேயும் நாலு பெரிய குத்துப் போணி நிறைய தெக்கிணத்து தண்ணியில கலர்பொடியை
கரைச்சு நிரப்பி வச்சுருக்கு. மணிகண்டன், சுப்பையன், கட்டை வைத்தி, சிவா நாலு
பேரும் ஆளுக்கொரு சொம்பை கையில எடுத்துக்கிட்டு குத்துப் போணிக்கிட்ட ரெடியா
நிக்கிறாங்க.
கிருஷ்ணரு உறியடி களத்த ஒரு ரவுண்டு சுத்தி வந்தாரு. கமலம் இருந்த
பக்கம் பாத்து இன்னொரு ரொமான்டிக் ஆசீர்வாதம் வாங்கிக் கிட்டாரு. சுப்பையன்
சொம்புல தண்ணியை எடுத்து பொளேர்ணு கிருஷ்ணர் மூஞ்சியில அடிச்சு ஆட்டத்தை தொடங்கி
வச்சான். கிருஷ்ணர் சுதாரிச்சுக்கிட்டு உறியை பாக்காரு. உறி கிட்ட வருது. கையில
இருந்த உறியடி கட்டையை சுழத்தி அடிக்க ஓங்குறாரு. உறி மேல போயிற்று. மணிகண்டன்
எத்தன நாள் கோபமோ, பொளேர் பொளேர்னு மூஞ்சிக்கு கிட்ட வந்து தண்ணியை அடிக்கான்.
செவ்வாணு மனசில நினைக்கான், 'பாவி! நேத்தைக்கு கண்ணுல தண்ணி அடிக்க மாட்டேன்னு
சொல்லிக்கிட்டு இப்ப இப்படி மூஞ்சியில நச்சு நச்சுன்னு அடிக்கானே. இருக்கட்டும்.
உறியை அடிச்சு முடிச்சு கவனிச்சுகிடுகேன்.'
கிருஷ்ணருக்கு சுதாரிக்கதுக்கு நேரமே
கிடைக்கல்ல. நாலு பக்கத்திலேயிருந்தும் மாறி மாறி மூஞ்சியில தண்ணி அடி விழுந்து
கிட்டே இருக்கு. ராசண்ணன் வேற உறியை நல்ல கீழே இறக்கிவிட்டு ஆசை காட்டறாரு. இன்னா
அடிச்சிரலாம்னு கட்டையை ஓங்கினா இந்த சிவா வேற இந்த மூலையில இருந்து எசகு பிசகா
தண்ணியை ஊத்துகான். மூக்குக்கு உள்ளேயெல்லாம் தண்ணி போகு. செவ்வாணுக்கு இப்போ
தோணுகு, ஏண்டா உறியடிக்க ஆசைப்பட்டோம்ணு. பொண்டாட்டி வேற முன்னால இருந்து நம்ம
ஆட்டத்தை பாத்துக்கிட்டு இருக்கா.
கமலத்துக்கு புருஷன்காரன் படுக அவஸ்தையைப்
பாத்து வெப்பராளமா இருக்கு. இந்த குத்துப் போணி கிட்ட நிக்க நாலு பயலுகளையும்
கரிச்சுக் கொட்டுகா. நம்ம புருஷனுக்கு இப்படி தண்ணி காட்டுகானுகளேன்னு புங்கு
புங்குன்னு வருகு. இங்க நேரம் ஆக ஆக உடம்பு நோவு ஒரு பக்கம், ஒவ்வொரு வாட்டியும்
உறி கீழே வரை இறங்கி வந்தும் அடிக்க முடியாத கோபம் ஒரு பக்கம்னு கிருஷ்ணர்
கொஞ்சம் கொஞ்சமா பழைய செவ்வாணுவா மாறிக்கிட்டு இருக்காரு.
பரத்தை மறைத்தது
பார்முதற் பூதம்ங்கிற மாதிரி பரம்பொருள் கிருஷ்ணர் மறைந்து செவ்வாணுங்கிற மனிதன்
வெளியில வரமாதிரி இருக்கு.
இங்க குத்துப்போணியில தண்ணி தீரப் போகு. ரண்டு பேரு
பக்கத்தில இருந்த கிணத்தில இருந்து தண்ணி இறைக்க ஓடுகானுக. ஒருத்தன் சொன்னான்,
எலே, யாருல மாங்க்கு மாங்க்குன்னு கிணத்துல இருந்து தண்ணி இறைக்கதுன்னுக்கிட்டே
கொஞ்சம் தள்ளி குட்டையில நேத்தைக்கு பெய்த மழையில தேங்கி கிடந்த மழைத்தண்ணியை
கோரிக்கிட்டு வந்து குத்துப் போணியில ஊத்துகான். உறியடி துருதியில யாரும் இதை
கவனிக்கல்ல. இந்த தண்ணி எடுக்க போன பாவிப் பயலுக அவசரக் கிடுவடியில மழைத்தண்ணிய
மண்ணோடு சேத்து கொண்டு வந்து குத்துப் போணியை நிரப்புகானுகோ.
இந்த மண்ணு கலந்த
தண்ணியை எடுத்து கிருஷ்ணருக்கு மூஞ்சியில அடிச்சதும் ஒரே வலி. கண்ணுக்குள்ள நற
நறன்னு ஒரு எரிச்சல். அதுக்குள்ள கமலத்துக்கு தம்பி சங்கரன் இந்தப் பயலுக மண்ணு
கலந்த தண்ணியை எடுத்துக்கிட்டு வருகதப் பாத்திட்டான். "எக்கோவ்! தொழித்தண்ணியை
ஊத்துறாணுகோ" ன்னு கத்த, கிருஷ்ணருக்குள்ள ஒளிச்சிக்கிட்டிருந்த செவ்வாணு
முழிச்சிக்கிட்டான். உறியை அடிக்க முடியாத கோபம், கண்ணெரிச்சல் எல்லாம் சேர
மணிகண்டனையும் வைத்தியையும் பாத்து இங்கிலீஸ் தாயாத்தாகிட்ட படிச்ச இங்கிலீஸை
எடுத்து விட ஆரம்பிச்சதும் பொம்பளக் கூட்டம் பாதி காதை பொத்திக்கிட்டே
கலைஞ்சுட்டது. உறியடி, தெறியடியா மாறிப் போச்சு.
இங்கிலீஸ் தாயாத்தா இங்கிலீஷ்
டியூஷன் எடுப்பாரான்னு கேட்கக் கூடாது. செவ்வாணுக்கு வீட்டுக்கு எதிரே உள்ள
தெருக்குழாய்லதான் இந்த தாயாத்தா தண்ணி பிடிக்க வருவா. தெருக்குழாய்னா குஸ்தி
இல்லாமலா. தெருக்குழாய் குஸ்தியின்னா இங்கிலீஸ் இல்லாமலா. இந்த இங்கிலீஸுல ரொம்ப
அவுட்ஸ்டாண்டிங்கா இருந்தது இந்த தாயாத்தாதான். அதனால தான் தாயாத்தா முன்னால
இஙகிலீஸ் ஒட்டிக் கிட்டது.
இப்படி படிச்ச இஙகிலீஸைத்தான் கிருஷ்ணரு எடுத்து
வுட்டாரு. கடைசியில அவரை சமாதானப்படுத்தி ஒருவழியா தெறியடி முடிஞ்சு உறியடி
தொடர்ந்தது. கிருஷ்ணரு கடைசியில் உறியை அடிச்சும் முடிச்சிட்டாரு.
அதுக்கப்பறம்
நிறைய கிருஷ்ணருங்க வந்து உறியடிச்சுக்கிட்டு போய்ட்டாங்க. ஆனா இங்கிலீஸ் பேசின
கிருஷ்ணரை இன்னும் மறக்க முடியல்ல.
பத்மநாபன்
*****
இன்றைய பதிவில் நண்பர்
பத்மநாபன் பகிர்ந்து கொண்ட அனுபவம் பற்றிய எண்ணங்களையும், கருத்துகளையும்
பின்னூட்டமாகச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும்
ச[சி]ந்திப்போம்...
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
//நீ கிஸ்ணனையே நேர்லயே பாத்து பேசிக்கிட்டு வந்தவன் மாதிரில்லா லெக்சர் அடிக்கே//
பதிலளிநீக்குஹா.. ஹா.. மிகவும் ரசித்து சிரித்தேன் பத்மநாபன் ஜி
பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
க்ருஷ்ணர் பேசின இங்கிலீஷை உறியடிச் சத்தத்துல பத்மநாபன் அண்ணாச்சி சரியா காதுல வாங்கிக்கிடலையா இல்லை படிக்கிதவனுக்கு புரியாதுன்னு எளப்பமா நெனச்சிட்டாரா?
பதிலளிநீக்குஅருமையான நெல்லை மொழி. ரசித்துப் படித்தேன்
grrrrrrrrrrrrrrrr that is not Nellai thamizh! Naroyil thamizh! "நாரோயில் பாஷை!"
நீக்குநாரோயில் மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நாரோயிலும் அவருக்கு நெல்லை தான் கீதாம்மா! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆஹா..முழுமையான நெல்லைத் தமிழ் படிக்கப் படிக்க போதையல்லவா ஏற்றுகிறது...பகிர்ந்தமைக்கு நல்வாழ்த்துகள்..
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தெறியடி அண்ணாச்சி...!
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
//அதுக்கப்பறம் நிறைய கிருஷ்ணருங்க வந்து உறியடிச்சுக்கிட்டு போய்ட்டாங்க. ஆனா இங்கிலீஸ் பேசின கிருஷ்ணரை இன்னும் மறக்க முடியல்ல.//
பதிலளிநீக்குஎங்களுக்கும் இந்த கிருஷ்ணரை மறக்க முடியாது.
பதிவு உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதிரு பத்மநாபன் அவர்களின் நெல்லைத் தமிழில் உறியடி உற்சவம் படிக்க உற்சாகமாக இருந்தது. இடையில் வந்த தமாஷான வரிகளை மிகவும் ரசித்தேன்.
ஒரிஜினல் கிருஷ்ணருக்கும் நெல்லைத் தமிழ் தெரிந்திருந்தால் கண்டிப்பாக படித்து ரசித்து இருப்பார். பத்மநாபன் சகோதரருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இயல்பான நடையில் பதிவை ரசிக்க வைத்தமைக்கு மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஒரிஜினல் கிருஷ்ணர் மதுராவில கோகுலத்தில பிஸியா இருந்தாரு. இந்த கிஸ்ணனைப் பாத்திருந்தார்ணா இனிமே ராஜாக்கமங்கலத்தில உறியடிங்கிற பேச்சே எடுக்கக் கூடாதுண்ணு சொல்லியிருப்பாரு.
பதிலளிநீக்குஅண்ணாச்சியின் எழுத்து நடையை இன்றெல்லம் படித்துக்கொண்டே இருக்கலாம். அருமையான பதிவு. இவருடைய அனைத்து பதிவுகளையும் புத்தகமாக வெளியிடலாம். மேலும் பல பதிவுகளை வெளியிட வாழ்த்துக்கள்.
அண்ணாச்சியின் எழுத்து நடை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீபதி அண்ணாச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அண்ணாச்சியின் பதிவுகள் ஒன்றுக்கு ஒன்று போட்டி போடுகிறது. எது சிறந்தது என்று தேர்வு செய்வது கடினம். நெல்லை தமிழ் தவழ்ந்து அனாயசமாய் வருகிறது. கிருஷ்ண அலங்காரத்தை அவர் விவரித்த விதம் மிக அருமை.
பதிலளிநீக்குஒரிஜினல் கிருஷ்ணர் மதுராவில கோகுலத்தில பிஸியா இருந்தாரு. இந்த கிஸ்ணனைப் பாத்திருந்தார்ணா இனிமே ராஜாக்கமங்கலத்தில உறியடிங்கிற பேச்சே எடுக்kக் கூடாதுண்ணு சொல்லியிருப்பார.
அவருடைய பதிவுகளை ஒரு புத்தகமாக வெளியிடலாம்.
இன்னும் நிறைய பதிவுகளை வெளியிட வாழ்த்துக்கள்.
.
புத்தகமாக வெளியிடலாம்! செய்து விடுவோம் ஸ்ரீபதி அண்ணாச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான "நாரோயில் பாஷை!" நாஞ்சில் நாடன் எழுதுவதைப் படிக்கிறாப்போல் ஒரு எண்ணம். நல்லா எழுதி இருக்கார். கண்ணெதிரே காட்சிகள் வந்தன.
பதிலளிநீக்குகண்ணெதிரே காட்சிகள் வந்தன - நன்றி கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கிருஷ்ணர் கொஞ்சம் கொஞ்சமா பழைய செவ்வாணுவா மாறிக்கிட்டு இருக்காரு.
பதிலளிநீக்குSUPER
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பெயர் சொல்ல விரும்பாத நண்பரே!
நீக்கு