திங்கள், 3 ஆகஸ்ட், 2020

ஆணிகளுக்கு நடுவில் – ஊக்கம் தந்த சில விஷயங்கள்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய மாலை வணக்கம். இன்றைய பதிவை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

சொல்லில் ”இனிமை” இருந்தால் “வேப்ப” எண்ணையும் விற்று விடலாம்! சொல்லில் “கடுமை” இருந்தால் தேன் கூட விற்க முடியாது! 

சென்ற சனிக்கிழமையில் காஃபி வித் கிட்டு பதிவில் சொன்னது போல, அலுவலகத்தில் பிடுங்க வேண்டிய ஆணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதால், சனி, ஞாயிறில் கூட என்னால் இந்த வாரத்திற்கான பதிவுகளை எழுதி வைத்து Schedule செய்து வைக்க முடியவில்லை. சனிக்கிழமை நான் தொடரும் சில வலைப்பூக்களில் விடுபட்ட பதிவுகளை படித்து, நான் படித்ததின் அடையாளமாக பின்னூட்டம் இடமுடிந்தது. ஞாயிறு அன்று வேலைகள் அதிகரிக்க, எனது இந்த வாரத்திற்கான பதிவுகளை எழுதி வைக்க முடியவில்லை! இரவு பத்து மணி வரை அலுவலக வேலைகளைச் செய்து விட்டு, அதன் பின்னர் இந்த வாரத்திற்கான பதிவுகளை தட்டச்சு செய்யும் எண்ணம் இருந்தாலும், செயலாக்க இயலவில்லை.

காலையில் எழுந்து அலுவலகம் செல்ல தயாராகவே சரியாக இருந்தது. இதோ மாலையில் தான் இன்றைக்கான பதிவினை எழுதி வெளியிட முடிந்தது. எனது மின்னூல்கள் நிறைய பேரால் படிக்கப்பட்டு வருகின்றது என்பதை, KDP அமேசான் தளம் வழியே தெரிந்து கொள்ள முடிந்ததோடு, ஒன்றிரண்டு மின்னஞ்சல்களும் வந்தது – மின்னூல்களை படித்த சிலர் மின்னஞ்சல் வழி தொடர்பு கொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்தார்கள். அப்படி வந்த இரண்டு மின்னஞ்சல்களை கீழே தருகிறேன். 

நேரில் பார்த்தது போன்ற ஒரு அனுபவம். எனக்கு சிறியவயதில் இருந்தே பயணக்கட்டுரைகள் படிப்பதில் ஆர்வம். பின்பு அதுவே, நம்மால் நேரில் காண முடிய வில்லையே என்ற ஏக்கமே! படிப்பதை நிறுத்தினேன்! நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் கட்டுரையால் மகிழ்ச்சி – வித்யா சுகி. 


வைஷ்ணவி தேவி கோயிலுக்கு சென்று வந்தது குறித்த பயணக்கட்டுரை படித்தேன் அருமை. தங்களுடன் எழுத்துக்களின் வழியே நானும் பயணித்தேன் என்றால் மிகையில்லை. ஒரே ஒரு வேண்டுகோள், தங்கள் பயணக் கட்டுரைகளில் பயணம் சார்ந்த ஏராளமான தகவல்கள் தருகிறீர்கள். பயணம் செய்த ஆண்டு தேதி எங்கேயும் இல்லை. ஏனெனில் தங்களின் பயண தேதி தெரிந்தால் விலைவாசி, பயணக் கட்டணங்களின் ஏற்ற இறக்கங்களை சற்று யூகித்து அறியலாம். மற்றபடி தங்களின் கட்டுரைகள் பயணம் செய்வோருக்கு நல்லதொரு வழிகாட்டி ஆகும். நன்றி – ஜெயராஜ். 

வலைப்பூவில் எழுதும்போதும் சரி, இப்படி மின்னூல்களாக வெளியிடும்போதும் சரி, நமது எழுத்தினை படிப்பவர்கள் தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும்போது, எழுதியவர்களுக்கு ஊக்கம் தருவதாக அமைந்து விடுவது வழக்கம் தானே! சில வலைப்பூக்களில் பார்க்கும்போது எழுதி வெளியிட்டு சில நாட்கள் ஆகியிருந்தாலும், ஒரு பின்னூட்டம் கூட இல்லாமல் இருக்கும்! இத்தனைக்கும் அவர் பலரது பதிவுகளை படித்து பின்னூட்டம் இட்டிருப்பார்! ஆனாலும் அவரது தளத்தில் ஒருவரது கருத்தும் இருக்காது! முடிந்தவரை பதிவுகளைப் படித்தால், பின்னூட்டம் இடாமல் வருவதில்லை என்பதை நான் தொடர்ந்து செய்து வருகிறேன் – அந்தப் பதிவர் எனது வலைப்பூவினை படிக்கிறாரோ இல்லையோ, பின்னூட்டம் இடுகிறாரோ இல்லையோ, ஆனாலும் தொடர்ந்து என் வருகையை பதிவு செய்து வருகிறேன்! 

ஒரு பதிவர் அவர் பதிவுகளில் நான் தொடர்ந்து பின்னூட்டம் இட, “நான் உங்கள் பதிவுகளுக்கே வருவதே இல்லை! என்றாலும் தொடர்ந்து பின்னூட்டம் அளித்து, மேலும் எழுத ஊக்குவிப்பதற்கு நன்றி!” என்று எழுதியிருந்தார் பதிலாக! பலருக்கும் ஒரு எண்ணம், நான் எழுதுவதை எழுதிவிட்டு நகர்ந்து விடுவேன் – பின்னூட்டங்கள் வந்தால் சரி! அடுத்தவர்களுடைய பதிவுகளை, நான் ஏன் படிக்க வேண்டும் என்று இருக்கிறார்கள்! இதை ஒரு குறையாகச் சொல்ல வரவில்லை! பல பிரபல பதிவர்களும் அப்படியே! நேரம் இல்லை என்று சொல்லக்கூடும்! முயன்றால் முடியாதது இல்லை! 

வலைப்பூவில் எழுத ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டன! தொடர்ந்து எழுதுவதற்கு அவ்வப்போது கிடைக்கும் ஊக்கங்களே காரணமாக இருக்கின்றன – இப்போது வெளியிட்டு வரும் மின்னூல்களுக்கும் இன்றைய பதிவில் சொல்லி இருக்கும் சில உற்சாக வார்த்தைகள் போன்றவை மட்டுமே காரணமாக இருக்கின்றது. எழுதும் வரை, எழுத முடியும் வரை எழுதிக் கொண்டே இருப்போம்! படிக்க முடியும் வரை படித்துக் கொண்டே இருப்போம்! கிடைக்கும் நேரத்தினை நல்ல வழியில் பயன்படுத்திக் கொள்வோம்! 

நண்பர்களே, இன்றைய பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்... 

நட்புடன் 


வெங்கட் நாகராஜ் 
புது தில்லி

24 கருத்துகள்:

  1. வாசகம் அருமை ஜி

    பிறரிடமிருந்து வரும் கருத்துரைகள்தான் எழுதுபவருக்கு ஊக்கம் தரும்.

    சில பதிவர்களுக்கு எழுத நேரமிருக்கும் ஆனால் பிறர் பதிவுகளுக்கு செல்ல நேரமில்லை என்பார்கள்.

    நான்கு பதிவுகள் எழுதும்போது மூன்று பதிவுகள் எழுதி விட்டு, ஒரு பதிவுக்கான நேரத்தை பிறருக்காக செலவு செய்யலாம்.

    மனமிருந்தால் மார்க்கமுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      மனமிருந்தால் மார்க்கமுண்டு - அதே தான் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. கும்மியடிப்பதை குறைத்தால் என, வலைப்பூவின் எதிர்காலம் என்கிற தலைப்பில், → தமிழ்ச்சரம் திரட்டியும், வலைப்பூ ஆய்வும்... ← எனும் பதிவிலேயே வாசித்திருப்பீர்கள்... வேறு என்ன சொல்ல...? சிலர் சமீபமாக முகநூல் கருத்துரைப்பெட்டியில் வந்தாவது கருத்துரை இடுகிறார்களே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூல் கருத்துரைப்பெட்டி - எனது தளத்தில் வைக்கவில்லை தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. எழுதும் வரை, எழுத முடியும் வரை எழுதிக் கொண்டே இருப்போம்! படிக்க முடியும் வரை படித்துக் கொண்டே இருப்போம்! கிடைக்கும் நேரத்தினை நல்ல வழியில் பயன்படுத்திக் கொள்வோம்!

    அருமை ஐயா
    வலைப் பூவில் இன்று எழுதுகிறவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம், காலையில் கணினி முன் அமர்ந்தால், பதிவுகளைப் படித்து முடிக்கவே நேரம் போதாது. இன்று அப்படியல்ல.
    மிகவும் குறைந்துவிட்டது.
    என்னைப் பொறுத்தவரை, மற்றவர்களின் பதிவுகளைப் படித்தால் மட்டும் போதாது, சில வார்த்தைகளையாவது, கருத்துரையாகவிட்டுச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.
    ஆனால் மற்றவர்களை ஊக்கப்படுத்தும் பண்பு குறைந்து வருகிறது என்றுதான் நினைக்கிறேன்.
    வலைப் பூவினைப் படிப்பவர்களின் எண்ணிக்கை நிலையாக இருக்கிறது, ஆனால் கருத்து சொல்பவர்கள் குறைந்து கொண்டே இருக்கிறார்கள்.
    நானும் கவனித்திருக்கிறேன், சில பதிவுகளில் தொடர்ந்து நாம், வாழ்த்தினாலும், நம் பதிவு பக்கம் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். தாங்கள் கூறுவது சரிதான்.
    எழுதும் வரை, எழுத முடியும் வரை எழுதிக் கொண்டே இருப்போம்! படிக்க முடியும் வரை படித்துக் கொண்டே இருப்போம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைப்பூவில் எழுதுகிறவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது - உண்மை தான் கரந்தை ஜெயக்குமார் ஜி. சில புதியவர்கள் எழுதுகிறார்கள் என்றாலும் சரியான திரட்டி இல்லாததால் மற்றவர்களால் படிக்க முடிவதில்லை.

      வலைப்பூவினைப் படிப்பவர்களின் எண்ணிக்கை பற்றிய உங்கள் கருத்தும் சரி தான்.

      முடிந்த வரை எழுதுவோம் - அது தான் நமக்கு நல்லது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. ஒரு எழுத்தாளனுக்கு அவன் கதைகளுக்கு கிடைக்கும் நல்ல பாராட்டுக்கள் தான் ஊக்கமும் உற்சாகமும் மேன்மேலும் எழுதுவதற்கான தன்னம்பிக்கையும் கொடுக்கும். கிட்டத்தட்ட அதே நிலைமை தான் வீட்டிலிருந்து சமைத்துப்போடும் பெண்களுக்கும்! நாள் முழுவதும் அடுப்படியில் வெந்து அவர்கள் சமைத்துப்போடும் உணவு வகைகளுக்குக் கிடைக்கும் பாராட்டுகள் தான் மேலும் மேலும் ருசியாக சமைக்க அவர்களுக்கு உந்துதலும் சுவாரஸ்யமும் கொடுக்கும்! இப்படி எல்லா பணிகளுக்குமே அதற்குக் கிடைக்கும் பாராட்டுகள் மட்டுமே அந்தப் பணிகளை சிறப்பாக எடுத்துச் செல்லும்!
    பதிவு அருமை!
    சொல்ல மறந்து விட்டேன். வாசகம் மிகவும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோ சாமிநாதன் மேடம்.

      //ஊக்கமும் உற்சாகமும் மேன்மேலும் எழுதுவதற்கான தன்னம்பிக்கையும் கொடுக்கும்// உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. //நான் எழுதுவதை எழுதிவிட்டு நகர்ந்து விடுவேன் – பின்னூட்டங்கள் வந்தால் சரி! அடுத்தவர்களுடைய பதிவுகளை, நான் ஏன் படிக்க வேண்டும்// -
    1. பதிவுத் திரட்டியோ அல்லது Recommended இடுகைகள் இந்த மாதத்தில் என்று ஏதேனும் இல்லாததால் நல்ல பதிவுகளைப் படிக்க விட்டுவிடுகிறோம். அது எழுதுபவருக்கு ஆர்வமூட்டாது. உண்மை. ஆனால் நிறையபேரைச் சென்றடையணும் என்று எழுதுபவர் முயற்சிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். முயற்சி + உருப்படியான அல்லது ஆர்வத்தைத் தூண்டும் இடுகையாக இருக்கவேண்டும்.
    2. படிக்கிறோம்.. பிறகு சென்றுவிடுகிறோம் என்பதால் எழுதுபவருக்கு என்ன நஷ்டம்? பின்னூட்டம் போடும்போது பொதுவாக மறுமொழி எதிர்பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன். மறுமொழி இல்லாத பின்னூட்டம் விழலுக்கு இரைத்த நீர் என்று பின்னூட்டமிடுபவர் நினைக்கலாமே. சில சமயங்களில் மறுமொழி இட நேரம் கிடைக்காது. இதனை எல்லோரும் புரிந்துகொள்வார்கள்.
    3. தொடர்கதை - நான் பெரும்பாலும் படிப்பதில்லை. சம்பந்தம் இல்லாத காணொளிகளைக் காண்பதில்லை. பதிவுக்குப் பதிலாக காணொளி இடுகை போட்டிருந்தால் 90% நான் பார்க்கமாட்டேன். நான் search பண்ணி அதில் இந்தக் காணொளியும் இருந்தால்தான் பார்க்க வாய்ப்பு உண்டு. இன்னும் சிலர், இந்தப் பயணக் கட்டுரை என்றெல்லாம் ஆர்வத்தில் எழுத ஆரம்பிப்பாங்க. நாமும் நம்பி படிக்க ஆரம்பிப்போம். அப்புறம் அம்போன்னு எழுதுவதை பல மாதங்கள் செய்ய மாட்டாங்க. எனக்கு, ஏன் அந்தத் தளத்துக்குப் போய் படிக்க ஆரம்பித்தோம் என்று தோன்றும். பிறகு அந்தத் தளத்திற்குப் போகவே மாட்டேன்.
    4. எல்லோர் பதிவுகளுக்கும் போய்ப்படிப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. ஊரில் உள்ள எல்லாக் கோவில்களின் அர்ச்சனைகளுக்குமா நாம் தினமும் செல்கிறோம்? தொடர்ந்து நாம் செல்லும் தளங்களுக்கு நாம் சென்றுகொண்டுதான் இருப்போம். பல சமயங்களில் சுமார் இடுகைகளுக்கும் ஏதாவது பின்னூட்டம் இடுவோம், வருகையை உணர்த்துவோம் இல்லைனா வெறும்ன 'அருமை, ரசித்தேன், பிரமாதம்' என்றெல்லாம் எழுதுவோம் நட்பு அடிப்படையில். இதனை ஏன் எல்லோருக்கும் (எல்லா இடுகைகளுக்கும், பல தளங்களில்) செய்யவேண்டும்?
    5. நல்ல பதிவாக இருந்தால், இன்றில்லாவிட்டாலும் எப்போதாவது யாராவது கூகிள் செய்து பார்க்கும்போது அகப்படும். அப்படி எண்ணிக்கொண்டு தொடர்ந்து இடுகைகள் எழுதணும். (நான் சொல்வது பொதுவாக எல்லோருக்கும்)
    6. 'பின்னூட்டங்கள் வந்தால் சரி. இல்லைனா எனக்கு ஒன்றும் இல்லை' என்று நினைக்கிறவங்களுக்கு ஏன் பின்னூட்டம் போடப்போறாங்க?
    7. நாம் எல்லோரும் எழுதும் ஒவ்வொன்றும் மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறோம் என்றுதான் நாம் நினைப்போம். எதுக்கு மொக்கையை இடுகையாக எழுதப்போகிறோம்? ஆனால் அவை உருப்படியா என்பது, மின்னூல் வெளியிட்டு அதற்கு பார்வையாளர்கள் கிடைக்கும்போதுதான் தெரியும். பயணக் கட்டுரைகள் பொதுவாகவே எல்லோரும் ரெஃபர் பண்ணுவாங்க. மற்றபடி 'கதை/அனுபவம் etc' ஒரு தடவை படிச்சாச்சுன்னா திரும்பப் படிக்க மாட்டாங்க என்றுதான் நான் நினைக்கிறேன். தளம் வச்சிருக்கிற எல்லோருக்குமே தெரியும் பழைய பதிவுகளுக்கு யாரேனும் போறாங்களா, அதற்கு என்ன காரணம் என்பது.

    உங்க இடுகை எனக்கு இந்த எண்ண அலைகளைத் தோற்றுவித்ததால் நான் எழுதினேன். நான் எழுதிய ஒவ்வொன்றிர்க்கும் உதாரணங்கள் (தளங்கள்) தரமுடியும். எதுக்கு இந்த வேண்டாத வேலை என்பதால் எழுதலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான பின்னூட்டம் மகிழ்ச்சியளித்தது.

      1. திரட்டி இல்லாதது ஒரு பெரிய குறை தான். சில திரட்டிகள் புதிதாக உருவாக்கினாலும் சின்னச் சின்ன பிரச்சனைகளால் அவை பெரிய அளவில் பயன்படவில்லை.

      2. படிக்கிறோம், சென்று விடுகிறோம் - அதில் எழுதுபவருக்கு என்ன பிரச்சனை - ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் பின்னூட்டங்கள் உற்சாகம் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. பின்னூட்டத்திற்கு பதில் அளிப்பதும் எழுதுபவரின் கடமை என்றும் சொல்லலாம்!

      3. தொடர்கதை - பெரும்பாலும் காத்திருந்து படிப்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான். மொத்தமாக படிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். தொடர் முடிந்த பிறகு படிக்கலாமே! காணொளி - பார்க்கவே சிலர் உண்டு. காணொளிகள் மட்டுமே பார்த்து கருத்து சொல்பவர்களும், மின்னஞ்சல் வழி தொடர்பு கொண்டவர்களும் உண்டு. பாதியில் விடும் தொடர்கள் - படிப்பவர்களுக்கு அலுப்பு தருவது உண்மை தான்.

      4. எல்லார் பதிவுகளையும் படிப்பது சாத்தியமில்லாத ஒன்று - அப்படிச் சொல்வதற்கில்லை. நான் தொடரும் அனைத்து பதிவர்களின் பதிவுகளையும் படித்து விடுகிறேன் - ஒன்றிரண்டு நாட்கள் கழித்தாவது! முயன்றால் முடியாததில்லை.

      5. நல்ல பதிவாக இருந்தால் கூகிள் செய்து பார்க்கும்போது அகப்பட்டு படிப்பவர்கள் உண்டு. அதில் மாற்றுக் கருத்தில்லை!

      6. ஹாஹா! வெளியில் அப்படிச் சொன்னாலும், உள்ளுக்குள் எதிர்பார்ப்பு இல்லாமல் இருக்காது என்றே எனக்குத் தோன்றுகிறாது.

      7. அவரவர்க்கு அவரவர் பதிவு நல்ல பதிவே! :) மொக்கை எழுதுபவர்களும் உண்டு நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. இனி உங்கள் பாணியைக் கட்டாயம் பின்பற்றுகிறேன். எந்த வலைப்பக்கம் போனாலும் படித்துவிட்டு பின்னூட்டம் போடாமல் வருவதில்லை என்ற விதியை ஏற்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி எம். ஞானசேகரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வேலை ஆணி உண்மையில் பாடாய் படுத்தியது அதனால் கொஞ்சம் நாள் பிளாகை மூடிவைச்சிட்டு இருந்தேன் . எ]னக்கு நல்லா பேசி சந்தோஷமா இருக்கணும் பின்னூட்டங்களில் .எனக்கே என் பதிவில் பின்னூட்டம் தர முடியாமற்போனப்போ கில்ட்டியில் பதிவு போடாமயே இருந்தேன் . உண்மையை சொல்லனும்னா பின்னூட்ட கருத்துப்பரிமாற்றங்கள் மனதுக்கு சந்தோஷமளிப்பவை .மீண்டும் தொடர்ந்து பதிவுகளை ஆரம்பிச்சிருக்கேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேலை அதிகமாக இருக்கையில் பிளாக் பக்கம் வருவதில் சிரமங்கள் உண்டு.

      மீண்டும் பதிவுகள் வெளியிட ஆரம்பித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி ஏஞ்சல்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. மற்றவர் நம் எழுத்தையும் எழுதும் திறனையும் பாராட்டும் போது நமக்குள் பொங்கும் உற்சாகம் தனி. நம் எழுத்தையும் ஒருவர் கவனித்து பினனுட்டம் இடுகிறார் என்னும்போது மண்டை கிறுகிறுக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மற்றவர் நம் எழுத்தையும் எழுதும் திறனையும் பாராட்டும் போது நமக்குள் பொங்கும் உற்சாகம் தனி//

      அருமையாக சொன்னீர்கள் அனுபவித்திருப்பீர்கள் ஆகவே உண்மையை விளக்கி விட்டீர்கள் பாராட்டுகள்.

      இதே உற்சாகத்தை பிறருக்கு நீங்கள் கொடுக்க நினைத்து இருக்கிறீர்களா ?

      நீக்கு
    2. //நமக்குள் பொங்கும் உற்சாகம் தனி!” உண்மை தான் ரமா ஸ்ரீனிவாசன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. இனிமேல் மற்றவர்களின் பதிவுகள் பக்கம் வருவார் என நினைக்கிறேன் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. Only few days ago, I cam to know through your whatsapp status that you write a blog. I kept on reading it by the help of google translation and by this process learnt so many things. One of them was Kindle publishing.

    Keep writing ..thanks

    பதிலளிநீக்கு
  10. எழுதுபவரகளுக்கு ஊக்கமே படிப்பவர்களிடமிருந்து வரும் விமர்சனங்கள்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் இராமசாமி ஜி. ஊக்கம் தரும் வார்த்தைகள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. //கிடைக்கும் நேரத்தினை நல்ல வழியில் பயன்படுத்திக் கொள்வோம்! //

    எழுதுங்கள். நேரம் கிடைக்கும் போது எழுதுவது உற்சாகத்தைத் தரும்.
    பின்னூட்டங்கள் எழுத தூண்டும், மகிழ்ச்சி தரும் என்பது உண்மையே!..மின்னூலூக்கு வந்த கடிதங்கள் மனதுக்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னூட்டங்கள் எழுதத் தூண்டும், மகிழ்ச்சி தரும்! ஆமாம் மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....