சனி, 1 ஆகஸ்ட், 2020

காஃபி வித் கிட்டு – ஏழரை – அலுவலக ஆணிகள் – பழைய வாகனம் – காதலி – வானரம்



காஃபி வித் கிட்டு - 79 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.

என்னதான் வாழ்க்கையை எட்டு எட்டா பிரிச்சு வாழ்ந்தாலும் ஒவ்வொரு எட்டுக்குள்ளும் ஒரு ஏழரை இருப்பது நிச்சயம்! 

இந்த வாரத்தின் தகவல் – அலுவலக ஆணிகள்: 

பல அலுவலகங்கள் இன்னும் திறக்கவில்லை. இங்கேயும் அப்படியே. வீட்டிலிருந்தபடியே வேலைகள் நடந்து கொண்டிருந்தது. வாரத்திற்கு ஒன்றிரண்டு நாட்கள் மட்டும் அலுவலகம் சென்று வேலை செய்ய வேண்டியிருந்தது. மற்ற நாட்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்றாலும் இந்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து நாட்களுமே அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது – வீட்டிலிருந்தபடியே அந்த வேலைகளைச் செய்து முடிக்க முடியுமென்றாலும் அலுவலகத்திற்கு வந்தே ஆகவேண்டும் என அழுத்தம்! வேறு வழியில்லாமல் சென்று வந்தேன் – தலைநகரில் இப்போது தீதுண்மி குறைந்து விட்டது என்ற தகவல்களை தில்லி அரசு சொன்னாலும், இன்னமும் தொற்று ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே பலரும் சொல்லும் செய்தியாக இருக்கிறது. வீட்டிலிருந்து வேலை செய்வதிலும் சில கஷ்டங்கள் இருக்கின்றன. இரவு, பகல் எனப் பாராமல் எப்போது வேண்டுமானாலும், வாட்ஸப் வழி, மின்னஞ்சல் வழி தகவல்களை அனுப்பி உடனடியாக அது சம்பந்தமான வேலைகளைச் செய்து அனுப்பச் சொல்கிறார்கள். இரவு 10 மணிக்கு ஒரு தகவல் அனுப்பி, இப்பொழுதே சம்பந்தப்பட்ட வேலையை முடித்து கோப்பினை இணைய வழி அனுப்பச் சொல்லி தகவல் வந்தால், ஒரு தகவல் காலை 06 மணிக்கு வருகிறது – வேறு ஒரு வேலையை உடனே செய்யச் சொல்லி! பார்க்காமல் இருந்தால், கைபேசியில் அழைத்து மின்னஞ்சல்/வாட்ஸப் அனுப்பினேனே பார்க்கவில்லையா என்று கேட்கிறார்கள்! ஆணிகள் அதிகரித்து விட்டது! பிடுங்கிக் கொண்டே இருக்கிறேன்! ஆணிகள் அதிகமானதால், இந்த வாரத்தில் பலருடைய பதிவுகளை படிக்க இயலவில்லை. இன்றைக்கு தான் படிக்க வேண்டும்!

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்: 

இந்த வாரத்தில் ரசித்த ஒரு விளம்பரம் பற்றிய தகவலைப் பார்க்கலாம்! பழைய வாகனம் ஒன்றினை வாங்க வரும் இளைஞரும் அவருடன் வந்தவரும் வாகனத்தினைப் பரிசோதிக்கிறார்கள். வாகனத்தினை விற்கப் போவது ஒரு மூதாட்டி! பாருங்களேன்! சில நொடிகளில் விளம்பரம் – அதற்கான ஆங்கில வாசகம் சிறப்பானது!


இந்த வாரத்தின் மின்புத்தகம்: 

எனது மின்னூல் “கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை” இப்போது இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்! மூன்று நாட்களுக்கு மட்டும் இந்த இலவச தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதி உண்டு. அமேசான் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முகவரி கீழே! 


பின்னோக்கிப் பார்க்கலாம்: 

எனது வலைப்பூவில் இதே நாளில் 2012-ஆம் வருடம் எழுதிய ஒரு பதிவு – ஒற்றனின் காதலி. எதைப் பற்றிய பதிவு அது? அப்பதிவிலிருந்து சில வரிகள் இங்கே. 

இந்திய உளவுத் துறையிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற மணிவண்ணன் கொடைக்கானல் நகரில் தனது காலத்தினை தனியே கழித்து வருகிறார். காலை மாலை உடற்பயிற்சி, நல்ல உழைப்பு என தன்னுடைய ஓய்வுகாலத்தினை செம்மையாகப் பயன்படுத்தி வருபவர். ஒரு நாள் காலை மலைப்பாதையில் ஓடிக்கொண்டிருக்கும் போது பின்னாலே வந்த ஜீப் ஒன்று வேண்டுமென்றே மணிவண்ணனை மோதி மலைப்பாதையிலிருந்து தள்ளி விடுகிறது. அந்த வழியே வரும் முட்டைக்காரரின் உதவியோடு மேலே ஏறி வந்து விடுகிறார் மணிவண்ணன். அன்று மாலையே “தப்பித்தேன் என்று சந்தோஷமடையாதே, உன் சாவு என் கையில்” என்று ஆங்கிலத்தில் தொலைபேசி மூலம் சொல்கிறான் ஒருவன். 

முழுபதிவும் படிக்க ஏதுவாக, சுட்டி கீழே. 


இந்த வாரத்தின் முகநூல் இற்றை: 

நண்பர் முரளி எழுதிய ஒரு முகநூல் இற்றை – நெய்வேலி நினைவுகளாக! 

திடீரென்று நான்கு வானரங்கள் மூன்று நாட்கள் முன்பு தேனாம்பேட்டையில் எங்கள் வீட்டின் எதிரே மிகவும் பொறுமையாக தரையிலும் compound wall களிலும் நடை பழகிக்கொண்டிருந்தன. City இல் இவ்வாறு வானரங்களைக் காண்பது என்பது அரிது.

நெய்வேலியில் அவைகளைக் காண்பதென்பது தினமும் நடக்கும் ஒரு நிகழ்வு. அவைகளுடன் சண்டையிட்டுதான் எங்களின் பங்கான பலாப்பழத்தையும் மாம்பழத்தையும் பெற வேண்டும். In addition, மந்திகள் ஜன்னலுக்கு வெளியே உட்கார்ந்துகொண்டு சிறு குரங்குளை ஜன்னல் கம்பிகளின் ஊடே உள்ளே தள்ளி விடும். அவை வந்து உடைத்து வைத்த தேங்காய், வாழைப்பழம், கடலை மிட்டாய் என எது கையில் கிடைக்கிறதோ அவற்றை லபக்கிக்கொண்டு மீண்டும் ஜன்னல் கம்பிகளின் ஊடே வெளியேறி விடும். இதற்கிடையில் நாங்கள் எவரேனும் வந்து விரட்டினால் ஜன்னல் வெளியே அமர்ந்திருக்கும் மந்தி பற்களைக்காட்டி எங்களை மிரட்டும். ஒரு சம்பவ தினத்தன்று நாங்கள் (சில நண்பர்கள்) வெளியே விளையாடிக் கொண்டிருக்கும்போது வழக்கம்போல் வானரப்படை ஒன்று போர் தொடுத்து எங்கள் தோட்டங்களை நெருங்கிக் கொண்டிருந்தது. அவைகளின் பழைய அட்டகாசங்கள் என் அண்ணன் கண்களின் முன் சட்டென்று தோன்ற, அந்த சமயத்தில் அவன் கைகளில் கூரிய ஒரு சிறு கருங்கல்லும் கிடைக்க அதை வானரப்படை மீது வீறு கொண்டு வீசினான். அது ஒரு பெரிய வானரத்தை நெருங்க 5 அடி இருக்கும்போது அனைவரும் ஜீபூம்பா போல் விருட்டென்று மாயமாகி விட்டனர். கல் அதன் மீது பட்ட சமயத்தில், அது திரும்பிய நொடிப்பொழுதில், அரை நொடி கால தாமதத்தால். அதன் கண்களில் வசமாக சிக்கினேன். திறந்த வாயுடன் ஒரே தாவலில் 10 அடியைக் கடந்து என்னை almost நெருங்கிவிட்டது. வடிவேலு comedy யில் வருவதுபோல் school competition-ல் கூட அப்படி நான் ஓடியதில்லை. அங்கிருந்து வீடு 100 மீட்டர் தான். ஓடிய வேகத்திலேயே 3 அடி இருந்த gate ஐ அப்படியேத் தாண்டி வீட்டுக்குள் ஓடி விட்டேன். அதுவும் தாண்டி வாசலில் ramp வரை வந்து விட்டு, அங்கே உட்கார்ந்திருந்த என் அப்பாவைப் பார்த்து விட்டு "ஒன் மவன் வெளியே வராமையா போயிடுவான், கவனிச்சுக்கறேன், கிர்ர்" என்று பல்லைக் காட்டிவிட்டுச் சென்றது. அன்றிலிருந்து ஒரு மாதம் வெளியே வருவதற்கு முன் satellite மூலம் வானரங்களின் movement ஐ observe செய்து விட்டே வெளியே சென்றேன். வாரணங்களைப் போல வானரங்களும் நல்ல memory உண்டா என்று தெரிய வில்லை, அது போல குரங்கு கடிக்கு மருந்து உண்டா என்றும் தெரியவில்லை. பழி ஓரிடம், பாவம் ஓரிடம்!

அப்படிப்பட்ட குரங்குகளே நெய்வேலியில் யானை மணி ஓசை கேட்டால் 1 km radius க்கு அப்பால் சென்று விடும். திருவஹிந்தபுரத்திலிருந்து நாராயணன் என்ற பெயருடன் ஒரு யானை அப்பொழுதெல்லாம் எப்பொழுதாவதொருமுறை நெய்வேலி வருவதுண்டு. ஸத்ஸங்கத்தில் மரத்தின் கீழே நிற்க வைக்கப்பட்டிருக்கும். அந்த வீட்டின் மாமி அதற்கு ஒரு லிட்டர் coffee கொடுப்பார்கள், எம்மாத்திரம்! குடித்து முடித்ததும் "நன்னாருக்கா நாராயணா?" என்று அந்த மாமி கேட்டால் அற்புதமாக தலையாட்டும். அது குளிப்பதே ஒரு அழகு. அதன் முன்னங்கால்களுக்கிடையே அங்குசத்தை வைத்து விட்டு அதன் கால்களின் மீதே சாய்ந்துகொண்டு பாகன் உறங்குவார். அவரைத்தட்டி எழுப்பி அந்த அங்குசத்தைத் தொட்டுக்காட்டி அதை எடுக்க சொல்லுமே அன்றி அதுவே எடுக்காது. அந்த யானை வருவதால் குரங்குகள் தொல்லை இருக்காதே என்று சந்தோஷப்பட்டாலும் அது எங்கள் தெருவுக்குள் enter ஆகும்போது எங்கள் வீட்டு பாமா (பசு) யானை பலம் பெற்று புளிய மரத்திலேயே கட்டியிருந்தாலும் பெயர்த்துக்கொண்டு கண்காணாமல் போய் விடும். பிறகு அவளைத் தேடிக்கொண்டு ஓடுவது எங்களுக்கு ஒரு பெரிய வேலை. அப்பொழு நாராயணனுக்கு 12 வயது. இப்பொழுது 40 இருக்கும். Lock-down முடிந்ததும் திருவஹிந்தபுரம் சென்று அதைப் பார்த்து விட்டு வர ஆவல். 

இந்த வாரத்தின் ரசித்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்:


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் சந்திக்கும் வரை... 

நட்புடன் 


வெங்கட் நாகராஜ் 
புது தில்லி

48 கருத்துகள்:

  1. ஏழரை இன்றி எட்டு ஏது?..
    உயர்நிலையை எட்டுவதும் ஏது!...

    நலமே வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஏழரை இன்றி எட்டு ஏது?// உண்மை தான் துரை செல்வராஜூ ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. துரை செல்வராஜு சார்... நல்லா சொல்லியிருக்கீங்க. 7 1/2 இல்லாமல் உயர் நிலை எட்டுவது கடினம்.

      நீக்கு
    3. 7 1/2 இல்லாமல் உயர் நிலை எட்டுவது கடினம். உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  2. பதிவு நன்றாக இருந்தது. யானையைப் பற்றிய கட்டுரை வெகு சிறப்பு. நேட்டிவிடி த்வனியில் எழுதும்போது (வட்டார வழக்கு) மனதுக்கு நெருக்கமாக இருக்கும். உங்கள் நண்பருக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு இங்கும் வேலைகள் அதிகரித்து இருக்கிறது.....ஆனால் என் வேலை அப்படி இல்லை வேலைக்கு செல்ல வேண்டும் என்பதுமட்டுமல்ல தினமும் பல நூறு கஸ்டமர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. அணியும் முக கவசத்தின் மீதுள்ள நம்ம்பிக்கையோடு நாட்கள் கடந்து கொண்டிருக்கின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டிலிருந்து வேலையும் கடினம். தினமும் பலரை சந்திக்க வேண்டியிருப்பதும் கடினம் தான். நல்லதே நடக்க வேண்டும் என்பதே அனைவருடைய பிரார்த்தனையும் மதுரைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. எனக்கும் பல தளங்கள் சென்று படிக்கும் சந்தர்பங்கள் குறைந்து கொண்டே வருகின்றது. காரணம் முன்பு 1 மணிக்கு தூங்க சென்று காலை 5 மணிக்கு எழுதுந்திருப்பேன் ஆனால் கொரோனா பாதிப்பிற்குள்ளாகி மீண்டு வந்தபின் இப்போது உடம்பு மிகவும் டையர்டாகி விடுகிறது இப்போது காலை 4 மணிக்கு எழுந்திருந்து இரவு 10 மணிக்கு எல்லாம் தூங்க சென்றுவிடுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வாரம் முழுவதுமே யாருடைய பதிவுகளும் படிக்க இயலவில்லை. என்னுடைய தளத்தில் முன்பே எழுதி வைத்ததை, Schedule செய்து வைத்தது தான் வெளியாகி வருகிறது. சனி், ஞாயிறில் தான் எழுத வேண்டும்! முடிந்த போது பதிவுகளைப் படிக்கலாம் மதுரைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வாசகத்தை ரசித்தேன்.  எனக்கு தினசரி அலுவலகம் செய்யவேண்டிய நிலை மட்டுமல்லாது பழைய மாதிரி முழு அளவில் தொடங்கி ஒரு மாதமாகி விட்டது!  தீநுண்மி குறைவதாய் இவர்கள் சொன்னாலும் அந்த அளவு குறையவில்லை என்பதே உண்மை.  சென்ற வெள்ளி என் நண்பன் ஒருவன் பலியானான் அதற்கு.

    விளம்பரம் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தீதுண்மி - கணக்கு வழக்குகள் இப்போது பார்ப்பதே இல்லை - அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறி என்பதால். நண்பரின் இழப்பு - வேதனை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை - வாழ்த்துகள்.

    நாராயண யானை மிக சுவாரசியம்.

    பழைய பதிவு - சுவாரஸ்யமான கதை என்று தெரிகிறது.  எட்டு வருடங்கள் ஆகிவிட்டன.  இப்போதாவது சஸ்பென்ஸை உடைக்கலாமே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி ஸ்ரீராம்.

      யானை - :) நன்றி.

      சஸ்பென்ஸ் - ஹாஹா! நல்ல முடிவு தான். மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும் என நினைத்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. எங்கும் ஆணிகள் தொடர்வது வழக்கமாகிவிடும் போல...

    வானரம், அவரின் அப்பாவை ஏதும் செய்யவில்லை சந்தோசம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆணிகள் - தொடர்ந்து கொண்டிருக்கிறது தனபாலன்.

      வானரம் - நல்லவேளை அவரின் அப்பாவை ஒன்றும் செய்யவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. எட்டுக்குள் ஏழரை அருமையான கண்டு பிடிப்புதான் ஜி.

    ஆணிகள் அதிகம் ஹா.. ஹா.. ஹா..

    விளம்பரக்காணொளி ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு வேலை அதிகரித்து இருப்பதாகத்தான் சொல்கிறார்கள்.
    கிடைக்கும் நேரத்தில் ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். பதிவு எப்போது வேண்டுமென்றாலும் படிக்கலாம்.

    யானையைப்பற்றிய கட்டுரை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு நேரம் காலம் இல்லாமல் வேலை அதிகரித்து இருக்கிறது!

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. வாசகம் அருமை ரொம்ப யதார்த்தம்.

    விளம்பரம் இடையில் சிரித்துவிட்டேன் அந்தப் பாட்டி ஓட்டியது, வாங்குபவர் பானட் அழுத்தி மூடும் போது ஜெர்க் ஆனது!! கடைசியில் வரும் வாசகம்!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      விளம்பரம் - :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. வாரணங்களைப் போல வானரங்களும் நல்ல memory உண்டா என்று தெரிய வில்லை, அது போல குரங்கு கடிக்கு மருந்து உண்டா என்றும் தெரியவில்லை. பழி ஓரிடம், பாவம் ஓரிடம்!//

    வாரணங்கள் - வானரங்கள் சூப்பர் ரசித்தேன் சொல்லாடலை.

    குரங்குகள் கடித்தால் ரேபிஸ் ஊசிதான். நாய்க்கடிக்குப் போல போட்டுக் கொள்ள வேண்டும். எனக்கு அனுபவம் உண்டு. அதை முழு பதிவாக எழுதி வைத்திருந்த நினைவு. ஆனால் கொஞ்சம் எப்போதோ ஏதோ ஒரு கருத்தில் சொன்ன நினைவும். இன்னும் வேறு கில கடித்தாலும்....பதிவில் சொல்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் கீதாஜி. குரங்குக் கடித்தாலும் ரேபிஸ் ஊசி தான். தில்லி நண்பர் ஒருவருக்கு ஒரு முறை குரங்கு கடிக்க, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இந்த ஊசி தான் போட்டார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. அந்த வீட்டின் மாமி அதற்கு ஒரு லிட்டர் coffee கொடுப்பார்கள், எம்மாத்திரம்! குடித்து முடித்ததும் "நன்னாருக்கா நாராயணா?" என்று அந்த மாமி கேட்டால் அற்புதமாக தலையாட்டும். //

    ஹா ஹா ஹா ஹா ஹா

    அதன் முன்னங்கால்களுக்கிடையே அங்குசத்தை வைத்து விட்டு அதன் கால்களின் மீதே சாய்ந்துகொண்டு பாகன் உறங்குவார். அவரைத்தட்டி எழுப்பி அந்த அங்குசத்தைத் தொட்டுக்காட்டி அதை எடுக்க சொல்லுமே அன்றி அதுவே எடுக்காது. //

    சமத்து!!!

    எங்கள் வீட்டு பாமா (பசு) யானை பலம் பெற்று புளிய மரத்திலேயே கட்டியிருந்தாலும் பெயர்த்துக்கொண்டு கண்காணாமல் போய் விடும். பிறகு அவளைத் தேடிக்கொண்டு ஓடுவது எங்களுக்கு ஒரு பெரிய வேலை. //

    ஹா ஹா ஹா ஹா சிரித்து முடியலை. செம காமெடி யானை குரங்கு பசு என்று. மிக மிக ரசித்தேன். உங்கள் ஃப்ரென்ட் முரளிக்கு வாழ்த்துகள்.
    வாட்சப் ஸ்டேட்டஸ் மிகவும் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் இந்தப் பகுதி உங்களுக்கு மகிழ்ச்சி அளித்தது அறிந்து நானும் மகிழ்ச்சி கொண்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  13. ஒற்றனின் காதலி செம சுவாரசியமாகத் தெரிகிறது. அந்த இளைஞர் யாராக இருக்கும் சஸ்பென்ஸ் தாங்கலையே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சஸ்பென்ஸ்! :) நல்லது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  14. மின்னூலுக்கு வாழ்த்ஹ்டுகள் வெங்கட்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. நீங்கள் பிஸி என்று தெரிந்தது ஜி

    பரவாயில்லை மெதுவாக வாங்க.

    தொற்று ஒன்றும் குறையவில்லை என்றே தோன்றுகிறது.

    பதிவு அருமை ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நாட்களாகவே பணிச்சுமை அதிகமாகவே இருக்கிறது கீதாஜி.

      தொற்று - குறைவதாகச் சொன்னாலும் குறையவில்லை என்றே தோன்றுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. விளம்பரம், வாசகம், வாட்சப் ஸ்டேட்டஸ் ரசித்தேன்.

    உங்கள் பணி மிகுந்த பளு உள்ளதாகத் தெரிகிறது. தொற்று இங்கும் அதிகரித்துத்தான் வருகிறது. அது ஒரு வழி செய்துவிட்டுத்தான் போகும் போல.

    உங்கள் நண்பர் எழுதியிருப்பது நல்ல நகைச்சுவையுடன் அருமை.

    பின்னோக்கிய பதிவு - கதை நல்ல விறு விறுப்பாக இருக்கும் போலத் தெரிகிறது

    அனைத்தும் ரசித்தேன் ஜி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      நீக்கு
  17. https://drive.google.com/file/d/0ByI3HLuz1uGVV0Vod3JhYzR3ekE/view

    http://tamilpdfworld.blogspot.com/2016/12/otranin-kathali.html

    ஒற்றனின் காதலிக்கு லிங்க்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... இணையத்தில் இருக்கிறதா இந்த நூல்! நன்றி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. மிக மிக இனிமை. அன்பு வெங்கட் இவ்வளவு வேலை
    கொடுக்கிறார்களா.
    உங்கள் இடுகைகள் கூட குறைந்து விட்டனவோ .நாந்தான் கவனிக்கவில்லையா.
    பத்திரமாக இருங்கள்.
    நெய்வேலி சம்பவம் சிரிப்பு வந்தாலும் அந்த அவஸ்தை புரிகிறது.
    நாராயண யானையை எனக்கும் பார்க்க ஆவல் வருகிறது.

    படா கில்லாடி கார் ஆக இருக்கே.
    பழைய கார்ப்படம் ஒன்று.''த பக்'' .என்று நினைக்கிறேன்.
    அட்டகாசம் செய்யும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

      நீக்கு
  19. இனிய நட்புகள் நன்றாக வளரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நட்பு - தொடர்வதில் மகிழ்ச்சி தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  20. Difficult time for all of us. Tough time for Office goers. Fear is with all of us. Minding our minds is most important during pandemic. We will win the corona.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் அலுவலகம் சென்று திரும்புவது கடினமாகவே இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  21. வெங்கட்,

    விளம்பரம், வாசகம், வாட்சப் ஸ்டேட்டஸ் அனைத்தும் சிறப்பு.

    ஆணிகளை ஒன்றுவிடாமல் பிடுகங்கச்சொல்லி இங்கேயும் பிக்கள் பிடுங்கல்கள் ஜாஸ்த்தி என்று சொல்வதற்கில்லை. மின்னூல் தரவிறக்கத்திற்கு எனக்கு(outside India) அனுமதி மறுக்கப்படுகிறது.

    "எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சிக்கோ…. அதில் எத்தனை ஏழரை இருக்கு என்பதை எண்ணிக்கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோயில் பிள்ளை.

      மின்னூல் - தளத்தின் முகவரியில் amazon.in என்பதற்கு பதில் amazon.uk என்று மாற்றி திறந்து பாருங்கள். வேலை செய்யும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  22. ஒற்றனின் காதலி - முடிவே தெரியவில்லையே நண்பரே. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே சுட்டி தந்திருக்கிறார்கள்! முடிந்தால் படிக்கலாமே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார் ராஜசேகர் ஜி.

      நீக்கு
  23. புதுமையாக கலந்து கட்டி எழுதியாருக்கிறீர்கள். எனக்கும் இது மாதிரி எழுத ஆசையிருக்கிறது. பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் எழுதலாமே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞானசேகரன் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....