சனி, 8 ஆகஸ்ட், 2020

காஃபி வித் கிட்டு – மகிழ்ச்சி – அணிலார் – போயே போச்சு – விளம்பரம் – ஆன்லைன் க்ளாஸ்



காஃபி வித் கிட்டு - 80 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

வயது செல்லச் செல்ல, தோல் சுருங்குகிறது; ஆனால் மகிழ்ச்சியை விட்டு விட்டால் வாழ்வே சுருங்கி விடுகிறது – சாமுவேல் ஸ்மைல்ஸ் 

இந்த வாரத்தின் தகவல் – திரும்பி வந்த அணிலார்:


என் வீட்டு ஜன்னலில் வந்து தங்கியிருந்த அணிலார் பற்றியும் அது காணாமல் போனது பற்றியும்  முன்பு எழுதி இருந்தேன். கடந்த ஒரு வாரமாக மீண்டும் என் வீட்டு ஜன்னலில் அணிலார் – ஒன்றல்ல! மூன்று அணில்கள் தினம் தினம் வருகின்றன! காலையில் இருப்பதில்லை! மாலையில் நான் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும்போது ஜன்னலில் மரக்கதவுக்கும், கம்பி வலைக்கும் உள்ள இடைவெளியில் மூன்று அணில்கள் சுருண்டு படுத்துக் கொண்டிருக்கின்றன! அவ்வப்போது சப்தம் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. முன்பு போல குடித்தனம் நடத்துகின்றனவா இல்லை Bed and Breakfast மாதிரி இரவு தூங்குவதற்கு மட்டும் இங்கே வருகின்றனவா என்பது புரியவில்லை! இந்த மூன்று அணில்களும் இப்போது சமையலறையில் நான் செல்லும்போது பயப்பட்டு ஓடுவதில்லை! ஒய்யாரமாக ஒரு பார்வை! பிறகு தன் ஓய்வைத் தொடர்கின்றது! அலைபேசி கேமரா மூலம் எடுத்த ஒரு நிழற்படம் மேலே இணைத்திருக்கிறேன். அணில் தவிர சில பல்லிகளும் சுதந்திரமாக, சுவற்றில் ஓடாமல் தரையில் ஓடுகின்றன! தனியாத்தானே இருக்க நீ! நீ நடக்கும்போது நான் பார்த்து ஒதுங்கிக் கொள்வேன் பயப்படாதே! என்று சொல்லிக் கொண்டிருப்பது போல தெரிகிறது! சில பல குட்டிகளும் போட்டு அதனதன் பாதையில் சென்று விட்டது – இப்போது தாய்பல்லி மட்டும் இங்கேயே இருக்கிறது! திரும்பவும் குட்டிகள் வரலாம்! 

அலுவலகம் - கோவிட் போயாச்சு: 

தொடர்ந்து அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக பிரிவுத் தலைவர்கள் அனைத்து அலுவலகர்களையும் தினமும் வர வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். நேற்று 20 பேர் பங்குகொண்ட அலுவல் சம்பந்தமான ஒரு சந்திப்பு இருந்தது! மாஸ்க் அணிந்து கொண்டிருந்தாலும் போதிய இடைவெளி இல்லை! கோவிட் காலம் என்று சொன்னபோது ஒரு மூத்த அதிகாரி சொன்னது – “என்ன கோவிட்! அதெல்லாம் இப்ப இல்ல! இட்ஸ் கான்! போயே போச்சு! போயிந்தி!” என்று அமிர்தாஞ்சன் விளம்பரம் மாதிரி சொல்கிறார்! வேலை அதிகரித்து விட்டது! அதனால் எல்லோரும் தினமும் அலுவலகம் வர வேண்டும் – வீட்டிலிருந்து வேலை செய்வது போதாது! அலுவலகம் வந்தே ஆகவேண்டும் என்று சொல்லி விட்டார்கள் – பல பிரிவுகளில்! அதனால் கொஞ்சம் பதட்டமான சூழல் தான் அலுவலகத்திலும்! முடிந்த வரை பாதுகாப்புடனேயே சென்று வருகிறோம்! தீதுண்மி பாதிப்பு விரைவில் குறைய வேண்டும் என்ற பிரார்த்தனைகளோடு! 

இந்த வாரத்தின் ரசித்த பாடல்: 

இந்த வாரத்தில் ரசித்த ஒரு பாடல் பற்றிய தகவலைப் பார்க்கலாம்! இந்த வாரமும் ஒரு பஞ்சாபி பாடல் தான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகும் பாடல். பஞ்சாப் மாநிலம் எனக்குப் பிடித்த மாநிலங்களுக்குள் ஒன்று – அங்கே கிராமியச் சூழல் எப்படி இருக்கும் என்பதை இந்தப் பாடலில் நீங்கள் பார்க்க முடியும். பாருங்களேன்!

 

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்: 

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக – ஏசியன் பெயின்ட்ஸ் விளம்பரம் ஒன்று – ஆங்கில சப்டைட்டில் இல்லை என்பது ஒரு குறையாக இருந்தாலும், ரசிக்கலாம்! வீட்டில் தாத்தாவும் பேரனுமாகச் செய்ய நினைக்கும் அனைத்திற்கும் தடை போடும் மகன்! பாருங்களேன்!


பின்னோக்கிப் பார்க்கலாம்: 

எனது வலைப்பூவில் இதே நாளில் 2012-ஆம் வருடம் எழுதிய ஒரு பதிவு – கண் திருஷ்டி பொம்மை செய்பவருடன் ஒரு உரையாடல். எதைப் பற்றிய பதிவு அது? அப்பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.

ஊர்களில் வீடுகள் மற்றும் கடைகளில் கண் திருஷ்டி பொம்மை அல்லது கண்ணேறு பொம்மைகள் தொங்கவிடப்படுவதை நாமெல்லாம் பார்த்திருப்போம். பார்ப்பதற்கு அசுரர்கள் [அ] அரக்கர்கள் போல இருக்கும் இந்தப் பொம்மைகளை வீட்டு வாசலிலோ, புதிதாய் கட்டப்படும் கட்டிடங்களின் வெளிப்பக்கத்திலோ கட்டி வைத்தால் தீய சக்திகளிலிருந்தும், தீய நோக்கோடு பார்ப்பவர்கள் கண்ணடியிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கும் என்பது நம்பிக்கை. வட இந்தியாவில் ஓடும் எல்லா வாகனங்களிலும் பின்பக்கம் வாகனத்தின் பதிவு எண் எழுதியிருக்கிறதோ இல்லையோ நிச்சயமாக “Bபுரி நசர் வாலே தேரா மூ காலா” என எழுதியிருக்கும். இப்படி கண் திருஷ்டிக்காகக் கட்டப்படும் பொம்மைகள் எங்கே செய்யப்படுகிறது, அவர்களுக்கு என்ன வருமானம் கிடைக்கும் என்பது பற்றி என்றைக்காவது தோன்றியிருக்கிறதா நமக்கு? இவர்களைப் பற்றி நிச்சயம் யாருமே நினைத்திருக்க மாட்டோம்!

முழுபதிவும் படிக்க ஏதுவாக சுட்டி கீழே. 


இந்த வாரத்தின் ரசித்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்:


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் சந்திக்கும் வரை... 

நட்புடன் 


வெங்கட் நாகராஜ் 
புது தில்லி

30 கருத்துகள்:

  1. தீநுண்மி விரைவில் முற்றிலுமாக ஒழியட்டும்.

    வேலையை விடவும் முடியாது, வேலைக்கு போகாவிட்டாலும் அரசுதான் என்ன செய்ய இயலும் ?

    நானும் இப்போது சில நேரங்களில் பஞ்சாபி பாடல் கேட்கிறேன் ஜி இசைக்கு மொழி பேதமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீதுண்மி விரைவில் முற்றிலுமாக ஒழியட்டும் - அது தான் எல்லோருடைய பிரார்த்தனைகளும் கில்லர்ஜி.

      நீங்களும் பஞ்சாபி பாடல்கள் கேட்பது அறிந்து மகிழ்ச்சி. இசைக்கு மொழி பேதமில்லை என்பது உண்மையே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. கண்ணில் நீர் பனிக்க வைத்தது அந்த விளம்பரம்.what a concept. Lovely picturization Anna

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அப்பாவி தங்கமணி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. தீதுண்மி விரைவில் அழியட்டும்...

    பஞ்சாபி பாடல், ஏதோ ஒரு தமிழ் பாடல் நினைவுக்கு வருகிறது... அதை சொல்ல முயற்சி செய்தாலும் முடியவில்லை...!

    விளம்பரம் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி நானும் முயற்சிக்கிறேன் ஆனால் மெட்டு ஏதோ உதடுவரை வருகிறது... வெளிவர மறுக்கிறது.

      நீக்கு
    2. தீதுண்மி விரைவில் அழியட்டும் - அது தான் எல்லோருடைய பிரார்த்தனைகளும் தனபாலன்.

      பஞ்சாபி பாடல் நினைவூட்டிய தமிழ்பாடல் - நினைவுக்கு வந்தால் சொல்லுங்கள்! எனக்கு அப்படி ஒரு பாட்டும் தோன்றவில்லை!

      விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. காணொளி விளம்பரம் நன்று. வாட்ஸ் அப் ரசனை.

      நீக்கு
    4. உங்களுக்கும் பாடல் நினைவுக்கு வந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    5. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அணில்கள் திரும்பி வந்தது மிக்க மகிழ்ச்சி.  சந்தோஷம்.   அதே அணில் குடும்பமா?  காலியான இடம் என்று வேறு வந்து குடியேறி விட்டனவா தெரியவில்லையே!

    இங்கும் கோவிட் பயங்கள் விலகி அலுவலகங்கள் முழு வீச்சில் தொடங்கி  ஒரு மாதமாகிறது.  ஒரு விதத்தில் அவஸ்தைதான்.

    விளம்பரம் - உணர்வுபூர்வம்.

    பழைய பதிவு - மீண்டும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே அணில் குடும்பமா என்பதைத் தெரிந்து கொள்ள முடியாதே ஸ்ரீராம்! எல்லாம் ஒன்று போலவே இருக்குமே! :) மூன்று அணில்கள் - இப்போது கூட சமையல் அறையில் நான் உலவும் போது ஒரு பார்வை பார்த்துவிட்டு அது தன்னிச்சையாக படுத்துக் கொண்டது!

      ஒரு விதத்தில் அவஸ்தை - உண்மை.

      விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      பழைய பதிவு - மீண்டும் படித்து ரசித்ததற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. மிகவும் கடினமான காலம். விரைவில் வைரஸ் குறைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீதுண்மி விரைவில் குறைந்து இல்லாமல் போக வேண்டும் - பார்க்கலாம் எத்தனை நாட்கள்/மாதங்கள் ஆகின்றது என. பிராத்தனை செய்வதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லையே கயல் இராமசாமி மேடம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. தீதுண்மி விரைவில் விலகும் என நம்புவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீதுண்மி விரைவில் விலகும் என நம்புவோம் - நம்பிக்கை தான் வாழ்க்கை கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வாசகம் நன்றாக இருக்கிறது.
    அணிலார், பல்லி எல்லாம் எல்லாம் வீட்டில் அடைக்கலம் வெயில் கொடுமை வெளியே இல்லையா?

    பாடல் நன்றாக இருக்கிறது. காணொளிகள் இரண்டும் அருமை.
    மகனுக்கு பழைய படம் உணர்த்தி விட்டது. அப்பாவின் செய்கைகளை தடை சொல்லாமல் இருக்க வைத்து விட்டது மகிழ்ச்சி.

    //தீதுண்மி பாதிப்பு விரைவில் குறைய வேண்டும் என்ற பிரார்த்தனைகளோடு! //
    பத்திரமாக வேலைக்கு போய் வாருங்கள், விரைவில் சரியாகும் என்று நம்புவோம், பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      அணிலார், பல்லி எல்லாம் வீட்டில் - வெயில் கொடுமை தான்! நமக்குத் தொந்தரவு இல்லாமல் அவை உலவட்டும் என அப்படியே விட்டு விட்டேன்!

      பாடல், காணொளிகள் பிடித்ததில் மகிழ்ச்சி.

      பத்திரமாக வேலைக்கு போய் வாருங்கள் - அப்படியே அம்மா. நலமே விளையும் என்ற நம்பிக்கையோடு நாட்கள் நகர்கின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. சமூக இடைவெளி என்றால் கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தான் இருக்கணும் . மண் சுவர் வீட்டில் இருந்தாலும் சந்தோஷத்தோடு பாடுகிறார்கள் கதம்பம் நன்றாக உள்ளது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமூக இடைவெளி - ஜாக்கிரதையாகவே இருக்கிறேன்.

      மண்சுவர் வீட்டில் இருந்தாலும் சந்தோஷத்துடன் பாடுகிறார்கள் - பஞ்சாப் கிராமங்களில் இப்படியான வீடுகள் இன்றைக்கும் உண்டு.

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அபயா அருணா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. காஃபி வித் கிட்டு அனைத்துப் பகுதிகளையும் ரசித்தேன்.

    கோவிட் விரைவில் ஒழிந்து எல்லோரும் நலம் பெற வேண்டும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      கோவிட் விரைவில் ஒழிய வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பமும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. அணில் பிரசவத்திற்குப் பிறந்த வீட்டிற்குப் போயிருந்ததோ?!!!! இப்ப 'புகுந்த' வீட்டிற்கு வந்தாச்சு போல! ஹா ஹா ஹா. பல்லிகள் இங்கும் இருக்கின்றன. கொஞ்சம் நாம் கவனமாக இருந்தால் போதும் அவங்க அவங்கபாட்டுக்கு போயிக்கட்டும்.

    பஞ்சாபி பாடல் நன்றாக இருக்கிறது ஜி. பொதுவாகவே பஞ்சாபிப் பாடல்கள் ஃபாஸ்ட் பீட் உற்சாகம் அளிப்பதாக இருக்கும் என்பதால் நான் கேட்பதுண்டு. கிராமம் என்ன அழகாக இருக்கிறது!

    சமூக இடைவெளி பற்றிச் சொல்லவே வேண்டாம் மக்கள் எவரும் பின்பற்றுவதில்லை ஜி. ஜாலியாக இருக்காங்க தொற்று பயம் போய்விட்டது போலும். நீங்கள் கவனமாக இருங்க ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அணில் பிறந்த வீட்டிற்குப் போயிருந்ததோ? ஹாஹா... தெரியவில்லை! இவை அதே அணிலா இல்லை வேறு அணில்களோ தெரியவில்லை! இருந்தாலும் அவை தன்னிச்சையாக தினம் மாலை வந்து காலையில் புறப்பட்டுச் சென்றுவிடுகின்றன கீதாஜி.

      பஞ்சாபி பாடல் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. ஃபாஸ்ட் பீட் பாடல்கள் தான் அதிகம்! கிராமங்கள் அங்கே வெகு அழகு. ஒன்றிரண்டு கிராமங்களுக்குச் சென்றதுண்டு.

      சமூக இடைவெளி - யாருமே பின்பற்றுவதில்லை என்பது சரி தான். சொன்னாலும் புரிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. விளம்பரம் அருமை. அருமை. உணர்வு மிக்க விளம்பரம்.! ரசித்தேன்.

    வாட்சப் ஸ்டேட்டஸ் ஹா ஹா ஹா ஹா இப்போதைய சூழல்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. கண்திருஷ்டி பொம்மைகள் பின்னோக்கிப் பதிவிற்குப் போனதும் அட இந்தக் கோபுரம் கோயில் கலர் பார்த்த நினைவு...உடன் நினைவு வந்துவிட்டது நீங்கள் அடித்துப் பிடித்து தில்லியிலிருந்து வந்து உங்கள் குல தெய்வம் போய் வழிபட்ட பதிவு வாசித்த நினைவு...

    பாவம் இவர்களைப் போன்றோர். இக்குழந்தைகளைப் பற்றி நினைத்தாலும் மனது வேதனைப்படும். கல்வி வேலை என்று இவர்களின் எதிர்காலம் குறித்து.

    தேவையில்லா விடினும் இப்படியானவர்களிம் வாங்கி தேவைப்பட்டோருக்குக் கொடுப்பதும் உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னோக்கிச் சென்று பதிவு நினைவில் இருப்பதில் மகிழ்ச்சி.

      இவர்களைப் போன்றவர்களின் குழந்தைகள் கல்வி, வேலை என நிறைய கவலைகள் நமக்கு! அவர்கள் அப்படியே வாழ்க்கையை வாழப் பழகி விட்டார்கள் என்றே தோன்றுகிறது கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....