வெள்ளி, 9 அக்டோபர், 2020

சாப்பிட வாங்க – பப்பாயா சப்ஜி

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே… என்கிற எண்ணம்தான், எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது. 

***** 


பப்பாயா சப்ஜி

பப்பாயா – பாப்பா, ஆயா என்கிற வார்த்தைகள் சேர்ந்து பப்பாயா ஆனதோ என்று சந்தேகங்கள் கேட்கக் கூடாது என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன்! பப்பாயா என்று ஹிந்தியில் அழைக்கப்படும் காய்/பழம் எது தெரியுமா? நமது பப்பாளியைத் தான் இங்கே பப்பாயா என்று ஹிந்தியில் அழைக்கிறார்கள். நல்ல சத்து நிறைந்த பழம் பப்பாளி. வடக்கே இந்த பப்பாளி பழத்தின் பயன்பாடு மிகவும் அதிகம். தினமும் சாப்பிடுபவர்கள் கூட இருக்கிறார்கள் – இந்தப் பழத்தினை ஃப்ரூட் சாட்-ஆகவும் சாட் மசாலா தூள் தூவி சாப்பிடுவார்கள். நல்ல ருசியுடனும் இருக்கும். நம் ஊரை விட இங்கே அதிக ருசியாக இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. நம் ஊரிலும் காயாக இருக்கும் பப்பாளியில் சமையல் செய்வதுண்டு. இங்கே பப்பாளி காய்வாகாக இருக்கும்போது அதனைப் பயன்படுத்தி சப்பாத்திக்கு தொட்டுக்கையாக சப்ஜி செய்வார்கள். இந்த பப்பாயா சப்ஜி எப்படிச் செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள். முதலில் இதற்கு என்ன தேவை என்பதைப் பார்த்து விடலாம்! 

தேவையான பொருட்கள்: 

பப்பாயா (பப்பாளி காய்) – ஒன்று. 

எண்ணெய் – வறுக்க/வதக்க தேவையான அளவு 

ஜீரகம் – 2 ஸ்பூன் 

தக்காளி – 3 

இஞ்சி – சிறு துண்டு 

பச்சை மிளகாய் – 2 

காஷ்மீரி மிளகாய்த் தூள் – ½ ஸ்பூன் 

மல்லித் தூள் – 1 ஸ்பூன் 

மஞ்சள் தூள் – ½ ஸ்பூன் 

கரம் மசாலா – ½ ஸ்பூன் 

உப்பு – தேவையான அளவு. 

கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது – சிறிதளவு (அலங்கரிக்க!) அம்புட்டுதேன்! 

எப்படிச் செய்யணும் மாமு? 


பப்பாயா துண்டுகள் மற்றும் தக்காளி விழுது...

பப்பாளியினை தண்ணீரில் கழுவிக் கொண்டு துடைத்து விடுங்கள் – தண்ணீர் இருக்கக் கூடாது! பிறகு அதனை குறுக்குவாட்டில் நறுக்கி உள்ளே இருக்கும் வெள்ளை குண்டுமணிகளை (விதைகளை) முழுவதுமாக நீக்கி விடுங்கள். வெளித்தோலை முழுவதுமாக எடுத்து விடுவதோடு, உள் புறமும் மெல்லிய நூல் போல படர்ந்து இருக்கும் பகுதியையும் அகற்றி விடுங்கள். பிறகு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். 

தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சுத்தம் செய்து துண்டுகளாக்கி, ஒரு மிக்சி ஜாரில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் மைய அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

இந்த முன் வேலையெல்லாம் முடிந்த பிறகு, அடுப்பில் ஒரு வாணலி வைத்து, எண்ணெய் சேர்த்து, கொஞ்சம் காய்ந்ததும், நறுக்கி வைத்திருக்கும் பப்பாளி துண்டுகளை, கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து பிரட்டி கொஞ்சம் வதக்கிக் கொள்ளுங்கள். ஆங்காங்கே சிவப்புப் புள்ளிகள் வரும் வரை வதக்கிக் கொள்ளலாம் – சில நிமிடங்களில் நன்கு வதங்கி விடும். 



வதக்கி வைத்த பப்பாயா


எண்ணைய்யில் வறுத்து வைத்திருக்கும் பப்பாளிக் காய்கள் ஒரு புறம் இருக்க, வாணலியில் தேவையான அளவினை விட அதிக எண்ணெய் இருந்தால் எடுத்து விடலாம்! சரியாக இருக்குமெனில் அதில் ஜீரகம் சேர்த்து பொரிய விடுங்கள். 

அதில் அரைத்து வைத்திருக்கும் தக்காளி கரைசலைச் சேர்த்து வதக்குங்கள். சற்றே வதங்கிய பிறகு மஞ்சள் தூள், மல்லித் தூள், காஷ்மீரி மிளகாய்த் தூள் சேர்த்து, அவ்வப்போது கலக்கிக் கொண்டே இருக்கவும். எண்ணெய் பிரிந்து வந்த பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் வதக்கி வைத்திருக்கும் பப்பாயாவும் சேர்த்து கலக்கி, சிறிது நேரம் மூடி வைத்து வேக விடுங்கள். மிதமான சூட்டிலேயே நன்கு வெந்து விடும். அவ்வப்போது மூடியை எடுத்து கலக்கி விட்டால் போதும். ஐந்து முதல் எட்டு நிமிடத்தில் நன்கு வெந்து விடும் என்பதால் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை! நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியும் சேர்த்து கரம் மசாலா சேர்த்து ஒன்றிரண்டு நிமிடங்கள் வதக்கினால் போதும்! 

சுவையான பப்பாயா சப்ஜி தயார்! ரொட்டி, பூரி என இரண்டுடனும் சுவையான தொட்டுக்கை இந்த சப்ஜி!  காஷ்மீரி மிளகாய்த் தூள் சேர்த்திருப்பதால் நல்ல சிவப்பு வண்ணத்தில் சப்ஜி இருக்கலாம்! ஆனால் காரம் அவ்வளவு இருக்காது - பச்சை மிளகாய் காரம் தான்!

நீங்களும் உங்கள் பகுதியில் இந்த பப்பாயா கிடைத்தால் செய்து பாருங்கள். செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன்! பதிவில் சொன்ன விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன். நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை… 

நட்புடன், 



வெங்கட் நாகராஜ் 
புது தில்லி.

22 கருத்துகள்:

  1. பப்பாளியில் சப்ஜியா?  அட...   காயாகக் கிடைத்தால் (தேடிச்சென்று எங்கே வாங்கப் போகிறேன்!!) ஒருமுறை செய்து பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தேடிச் சென்று எங்கே வாங்கப் போகிறேன்!!// ஹாஹா... காய்கறி வாங்கச் செல்லும் போது கிடைத்தால் வாங்கி செய்து பாருங்கள் ஸ்ரீராம். நன்றாகவே இருக்கும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ப்ப்பயா சப்ஜி கேள்விப்பட்டதில்லை. பெங்களூர் வந்த பிறகு அவ்வப்போது ப்ப்பாளிப்பழம் சாப்பிடுவேன்.

    என் மச்சின்ன் ப்ப்பாளிக்காய் அபூர்வமா வாங்குவேன் என்பான். வெங்காயம் இல்லாத்தால் அவனைப் பண்ணிப் பார்க்கச் சொல்லுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வெங்காயம் இல்லாததால்// தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் அரைக்கும்போது ஒரு வெங்காயம், சில பற்கள் பூண்டு ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது உங்கள் விருப்பம். சுவை கொஞ்சம் மாறுபடும் அவ்வளவு தான் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. நிறையப் பண்ணிச் சாப்பிட்டுருக்கோம். அம்பத்தூரில் வீட்டிலேயே இருந்தது. சாம்பாரில் கூடப் போட்டிருக்கேன். கடலைப்பருப்புப் போட்டுச் சாப்பாட்டுக்குத் தொட்டுக்கக் கூட்டாகவும் பண்ணி இருக்கேன். மொளகூட்டல் மாதிரியும் பண்ணலாம். பிஞ்சுப் பப்பாளியைத் தோல் சீவித்துருவிக் கொண்டு உப்பு, மிளகு பொடி சேர்த்து எலுமிச்சம்பழம் பிழிந்து சாலடாகவும் சாப்பிடுவோம். வெங்காயம், தக்காளி வதக்கிக் கொண்டு பப்பாளித்துண்டங்களைச் சேர்த்து சாம்பார்ப் பொடி+உப்புச் சேர்த்தும் கூட்டாகப் பண்ணிச் சப்பாத்திக்குத் தொட்டுப்போம். இப்போல்லாம் இங்கே காய் அதிகம் கிடைப்பதில்லை. பழமாக வாங்கி அவ்வப்போது சாப்பிடுவோம். நல்ல ருசியாகவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பப்பாளி பழம் அடிக்கடி சாப்பிடுவதுண்டு. காயாக கிடைக்கும்போது சப்ஜியும் செய்வதுண்டு கீதாம்மா. திருவரங்கத்தில் பப்பாளி காய் காய்கறி மார்க்கெட்ட்டில் விற்று பார்த்ததில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

  4. ப்ப்பயா சப்ஜி கேள்விப்பட்டதில்லை முதல் முறையாக இப்போதுதான் அறிகிறேன்... இங்கே சாம்பார் வைத்தால் ப்ப்பயா சாம்பார்தன் அது தவிர கூட்டு பொரீயல் என்று சாப்பிடுவோம்.. இங்கே அந்த காயும் பழமும் நன்றாகவே கிடைக்கின்றது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பப்பாளி காய் அங்கே கிடைக்கிறது என்பதால், ஒரு முறை இப்படிச் செய்து சாப்பிட்டு பாருங்கள் - சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். சாதத்துடனும் கூட சிலர் சாப்பிடுவதுண்டு மதுரைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    இன்றைய வாசகம் நன்றாக உள்ளது. அருமையான சமையல் குறிப்பு. படங்களுடன், அளவான செய்முறை குறிப்புகளுக்கும் மிகவும் நன்றி.

    பப்பாளி காய்கள்,பழங்கள் இங்கும் கிடைக்கிறது. ஆனால், வாங்குவதேயில்லை. உடலுக்கு சூடுதரும் என்ற நினைப்பில் அதை தவிர்த்திருக்கிறோம். அம்மா வீட்டில் தோட்டத்தில் இந்த மரம் இருந்தது. காயைப் பறித்து எப்போதாவது பொரியல், பாசிப்பருப்புடன் கூட்டு செய்து சாப்பிட்டுள்ளோம் பக்கத்திலிருக்கும் அனைவரும் வந்து காய் பழங்களை கேட்டாலும் தந்து விடுவோம். இங்கு வந்த பின் மாமியார் வீட்டில் இந்தக் காயை வைத்து எதுவும் பயன்படுத்தியதில்லையென்பதால், வாங்கும் பழக்கமே இல்லை. ஆனால் சக்திகள் அதிகம் உள்ளது என்பதை அறிவேன்.

    ஒரு தடவை இந்தக் காய் வாங்கி தங்கள் செய்முறைபடி செய்து பார்க்க வேண்டும். அன்றொரு நாள் பகிர்ந்த தங்கள் செய்முறைபடி வாழைக்காயை வைத்து பூரிக்கு சப்ஜி செய்தேன். வீட்டில் அனைவரும் நன்றாக உள்ளதென பாராட்டினார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      உடலுக்கு சூடு தரும் - உண்மை தான். ஆனால் வடக்கில் இந்த பப்பாளி பழம் நிறையவே உண்பார்கள். தினம் தினம் சாப்பிடுபவர்கள் கூட உண்டு. கிடைத்தால் ஒரு முறை செய்து பாருங்கள்.

      வாழைக்காயில் சப்ஜி செய்து பார்த்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வாசகம் அருமை ஜி
    பப்பாளி ஸப்ஜி படங்களே அழகாக இருக்கிறது.

    பப்பாளி மருத்துவ குணங்கள் கொண்டது. கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      படங்கள் பிடித்ததில் மகிழ்ச்சி. பழங்கள் நிறைய மருத்துவ குணங்கள் கொண்டது என்றாலும் சிலர், குறிப்பாக கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது என்பது சரி தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வணக்கம் ஐய்யா.
    வாசகம் மிக அருமை.
    தினமும் இரவில் பழங்கள் மட்டுமே சாப்பிடும் புது வழக்கம் ஆரம்பித்துள்ளேன்.
    அதில் இந்த சீசனில் கொய்யாவும் பப்பாளியும் கிடைக்கின்றன.
    காயாக வாங்கி செய்து பார்க்கிறோம்.
    அது என்னவோ, சமயல் என்றால் உங்கள் எழுத்திற்கு புது உற்சாகம் வந்துவிடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அரவிந்த். வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      இரவில் பழங்கள் மட்டுமே உண்ணும் புது வழக்கம் - நல்லது. ஒத்துக் கொண்டால் தொடருங்கள்.

      பப்பாளி சப்ஜி செய்து பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.

      புது உற்சாகம் - :) நன்றி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பப்பாளி கூட்டு செய்வதுண்டு..நீங்கள் சொன்னதை அவசியம் முயற்சித்துப் பார்த்துவிடுகிறோம்..கொரோனா காலத்தில் இப்படிப் புதிதாக செய்து பார்க்க கொஞ்சம் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது...பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிது புதிதாக முயற்சி செய்வதும் ஸ்வாரஸ்யமாகவே இருக்கும் ரமணி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பப்பாயா சப்ஜி பார்க்கவே அழகாய் இருக்கிறது.
    காயில் கூட்டு, பொரியல் எல்லாம் செய்வோம்.

    சப்ஜி செய்து பார்க்க வேண்டும். எளிதாக இருக்கிறது செய்முறை.
    காய் கிடைக்கும் போது செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பப்பாளி காய் கிடைக்கும்போது செய்து பாருங்கள் கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. ஆகா...! இது புதுசா இருக்கே... ஒருமுறை இது போல் செய்து ருசிக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது இந்த முறையில் செய்து பார்த்து, ருசித்து விட்டு சொல்லுங்கள் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பப்பாளி எனக்கு ஓத்துக் கொள்வதுவில்லை. ஆனால் எப்போதாவது செய்வதுண்டு. Subji எளிய முறையில் ஆனால் சுவை மிக்க வகையில் செய்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் எப்போதாவது தான் செய்வேன் இந்த சப்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....