சனி, 3 அக்டோபர், 2020

காஃபி வித் கிட்டு – வெற்றி – விட்டுவிலக முடியாத மனிதர்கள் – அமைதி தரும் மெல்லிசை – விளம்பரம் - தக்குடு

காஃபி வித் கிட்டு – 86 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

துன்பத்தை தூரமாக வைத்து, 
இன்பத்தை இதயத்தில் வைத்து, 
நம்பிக்கையை நமக்குள் வைத்தால், 
எல்லாம் வெற்றியே! 
*****

இந்த வாரத்தின் எண்ணங்கள்: 

எத்தனையோ மனிதர்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். தற்பெருமை பேசுபவர்கள், அடுத்தவர்களிடம் குறை காண்பவர்கள், தான் ஒருவருக்குச் செய்யும் உதவியை சொல்லிக் காண்பித்துக் கொண்டே இருப்பவர்கள், மற்றவர்களை அவமதிப்பவர்கள் என பலரையும் நாம் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம். சிலரை பார்க்கும்போதே அவர்களை வெறுக்கும் அளவிற்கு அவர்களது நடவடிக்கைகள் இருப்பதுண்டு. இந்த மாதிரி எத்தனை எத்தனை மனிதர்களை நாம் நமது வாழ்வில் சந்திக்கிறோம். நம்மை சிறுமைப்படுத்தும் மனிதர்களிடமிருந்து விட்டு விலகி இருப்பதே நல்லது என்று எனக்குத் தோன்றும். ஆனால் பல சமயங்களில் அப்படி விட்டு விலகி இருக்க முடிவதில்லை! ஏனெனில் அவர்கள் நெருங்கிய சொந்தமாகவோ, நீண்ட நாள் நட்பாகவோ இருந்து விடுவதால்! வார்த்தைகளால் நம்மைக் குத்திக் குதறி, நம்மை உயிருடன் சாகடிக்கும் வார்த்தைகளைப் பேசும் சிலரை சந்தித்திருக்கிறேன் – எனது வாழ்வில். அவ்வப்போது இந்த மாதிரி பேசிவிட்டு, அடுத்த சில நிமிடங்களிலேயே எதுவுமே நடக்காத மாதிரி இருப்பார்கள்! இந்த மாதிரி மனிதர்களை என்ன செய்வது? ”போங்கடா நீங்களும் உங்க உறவும்/நட்பும் என்று விலகவும் முடியவில்லையே! மனது அமைதியை நாட, ஏதேனும் இசையைக் கேட்டு ஆறுதல் அடைவது மட்டுமே சாத்தியமாக இருக்கிறது! 

இந்த வாரத்தின் ரசித்த இசை: 

பல சமயங்களில் மனதுக்கு இதம் தருவதாக இசை அமைந்திருக்கிறது. பெரும்பாலும் சமைக்கும் நேரங்களில் யூட்யூபில் இசை கேட்டபடியே சமைப்பது வழக்கம். சமைக்கும்போது என்றில்லை, இதோ, இந்தப் பதிவினை தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போது கூட இசையைக் கேட்டுக் கொண்டே தான் தட்டச்சு செய்தேன். என்ன இசை என்று கேட்கிறீர்களா? திபெத்தியன் இசை! மெல்லிய ஒலியில் இசை ஒலித்துக் கொண்டிருக்க, மனதில் ஒரு அமைதி தோன்றுவது நிச்சயம். நீண்ட நேரம் (சில மணி நேரங்கள்) வரை ஒலிக்கும் அளவிற்கு இந்த இசைக்கோர்வைகளை யூவில் சேர்த்து வைத்திருக்கிறார்கள். மிகவும் நன்றாகவே இருக்கிறது சில இசைக்கோர்வைகள். உங்களுக்கு அமைதி தேவையெனில், நீங்கள் வேலைகளை கவனித்தபடியே இருக்க, பின்னணியில் இந்த இசையை ஒலிக்க விடலாம்! மிகவும் அமைதியான சூழலில் நீங்கள் இருப்பது போன்ற உணர்வு கிடைக்கும். ஆறு மணி நேரம் ஒலிக்கும் இந்த இசையினை முழுவதும் கேட்காவிடினும் சில நிமிடங்களாவது கேட்டு ரசிக்கலாம்.

   


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்: 

இந்த வாரத்தில் நாம் பார்க்கப் போவது ஒரு சிங்கபூர் விளம்பரம் – நல்ல விஷயங்களை அடுத்த தலைமுறைக்கும் கடத்தவேண்டியதைச் சொல்லும் விளம்பரம்! பாருங்களேன்.

   


சில விளம்பரங்கள் நம் மனதை மிகவும் தொட்டு விடுகின்றன. அப்படியான ஒரு விளம்பரம் இது! 

இந்த வாரத்தின் மின்னூல் தகவல் – ஷிம்லா ஸ்பெஷல்: 


இந்திய நேரப்படி, வரும் புதன் கிழமை மதியம் 12.29 வரை எனது மின்னூல் “ஷிம்லா ஸ்பெஷல்”-ஐ அமேசான் தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விருப்பம் இருப்பவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்! மின்னூலை படிப்பவர்கள் நூல் பற்றிய உங்கள் கருத்துகளையும் மின்னஞ்சல் மூலமாக தெரிவித்தால் எனது வலைப்பூவில் பகிர்ந்து கொள்வேன்! தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே. 


பின்னோக்கிப் பார்க்கலாம்: 

எனது வலைப்பூவில் இதே நாளில் 2012-ஆம் வருடம் எழுதிய ஒரு பதிவு – IRCTC ஒப்பந்த ஊழியர் ஒருவருடன் பேசியபோது கிடைத்த தகவல்களை அந்தப் பதில் சொல்லி இருந்தேன்! அப்பதிவிலிருந்து சில வரிகள் இங்கே. 

"அண்ணே, என் பேர் வேலு. நான் பன்னண்டாங்கிளாஸ் வரை படிச்சுருக்கேன். இந்த வேலைல சேர்ந்து மூணு வருஷமாச்சு. மாசத்துக்கு ஐயாயிரம் ரூபாய் சம்பளம். வேற எந்தவிதமான சலுகையும் கிடையாது – அதாவது மருத்துவ உதவி, GPF, பென்ஷன், ரயிலில் இலவச பயணம் போன்ற எதுவும் கிடையாது. வேலைக்குச் சேரும்போது சீக்கிரமே ரயில்வே துறையில் நிரந்தர ஊழியர் ஆக்குவோம்னு சொன்னாங்க. ஆனா, மூணு வருஷம் ஆயிடுச்சு, இன்னும் ஒண்ணும் செய்யல. வருடத்துக்கு ஒரு முறை சம்பளம் அதிகமாக்குவோம்ன்னு சொன்னதும் செய்யல! 

நான் வேலையில் சேரும்போது என் கூட 30 பேர் சேர்ந்தாங்க – சிலர் பத்தாவது வரை படிச்சவங்க, சிலர் பட்டதாரிகள், சிலர் கேட்டரிங் கூட படிச்சு இருக்காங்க. எல்லோருக்கும் இதே 5000 ரூபாய் தான் சம்பளம். 

மாசத்துக்கு ஐயாயிரம் சம்பளம் - அதுக்கு மொத்தம் 4 ட்ரிப் போவோம். சென்னையில் காலை 06.10க்கு ஏறினா அடுத்த நாள் காலை 10.30 மணிக்கு தில்லி போய் சேர்வோம். அன்னிக்கே சாயங்காலம் 03.50-க்கு ஏறினா அடுத்த நாள் நைட் 08.05க்கு சென்னை வந்துடுவோம். வந்தா, இரண்டு நாள் ரெஸ்ட். இந்த மாதிரி 4 அப், 4 டௌன். ஒரு ட்ரிப் போலைன்னா 1250 ரூபாய் சம்பளத்துல கட் பண்ணிடுவாங்க! 

முழுபதிவும் படிக்க ஏதுவாக சுட்டி கீழே. 


இந்த வாரத்தின் பிறந்த நாள் - தக்குடு: 

தக்குடு – இவரது நகைச்சுவை பதிவுகளை பதிவுலகில் பலரும் ரசித்ததுண்டு. நானும் நிறைய பதிவுகளை வாசித்து, சிரித்து சிரித்து வயிறு வலிக்கும் அளவெல்லாம் ரசித்திருக்கிறேன். உதாரணத்திற்கு அவரது ”டிரைவிங் டிரைவிங்” பதிவிலிருந்து ஒரு பகுதி கீழே. 

இங்க தோஹாவுக்கு வந்ததுக்கு அப்புறமும் எங்காத்துக்கு பக்கத்துல இருந்த பஸ் ஸ்டாண்டை பாத்து வச்சுண்டு பஸ்ல ஏறினா பஸ்ல நானும் டிரைவர் மாமாவும் மட்டும் தான். அடுத்த நாள் போனா பஸ்ஸை இன்டிகேட்டர் போட்டு ஓரம் கட்டி நிப்பாட்டியிருந்தார். உள்ள ஏறினா ‘ஐ அம் வெயிட்டிங் பார் யூ'னு சொல்லி ஆச்சர்யப்படுத்தினார். ‘கத்தார்ல கார் ஓட்டலைனா கழுதை கூட மதிக்காதுடா கோந்தை!’னு என்னோட அதிகாரி சொன்னதுக்கு அப்புறம் கார் டிரைவிங்ல போய் சேர்ந்தேன். டிரைவிங் ஸ்கூல்ல என்னோட ஆசான் ஒரு மலையாளி. ‘நாட்டுல டூவீலர் ஒடிக்குமோ?’னு கேட்டார். ‘நாட்டுல டூவீலர் ஓட்டும் பக்க்ஷே நம்மொட வண்டியில் பெடல் சவட்டினா மதி!னு பதில் சொன்னேன். அதுசரி சைக்கிளோ!!னு சொல்லி பாடத்தை ஆரம்பிச்சார். மேனுவல் வண்டில ஏகப்பட்ட வஸ்து இருந்தது. கால்ல கிளட்சு,ப்ரேக்கு,ஆக்ஸிலேட்டர், கைல ஸ்டியரிங் & கியர். பயந்து பயந்து ஓட்ட ஆரம்பிச்ச என்கிட்ட ‘பதுக்க பதுக்க கியரிட்டு ஒடிக்கனும்!’னு ஆசான் சொல்லிகுடுத்தார். கிளட்சும் கியரும் தான் ரொம்ப குழப்பமா இருந்தது. கிளட்ச்சை மிதிச்சுட்டு கியரை மாத்தாம திருதிருனு முழிப்பேன். இல்லைனா கிளட்சை மிதிக்காம கியரை ‘டடக்க்க்’னு மாத்துவேன். ரம் குடிச்ச குதிரை குலுங்கர மாதிரி வண்டி ஒரு குலுங்கு குலுங்கும். 
பதிவினை முழுவதும் படித்து ரசிக்க ஏதுவக சுட்டி கீழே… 


எதற்காக அவரது பதிவு பற்றி இன்றைக்கு? இன்று பிறந்த நாள் காணும் தக்குடு அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். சமீப காலங்களில் அவர் பதிவு எழுதுவது மிகவும் குறைந்து விட்டது! தக்குடு முழு நேர “குடும்பி” ஆகிவிட்டதால் பதிவுலகம் பக்கம் வருவதே இல்லை! அவரது பதிவுகளை ரசித்தவர்களுக்காகவாது அவ்வப்போது எழுத வேண்டும் தக்குடு! 

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! 

வேறு ஒரு பதிவுடன் மீண்டும் சந்திக்கும் வரை... 

நட்புடன் 



வெங்கட் நாகராஜ் 
புது தில்லி

24 கருத்துகள்:

  1. வழக்கம்போல் காணொளியை மத்தியானமாப் பார்க்கணும். ஐஆர்சிடிசியில் இன்னமும் நிலைமை அப்படியே தான் இருக்குனு நினைக்கிறேன். புதிய மின்னூலுக்கு வாழ்த்துகள். திபேத்திய இசை கேட்கவும் நன்றாகவே இருக்கும் என்பதை எங்கள் கயிலை யாத்திரையின் போது பார்த்திருக்கேன்

    தக்குடுவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். ஆனால் நகைச்சுவையில் குபீர் சிரிப்பை வரவழைப்பவர்களில் தக்குடு அவர் அண்ணா அம்பி மற்றும் டுபுக்கு ஆகியவர்கள் அருகே நெருங்கக் கூட முடியாது. தக்குடு விஸ்தாரமாக எழுதி வரவைக்கும் சிரிப்பை ஒரே வரி அல்லது வார்த்தையில் அம்பி செய்து காட்டிவிட்டு அடுத்ததுக்குப் போயிடுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய மின்னூல் இல்லை! ஏற்கனவே ஒரு முறை இலவசமாகத் தரவிற்க்கம் செய்யும் வசதி தந்திருந்தேன். இப்போது மீண்டும் ஒரு முறை. வெளியிட்டு மூன்று மாதங்களுக்கு மேலே ஆகிவிட்டது. இங்கேயும் தகவல் தந்திருந்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு

  2. என்னை பொருத்தவரையில் உறவோ நட்போ எதுவாக இருந்தாலும் ஏதாவது என்னை பற்றி தவறாக பேசினால் அப்படியே அவர்களை விட்டு விலகிவிடுவேன். அடுத்தவர் தயவை எந்த நேரத்திலும் எதிர்பார்ப்பதில்லை... ஆனால் இதுவரை எனக்கு தெரிந்து நேரில் பார்த்து பழகியவர்கள் யாரும் என்னை குறை சொல்லாதபடி எல்லோருக்கும் உதவியே வாழ்ந்து வந்து இருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விட்டு விலகி விடுவேன் - நல்ல கொள்கை! எல்லோரிடமும் அப்படி இருக்க முடியாது மதுரைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. கதம்பம் சுவாரஸ்யம்.  விளம்பரம் நெகிழ்ச்சி.  தக்குடுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.  மின்னூலுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். மின்னூல் - ஏற்கனவே வெளியிட்டது தான். இப்போது மீண்டும் தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை தந்திருக்கிறேன் - அவ்வளவு தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. //போங்கடா நீங்களும் உங்க உறவும்/நட்பும் என்று விலகவும் முடியவில்லையே//

    நான் மரணம்வரை அவர்களை ஒதுக்கி விடவே விரும்புவேன். இதுதான் எனது நடைமுறை இவைகளை புரிந்தவர் என்னிடம் கவனமாக கையாள்வர்.

    மின்நூல்கள் தொடரட்டும் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒதுக்கி விடவே விரும்புவேன்! ம்ம்ம்ம். சிலரிடம் இப்படியும் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது தான் கில்லர்ஜி. ஒரு தோழரை (தோழராக நினைத்தவரை) அப்படி ஒதுக்கி இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. இசை கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.................. ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இசை உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயஞ் செய்து விடல்

    சிரமம் தான்... ஆனால்...

    கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
    ஒன்றுநன்று உள்ளக் கெடும்

    இப்படி பல (42 ?) "இன்னா" இருந்தாலும்...

    இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
    இன்மையே இன்னா தது

    யூவில் சேர்த்ததை எனது கணினி பூமார்க்கெட்டில் (BookMark) சேர்த்து விட்டேன்... மின்நூலுக்கும் நன்றி ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னா செய்தாரை ஒறுத்தல் - சிரமம்தான்! ஆனாலும்! பல சமயங்களில் இப்படியே செய்திருக்கிறேன் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. இசை கேட்டேன். சில நேரங்களில் மனது சங்கடமாய் இருக்கும் நேரம் கேட்டு இருக்கிறேன்.
    அப்போது மனதுக்கு ஆறுதல் கிடைக்கும்.

    காணொளி அருமை. அன்பு கண்களில் நீரை வரவழைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதுக்கு சங்கடமாக இருக்கும் சமயங்களில் இந்த மாதிரி இசை இதமானது - உணர்ந்திருக்கிறேன் கோமதிம்மா.

      காணொளி - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. மின்னூலுக்கு வாழ்த்துகள். தக்குடுக்கு பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. திபெத்தியன் இசை மிக அருமை.சிங்கபூர் விளம்பரம் மனதை தொட்டுவிட்டது.தக்குடுவின் பதிவு சிரிப்பை வரவழைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    வாசகம் நன்றாக உள்ளது. கதம்பம் அருமை. உறவு, மற்றும் நட்பு எண்ணங்களை பற்றி நீங்கள் சொல்வதனைத்தும் உண்மைதான். சில உறவுகள் கசப்பை தந்தாலும், "நீரடித்து நீர் விலகாது." என்ற எண்ணம் நம்மைப் போன்றவர்களுக்கு வருவதால், பொறுமை காக்க வேண்டியுள்ளது.

    இசையை அமைதியாக பிறகு ரசித்துக் கேட்கிறேன்.

    விளம்பரம் நன்றாக நெகிழ்ச்சியுடன் இருந்தது.

    உங்களது மின்னூலுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.

    பதிவர் தக்குடு அவர்களுக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவரின் நகைச்சுவை எழுத்துக்களை நானும் ரசித்துப் படித்துள்ளேன். இந்த வார காஃபி வித் கிட்டு நன்றாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. சில மனிதர்கள் இப்படித்தான் எரிச்சலூட்டுவார்கள், ஆனால் அவர்களை விட முடியாது. விளம்பரம் அருமை. மற்றுமொரு மின்னூலுக்கு பாராட்டு. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எரிச்சலூட்டும் மனிதர்கள் - நிறையவே - தினம் தினம் இப்படியானவர்களை இங்கே பார்த்துக் கொண்டிருக்கிறேன் பானும்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. கதம்பம் ரசிக்கும்படி இருந்தது.

    தக்குடு டிரைவிங் மஹாத்மியமும் அங்கு சென்று வாசித்துப் பார்த்தேன். அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....