அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட தங்க மனசு - திருவரங்கம் தைத்தேர் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
"WE ARE HERE TO ADD WHAT WE CAN TO LIFE, NOT TO GET WHAT WE CAN
FROM LIFE." - WILLIAM OSLER.
******
முகநூல் இற்றைகள் - நம்பிக்கை - அய்யர் மலையில்
சந்தித்த பஞ்சாபி குடும்பம் - 4 ஃபிப்ரவரி 2023
சமீபத்தில் ஒரு வெள்ளி இரவு 11.30 மணிக்கு
நண்பரிடமிருந்து அழைப்பு.
“நாளை அதிகாலை திருவரங்கம் வருகிறேன். சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் திருச்சி
அருகே இருக்கும் சில கோவில்களுக்குச் சென்று தரிசனம் செய்ய ஆசை. நீயும் வருகிறாயா? உனக்கு வேறு ஏதும் வேலை
இருக்கிறதா?” என்று கேட்க, நான் உடனே “வா, சென்று வரலாம்!” என்று சொல்லிவிட்டேன். அதிகாலை ராக்ஃபோர்ட் விரைவு வண்டியில் திருவரங்கம்
வந்து சேர்ந்தார்கள் நண்பரும் அவரது இல்லத்தரசியும். கிட்டத்தட்ட 30 வருட நட்பு
எங்களுடையது.
காலையில் நான் தயாராகி திருவரங்கம் தாயார் சன்னதி அருகே இருக்கும் வடக்கு வாசல்
பகுதிக்கு சென்று சேர, அவர்கள் தங்கி இருந்த கிழக்கு உத்தர வீதி
வசுந்தராஸ்-லிருந்து வந்து சேர்ந்தார்கள். வீதி உலா வந்த நம்பெருமாளை சேவித்து, கோவிலுக்குள்
சென்று சக்கரத்தாழ்வாரை சேவித்துக் அங்கிருந்து புறப்பட்டோம்.
நண்பரது தாயார் வழி குலதெய்வம் குளித்தலையை அடுத்த
அய்யர் மலை என்பதை 2021-இல் தான் நண்பர் அறிந்து கொண்டிருக்கிறார். அதனால் அய்யர் மலை செல்ல வேண்டும் என 2021-ஆம்
வருடத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருந்தார் என்றாலும் ஏதேதோ தடங்கல்கள். இரண்டு முறை இங்கே பயணம் செய்ய இரயிலில் முன்பதிவு
செய்து பின்னர் தடங்கல் வர முன்பதிவை ரத்து செய்து கொண்டார்கள். இந்த முறை எதுவும் சொல்லாமல் கடைசி நேரத்தில் முன்
பதிவு செய்து புறப்பட்டு விட்டார்கள். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து குளித்தலை வரை
சென்று அங்கிருந்து ஒரு ஆட்டோ வைத்துக்கொண்டு கடம்பவனேஸ்வரரை தரிசித்த பிறகு
அய்யர் மலை சென்றடைந்தோம்.
அங்கே ஒரு வட இந்திய குடும்பத்தினரை சந்திக்க நேர்ந்தது. கிட்டத்தட்ட 14 வருடங்களாக இந்த அய்யர் மலை
அருள்மிகு சுரும்பார்குழலி உடனமர் அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலுக்கு
தெடர்ந்து வந்து கொண்டிருக்கிறார் அந்த வட இந்தியர் (திரு விஷால் சச்தேவா).
கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு முன்னர் திரு விஷால் அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த நல்ல
வேலை சில காரணங்களால் இல்லாமல் போக, குடும்பத்தில் கஷ்டம். அவரது தந்தையார் பார்த்த ஒரு சோதிடர் அய்யர் மலையில்
இருக்கும் இந்த இரத்தினகிரீஸ்வரர் ஆலயம் குறித்துச் சொல்லி, அக்கோவிலுக்கு சென்று
வழிபடுங்கள், நிச்சயம் நல்லது நடக்கும் என்று சொல்ல, இவர்களும் கோவிலுக்கு
வந்திருக்கிறார்கள்.
திரு விஷால் அவர்களும் நம்பிக்கையுடன், தனது மனைவி உடன், வடக்கிலிருந்து இங்கே
வந்து கோவிலில் அபிஷேக ஆராதனைகள் செய்திருக்கிறார். விரைவில் திரு விஷால் அவர்களுக்கு வேறு நல்ல வேலை
கிடைத்திருக்கிறது.
மீண்டும் வேலை கிடைத்ததில் அய்யர் மலை இறைவனின் பங்கு அதிகம் இருப்பதாக அவர் உணர, அந்த வருடத்திலிருந்து தொடர்ந்து ஒவ்வொரு
வருடமும் குடும்பத்துடன் இங்கே வந்து இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து ஊர்
திரும்புகிறார்கள்.
ஒரு வருடம் கூட இந்த வழக்கத்திலிருந்து அவர்கள் மாறவே இல்லை.
இத்தனைக்கும் அவருக்கு தமிழ் மொழி தெரியாது. ஆனாலும்
அவர் இங்கே வந்து சென்று கொண்டிருக்க ஒரே காரணம் இறைவன் மீது அவர் வைத்திருக்கும்
நம்பிக்கை.
அய்யர் மலையில் நாங்கள் சந்தித்த போது ஹிந்தியில் பேசியதில் அவர்களுக்கு அப்படி
ஒரு மகிழ்ச்சி.
தமது மொழியில் வேறிடத்தில் பேச ஒருவர் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவது வழக்கமான
விஷயம் தானே.
கோவில் குறித்தும், அங்கே செய்யும் பூஜைகள் குறித்தும், தலவரலாறு குறித்தும் நிறைய
விஷயங்களை எங்களிடம் பேசித் தெரிந்து கொண்டார்கள். இத்தனை வருடங்களாக இங்கே வந்து சென்றாலும் கோவில்
குறித்து இத்தனை தகவல்களையும் அவர்களது மொழியில் பேசி தெரிந்து கொள்ள முடிந்ததில்
அவர்களுக்கு பெருமகிழ்ச்சி.
மலையில் பூஜைகள் முடிந்து கீழே வரும்போதும் எங்களுடன்
வந்தார்கள்.
பேசிக்கொண்டே வந்தோம்.
எங்களது தொடர்பு எண்களையும் பரிமாறிக்கொண்டோம். இறைவன் மீது நம்பிக்கை மட்டும் வைத்துவிட்டால்
நமக்கு நல்லதே நடக்கும் என்பதை இவர்களைச் சந்தித்தபோது உணர முடிந்தது. பல கிலோமீட்டர் தொலைவிலிருந்து இங்கே வந்து இறைவனை
தரிசித்து செல்லும் அவர்களது நம்பிக்கையை என்ன சொல்ல! இறைவன் மனது வைத்தால், இறைவன் மீது நம்பிக்கை
வைத்தால் நல்லதே நடக்கும் என்பதை திரு விஷால் அவர்களின் கதை உணர்த்துகிறது அல்லவா?
நண்பரின் இந்த திருவரங்கம் பயணத்தில் நிறைய
கோயில்களுக்குச் சென்று வந்தோம்.
இந்த பயணத்தில் கிடைத்த
அனுபவங்கள் குறித்து வரும் நாட்களில் எழுதுவேன்.
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை
பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து…
திரு விஷால் சச்தேவா அவர்களும் அவர் தம் குடும்பத்தினரும் வாழ்க...
பதிலளிநீக்குநம்பிக்கையும் நல்லெண்ணமும்
என்றென்றும் வாழ்க..
காரணமின்றி எதுவும் நடப்பதில்லை. இந்த பயணமும் இந்த அறிமுகத்துக்கு கூட ஏதாவது காரணம் இருக்கக் கூடும்.
பதிலளிநீக்குநம்பிக்கை சிறப்பு... வாழ்க...
பதிலளிநீக்குநம்பிக்கை - வடக்கிலிருந்து தென்னகம் வந்து தரிசிப்பது வியக்க வைக்கும் விஷயம். பஞ்சாபி குடும்பம் - விஷால் அவர்களுக்கு நடந்தது நிஜமாகவே ஆச்சரியம் அவரது நம்பிக்கையும் அசாத்தியம்.
பதிலளிநீக்குஉங்கள் நன்பர் இத்தனை நாள் தடங்கலுக்குப் பின்னர் இப்படித் திடீரென்று கிளம்பி வருவதும் அவர்களுடன் செல்லும் போது இப்படி உங்களுக்குச் சந்திக்கக் கிடைத்து இங்கு பகிர்ந்து கொள்ளக் கிடைத்தது எல்லாமே ஏதோ ஒரு கணக்கில்தான் நடக்கிறது என்றும் தோன்றுகிறது...
கீதா
நம்பிக்கைதானே கடவுள்...
பதிலளிநீக்குஇறைவன் நம்பினோரை கைவிடுவதில்லை . விஷால் குடும்பத்தின் கதை தெளிவாக்குகிறது.
பதிலளிநீக்கு//இறைவன் மனது வைத்தால், இறைவன் மீது நம்பிக்கை வைத்தால் நல்லதே நடக்கும் என்பதை திரு விஷால் அவர்களின் கதை உணர்த்துகிறது அல்லவா? //
பதிலளிநீக்குஉண்மை.
எத்தனை படிகள்! அத்தனையும் கடந்து ஏறி போய் தரிசனம் செய்த நாளை மறக்கவே முடியாது. இறைவனிடம் வேண்டி வந்ததை நிறைவேற்றி தந்தார். மீண்டும் அவரை தரிசனம் செய்ய முடியவில்லை. இனி அவரை மலை ஏறி பார்க்க முடியுமா என தெரியவில்லை. உங்கள் பதிவின் மூலம் அவரை வேண்டிக் கொண்டேன்.
என் தங்கை பேரனுக்கு அங்குதான் பிறந்தநாள் கொண்டாடினார்கள், அவர்களுக்கு அதுதான் குலதெய்வம். அதனால் அருள்மிகு சுரும்பார்குழலி உடனமர் அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது .
என் கணவர் இரண்டு மூன்று தடவை போய் இருக்கிறார்கள். பாடல் பெற்ற சிவதலம்.