அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
A CLAY POT WITH HONEY WILL ALWAYS BE RANKED HIGHER THAN A GOLDEN POT
HAVING POISON.
IT IS NOT THE OUTER GLAMOUR BUT, THE INNER VIRTUES THAT MAKE US VALUABLE.
******
முகநூல் இற்றைகள் - ஆஹா என்ன அழகான ஊர் - அழகிய
மணவாளம்… - 25 ஜனவரி 2023
பூமிநாதர் கோவிலுக்கும் திருப்பைஞ்சீலி கோவிலுக்கும் சென்ற அன்றே சென்ற இன்னுமொரு கோவில் குறித்து இன்றைய பதிவில்
பார்க்கலாம்.
திருப்பைஞ்சீலி கோவிலுக்குச் சென்று அங்கே கோவில் வாசலில் காத்திருக்க, சத்திரம்
பேருந்து வரை செல்லும் ஒரு நகரப் பேருந்து வந்தது. அதில் ஏறிக்கொண்டு அழகிய
மணவாளம் ஊர் செல்லும் கிராமிய சாலைக்கு அருகே, பிரதான சாலையில் இறங்கிக் கொண்டேன். உள்ளே சுமார் இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டும்
என்றும் சொன்னார்கள் - பதாகை ஒரு கிலோமீட்டர் என தகவல் சொன்னது. எப்படியிருந்தாலும் நடை தான்! நடப்பது ஒன்றும்
எனக்கு புதிதல்ல என்பதால் நடக்க ஆரம்பித்தேன். தொடர்ந்து சாலை வழி நடக்க, சாலையின் இரு மருங்கிலும்
பசுமையான வயல்வெளி.
நெல், கரும்பு, கொய்யா என விதம் விதமாக பயிரிட்டு இருந்தார்கள். அனைத்தையும் பார்த்தபடியே நடக்க, நடக்க, நான்
பார்க்க நினைத்த கோவில் இருக்கும் ஒரு காட்சியும் தெரியவில்லை.
சரி, தொடர்ந்து நடப்போம், என தொடர்ந்து நடந்து செல்ல,
ஒரு கால்வாய் - அதில் நிறைய தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு மனிதர் கண்களை
மூடிக்கொண்டு சோப் போட்டு குளித்துக் கொண்டிருந்தார். அவரிடம் கேட்கலாம் என்றால் அவரை ஆனந்தக்
குளியலிலிருந்து தொந்தரவு செய்ய வேண்டும். வேண்டாம் என மேலும் நடந்தேன். ஒரு வீடு தென்பட அங்கே
இருந்த மனிதரிடம் கேட்க, அவர் சொன்னார் “ஒரு மடக்கு தாண்டினா வந்துடும்ங்க!” பல
மடக்கு தாண்டியும் வரவில்லை கோவில். தொடர்ந்து நடக்க அழகிய மணவாளம் கிராமத்தில் ஒரு
பள்ளி.
குழந்தைகள் தொடர்ந்து சத்தமாக படித்துக் கொண்டிருக்கும் ஒலி கேட்க, எனது பள்ளி
நினைவுகள் வந்தது.
அங்கே சைக்கிளில் வந்த ஒருவரிடம் கேட்க, “எந்த பெருமா கோவில் போகணும், இந்தப்
பக்கட்டு ஒரு பெருமா கோவில் இருக்கு? அந்தப் பக்கட்டு ஒரு பெருமா கோவில் இருக்கு,
நீங்க எந்த பெருமா கோவில் போகணும்?” என்று கேட்டு என்னை குழம்பினார். இரண்டையும் எனச் சொல்லி, இடப்பக்கம் நடந்தேன்.
தொடர்ந்து சிலரிடம் கேட்டு நான் சென்று சேர்ந்த
கோவில் அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில், அழகிய மணவாளம்! நான் சென்று சேர்ந்த நேரம் கோவில் பூட்டி இருந்தது. பழமையான கோவில் என்றாலும் சரியான பராமரிப்பு
இல்லாமல் இருக்கிறது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோவில் என்றாலும் இன்றைக்கு எந்த வித பிரபலமும்
இல்லாமல் தனித்துக் கிடக்கிறது.
சில நிமிடங்கள் சாற்றியிருந்த கதவுகளுக்கு வெளியே நின்று மனக்கண்ணில் சுந்தரராஜப்
பெருமாளை சேவித்துக் கொண்டேன்.
சரி எனக்கு இன்றைக்கு மனக்கண்ணில் மட்டுமே சேவிக்க வாய்த்திருக்கிறது என
நினைத்துக் கொண்டு எல்லோரையும் காப்பாற்று ஆண்டவனே என மனதில் நினைத்துக் கொண்டு
திரும்பினேன்.
செல்லும் வழியில் வழி கேட்ட ஒரு வீட்டின் வாசலில் இருந்த ஒரு பெரியவர், “என்ன
தம்பி சாமி பார்த்தீங்களா?” எனக் கேட்டார். இல்லை பூஜை செய்பவர் இல்லை, பூட்டி இருந்தது என்று
சொன்னவுடன், “நல்ல பெரிய பெருமாள் தம்பி, சரியா பூஜை ஒண்ணும் நடக்கறது இல்லை. என்ன
சொல்ல, அந்த ஆண்டவன் தான் அவனோட கோயில்ல பூஜை நடக்க வழி பண்ணனும்” என்றார்.
தற்போதைய கோவில் அருகே பழைய கால கட்டுமானம் -
கோபுரமாக இருக்கலாம்…
இந்தக் கோவில் குறித்து வலைப்பூ மற்றும் முகநூலில்
எழுதும் அனு பிரேம் (Anu Radha) ஒரு பதிவு எழுதி இருக்கிறார். அதில் நிறைய தகவல்கள் உண்டு. வாசித்துப்
பாருங்களேன்.
கோவில் பூஜை செய்பவரின் தொடர்பு எண் கிடைத்தால், அவரிடம் பேசிவிட்டு செல்வது
நல்லது.
முடிந்தால் இந்தப் பயணத்தில் மீண்டும் ஒரு முறை சென்று சுந்தரராஜப் பெருமாளின்
அழகிலும், ஊரின் அழகிலும் சொக்கிப் போய் வரவேண்டும்! பார்க்கலாம், அழைப்பு விடுக்கிறாரா சுந்தரராஜப் பெருமாள் என! அனு பிரேம் அவர்களின் பதிவுக்கான சுட்டி மேலே சேர்த்து விட்டேன்.
படித்துப் பாருங்களேன்.
அடுத்ததாக சென்ற இடம் எது என விரைவில் சொல்கிறேன்.
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில்
சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து…
நடையை எட்டிப்போட்டு வேகமாகவே நடந்திருக்கிறீர்கள் என்பது காணொளி பார்த்தபோது தெரிந்தது!!
பதிலளிநீக்குபோட்டோ பார்த்தால் மிகச்சிறிய கோவிலாக தெரிகிறதே...
இன்னொரு பெருமாள் கோவில் இருக்கிறது என்று உள்ளூர் வாசி ஒருவர் சொல்லியிருந்தாரே அங்கு செல்ல முயற்சிக்கவில்லையா?
பழைய கோயில்கள் பராமரிப்பு மிகவும் அவசியம்.
பதிலளிநீக்குஅவற்றை கைவிடுவதால், நம் பழைய வரலாறு மறைக்கப்படவும் திரித்து எழுதப்படவும் வழி ஏர்ப்பட்டுவிடுகிறது.
//அந்த ஆண்டவன் தான் அவனோட கோயில்ல பூஜை நடக்க வழி பண்ணனும்” என்றார். //
பதிலளிநீக்குஅது உண்மைதான்.
காணொளி நன்றாக இருக்கிறது. பாதை நீண்டு கொண்டே போகிறது.
நம் நாட்டில் பெரும்பாலும் பழமையை பாதுகாக்கும் எண்ணம் மக்களிடமும் இல்லை, அரசிடமும் இல்லை ஜி
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநலமா? பதிவு அருமை. அழகிய மணவாளம். ஊரின் பெயரே என்னவொரு அழகாக உள்ளது. அங்குள்ள சுந்தரராஜ பெருமாளும் நிச்சயம் சர்வ அழகுடன் ஜொலிப்பார். (சுந்தர என்ற சொல்லே அழகின் மறு பெயர்தானே ..) அந்த கடவுளே தன் பிரச்சனைக்கும் ஏதாவது வழி செய்து கொள்ள வேண்டுமென அவரிடம் நானும் பிரார்த்திக்கிறேன்.
காணொளி நன்றாக இருக்கிறது. ஆள் அரவமற்ற நீண்ட பாதை.
/ஒரு வீடு தென்பட அங்கே இருந்த மனிதரிடம் கேட்க, அவர் சொன்னார் “ஒரு மடக்கு தாண்டினா வந்துடும்ங்க!” பல மடக்கு தாண்டியும் வரவில்லை கோவில். /
ஹா ஹா ஹா. வழியில் குடித்து நடையை சுலபமாக்க ஒரு மடக்கு தண்ணீரராவது தங்களுக்கு கிடைத்ததா?
சுவாரஸ்யமான பயண விபரங்கள். சகோதரி அனுப்ரேம் அவர்களின் சுட்டிக்கும் சென்று கோவிலைப் பற்றிய விபரங்களை படிக்கிறேன். தங்கள் பதிவு டன் தொடர்ந்து வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அழகிய மணவாளம் பெயரே நன்றாக இருக்கிறது .
பதிலளிநீக்குவயல், கொய்யா, வாழைத்தோட்டங்கள் கேட்கவே அருமை. சோலையாக இருந்திருக்கும்.
பழமையை பேணிக்காப்பது வருங்கால சமுதாயத்துக்குத்தான் உதவும்.இதை அனைவரும் உணரவேண்டும்.
ஊரின் பெயரே அழகு அதற்கு ஏற்றாற் போல ஊரும் அழகு என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குஎப்படியிருந்தாலும் நடை தான்! நடப்பது ஒன்றும் எனக்கு புதிதல்ல என்பதால் //
ஹாஹாஹா இங்கும் அதே...
Brisk Walking போல!!! அதுவும் வெயிலில்!!! காணொளியில் பார்த்த போது தெரிகிறது...
ஊர்க்கோயில் மிகச் சிறியதாக இருக்கிறதே ஆனால் மிகப் பழைய கோயில் என்று தெரிகிறது அருகில் உள்ள அந்தப் பாழடைந்துள்ள கோபுரம் போன்ற பகுதி அழகு ஆனால் கோயில் பகுதி பராமரிக்கப்படாமல் இருப்பது கண்கூடாகத் தெரிகிறது,
அனு எழுதியது நினைவில் வருகிறது போய்ப் பார்க்கிறேன் அங்கு கமென்ட் போட்டிருக்கிறேனா என்று, அவங்க திருச்சிக்காரங்க! நிறைய கோயில் பத்தி அதுவும் பெருமாள் கோயில் பத்தி எழுதறாங்க..
கீதா
அவரிடம் ஒரு மடக்கு என்றால் எத்தனை தூரம் என்று கேட்டிருக்கலாமோ!!! ஹிஹிஹிஹிஹி ஏதேனும் குடிக்கும் போது நாம ஒரு மடக்கு குடிச்சுட்டுத் தரேன் இப்படிச் சொல்வதுண்டு....
பதிலளிநீக்குநந்தி - பாவம் அவர் பாஸ் சிவனில்லாமல் தனியா இருக்கிறாரே....ஒரு வேளை பாஸுக்கு இங்கு இடம் பிடித்து வைத்திருக்கிறாரோ?!!!
வாய்க்கால், சுற்றிலும் வயல், வாழை, தோப்பு என்று பசுமையான ஊர்!!!
இன்றைய வாசகம் செம
கீதா
காணொளி அருமை...
பதிலளிநீக்கு