திங்கள், 6 மார்ச், 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி முப்பத்தி நான்கு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட ஸ்ரீ ஆதிநாயகப் பெருமாள் கோவில் மற்றும்  ஸ்ரீ அமலீஸ்வரர் திருக்கோவில் கோபுரப்பட்டி பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

LIVE THE LIFE ACCORDING TO YOUR VISION AND PURPOSE, INSTEAD OF THE OPINIONS AND EXPECTATIONS OF OTHERS. 

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி முப்பத்தி நான்கு 




வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு  ; விதி பதினேழு  ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது ; விதி இருபத்தி ஒன்று ; விதி இருபத்தி இரண்டு ; விதி இருபத்தி மூன்று ; விதி இருபத்தி நான்கு ; விதி இருபத்தி ஐந்து ; விதி இருபத்தி ஆறு ; விதி இருபத்தி ஏழு ; விதி இருபத்தி எட்டு ; விதி இருபத்தி ஒன்பது ; விதி முப்பது ; விதி முப்பத்தி ஒன்று ; விதி முப்பத்தி இரண்டு ; விதி முப்பத்தி மூன்று ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

முப்பத்தி நான்காம்  விதி சொல்வது, "உன்னத நடத்தையால், உன் உயர் மதிப்பை உறுதிசெய்".

 

மூல நூலில், இதை "BE ROYAL IN YOUR OWN FASHION: ACT LIKE A KING TO BE TREATED LIKE ONE" என்கிறார் எழுத்தாளர்.

 

பிறர், நம்மை எப்படி நடத்தவேண்டும் என எதிர்ப்பார்க்கிறோமோ, அங்கனமே, நம்மை நாம் மதிக்க வேண்டிய அவசியத்தை இவ்விதி தெளிவாக வலியுறுத்துகிறது.

 

உயர் மதிப்பு என்பது, ஆடம்பரப் பொருட்களால் அலங்கரிப்பதால் வரும் வெளித்தோற்றம் அல்ல.

 

நாம் விரும்பும் பதவி நிலைக்குரிய பொறுப்புணர்வை உணர்ந்து நடந்துகொள்ளுதலையே இவ்விதி சுட்டுகிறது.

 

உதாரணமாக, குடிமையியல் பணிக்காகப் படிக்கும் மாணவர்கள், ஒரு மாவட்ட ஆட்சியர் ஆகவே மாறிவிட்ட எண்ணத்தோடு சமூகப் பிரச்சனைகள் குறித்து சிந்திக்குமாறு அறிவுறுத்தப்படுவதுண்டு.

 

அப்போதுதான், சிக்கல் மிகுந்த அப்பொறுப்புக்களைக் கையாளும் பக்குவமும், குடிமக்களின் உயர் அபிமானத்தைப் பெறவும் முடியும்.

 

இத்தகைய நடத்தையை வளர்த்துக்கொள்கையில், கவனத்தில் கொள்ள வேண்டிய சுவாரசியமான சவால்களை அறிந்து கொள்ளலாமா?

 

1. உடன் இருப்பவர்களைத் தீர்மானித்தல்;

 

"உன் நண்பன் யார் எனச் சொல், நீ யார் எனச் சொல்கிறேன்" என்னும் சொல்லாடலை சிறு வயது முதல் கேட்டிருப்போம்.

 

அனைத்துத் தரப்பினரிடமும் கனிவுடன் நடந்துகொள்வதையோ, நட்பு பாராட்டுவதையோ தவறாகக் கூறுவது இதன் நோக்கமல்ல.

 

விலை மதிப்பற்ற நம் நேரத்தின் பெரும்பாலான பகுதியை, நம்மை விட அறிவும் திறமையும் நிறைந்த சான்றோரோடு செலவிடுவதே, நம் தொடர் வளர்ச்சியை உறுதி செய்யும்.

 

தனிமையான சமயங்களிலும், நம் இலக்கு சார்ந்த துறை தொடர்பான வாசிப்புப் பழக்கம் மூலம், இறந்தோரிடமும் "Dialogue with the dead" நட்பு பாராட்டி கற்க முடியும்.

 

2. விமர்சனங்களை நைச்சியமாகக் கையாளுதல்;

 

நாம் வகிக்கும் பதவிக்கான போட்டியாளர்களின் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் பொறுமையாகவும், கண்ணியமாகவும் கையாள்வதிலேயே, நம் மதிப்பும், வலிமையும் உயரும் சாத்தியங்கள் இருக்கின்றன.

 

பிரிட்டனின் தற்போதைய பிரதமர் திரு ரிஷி சுனக் அவர்கள், கடந்த ஏப்ரலில் நிதி அமைச்சராக இருந்த காலத்தில், பெரும் சர்ச்சை ஒன்று எழுந்தது.

 

அவரின் மனைவி திருமதி அக்ஷதா மூர்த்தி அவர்கள், அவர் தந்தையின் இன்ஃபோஸிஸ் நிறுவன பங்குகளால் ஈட்டிய பல மில்லியன் பௌண்டுகள் வருமானத்திற்கான வரியைச் செலுத்தவில்லை என்பதே அந்தச் சர்ச்சையின் சாரம்.

 

பிரிட்டிஷ் வருமானவரிச் சட்டத்தின் படி, வெளிநாட்டு வருமானங்களுக்கு வரி செலுத்தவேண்டிய அவசியம் இல்லாதபோதும், தம் கணவரின் பதவிக்கான கண்ணியத்தைக் காக்க, இங்கிலாந்திலும் மேலதிகமாக வரி கட்ட திருமதி அக்ஷதா முன்வந்ததால் சர்ச்சை சிறப்பாகக் கையாளப்பட்டது.

 

3. தனிப்பட்ட விவகாரங்களால் பொது வாழ்வு பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளுதல்;

 

பின்லாந்து அதிபர் திருமதி சன்னா மிரெல்லா மரின், நண்பர்களோடு போதையில் நடனமாடிய காணொளி, கடந்த ஆகஸ்டு மாதம் வெளிவந்து அவர் நற்பெயரை முற்றாகத் துடைத்தெறியும் நிலை ஏற்பட்டதை மறந்திருக்க மாட்டோம்.

 

இது போன்ற அவப்பெயர்களைச் சரிசெய்ய சில ஆண்டுகளும் பிடிக்கும் என்பதால், மிக எச்சரிக்கையுடன், தனிப்பட்ட வாழ்விலும், உறவுகளைக் கையாள்வதிலும் நடந்துகொள்வது அவசியம்.

 

4. நமக்கு வேண்டியதை துணிவுடன் கேட்டல்;

 

நம் பதவிக்கான பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றத் தேவையான நியாயமான பங்களிப்பை, உரியவர்களிடம் தைரியமாகக் கேட்பது நம் மீதான மரியாதையை பன்மடங்கு பெருக்கவே செய்யும்.

 

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான கோத்தாரி குழுமத்தின் தற்போதைய துணைத்தலைவரும், நிர்வாக இயக்குனருமான திரு ரஃபீக் அஹமது அவர்கள், வியாபாரம் சம்பந்தமான ஒப்பந்தங்களை, வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் செய்துகொள்ளும் முறை என்னை மிகவும் கவர்ந்தது.

 

வெளிநாடுகளுக்குச் செல்கையில், வாடிக்கையாளர்கள் செலவில் தங்குவதையோ, உண்ணுவதையோ பணிவுடன் ஏற்காமல், ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி தாமே தங்கும் இடங்களை ஏற்பாடு செய்து கொள்வார்.

 

அதனால், வியாபாரம் சம்பந்தமான ஒப்பந்தங்களில், தமக்கான நியாயமான விலையையும், ஆதரவையும்  நெஞ்சுரத்துடன் கேட்டுப் பெற்று பல சாதனைகளைப் புரிந்து வருகிறார்.

 

கத்தார் நாட்டிடமிருந்து எரிவாயு இறக்குமதி, கிராப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து காலணிகள் உற்பத்தி, விவசாயத்திற்காக ட்ரோன் கேமராக்கள் என பல துறைகளில் வளர்ந்து வரும் இவரின் நிறுவனம் சார்ந்த பல சுவையான அனுபவங்களைக் கீழ் உள்ள சுட்டி மூலம் அறிந்துகொள்ளலாம்.

 

பல்துறை வணிகத்தின் பெருமகன் KOTHARI GROUP திரு.ரபீக் அஹமது | Pesum Thalamai | 18.12.2022

 

எனவே, நமக்கான மதிப்பை, நம் உன்னத நடத்தையால் உருவாக்குவதே சிறந்த வழி என உணர்வோம்.

 

இதற்காகப் பிறரை இழித்துரைத்து நம் மதிப்பை உயர்த்தும் தூண்டுதல் ஏற்படாமல் நம்மைக் காத்துக்கொள்வதும் மிக அவசியம் என்பதை மனதில் கொண்டு செயலாற்றுவோம்.

 

எப்படிப்பட்ட விமர்சனங்கள் நம்மைத் தாக்கும்போதிலும், மேற்சொன்ன, சிக்கலான, பிறரை இழிவுபடுத்தும் எண்ணம் ஏற்படாமல் நம் மனதைக் காக்கும் உயரிய உத்தியை அடுத்த விதியில் சுவைக்கலாமா?

 

நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

10 கருத்துகள்:

  1. வழக்கம் போலவே அருமை.  சற்றே கடினமாக இருந்தாலும் கடைப்பிடிக்க வேண்டிய விஷயம் மற்றவர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அதே போல மற்றவர்களிடம் நாம் நடந்து கொள்ளுதல்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுய வெறுப்பே தவறான முடிவுகளை நோக்கி மக்களை செலுத்தும் மோசமான ஆயுதம் ஐய்யா.
      அதைத் தவிர்க்கும் சிறப்பான உக்தியாக இவ்விதியைக் காணலாம்.
      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

      நீக்கு
  2. பிறர், நம்மை எப்படி நடத்தவேண்டும் என எதிர்ப்பார்க்கிறோமோ, அது போல நாமும் பிறரை மதித்து நடத்த வேண்டும்.. நல்ல கருத்துதான் ஆனால் இந்த காலத்திற்கு இது பொருந்தாது.. காரணம் நாம் நல்ல படியாக நடத்தினாலும் சில ஜந்துக்கள் அதன்படி நடக்காது.. முடிந்த வரையில் அப்படிபட்ட ஜந்துகளிடம் இருந்து விலகி இருப்பதே மேல்,,,,

    பதிலளிநீக்கு
  3. // நமக்கான மதிப்பை, நம் உன்னத நடத்தையால் உருவாக்குவதே சிறந்த வழி //

    இது ஒன்றே போதும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.

      நீக்கு
  4. 'நமக்கான மதிப்பை நமது உன்னதமான நடத்தையால் உருவாக்குதல் ' அருமை.

    பதிலளிநீக்கு
  5. இது மிகவும் நல்ல விதிதான்..அதன் பின் வரும் பாயின்ட்ஸ் உட்பட. உங்கள் உதாரணங்கள் ஆப்ட்!

    //நாம் விரும்பும் பதவி நிலைக்குரிய பொறுப்புணர்வை உணர்ந்து நடந்துகொள்ளுதலையே இவ்விதி சுட்டுகிறது.//

    பதிவிகளில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல...நம் குடும்பத்துக்கும் பொருந்தும். நம் குழந்தைகள் நல்லபடியாக வளர வேண்டுமென்றால் நாம் முதலில் நம் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். பல குடும்பங்கள்தானே சமுதாயம்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. நமக்கான மதிப்பை, நம் உன்னத நடத்தையால் உருவாக்குவதே சிறந்த வழி என உணர்வோம்.//

    ஆமாம். பதிவு அருமை.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....