புதன், 15 மார்ச், 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி முப்பத்தி எட்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட தென்னிந்திய உணவும் அய்யர் கஃபேவும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

DO NOT GO WHERE THE PATH MAY LEAD, GO INSTEAD WHERE THERE IS NO PATH AND LEAVE A TRAIL - RALPH WALDO EMERSON.

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி முப்பத்தி எட்டு



 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு  ; விதி பதினேழு  ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது ; விதி இருபத்தி ஒன்று ; விதி இருபத்தி இரண்டு ; விதி இருபத்தி மூன்று ; விதி இருபத்தி நான்கு ; விதி இருபத்தி ஐந்து ; விதி இருபத்தி ஆறு ; விதி இருபத்தி ஏழு ; விதி இருபத்தி எட்டு ; விதி இருபத்தி ஒன்பது ; விதி முப்பது ; விதி முப்பத்தி ஒன்று ; விதி முப்பத்தி இரண்டு ; விதி முப்பத்தி மூன்று ; விதி முப்பத்தி நான்கு ; விதி முப்பத்தி ஐந்து ; விதி முப்பத்தி ஆறு ; விதி முப்பத்தி ஏழு ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

முப்பத்து எட்டாம்  விதி சொல்வது, "தனிப்பட்ட எண்ணங்களை உன் விருப்பம்போல் வைத்துக்கொள், ஆனால், பிறர் விருப்பத்திற்கேற்பவே உன் நடத்தையை வடிவமைத்துக்கொள்".

 

மூல நூலில், இதை "THINK AS YOU LIKE BUT BEHAVE LIKE OTHERS" என்கிறார் எழுத்தாளர்.  

 

அடையாளங்கள் குறித்து சென்ற விதியில் விவாதிக்கும்போது, எண்ணங்களே அவற்றிற்கு வலுவூட்டுபவை எனக் குறிப்பிட்டிருந்தோம்.

 

நம் நடத்தையால் வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் குறித்தே இங்கே பேசிக்கொண்டிருக்கிறோமே தவிர, நம் உள்ளத்தில் தோன்றும் அசல் எண்ணங்களை அல்ல.

 

உள்ளத்தில் உருவாகும் எண்ணங்களில், பலர் குறித்த விமர்சனங்கள் இருக்கலாம், உலகையே தலைகீழாகத் திருப்பும் அற்புதமான யோசனைகளும் இருக்கலாம்.

 

அவை அனைத்தையும் திறந்த மனதுடன் வெளிப்படுத்துபவரின் நேர்மை பாராட்டப்படுவதில்லை எனப் பலர் புலம்புவதையே நம்மால் காண முடியும்.

 

அவ்வாறே புலம்புபவர், மெல்ல மெல்ல சமூகத்திலிருந்து விலகித் தனிமையில் மூழ்குவதும், உதவத் துடிக்கும் நெருங்கிய நண்பர்களைக் கூட சொற்களால் வதைப்பவராகவுமே மாறி அழியும் அவலமே ஏற்படும்.

 

ஒருவேளை அவர் உயர்ந்த நிலையில் இருப்பாரே ஆனாலும், அவர் முன்னிலையில் புகழ்வதும், திரைக்குப் பின்னால் அவரைத் தூற்றி காலை வாரும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருப்பதுமே நடக்கும்.

 

எனவே, எண்ணங்களை வெளியிடும் முன், கேட்பவரின் மனநிலை, பேசப்படும் பொருள் குறித்த அவரின் கண்ணோட்டம், மாற்றுக்கருத்துக்களை ஏற்கும் பக்குவம் உள்ளிட்ட பல அம்சங்களைக் கணக்கில் கொள்வது மிக அவசியம்.

 

சமூக நன்மை கருதி மிகப்பெரும் மாற்றங்களைக் கொண்டுவர நினைப்போரும், அதனால் பாதிக்கப்படக்கூடிய வியாபார அமைப்புகள், மக்களின் புண்படக்கூடிய அடிப்படை நம்பிக்கைகள் உள்ளிட்டவற்றை நிச்சயமாகக்  கருத்தில் கொண்டே தத்தம் யோசனைகளை முன்வைப்பது நலம்.

 

இவற்றைச் செய்ய தவறுபவரின் மதிநுட்பம் எவ்வளவு அபாரமானதாயினும், எண்ணங்கள் எவ்வளவு தூய்மையானதாயினும் பெருவாரியான மக்களால் அவர் முட்டாளாக்கப்படுவதும், தண்டிக்கப்படுவதுமே நடக்கும்.

 

கிரேக்கத் தத்துவ அறிஞர் திரு சாக்ரடீஸ், 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர் திரு கலிலியோ போன்ற எண்ணற்ற உதாரணங்களை நாம் அறிவோம்.

 

இன்று நாம் பெரிதாகப் பேசிக்கொண்டிருக்கும் மின்சார வாகனங்களும், பெட்ரோலிய வாகன உற்பத்தி நிறுவனங்கள், தம்மை மாற்றிக்கொள்ள முன்வந்த பின்பே அபரிமிதமாக உற்பத்தி செய்யப்படுபவை.

 

விரைவான மாற்றங்களையும், முன்னேற்றத்தையும் உருவாக்கும் தனியார் நிறுவனங்கள் கூட, அரசாங்கத்தின் மனநிலையைக் கருத்தில் கொண்டே செயல்பட வேண்டிய கட்டாயம் எப்போதும் இருப்பதுண்டு.

 

1992-இல், அலைபேசி (மொபைல்) நிறுவன சேவைகளைத் தொடங்க அரசாங்கம் விண்ணப்பங்களைக் கோரியவுடன், (BHARTI AIRTEL) (BH)பார்தி ஏர்டெல் நிறுவனத் தலைவரான திரு - சுனில் மிட்டல் அவர்கள் மிகவும் உத்வேகம் கொண்டு உரிமங்களைப் பெறத் துடித்தார்.

 

உரிமங்களைப் பெற விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு,  சேவையில் முன்னனுபவம் இருக்க வேண்டியது கட்டாயம் என்ற ஒரு நிபந்தனை இருந்ததைக் கண்டு அதிர்ந்தார்.

 

"மொபைல் என்ற ஒன்றே இந்தியாவிற்குள் வராத நிலையில், எப்படி முன்னனுபவம் கொண்ட நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து வர முடியும்?" எனும் கேள்வி மனதிற்குள் எழுந்தவுடன், அரசாங்கத்தின் இந்நிபந்தனை நகைப்பிற்கிடமானதாகவே அவருக்குத் தெரிந்தது.

 

எனினும், அரசாங்கத்தின் முடிவை மாற்ற முடியாது என்பதை உணர்ந்து, உலகளவில் பிரபலமான ஃபிரான்ஸ் நாட்டின் விவெண்டி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து, அலைபேசி சேவைக்கான உரிமத்தை வாங்கினார்.

 

அதிலும், "இந்தியாவின் நான்கு பெரிய நகரங்களுக்கான உரிமங்களும் ஒரே நிறுவனத்திடம் வழங்க முடியாது." என அரசாங்கம் கெடுபிடியாகச் சொன்னது அவருக்கு பெரும் அநீதியாகவே பட்டது.

 

பின் நாட்களில் தான், இப்புதிய முயற்சியில் ஒரு நிறுவனம் தவறு செய்து நஷ்டத்தில் மூழ்கினாலும், வெற்றி பெறும் நிறுவனங்களின் வியாபார மாதிரியை அறிந்து சுதாரித்துக்கொள்ளலாம் எனும் அரசாங்கத்தின் முன்யோசனை மக்களுக்குப் புரிந்தது.

 

இன்றைய 5 ஜி சேவை வரை, பெரு நிறுவனமாகச் செழித்திருக்கும் (BH)பார்தி ஏர்டெல் நிறுவனத்தை உருவாக்கிய திரு சுனில் மிட்டல் அவர்களின் மேலும் பல அனுபவங்களை உள்ளடக்கிய சிறு நூலை கீழ்காணும் சுட்டியில் வாசித்து மகிழலாம்.

 

சுனில் மிட்டல்: ஏர்டெல் (Airtel) நாயகரின் வெற்றிக் கதை. இந்தியத் தொலைதொடர்புத் துறையின் வளர்ச்சிக் கதையும்தான்... (Tamil Edition) eBook

 

மேற்கொண்ட உதாரணங்களால், ஒரு பொருள் குறித்த பலரது கண்ணோட்டக் கருத்துக்களை, அவரவர் நிலையிலிருந்து புரிந்துகொள்வதே, பெரும் மாற்றங்களையும் சாதனைகளையும் புரிவோரின் உக்தியாக இவ்விதி காட்டுவதாக புரிந்துகொள்ளலாம்.

 

இத்தகைய பக்குவத்தைப் பெற, நாம் தவிர்க்க வேண்டியவை குறித்து அடுத்த விதியில் அறிந்துகொள்ளளாமா? 

 

நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

11 கருத்துகள்:

  1. மொபைல் உதாரணம் புரிய வைக்கிறது விதியை.  நாம் பல சமயங்களில் நம்மை அறியாமலேயே இந்த விதியைப் பின்பற்றி நடந்தே வாழ்கிறோம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நூலின் பல விதிகள் நம்மை அறியாமலேயே ஏர்க்கெனவே பின்பற்றுபவையே ஐய்யா. அதனால்தான், அவ்விதிகள், நம் சொந்த அணுபவங்களையும் நினைவில் கொண்டு வருகின்றன போலும்.
      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

      நீக்கு
  2. அருமையான தகவல்கள். பகிர்ந்த விதம் அருமை

    பதிலளிநீக்கு
  3. மொபைல் விடயம் நல்லதொரு எடுத்துக்காட்டு நண்பரே...

    பதிலளிநீக்கு
  4. இந்த விதியை வாசித்ததும்....என்ன இது.....இப்படி ஒரு விதி என்று தோன்றியது உண்மை. ஆனால் இதன் கோணம் வேறு என்பது உங்களின் விளக்கம் பார்த்ததும் புரிந்தது.

    //எனவே, எண்ணங்களை வெளியிடும் முன், கேட்பவரின் மனநிலை, பேசப்படும் பொருள் குறித்த அவரின் கண்ணோட்டம், மாற்றுக்கருத்துக்களை ஏற்கும் பக்குவம் உள்ளிட்ட பல அம்சங்களைக் கணக்கில் கொள்வது மிக அவசியம்.//

    இக்கருத்தை நான் அப்படியே வழி மொழிந்து ஆதரிக்கிறேன், அரவிந்த். இது நம்மில் பலரும் அதாவது கொஞ்சம் மற்றவர்களின் இடத்திலிருந்து யோசிப்பவர்கள் பயன்படுத்துகிறோம் என்றே தோன்றுகிறது.
    இக்கருத்திற்கு மேலே நீங்கள் சொல்லியிருக்கும் வரிகள் நிதர்சனம். அதில் எங்கள் குடும்பத்தில் அனுபவமும் உண்டு.

    உதாரணம் அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. சிறப்பாக இருக்கின்றது..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....