திங்கள், 27 மார்ச், 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி நாற்பத்தி மூன்று

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட விதம் விதமாக சாப்பிடலாம் வாங்க பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

“THE LAW OF WIN/WIN SAYS, ‘LET’S NOT DO IT YOUR WAY OR MY WAY; LET’S DO IT THE BEST WAY’.”  ~ GREG ANDERSON.

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி நாற்பத்தி மூன்று


 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு  ; விதி பதினேழு  ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது ; விதி இருபத்தி ஒன்று ; விதி இருபத்தி இரண்டு ; விதி இருபத்தி மூன்று ; விதி இருபத்தி நான்கு ; விதி இருபத்தி ஐந்து ; விதி இருபத்தி ஆறு ; விதி இருபத்தி ஏழு ; விதி இருபத்தி எட்டு ; விதி இருபத்தி ஒன்பது ; விதி முப்பது ; விதி முப்பத்தி ஒன்று ; விதி முப்பத்தி இரண்டு ; விதி முப்பத்தி மூன்று ; விதி முப்பத்தி நான்கு ; விதி முப்பத்தி ஐந்து ; விதி முப்பத்தி ஆறு ; விதி முப்பத்தி ஏழு ; விதி முப்பத்தி எட்டு ; விதி முப்பத்தி ஒன்பது ; விதி நாற்பது ; விதி நாற்பத்தி ஒன்று ; விதி நாற்பத்தி இரண்டு ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 


நாற்பத்தி  மூன்றாம் விதி சொல்வது, "பிறர் இதயங்களில் உயரிய இடத்தைப் பெற அயராது பாடுபடு".

 

மூல நூலில், இதை "WORK ON THE HEARTS AND MINDS OF OTHERS" என்கிறார் எழுத்தாளர்.

 

எதிராளிகளில் முக்கியமானவர்களை அடையாளம் கண்டு, அவர்களைக் கட்டுக்குள் கொண்டுவரும் உத்திகள் குறித்து முந்தைய விதியில் விவாதிக்கப்பட்டது.

 

அவற்றுள், அமெரிக்கா ஜப்பானிடம் செய்தது போல, எதிரியை நம் நெருங்கிய கண்காணிப்பில் பராமரித்து, அவரை உற்ற நண்பனாக மாற்றும் உத்தியையே சிறப்பானதாகச் சொல்லப்பட்டது.

 

அதற்கு மாறாக, மிரட்டி பணிய வைக்கும் உத்தி, குழந்தைகளிடம் கூடச் சில காலமே வேலை செய்து, காலப்போக்கில் நம்மை வெறுப்பவர்களாகவே மாற்றிவிடும்.

 

எனவே, பிறர் இதயங்களின் பாதுகாப்புச் சுவர்களை உடைக்காமல், அவர்களின் இதயக் கதவுகளைத் திறக்கும் சரியான சாவியைக் கண்டடையும் ஐந்து வழிகளை அறிந்துகொள்ளலாமா?

 

1. ஒவ்வொருவரின் விருப்பு வெறுப்புகளை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டு.

 

மக்களோடு இணைந்து பணியாற்றுபவனே, அவர்கள் இதயங்களில் இடம் பிடிக்கும் சிறந்த தலைவன் ஆகிறான்.

 

அதற்காக, மக்கள் ஒவ்வொருவரின் விருப்பு வெறுப்புகள், அவர்கள் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் அறிந்துகொள்ளும் தணியா தாகம் கொண்டவனாக அவன் எப்போதும் திகழ்வது அவசியம்.

 

உதாரணமாக, 1991 இல், இந்தியா சந்தித்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள எதிர்கொண்ட சில சவால்கள் குறித்து நூலின் முந்தைய விதிகளில் குறிப்பிட்டிருந்தோம்.

 

அப்போது இந்தியா எதிர்கொண்ட மிகப்பெரிய சவால்களில் ஒன்றுதான், தேசிய வங்கிகளை கணினிமயமாக்க பணியாளர்களின் சம்மதத்தைப் பெறுதல்.

 

அப்போதைய நிதி அமைச்சரான திரு மன்மோஹன் சிங் அவர்கள், ஒவ்வொரு விவாதக் கூட்டத்திற்கு முன்பும், முக்கிய நபர்களைத் தனியாகச் சந்தித்து அவரவர் தனிப்பட்ட எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்ள முயன்றிருக்கிறார்.

 

அதன் அடுத்தபடியாக, கணினிமயமாக்கத்தின் அவசியத்தை அவரவர் இயல்புக்கேற்ப புரிந்துகொள்ளச் செய்ததோடு, அனைவரின் தனிப்பட்ட உணர்வுகளைப் பெரிதும் மதித்தார்.

 

அதை வெளிக்காட்டும் சமிக்ஞையாக, ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும், தொழிற்சங்கத் தலைவர்கள் வெளியேறும் கதவுக்கு அருகே நின்று அனைவரிடமும் கை குலுக்கினார்.

 

இதன் விளைவாக ஒரு நாள், ஒரு தொழிற்சங்கத் தலைவர் அனைவர் முன்பும் மனம் திறந்து "நிதியமைச்சர் அவர்களே, எனக்குத் தங்கள் கொள்கையில் ஒப்புதல் இல்லாவிடிலும் என் மகன் தங்கள் பக்கமே நிற்பான் என்பதை மறுக்க முடியாது" என்று கூறியிருக்கிறார்.

 

இப்படித்தான், படிப்படியாகத் தேசிய வங்கிகள் கணினிமயமாக்கப்படுவதற்கான, தொழிற்சங்கங்களின் ஒப்புதல் பெறப்பட்டு ஊழியர்களின் உணர்வுகளும் மதிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.

 

2. அடுத்தவர் பொறாமை கொள்ளும் நபர்களின் பலவீனங்களைச் சுட்டிக்காட்டி ஊக்கப்படுத்து.

 

தாழ்வு மனப்பான்மை கொண்டோரே, தம்மிடம் இல்லாததை மட்டுமே எண்ணியும், பிறருக்குக் கிடைத்தவற்றைக் குறித்து கவலை கொண்டும் பொறாமையில் புழுங்கிக்கொண்டே இருப்பர்.

 

அத்தகையோருக்கு, குழந்தைகளுக்கான நீதி நூல்கள் பாணியில் அறிவுரைகளை வழங்குவது எப்போதும் நற்பலனைத் தராது.

 

அவர்களிடம் உள்ள சிறந்த அம்சங்களையும், அவர்கள் பொறாமை கொள்ளும் நபர்களிடம் இல்லாதனவற்றையும் தெளிவாக எடுத்துரைத்தலே, அவர்களின் இதயங்களில் இடம்பிடிக்க வழிகோலும்.

 

3. அடுத்தவர் செய்யும் சிறு தவறுகளை மன்னித்துவிடு.

 

1940 களில், குறைகடத்திகள் குறித்த ஆரம்பகட்ட சிந்தனையை விதைத்தவரான, அமெரிக்க  இயற்பியல் வல்லுனர் திரு வில்லியம் ஷாக்ளி அவர்களை விட, அவரை விட்டுவிட்டு தனி நிறுவனம் தொடங்கிய அவரின் எட்டு மாணவர்களே நினைவுகூரப்படுவது குறித்த வேதனையை முந்தைய விதியில் பகிர்ந்திருந்தோம்.

 

மிகச் சிறந்த அறிவாளியாகவும், தலைசிறந்த திறமைசாலிகளை ஆரம்பத்திலேயே அடையாளம் காண்பவராகவும்  திகழ்ந்த இவரின் ஆணவமே, இவரின் மிகப்பெரிய எதிரியாக மாறிவிட்டது.

 

தம் திறமையான மாணவர்களை முழுவதுமாகக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், அவர்களின் சிறிய தவறுகளைப் பெரிதாக்கியும், எடுத்ததற்கெல்லாம் கோபப்பட்டும் பணிச் சூழலை படைப்பூக்கமற்ற நரகமாக மாற்றினார்.

 

இதனால் அவரிடம் கற்க வேண்டியவற்றை பல்லைக் கடித்துக்கொண்டே கற்றபின், பாப் நாய்ஸ் அவர்களின் தலைமையிலான எட்டு மாணவர்கள், அவரை விட்டுத் தனியாக "ஃபேர்சைல்ட்" (FairChild) என்னும் புது நிறுவனத்தைத் தொடங்கினர்.

 

அந்நிறுவனத்தால்தான், அமெரிக்காவின் நிலவை நோக்கிய அப்பல்லோ பணித் திட்டத்திற்கான நுண்சில்லுகள் "Chips" உருவாக்கப்பட்டதோடு, சிலிக்கான் பள்ளத்தாக்கு என்னும் உலக மென்பொருள் தலைமையகம் உருவாகவும் வழி ஏற்பட்டது.

 

அதற்கு மாறாக, நோபல் பரிசு வென்ற ஷாக்ளி அவர்கள், வெறும் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியராகவே தம் வாழ்நாளை புலம்பலுடன் கழித்தார்.

 

எனவே, சிறு குற்றங்களை மன்னித்து மக்களுடன் பக்குவமாகவும், இனிமையாகவும் பழகுபவரே, பலரின் ஞானத்தை ஊற்றாகப் பெற்று வாழ்நாள் முழுதும் வளர்ச்சிப்பாதையில் நீடிப்பார்.

 

4. பிறர் துன்பங்களோடு தம் துன்பங்களை ஒப்புமைப்படுத்தி உதவ முயற்சி செய்.

 

துன்பம் இல்லாத மனிதனே உலகில் இல்லை என்பதை அனைவரும் அறிவர்.

 

எனினும், தம் துன்பமே உலகில் மிகவும் பெரியது என என்னும் மனிதர்கள், புதிதாக எதையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் இழந்து, தம் எதிர்மறைப் பேச்சுகளால் பிறரின் நிந்தனைக்கும் ஆளாகி தனிமைப்படுத்தப்படுவர்.

 

எனவே, நமக்கு மேலும் கீழும் உள்ளவர் கோடி என்பதை உணர்ந்து, பிறர் துன்பங்களைக் காது கொடுத்து கேட்பவனாலேயே, உலகின் இன்றைய நிலையையும், அதன் உடனடி தேவைகளையும் அறியவும், அவற்றிற்கேற்ப தம் திறன்களை வடிவமைக்கவும் முடியும்.

 

5. நம்மால் விளையக்கூடிய வருங்காலப் பயன் குறித்து பிறர் உணர்வதை உறுதி செய்.

 

சுயநலவாதிகளான மானுடர் அனைவராலும், ஒருவர் கடந்தகாலத்தில் செய்த உதவிகளை விட, அவரால் வருங்காலத்தில் விளையக் கூடிய பயன்களுக்கே அதிக மதிப்பு கொடுக்க இயலும்.

 

மக்கள் இதயங்களில் இடம் பிடிப்பவர், அவர்களின் துன்பங்களைக் காது கொடுத்துக் கேட்பதோடு, அவற்றை எதிர்காலத்தில் தீர்க்கும் வல்லமை தம்மிடம் இருப்பதையும் உறுதி செய்பவராக இருப்பர்.

 

அதைத்தான், கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக வெளிப்படுத்துவதையும், வேலை தேடுவோர், நேர்காணல்களில் நிறுவனங்களிடம் எடுத்துரைப்பதையும் காணலாம்.

 

சிக்கலான இவ்விதிப்படி, பிறர் இதயங்களில் உயர் இடம் பெற முயலும்போது, தீய எண்ணம் கொண்ட சிலரால் நம்பிக்கைத் துரோகத்திற்கு ஆளாகவும் நேரலாம்.

 

அதனால் வாழ்வு மீது வெறுப்பு ஏற்படாமல், அப்படிப்பட்டோரைக் கையாளும் சுவாரசியமான உத்தியை அடுத்த விதியில் சுவைக்கலாமா?


நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த் 

 

12 கருத்துகள்:

  1. விதியின் தொடர்ச்சியாக அதற்குத் துணையாக ஐந்து வழிகள், சாவிகளை சொல்லி இருப்பது பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

      நீக்கு
  2. இவ்விதியின் அலசல் மிகவும் தெளிவாக இருக்கிறது.

    நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
      இத்தெளிவை அடுத்தடுத்த விதிகளிலும் தொடர முயர்ச்சிக்கிறேன்.

      நீக்கு
  3. பதிவு மிக அருமை. 5 வழிகளும் அருமை.
    கடைபிடித்தால் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி கோமதியரசு மேடம்

      நீக்கு
  4. இந்த விதியும் அதன் தொடர் விளக்கமுடன் உத்திகளும் அருமை, அரவிந்த்.

    //அவர்கள் பொறாமை கொள்ளும் நபர்களிடம் இல்லாதனவற்றையும் தெளிவாக எடுத்துரைத்தலே, அவர்களின் இதயங்களில் இடம்பிடிக்க வழிகோலும்.//

    இது மட்டும் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கீதா மேடம்.
      நீங்கள் சொல்வது போல், ஒருவர் எவர் மீது பொறாமை கொள்கிறாரோ, அவரிடம் இல்லாததைச் சொல்லி இவரை ஊக்குவிக்கும் உக்தி சற்று சிக்கலானதே.
      சிலர், அதனால் கூட கடும் கோபம் அடையக்கூடும். நானும் இதில் சில இடங்களில் தோல்வியடைந்து தர்ம அடி வாங்கியிருக்கிறேன்.

      நீக்கு
  5. கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் பற்றிய விளக்கம் நன்று.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....