அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட காசி விசாலாக்ஷி அம்மன் கோவில் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
"THE BEST AND MOST BEAUTIFUL THINGS IN THE WORLD CANNOT BE SEEN OR
EVEN TOUCHED - THEY MUST BE FELT WITH THE HEART." - HELEN KELLER.
******
வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி
முப்பத்தி ஒன்பது
வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய
பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!
அறிமுகம் ;
விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு ; விதி பதினேழு ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது ; விதி இருபத்தி ஒன்று ; விதி இருபத்தி இரண்டு ; விதி இருபத்தி மூன்று ; விதி இருபத்தி நான்கு ; விதி இருபத்தி ஐந்து ; விதி இருபத்தி ஆறு ; விதி இருபத்தி ஏழு ; விதி இருபத்தி எட்டு ; விதி இருபத்தி ஒன்பது ; விதி முப்பது ; விதி முப்பத்தி ஒன்று ; விதி முப்பத்தி இரண்டு ; விதி முப்பத்தி மூன்று ; விதி முப்பத்தி நான்கு ; விதி முப்பத்தி ஐந்து ; விதி முப்பத்தி ஆறு ; விதி முப்பத்தி ஏழு ; விதி முப்பத்தி எட்டு ;
என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும்
உற்சாகம் கலந்த வணக்கங்கள்.
திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48
Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா?
முப்பத்து ஒன்பதாம் விதி சொல்வது, "குட்டையைக்
குழப்பி மீனைப் பிடி".
மூல நூலில், இதை "STIR
UP WATERS TO CATCH FISH"
என்கிறார் எழுத்தாளர்.
இங்கே குட்டை என்பது போட்டியாளர்களின் உணர்வுகளையும்,
மீன் என்பது அவர்களின் பலவீனங்களையும் சுட்டுகின்றன.
மனவலிமை மிக்கவர்கள், தத்தம் உணர்வுகளின் பலவீனப்
பகுதிகளான கோபத்தையும் வெறுப்பையும் வெளியே காட்ட மாட்டார்கள்.
வெற்று ஆணவத்திலிருந்து தோன்றும் அவ்விரண்டும்,
வெளிப்படையாக மிகப்பெரும் அச்சத்தைப் பிறருக்கு உருவாக்கினாலும், அவற்றால்
எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கான விளைவுகளால் அவர்களுக்கே தீங்கு நேர்ந்துவிடும்.
அத்தீமைகள், சுற்றத்தாரிடம் அவப்பெயராகவோ, நெருங்கிய
நண்பர்களின் இழப்பாகவோ, பெரும் பொருளாதாரச் சீர்குலைவாகவோ, உயர்மட்டத்தினரின்
சினத்திற்கு உள்ளாவதாகவோ இருக்கலாம்.
எனவே, மிக அபூர்வமாகவும், தகுந்த காரணத்துடனும்
வெளிப்படுத்தப்படும் சினத்திற்கும் வெறுப்பிற்குமே உயர் மதிப்பு இருக்கிறது என்பதை
எப்போதும் நினைவில் கொள்பவனே, வலிமைக்கான ரகசிய வாசலைத் திறக்கிறான்.
அரசியல் கட்சிகள், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி
அறிக்கைகள் விடுவதும், பேட்டிகள் அளிப்பதும், எதிர்க்கட்சியினரின் ஆணவத்தைக்
கிளரும் நோக்கத்தாலேயே.
அதன் மூலம், கட்சி சம்மந்தப்பட்டோர் வாயிலிருந்து
அவர்கள் திட்டமிடாதனவற்றையும் சொல்ல வைத்து, அவர்கள் நற்பெயரை அழிக்கும் பற்பல
உதாரணங்கள், நாள்தோறும் செய்திகளாக நமக்கு கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.
உளவுத்துறையில், எதிர் நாட்டினரின் இரகசியங்களை
உடைக்க, இவ்விதியின் உத்திகள் மிக சுவாரசியமான வகையில் பயன்படுவதை பின்வரும்
உதாரணம் உணர்த்தும்.
உலகின் பல நாடுகளைச் சேர்ந்த உளவுத்துறை
அமைப்புகளில், மிக ஆபத்தானதானதும், பலம் பொருந்தியதாகவும் நம்பப்படுவது இஸ்ரேல்
நாட்டைச் சேர்ந்த மொசாட் அமைப்பே.
இஸ்லாமிய நாடுகளால் சூழப்பட்ட அரேபியப் பகுதியில்,
ஒற்றை யூத நாடாக பிழைத்திருக்க வேண்டிய மாபெரும் அழுத்தத்தால் உருவானதே அத்தகைய
அமைப்பு.
அவ்வமைப்பாலும் தொட முடியாத பெரிய எதிரியாக, ஹிட்லர்
ஆட்சியில், இலட்சக்கணக்கான யூதர்களின் கொடூரமான மரணத்தைத் திட்டமிட்டவரான அடால்ஃப்
ஐக்மென்
இருந்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின், ‘ரிகார்டோ க்ளெமென்ட்'
என்னும் போலிப் பெயருடன், அர்ஜெண்டினா நாட்டில் போலி அடையாளங்களை உருவாக்கி மறைவாக
வசித்து வந்த அவரை எவராலும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
அவருடைய மகனான திரு கிளாஸ், தம் காதலியைக் கவர தம்
தந்தை கூறியிருந்த குடும்பத்தின் வீரப்பிரதாபங்களை ஆணவம் கலந்த உணர்ச்சி
மிகுதியால் அளந்து விட்டிருக்கிறான்.
அதில் அவன் தன்னை அறியாமல் உபயோகித்த
"ஐக்மென்" என்னும் வார்த்தை, ஹிட்லர் வதை முஹாமில் அவதியுற்ற அவள் யூதத்
தந்தையாரின் கவனத்திற்குச் செல்ல, அவர் இஸ்ரேல் நாட்டிற்குத் தம் ஐயத்தை
தெரியப்படுத்தியிருக்கிறார்.
அங்கிருந்து தொடங்கிய தேடுதல் வேட்டை, ஆறு ஆண்டுகள்
நீடித்து, மொசாட் உளவாளிகளால் ஐக்மென் இரகசியமாக நாடு கடத்தப்படும் அளவு ஆபத்தாக
மாறி அவர் வாழ்வையே முடித்தது.
மிக முக்கிய முடிவுகளை, நம் கட்டுப்பாட்டை மீறிய
சினம் மிகும் காலங்களிலோ, பிறர் மீதான வெறுப்பு மிகும் சமயங்களிலோ எடுப்பதைத்
தவிர்க்குமாறும் இவ்விதி அறிவுறுத்துகிறது.
அச்சமயங்களில் எடுக்கப்படும் முடிவுகளால்,
போட்டியாளர்களின் பலம் ஆராயப்படாமல், அவர்களின் சினத்தைத் தூண்டி ஆபத்தில்
சிக்குவதே நடக்கும்.
தம் எதிர் கூட்டணிக்கு உதவும் அமெரிக்கா மீதான
கண்மூடித்தனமான கோபத்தால், பேர்ள் துறைமுகத்தின் பாதுகாப்பு அம்சங்களை முழுவதுமாக
அறியாமல், அதைத் தாக்கிய ஜப்பான் இதற்கான சிறந்த உதாரணம்.
போரில் குதிப்பதற்கான ஒரு சிறந்த காரணம், அதனால்
அமெரிக்காவிற்கு கிடைத்ததோடு, ஜப்பானின் வீழ்ச்சிக்கும் அது வழிகோலியது.
ஒருவேளை நம் அறியாமையால் தவறாக முடிவெடுத்துவிட்டதாக
தெரிந்துவிட்டால், அதை ஒப்புக்கொண்டு அதற்கான இழப்பை ஏற்றுக்கொள்வதும், அதற்காக
உரியவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிடுவதுமே சிறந்த வழிமுறையாகும்.
அதனால் இழப்பின் அளவு குறைவதோடு, அதிலிருந்து கற்ற
பாடத்தால், வரும் காலங்களில் பெரும் ஆதாயமும் கிடைக்கும்.
எனவே, வலிமையின் சாரம், உடலை விட, உள்ளத்து
உணர்வுகளைக் கட்டுக்குள் வைப்பதிலேயே உள்ளதை உணர்ந்துகொள்ளலாம்.
நம் உணர்வுகளைத் தவறான வழியில் தூண்டி, பெரும் இழப்பை
ஏற்படுத்த கையாளப்படும் மிக முக்கிய உத்தி ஒன்றை குறித்த எச்சரிக்கையை அடுத்த
விதியில் பெறலாமா?
நூல் குறித்த விவாதம் தொடரும்.
*****
இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை
பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள்
அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்,
இரா. அரவிந்த்
கோபமாக இருக்கும்போது வார்த்தைகளை சிந்தாதே என்பார்கள். உணர்ச்சி வசப்பட்டிருக்கும்போது வாக்குறுதிகளைக் கொடுக்காதே என்பார்கள் நம் பெரியோர். மொஸாட் பற்றி படித்திருக்கிறேன். யூதர்களின் தளபதி பிடிப்பட்டதும் படித்திருக்கிறேன். நல்ல உதாரணங்கள். இதை நம் தமிழில் நுணலும் தன் வாயால் கெடும் என்பார்கள்!
பதிலளிநீக்குஆம் ஐய்யா. கோபத்திலும் பதற்றத்திலும் எடுக்கும் முடிவு ஆபத்தானதே.
நீக்குதங்களஅ கருத்துகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.
நல்லதொரு விதி... அருமை...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் ஐய்யா.
நீக்கு'உணர்வுகளை கட்டுக்குள் வைத்துக்கொள் , கோபத்தில் இருக்கும் போது முடிவு எடுக்காதே' நல்ல அறிவுரை கூறும் விதி.
பதிலளிநீக்குமிக அபூர்வமாகவும், தகுந்த காரணத்துடனும் வெளிப்படுத்தப்படும் சினத்திற்கும் வெறுப்பிற்குமே உயர் மதிப்பு இருக்கிறது//
பதிலளிநீக்கு//மிக முக்கிய முடிவுகளை, நம் கட்டுப்பாட்டை மீறிய சினம் மிகும் காலங்களிலோ, பிறர் மீதான வெறுப்பு மிகும் சமயங்களிலோ எடுப்பதைத் தவிர்க்குமாறும் இவ்விதி அறிவுறுத்துகிறது.//
ஆமாம் அரவிந்த். இதுக்கு மிக மிகச் சிறந்த இதிகாசக் காவியம் மஹாபாரதம்,
. கோபத்தில் எகிறும் சொற்கள் நல்ல உறவு நட்பையும் கூடப் பிளந்துவிடும். உணர்ச்சிவசப்பட்டு டக்குனு சத்தியம் எல்லாம் செய்யவே கூடாது...மகாபாரத பீஷ்ம சபதம் அப்படியான ஒன்று. மஹாபாரதத்துல டபக்கு டபக்குனு கோபமும், வாக்குறுதியும், சத்தியமும் செஞ்சுடுவாங்க...அதனால்தான் பெரிய போர்.
நீங்கள் கொடுத்திருக்கும் உதாரணங்கள் நல்ல உதாரணங்கள் அரவிந்த். மாஹாபாரதத்தில் நிறைய உதாரணங்கள் அதுவும் இந்த 48 விதிகளுக்கும் உண்டு.
கீதா
அலசலை தொடர்ந்து வருகிறேன்....
பதிலளிநீக்குஅருமையான பதிவு. கோபத்தில் வார்த்தைகளை அதிகம் விடாமல் இருப்பதே அனைவருக்கும் நலம் பயக்கும்.
பதிலளிநீக்கு