ஞாயிறு, 12 மார்ச், 2023

முகநூல் இற்றைகள் - பழையன கழிதலும் புதியன புகுதலும்…


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

PROGRESS IS IMPOSSIBLE WITHOUT CHANGE; AND THOSE WHO CAN NOT CHANGE THEIR MINDS, CANNOT CHANGE ANYTHING - BERNARD SHAW.

 

******

 

முகநூல் இற்றைகள் - பழையன கழிதலும் புதியன புகுதலும்… - 1 ஃபிப்ரவரி 2023

 

கடந்த மாதம் தான் Bபோகி பண்டிகை முடிந்திருக்கிறது.  பொதுவாக Bபோகி என்றால் வீட்டில் தேவையில்லாத பல பொருட்களை போட்டு கொளுத்திவிடுவது வழக்கம் இல்லையா? 

 

பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையினனானே

 

மாதத்தின் கடைசி நாளன்று தேவையற்ற பழைய பொருட்களை எரித்து, பழைய சிந்தனைகளையும் தேவையற்ற மன அழுக்கையும் Bபோகியில் போக்கிவிட்டு, புதிய பொருட்கள், புதிய எண்ணங்களுடன் தை மாதத்தினை எதிர்கொள்ள காத்திருப்பது வழக்கம் தானே! 

 

ஆனால் என்னைப் பொறுத்தவரை பழைய பொருட்கள் அவை நமக்குத் தேவை இல்லையெனில், தேவைப்படுபவர்களுக்கு கொடுத்துவிடுவதையே அதிகம் விரும்புவேன்.  அதற்காக Bபோகி வரை காத்திருக்க எனக்கு பிடிக்காது.  அப்போதைக்கு அப்போது தேவையானவை, தேவையற்றவை என பிரித்து எனக்குத் தேவையற்றவை எனில், அந்தப் பொருட்கள் வேறு யாருக்கேனும் தேவை எனில் உடனடியாக கொடுத்து விடுவது எனது வழக்கம்.  ஆனால் பலருக்கும் நான் இப்படி இருப்பது சரியானதாக தோணாது. 

 

கடந்த சில நாட்களாக எங்கள் வீட்டு பெரியவர்களின் வீடுகள் சுத்தம் செய்ய முடியாமல் கிடக்க, அவற்றை எல்லாம் எடுத்துப் பார்த்து தேவையற்றவற்றை அனைத்தையும் களைந்து கொண்டு இருக்கிறேன்.  பல பொருட்களை பிறகு எப்போதாவது தேவைப்படும் என நினைத்து எடுத்து வைத்து, அவை பல வருடங்களாக தொட்டுக்கூட பார்க்கப்படாமல் அப்படியே இருக்கிறது.  என்றைக்காவது உபயோகப்படும் என எடுத்து வைக்கப்பட்ட பொருட்கள் எதுவுமே இன்றைக்கு உபயோகம் செய்ய முடியாத அளவிலேயே இருக்கின்றன என்பது வேதனையான உண்மை.  இப்போது கூட அந்தப் பொருட்களை தூக்கிப் போட பெரியவர்களுக்கு மனதில்லை.  வேண்டாமே என்று சொல்லும்போது அவர்கள் சொல்லும் வாக்கியம் - “நான் இருக்கற வரைக்கும் இருக்கட்டும், நான் போனா என் கூடவே அந்தப் பொருட்கள் எல்லாவற்றையும் போட்டு எரிச்சுடு!” என்று சொல்லி முகத்தினை தூக்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவார்கள். :(

 

பல பொருட்களுக்கு அதன் Utility Value ஒரு சில மாதங்கள்/வருடங்கள் மட்டுமே எனும்போது அந்த காலம் கடந்த பிறகு அவற்றை வைத்துக் கொள்வதில் என்ன பயன்? ஒரு சில மருந்துகள் கூட அப்படியே இருக்கிறது - அதன் Expiry Date முடிந்து ஐந்து வருடங்கள் கழித்தும்!  அதனை சாப்பிட்டு விட்டால் ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்பட்டுவிடக்கூடும் என்பதால் சொல்லாமல் கொள்ளாமல் தூக்கி எரிந்து தேவையில்லாத காகிதங்களோடு சேர்த்து கொளுத்தி விட்டேன்!  சொன்னால் மன வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது! 


 

இந்த சமயத்தில் ஜப்பானிய பெண்மணி Marie Kondo குறித்து இங்கே சொல்ல நினைக்கிறேன்.  பத்தொன்பது வயதில் தங்கள் வீடுகளை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது என சொல்ல ஆரம்பித்து, இந்த விஷயத்தில் புத்தகங்கள் எழுதியதோடு, அதனை தனது தொழிலாகவே மாற்றிக்கொண்டு இருக்கிறார் - அதிலும் ஒரு சாதனையாளராக இருக்கிறார் என்று சொல்லும்போது இந்த விஷயம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று புரியும்.  இணையத்தில் இந்தப் பெண்மணி குறித்து தேடித்தான் பாருங்களேன்.  YOUTUBE-ல் மட்டுமல்லாது Tidying Up with Marie Kondo என்ற பெயரில் NETFLIX-இலும் அவரது தொடர் வருகிறது.

 

அது சரி, தேவையற்ற பொருட்களை வீட்டிலிருந்து அகற்றுவது குறித்து உங்கள் கருத்தென்ன? உங்கள் வீட்டிலும் இப்படி எந்தெந்த பொருட்கள் தேவையற்றவை எனத் தோன்றுகிறது என பட்டியல் போடமுடியுமா என சிந்தித்துப் பாருங்களேன்.  இந்த விஷயம் குறித்த உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து.

28 கருத்துகள்:

  1. வீட்டை சுத்தம் செய்வது என்பது பெரும்பாலும் குப்பைகளை அல்லது வேண்டாத பொருட்களை ஒரு அறையிலிருந்து இன்னோர் அறைக்கு மாற்றுவதாகவே அமைந்து விடுகிறது!  தூக்கி எறிய விடுவதில்லை.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு அறையிலிருந்து இன்னோர் அறைக்கு மாற்றுவது - பெரும்பாலான வீடுகளில் இப்படித்தான் நடக்கிறது ஸ்ரீராம். தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  2. 2000 ம் வருடத்தில் பாடல்கள் சேமிக்க என்று நிறைய காசு கொடுத்து ஒரு ஐ பாட் வாங்கினேன்.  அதனை கணினியில் இணைத்து பாடல்களை ஏற்ற வேண்டும்.  அதற்கு அதிலேயே கொடுக்கபப்ட்டிருக்கும் மென்பொருளை சிடி மூலம் உள்ளிடவேண்டும்.  ஒத்திப்போட்டு ஒத்திப்போட்டு உபயோகமே படுத்தாமல் ஒரு பயனும் இல்லாமல் மறந்துபோய்...  2014 ல் புதிதாக அப்படியே வீணாகப் போயிருந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீணாக்கப்பட்ட ஐ-பேட் - வேதனை! நானும் இப்படி சில விஷயங்களை வாங்கி அதிகம் பயன்படுத்தாமல் வீணாக்கி இருக்கிறேன்!

      தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

      நீக்கு
  3. இருமல் மருந்து போன்றவற்றை எக்ஸ்பயரி டேட் இருந்தாலும், திறந்து விட்டால் ஒரு வாரத்துக்குள் உபயோகித்து விடுதல் நலம்.  இல்லாவிட்டால் டிஸ்கார்ட் செய்து விடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருமல் மருந்து - திறந்து ஒரு வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும் - தகவலுக்கு நன்றி ஸ்ரீராம். பல வீடுகளில் எங்கள் வீடு உட்பட, அவற்றை அதன் முடிவு தேதி வரை வைத்திருப்பதே வழக்கமாக இருக்கிறது.

      நீக்கு
  4. “நான் இருக்கற வரைக்கும் இருக்கட்டும், நான் போனா என் கூடவே அந்தப் பொருட்கள் எல்லாவற்றையும் போட்டு எரிச்சுடு!” என்று சொல்லி முகத்தினை தூக்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவார்கள். ://

    எல்லா வீட்டு பெரியவர்களும் இப்படித்தான் போலும். எனக்கும் வயது ஆகி விட்டது. பிள்ளைகள் சிலவற்றை தூக்கி போடுங்கள் என்றதும் போட்டு விட்டேன்.
    இங்கு செருப்புக்கள், ஆடைகள், உபயோகம் இல்லா வீட்டுபொருட்கள் தனி தனி இடம் பெட்டிகள் வைத்து இருக்கிறார்கள். அதில் கொண்டு போட்டு விடுவார்கள்.
    விடுமுறை நாளில் கார்செட்டில் வேண்டாத பொருட்களை சிலர் விற்பனைக்கு போடுவார்கள்.

    //அதன் Expiry Date முடிந்து ஐந்து வருடங்கள் கழித்தும்! அதனை சாப்பிட்டு விட்டால் ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்பட்டுவிடக்கூடும் என்பதால் சொல்லாமல் கொள்ளாமல் தூக்கி எரிந்து தேவையில்லாத காகிதங்களோடு சேர்த்து கொளுத்தி விட்டேன்//

    அதில் எல்லாம் கண்டிப்பாய் கவனமாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் கோமதிம்மா. பல வீடுகளில் பெரியவர்கள் இப்படியே இருக்கிறார்கள்.

      தங்களது அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  5. எனக்கு ஒரு மோசமான குணம் உண்டு. உணவுப் பொருளை வீணாக்குவது. பிரசாதம் இனிப்பு என எதை வாங்கினாலும் பிறகு சாப்பிடலாம் பிறகு என நினைத்தே வீணாக்குவேன். சட்னு பிறருக்குக் கொடுக்கமாட்டேன். இது மாற்ற முடியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவுப் பொருட்களை வீணாக்குவது எனக்கு பிடிக்காத விஷயம். இப்போதெல்லாம் பெரிய நகரங்களில் சமைத்த உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ள யாரும் இல்லை. திருவரங்கத்தில் சிலர் வாங்கிக் கொள்கிறார்கள்.

      தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  6. வேண்டாத பொருள் என ஒன்றுமே கிடையாது. தேவையில்லாமல் வாங்கியிருக்க மாட்டோம். இதுபற்றி இன்று எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேண்டாத பொருள் என்று ஒன்றுமே இல்லை - இருக்கலாம்! வாங்கியபோது அப்படி இருந்தாலும், சில நாட்கள்/மாதங்கள் கழிந்த பிறகு நமக்குத் தேவையில்லாமல் போகலாம் - அவற்றை அடுத்தவர்களுக்கு, அதாவது தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து விடலாமே!

      உங்கள் எண்ணங்களையும் எழுதுங்கள்! தங்கள் அன்பிற்கு நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  7. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது எல்லோருக்கும் வராது. அது ரத்தத்தில் வரணும் ஜி.

    நான் விபரம் தெரிந்த நாள் முதல் நானும், என்னைச் சார்ந்த இடமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்.

    ஒரு இடத்தில் பெண் பார்க்க போயிருந்தோம். பணக்காரர்கள் தான் ஆனால் வீடு இருந்த நிலையைப் பார்த்து பெண் பிடித்து இருந்தும். மாப்பிள்ளையின் அம்மா பெண் வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது ரத்தத்தில் வரவேண்டும் - இருக்கலாம் கில்லர்ஜி. சிலருக்கு அறவே வருவதில்லை.

      தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  8. தேவையில்லாத பொருட்களை உடனுக்குடன் அப்புறப்படுத்துவது நல்ல பழக்கம். எனக்கும் இது பிடிக்கும் ஆனால் குடும்பத்தில் எல்லோரும் அப்படி இருக்க மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது எண்ணங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  9. உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். உபயோகமில்லாதவற்றை தேவைப்படுபவர்களுக்கு அவ்வப்போது கொடுத்து விடுவது வழக்கம்.

    நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  10. ஆனால் என்னைப் பொறுத்தவரை பழைய பொருட்கள் அவை நமக்குத் தேவை இல்லையெனில், தேவைப்படுபவர்களுக்கு கொடுத்துவிடுவதையே அதிகம் விரும்புவேன். அதற்காக Bபோகி வரை காத்திருக்க எனக்கு பிடிக்காது. அப்போதைக்கு அப்போது தேவையானவை, தேவையற்றவை என பிரித்து எனக்குத் தேவையற்றவை எனில், அந்தப் பொருட்கள் வேறு யாருக்கேனும் தேவை எனில் உடனடியாக கொடுத்து விடுவது எனது வழக்கம்.//

    அதே அதே ஆதி. நானும் இப்படித்தான் யாருக்கேனும் கொடுத்துவிடும் வழக்கம் உண்டு. தேவைப்படலாம் என்று அப்புறப்படுத்தி வைப்பவை பல வருடங்கள் அப்படியே இருக்கும்...அளவாகப் பொருட்கள் இருந்தால் வீட்டைப் பராமரிப்பது எளிது. நானும் அடுத்த செட் அப்படிக் கொடுக்க வேண்டும், சமீபத்தில் கொஞ்சம் அப்படி கொடுக்க முடிந்தது. இப்போது உடைகள் அலமாரி செய்து கொண்டிருக்கிறேன் வேறு சில லாஃப்டில். ஆனால் எனக்கு மேலே இருந்து பெட்டியை இறக்க ஒரு ஆள் வேண்டுமே!! வெயிட்டிங்க்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பழக்கங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  11. இப்போது கூட அந்தப் பொருட்களை தூக்கிப் போட பெரியவர்களுக்கு மனதில்லை. வேண்டாமே என்று சொல்லும்போது அவர்கள் சொல்லும் வாக்கியம் - “நான் இருக்கற வரைக்கும் இருக்கட்டும், நான் போனா என் கூடவே அந்தப் பொருட்கள் எல்லாவற்றையும் போட்டு எரிச்சுடு!”//

    ஹாஹாஹாஹா இந்த டயலாக் பல வீடுகளிலும்!!!!

    பொருட்கள் அகற்றுவது பற்றி எழுதி வைத்திருக்கிறேன்....

    //ஜப்பானிய பெண்மணி Marie Kondo//

    ஆமாம். இணையத்தில் தெரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் NETFLIX ல் பார்க்க இயலாது.

    பொருட்கள் குறையக் குறைய வீட்டுப் பராமரிப்பு எளிது அதுவும் எங்களைப் போல் தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பவர்களுக்கு ரொம்பவே எளிது.

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொருட்கள் குறையக்குறைய வீட்டுப் பராமரிப்பு எளிது - இதனை எல்லோரும் புரிந்து கொண்டால் நல்லது கீதா ஜி.

      நீக்கு
  12. மருந்துகள், காலாவதியாகும் பொருட்கள் எல்லாம் உடனுக்குடன் அப்புறப்படுத்திவிட வேண்டும். மாத்திரைகள் ஷீட் கிழிக்கு போது சில சமயம் அதில் காலாவதி தேதி போய்விடும். கடையில் வாங்கும் போதே தெரிந்துகொண்டுவிடுவது அலல்து முதலிலேயே அதைப் பார்த்து எழுதி வைத்துக் கொண்டுவிடுவது நல்லது. அல்லது உடனே தீர்த்துக் கொள்ளும் அளவுதான் வாங்க வேண்டும். இது உணவுப் பொருட்களுக்கும் பொருந்தும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மருந்துப் பொருட்கள் குறித்த தங்கள் மேலதிக எண்ணங்கள் சிறப்பு. நன்றி கீதா ஜி.

      நீக்கு
  13. இது ஒரு பெரிய வேலை தான்...

    "பரணியே இல்லாத வீடு தான் இனி கட்ட வேண்டும்" என்று ஒரு சட்டம் போட வேண்டும்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரண் இல்லாத வீடு இனி கட்டவேண்டும் - ஹாஹா…. இப்படியும் ஒட்டு மொத்தமாக செய்து விட முடியாது தனபாலன். தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  14. நம்ம வீட்டில் ஒரு சுரங்கமே கிடைக்கும்.. ஆனாலும் தூக்கிப் போட்டால், அப்புறமா என்னையும் தூக்கிப் போடுவாங்களே! இஃகி,இஃகி,இஃகி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சுரங்கம் இருக்கிறதா? ஹாஹா…

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....