அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
"YOU WILL FACE MANY DEFEATS IN LIFE, BUT NEVER LET YOURSELF BE
DEFEATED." - MAYA ANGELOU.
******
முகநூல் இற்றைகள் - தங்க மனசு - திருவரங்கம் தைத்தேர்
(பூபதி திருநாள்) 2023 - 3 ஃபிப்ரவரி 2023
பூபதித் திருநாள் என அழைக்கப்படும் தைத்தேர் திருநாள்
இன்று.
இந்த ஆண்டு 611-ஆவது பூபதித் திருநாள் கொண்டாடப்படுகிறது. பொதுவாக திருவரங்கத்தில்
நடக்கும் அனைத்து பிரம்மோத்ஸவங்களிலும் ஸ்ரீ நம்பெருமாள் மட்டும் வீதி உலாவில்
எழுந்தருளுவது வழக்கம்.
பிரதான தேவியான ரங்கநாயகி தாயார் படிதாண்டா பத்தினி என்பதால் இந்த மாதிரி வழக்கம். ஆனால் இன்று நடந்த தைத்தேர் திருவிழாவில் மட்டும்
ஸ்ரீ நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளுவார் என்பதால் தைத்தேர் மட்டும்
கொஞ்சம் ஸ்பெஷல்! காலை ஆறு மணிக்கு தெற்கு உத்திர வீதியில் இருக்கும்
தேர்முட்டியிலிருந்து
புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளிலும் வீதி உலா வந்து நிலைக்கு திரும்புவார். இன்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டு சிறிது தூரம்
வரை தேர் உடன் நடந்து சில காணொளிகள், நிழற்படங்கள் எடுத்துக் கொண்டு திரும்பினேன். உபயநாச்சியார்களுடன் ஸ்ரீ நம்பெருமாள் தரிசனம் மிகச்
சிறப்பாகக் கிடைத்தது.
தேர் புறப்படுவதற்கு முன்னர் வீதி எங்கும் வீடுகளில்
இருப்பவர்கள் தத்தமது வீடுகளின் வாசலில் பெரிய கோலங்கள் அழகழகாக போட்டுக்
கொண்டிருந்தார்கள்.
கோலங்களிலேயே தேர், விதம் விதமான வடிவங்கள் என உற்சவக் கோலம் தான். பார்க்கவே அழகு தான் இந்தக் கோலங்கள். அதுவும் எத்தனை வேகம் அவர்களிடம் - லாவகமாக கைகள்
பரபரவென்று இயங்க சில நிமிடங்களில் பெரிய பெரிய கோலங்களைப் போட்டு விடுகிறார்கள். ஒரு வீட்டு வாசலில் பெரிய அளவில் கோலம் போட்டுக்
கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.
தேர் பார்க்க வந்த பெண்களில் ஒருவர், கோலம் போட்டுக்கொண்டிருந்தவரிடம், “கொஞ்சம்
கோலம் மாவு தாருங்கள், நானும் ஒரு கோலம் போடுகிறேன்” என்று கேட்க, கோலம்
போட்டுக்கொண்டிருந்த பெண்மணி சிடுசிடுவென முகத்தை வைத்துக் கொண்டு “ஏதோ ஒரு நாள்
வந்துட்டு கோலம் போட வந்துட்டீங்க! எங்க வீட்டு வாசல்ல எங்களுக்கு கோலம் போட
தெரியும்!
வந்தமா, தேர் பார்த்தோமான்னு போயிட்டே இருங்க!” என்று சொல்லிக் கொண்டே கோலத்தினை
போட்டு முடித்தார்.
பக்கத்து வீட்டில் இருந்த மற்றொரு பெண்மணி கோலமாவு கொடுக்க, தேர் வரும் வீதியில்
ஒரு சிறிய கோலம் போட்டு, அந்த மற்ற பக்தரும் மனதில் நிம்மதி அடைந்தார்.
தேர் புறப்பட்டு வீதி உலா வரத் தயாராக, பெரிய வடம்
பிடித்து தேரை இழுத்துக்கொண்டு வந்தார்கள். என்னதான் தைத்தேர் அளவில் சிறியது என்றாலும், அந்தத்
தேரை வடம் பிடித்து இழுப்பது அத்தனை சுலபமான விஷயம் அல்ல. அந்த அதிகாலை நேரத்தில்,
சற்றே சிலீரென காற்று அடித்துக் கொண்டிருந்தாலும், பலருக்கு வியர்க்க ஆரம்பித்து
விடுகிறது. ஆனாலும் ஸ்ரீ நம்பெருமாளுக்கு சேவை செய்யும் அந்த பக்தகோடிகளுக்கு
வேர்க்கக் கூடாது என்பதற்காக மிகப்பெரிய பனை விசிறி ஒன்றை வைத்துக் கொண்டு, அங்கும் இங்கும் ஓடி விசிறிக்கொண்டே இருக்கிறார் ஒரு
பக்தர்.
ஸ்ரீ நம்பெருமாளுக்கு சேவை செய்யும் பக்தர்களுக்கு சேவை செய்வதும் ஒரு விதத்தில்
ஸ்ரீ நம்பெருமாளுக்கு செய்யும் சேவை தான் என்பது விசிறி வைத்து வீசிய அந்த பக்தரைப்
பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும். அந்த பக்தருக்குத் தான் எத்தனை நல்ல மனது! சக பக்தர்களுக்கு வியர்த்துவிடாமல் இருக்க அங்கும்
இங்கும் ஓடி ஓடி, விசிறி விட்ட அந்த பக்தரின் மனசு - தங்க மனசு.
கொஞ்சம் கோல மாவு கொடுக்க மாட்டேன் என்று சொல்லும்
மனசு கொண்ட பெண்மணியையும், சக பக்தர்களுக்கு விசிறி வைத்து வீசிக்கொண்டிருந்த தங்க
மனசுடைய மனிதரையும், ஒரு சேர, ஒரே நாளில் பார்க்க வைத்த ஸ்ரீ நம்பெருமாள் மனசும்
தங்க மனசு தான்! எத்தனை எத்தனை மனிதர்கள் - அவர்களுக்கு தான் எத்தனை எத்தனை
குணங்கள்… திருவிழாக்கள் நமக்கு பல மனிதர்களை அடையாளம் காண்பித்துக் கொடுக்கிறது
என்ற எண்ணங்களுடனே, ஸ்ரீ நம்பெருமாளையும் உபயநாச்சியார்களையும் தரிசித்து வீடு
திரும்பினேன்.
நான் எடுத்த சில படங்களையும், காணொளிகளையும் இங்கே இணைத்திருக்கிறேன். தாங்களும் பார்த்து ரசிக்கலாமே!
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை
பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து…
காணொளிகளை கருத்தையும் ரசித்தேன். ஆண்டாள் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை என்கிற குறை!
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. ஸ்ரீ ரங்கம் பூபதி தேர் விபரம் அருமை. இறைவனை நானும் மானசீகமாக தரிசித்து ஆனந்தம் அடைந்து கொண்டேன். சக பக்தர்களுக்கு சேவை செய்த அந்த நல்ல மனிதரையும் வணங்கி கொண்டேன். மனிதர்களின் வேறுபாட்டு குணங்களை விளக்கியது சிறப்பு. இது இறைவனின் படைப்பில் இயல்பு.
வேறு என்னசொல்வது? பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மனித மனம் பல விதமானது.
பதிலளிநீக்குகாணொளிகள் மிகவும் சிறிது தரிசனம் கிடைத்தது நன்றி ஜி
அருமை...
பதிலளிநீக்குநல்ல பதிவு..
பதிலளிநீக்குகோலமாவு தருவதற்கு மறுத்துப் பேசியது நமக்கே வருத்தம் எனில்
அந்தப் பெண்ணுக்கு மனம் எப்படி இருந்திருக்கும்?..
இப்படியும் சில மனிதர்கள்!..
காணொளிகளும் தகவலும் சிறப்பு. முதல் காணொளியில் பெரிய விசிறி வைத்து வீசுவது தெரிகிறது. அந்தப் பெண்மணிக்கு என்ன கடுப்போ கோலப்பொடி கொடுப்பதில்! பெரிய கோலம் போடும் பெண்மணி ஆனால் சின்ன மனசு!!!
பதிலளிநீக்குஇரண்டாவது காணொளியில் ஆண்டாளு!! தெரிகிறாளே.....தேரின் பின்னில் அல்லது பக்கவாட்டில்?
கீதா
வாசகம் நல்ல வாசகம்.
பதிலளிநீக்குகீதா
தேர் ஊர்வலம் தரிசித்துக் கொண்டோம்.
பதிலளிநீக்குஎத்தனை விதமான மனிதர்கள்.
தேர்பார்த்த மகிழ்ச்சி, கோலமாவு கொடுக்கவில்லை என்றாலும் அவர்கள் பேசியது இன்னும் வருத்தம். விசிறி விடும் அன்பர் வாழ்க! தேர்திருவிழாவின் போது மோர், பானகம், தண்ணீர் மற்றும் பிரசாதங்கள், கொடுத்து கொண்டே இருப்பார்கள்.
பதிலளிநீக்குதைத்தேருக்கு முதல் நாள், கோண(ல்) வையாளி பார்த்தீர்களா?
பதிலளிநீக்கு