வெள்ளி, 10 மார்ச், 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி முப்பத்தி ஆறு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட துள்சி மானஸ் மந்திர் - மதிய உணவு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

"MY PAIN MAY BE THE REASON FOR SOMEBODY'S LAUGH. BUT MY LAUGH MUST NEVER BE THE REASON FOR SOMEBODY'S PAIN." - CHARLIE CHAPLIN.

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி முப்பத்தி ஆறு


 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு  ; விதி பதினேழு  ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது ; விதி இருபத்தி ஒன்று ; விதி இருபத்தி இரண்டு ; விதி இருபத்தி மூன்று ; விதி இருபத்தி நான்கு ; விதி இருபத்தி ஐந்து ; விதி இருபத்தி ஆறு ; விதி இருபத்தி ஏழு ; விதி இருபத்தி எட்டு ; விதி இருபத்தி ஒன்பது ; விதி முப்பது ; விதி முப்பத்தி ஒன்று ; விதி முப்பத்தி இரண்டு ; விதி முப்பத்தி மூன்று ; விதி முப்பத்தி நான்கு ; விதி முப்பத்தி ஐந்து ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

முப்பத்து ஆறாம்  விதி சொல்வது, "உனக்கு ஒத்து வராதவற்றிலிருந்து வெறுப்புடன் ஒதுங்கிக்கொள்வதே சிறந்தது".

 

மூல நூலில், இதை "DISDAIN THINGS YOU CANNOT HAVE: IGNORING THEM IS THE BEST REVENGE" என்கிறார் எழுத்தாளர்.

 

காலம் அறிதல் குறித்துப் பேசிய போது, வெகு காலம் கழிந்த பின்பே, நாம் எதிர்பார்ப்பவை கிடைக்க வாய்ப்பே இல்லை என்னும் புரிதல் உண்டாகும் துக்ககரமான நிகழ்வும் சில சமயம் ஏற்படலாம் எனக் குறிப்பிட்டிருந்தோம்.

 

அதற்கான காரணம், அப்பொருட்களோ அல்லது நபர்களோ, நம் ஆர்வத்திற்கும், திறமைக்கும் அப்பாற்பட்டவர்களாக இருக்கலாம்.

 

ஒருவேளை, அவை நம் தகுதிக்குக் குறைவானவையாகவும் இருக்கலாம்.

 

அதை உணர்ந்தவுடன், அது குறித்த தோல்விகரமான எண்ணத்தை வளர்த்துக் கொள்வதால் எப்பயனும் கிட்டப்போவதில்லை.

 

மாறாகத் தேவையற்ற வெறுப்புணர்வும், காழ்ப்புமிகு விமர்சனங்களும், பழிவாங்கும் உணர்வும் உருவாகி முடிவில் நம்மையே அழித்துவிடும்.

 

எனவே, ஏமாற்றங்களை ஒரு பாடமாக ஏற்றுக்கொண்டு அதிலிருந்து ஒதுங்கிக் கொள்வதும், வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி மகிழ்வோடு நடை போடுவதுமே சிறப்பான உபாயமாக இவ்விதி கூறுகிறது.

 

அங்கனம் விலகிக் கொள்வதால், நமக்கு கிடைக்காதவற்றை விட, அதை துளியும் சட்டை செய்யாத நம் மீதே ஈர்ப்பும் மரியாதையும் மக்கள் மத்தியில் ஏற்படும்.

 

"காய்ச்ச மரத்தில் தான் கல்லடி படும்" எனும் சொல்லாடலுக்கேற்ப, சாதாரண மனிதர் சிலர், மிகப்பெரிய ஆளுமைகளைப் பொது இடங்களில் கீழ்த்தரமாகப் பேசி சீண்டி பிரபலமடைய முயல்வதைக் காண முடியும். 

 

அவ்வாறு சீண்டுவோரிடமிருந்தும் இவ்விதிப்படி கண்டுகொள்ளாமல் விலகிவிடுவதே, மிகப்பெரிய ஆளுமைகள் கையாளும் உத்தியாகப் பல இடங்களில் பார்த்திருப்போம்.

 

கொடிய நோயால் பீடிக்கப்படுதல் போன்ற மிகப்பெரும் ஆபத்துகளிலிருந்தும் மீள்வதற்கு இவ்விதி பலருக்கும் சிறப்பாகப் பயன்பட்டிருக்கிறது.

 

அவர்களுள் ஒரு தலைசிறந்த உதாரண மனிதர் குறித்தே இவ்விதி குறித்த விவாதம் மூலம் அறியவிருக்கிறோம்.

 

தம் விடலை வயதில், புகைப்பது பழக்கமாகத் தொடங்கி, போதைப் பழக்கத்தில் வீழ்ந்து வாழ்வைப் பாழாக்கிக்கொண்டிருந்தவர், மணிப்பூரைச் சேர்ந்த திரு பிரதீப்குமார் சிங் அவர்கள்.

 

நல்ல உடற்கட்டுடன் இருந்தபோதிலும், ஒரு கட்டத்தில் பணம் இல்லாமல், பிறர் உபயோகித்து தூக்கி எறிந்த போதை ஊசிகளை உபயோகித்ததால், நாட்பட்ட காய்ச்சலுடன் 1999 ஆம் ஆண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

 

அங்கே அவருக்குக் கொடிய ஹெச்.ஐ.வி உயிர்க்கொல்லி நோய் இருப்பது கண்டறியப்பட்டவுடன் உலகத்தார் அனைவராலும் ஒதுக்கப்பட்டார்.

 

செவிலியர்களும், அந்நோய் மீதான அச்சத்தால், மருந்துகளையும், ஊசிகளையும் தூரத்திலிருந்தே அவரை நோக்கி எறியும் அவலநிலையும் ஏற்பட்டது.

 

இறப்பை எதிர்நோக்கி, மூன்று வருடங்களுக்கு மேல் பலர் அவச்சொற்களைக் கேட்டவாறே படுக்கையிலேயே கிடந்து விட்டார்.

 

பின்னர் ஒரு நாள், அவர் தங்கை சுனிதா ஒரு சிறு பூச்செடியைக் கொடுத்து, அதை வளர்த்து நேரத்தைச் செலவிடுமாறு கூறினார்.

 

வேண்டா வெறுப்பாக அதைச் செய்யத் தொடங்கிய பிரதீபுக்கு, அது வளர ஆரம்பித்ததும், "ஒரு சிறு செடியாலேயே வளர முடியும்போது நாம் ஏன் படுத்துக்கொண்டே உயிர் விட வேண்டும்?" என்னும் கேள்வி எழுந்தது.

 

"வைரஸ் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும், இறப்பு எல்லோருக்கும் வருவதுதான், நம்மால் முடிந்ததை எஞ்சிய வாழ்நாளில் செய்யலாம்!" என்னும் எண்ணத்தால் எழுந்து பூந்தோட்டம் அமைப்பதிலும், உடற்கட்டை வலுப்படுத்தும் பயிற்சியிலும் இறங்கினார்.

 

பலரது ஏளனச் சொற்களைச் சிறிதும் இலட்சியம் செய்யாமல், சொந்தமாகவே நூல்களைப் படித்தும், காணொளிகளைப் பார்த்தும் தம் உடற்கட்டை வலுப்படுத்தினார்.

 

அதன் விளைவாகவே, 2007 இல் மணிப்பூரின் ஆணழகன் போட்டியில் வெல்லத் தொடங்கி, அடுத்த ஐந்து ஆண்டுகளிலேயே, இந்திய ஆணழகன் போட்டி, தெற்காசியப் போட்டி, உலக ஆணழகன் போட்டி என அனைத்து போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றிகளைக் குவித்தார்.

 

2017 ஆம் ஆண்டு முதல், மணிப்பூர் அரசு சார்பாக ஒரு ஊக்குவிப்புப் பேச்சாளராகவும், தன்னார்வத் தொண்டாளராகவும் பணியாற்றி வருகிறார்.

 

தம்மையும், தம் எஞ்சிய வாழ்நாளையும் மதிக்கத் தொடங்கியதால், பிறர் ஏளனங்களை ஒதுக்கி, உலகளாவிய அங்கீகாரத்தை வென்றெடுத்த இவரின் வாழ்வு குறித்த விரிவான நூலை கீழ்காணும் சுட்டியில் வாசித்து மகிழலாம்.

 

I am HIV Positive, So What?: A World Champion's Fight Against Drugs,Disease and Discrimination Kindle Edition

 

நூல் வாசிக்கும் அளவு பொறுமை இல்லாதோர், கீழ்காணும் காணொளிச் சுட்டி மூலம் இவர் குறித்து மேலும் சுருக்கமாக அறிந்துகொள்ளலாம்.

 

Motivational History | I Am HIV +ve So What? | Tamil | Pradipkumar Singh History | Pokkisham | Vicky

 

“உங்கள் அனுமதியின்றி உங்களை யாராலும் காயப்படுத்த முடியாது,” என்று எலினார் ரூஸ்வெல்ட் கூறியுள்ளார்.

 

அதற்கேற்ப, பயனற்ற விமர்சகர்களுக்கும், வீண் வம்பர்களுக்கும் எதிர்வினையாற்றி அவர்களை பெரிய மனிதர்களாக மாற்றும் தவற்றை செய்யாது இருப்போம்.

 

அப்போதுதான், நம் மதிப்பை உணர்ந்தோரும், நம் திறமைகளைச் சரியாகப் பயன்படுத்த விளைவோரும் நம்மைத் தேடி வரும் அற்புதம் நிகழும்.

 

அங்கனம், தலைசிறந்த திறமைசாலிகளைத் தம்மை நோக்கி ஈர்க்க, பெரும் ஆளுமைகள் உலகளவில் கையாளும் உத்தி ஒன்றை அடுத்த விதியில் சுவைக்கலாமா?

 

நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

17 கருத்துகள்:

  1. நல்லதொரு கருத்து.  நம்மை நோக்கி வீசப்படும் அவச் சொற்களுக்கு எதிர்வினையாற்றாமல் இருக்க எத்தனை பேரால் முடிகிறது?  நல்ல யோசனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரம்பத்தில் அவ்வாறு ஒதுங்கி இருத்தல் கடிநம்தான், பழகப்பழக கைவரும்.
      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

      நீக்கு
  2. சிறப்பான கருத்துகள்..

    மனதில் உறுதி வேண்டும்..
    மனதில் உறுதி வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐய்யா.

      நீக்கு
  3. தம்மையும், தம் எஞ்சிய வாழ்நாளையும் மதிக்கத் தொடங்கியதால், பிறர் ஏளனங்களை ஒதுக்கி, உலகளாவிய அங்கீகாரத்தை வென்றெடுத்த இவரின் வாழ்வு மன உறுதிக்கு எடுத்துக்காட்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கோமதி அரசு மேடம்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.
      ஒரு பொருத்தமான குறளை தாங்கள் அளித்திருந்தால் மேலும் மகிழ்ந்திருப்பேன்.

      நீக்கு
  5. சிறிய செடியிலிருந்து உதித்த உயர்வான எண்ணங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி ஐய்யா.
      எவருக்கு எதிலிருந்து உத்வேகம் பிறக்கும் என யாராலும் கணிக்க இயலாது.
      அதுதான் வாழ்வின் ருசிகரம்.

      நீக்கு
  6. மனதில் உறுதி வேண்டும் என நன்றாக எடுத்துக்காட்டியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி மாதேவி மேடம்.

      நீக்கு
  7. இன்று நீங்கள் பகிர்ந்திருக்கும் விதி சூப்பர் விதி, அரவிந்த். கண்டுகொள்ளாமல் போவதுதான் சிறந்தது. கொஞ்சம் கஷ்டம் பலருக்கும்....இருந்தாலும் இந்த உத்தி நல்ல பயன் தரும்.

    முதலில் அதாவது மனப்பக்குவம் வரும் முன் எல்லாம் யாராவது ஏதேனும் சொன்னால் மனம் வேதனையுறும். அது தவறு என்று வாதிடுவது அல்லது விளக்கம் கொடுப்பது என்று செய்ததுண்டு. ஆனால், பக்குவம் வந்த பிறகு அதன் பின் கண்டு கொள்ளாமல் நகர்ந்துவிடுவதே வழக்கமாகிவிட்டது. அப்படி நகர்தல் நல்லதாகவே இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. கொடுத்திருக்கும் உதாரணம் மிகச் சிறந்த உதாரணம், அரவிந்த்.

    இப்படி ஹெச் ஐ வி அல்லது வேறு ஏதாவதால் தடம் புரண்டு பின் சாதிப்பது மட்டுமல்ல, எந்தவிதமான இப்படியான தடம் புரளும் விஷயங்களுக்கு உட்படாமல் சாதாரண மக்களும் தங்கள் குறிக்கோளை அடையும் முன் ஏகப்பட்ட அவதூறுகள், விமரிசனங்களைச் சந்திக்க வேண்டியிருக்கத்தான் செய்கிறது. அதை எல்லாம் மனதில் கொண்டால் தன்னம்பிக்கை போயே போய்விடும். எங்கள் வீட்டிலேயே உதாரணம் உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. நல்ல உதாரணம் சொல்லியிருக்கீங்க அரவிந்த். இப்படி வாழ்க்கைத் தடம் புரண்டு அதன் பின் சாதிக்கும் மனிதருக்கு மட்டுமல்ல, எந்தவித தடம் புரளலும் இல்லாமல் சாதாரண மக்கள் தங்கள் குறிக்கோளை அடைவதற்கு எத்தனை அவதூறுகள், இன்னல்கள், விமரிசனகளைப் புறம் தள்ளி மேலே வர வேண்டியிருக்கிறது. பலரும் அப்படித்தான் வருகிறார்கள். அவர்களுக்கும் இந்த விதி பொருந்தும். எங்கள் வீட்டிலேயே உதாரணம் உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. மேலே வந்த பின், முன்பு எதிர்மறையாக விமர்சித்தவர்களே ஆஹா என்று சொல்லவும் செய்வாங்க. இரண்டையும் சமநிலையில் எடுத்துக் கொள்ளும் பக்குவமும் வர வேண்டும். விமரிசனங்கள் வரும் போது கண்டுகொள்ளாமல் நகர்வதுடன், அதை நமக்குச் சாதகமாக நம் குறிக்கோளை இன்னும் வைராக்கியமாக எடுத்துக் கொண்டு உழைக்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கீதா மேடம்.
      பலர் சொந்த அணுபவங்களையும் இவ்விதி பிரதிபலிக்கும்.
      சரியான உதாரணம் கிடைக்காமல் நான் தினரிக்கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு காலையில் இந்த காணொளி கிடைத்து நூல் வாங்கும் சுட்டியும் கிடைத்தது.
      இத்தகைய கொடிய நோயிலிருந்து மீண்ட அதிசய மனிதர் பற்றிவியப்புடன் படித்து பகிரலாம் என முடிவு செய்தேன்.
      மனிப்பூரிந் போதைப்பழக்கம் குறித்து பல அதிர்ச்சியான தகவல்கள் இந்நூலில் கொட்டிக்கிடக்கின்றன.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....