அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட வாரணாசி - காசி விஷ்வநாத் ஆலயம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
THE TRULY RICH ARE THOSE WHO ENJOY WHAT THEY HAVE.
******
வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி
முப்பத்தி இரண்டு
வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய
பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!
அறிமுகம் ;
விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு ; விதி பதினேழு ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது ; விதி இருபத்தி ஒன்று ; விதி இருபத்தி இரண்டு ; விதி இருபத்தி மூன்று ; விதி இருபத்தி நான்கு ; விதி இருபத்தி ஐந்து ; விதி இருபத்தி ஆறு ; விதி இருபத்தி ஏழு ; விதி இருபத்தி எட்டு ; விதி இருபத்தி ஒன்பது ; விதி முப்பது ; விதி முப்பத்தி ஒன்று ;
என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும்
உற்சாகம் கலந்த வணக்கங்கள்.
திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48
Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா?
முப்பத்தி இரண்டாம் விதி சொல்வது, "மக்களின்
கற்பனைக் குதிரையோடு இயைந்து விளையாடு".
மூல நூலில், இதை "PLAY
TO PEOPLE'S FANTASIES" என்கிறார்
எழுத்தாளர்.
பெரும்பாலான மக்களுக்குப் பிரச்சனைகளுக்கான உடனடி
தீர்வுகள் மீதே எப்போதும் கவனம் இருக்கும்.
தங்கள் பிரச்சனைகளை, ஒரு விரல் அசைவில் தீர்ப்பவர்
எப்போது வருவார் என்னும் கற்பனையான ஏக்கம் இருந்துகொண்டே இருக்கும்.
அதனால்தான், பிரச்சனைகளுக்குக் காரணமாக ஒரு
குறிப்பிட்ட வகுப்பினரை எதிரியாகக் கட்டமைக்கும் உத்தி, வளர்ந்த நாடுகள் உள்ளிட்ட
அனைத்து நாடுகளின் அரசியலிலும் கையாளப்படுகிறது.
அவ்வாறு கட்டமைக்கப்பட்ட எதிரியை அழிப்பதாகப்
பிரச்சாரம் செய்பவர், முழு பலத்துடன் ஆட்சிக் கட்டிலில் அமர்வதும் காலகாலமாக
நடப்பதுண்டு.
இங்கனம், பிரச்சனைகளை மலினப்படுத்தி, பெருவாரியான
மக்களைக் கவரும் இவ்வுத்தி, அரசியலில் பெரும்பாலும் தவறான நோக்கங்களுடன்
பயன்பட்டாலும், பல துறைகளில் ஆக்கப்பூர்வமான முறைகளிலும் உபயோகிக்கப்படுவதை சிறிது
சிந்தித்தாலே உணரலாம்.
கல்வி நிலையங்களில், இளம் மாணாக்கரின் கட்டற்ற
கற்பனைத் திறனை அறிந்து, சரியான முறையில் அத்திறனை வழிநடத்தும் ஆசிரியர்களே
தலைசிறந்து விளங்குவதைக் காண இயலும்.
மாணவர்களின் நாயகர்களாகப் போற்றப்படும்
அவ்வாசிரியர்கள், கணித சூத்திரங்களையோ, அல்லது இலக்கியப் படைப்புகளையோ எளிய பாடல்களாக மாற்றி,
மனதில் எளிதில் பதியவைப்பர்.
அதற்கும் மேல், அப்படைப்புகளை உருவாக்கியோரின்
வாழ்வனுபவங்களை, சுவாரசிய நடையில் எடுத்துரைத்தும், அவற்றை நடைமுறை உலக
நடப்புகளோடு பொருத்தியும் விளக்கி, பசுமரத்தாணிபோல் மனதில் பதியச் செய்வர்.
பாடங்களோடு இயைந்த சுற்றுலா, காணொளிகள் போன்றவற்றால்,
மாணவர்களின் கற்பனையும் தூண்டப்பட்டு, பெரும் கண்டுபிடிப்பாளர்களாக மாறும்
படைப்பாற்றலும் வளருவது உறுதி.
இதற்கு மாறாக, வெறும் வினா வங்கிகளைக் கொண்டு பாடம்
நடத்தும் ஆசிரியர்கள், மாணவர்களால் மறக்கப்படுவதோ, அல்லது வெறும்
நகைச்சுவையாளர்களாக மட்டுமே நினைவுகூரப்படுவதோ உண்டு.
மனித அறிவின் உச்சமாகக் கருதப்படும் அறிவியல்
கோட்பாடுகளும், பிரபஞ்ச இயக்கத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியில், சில
விசித்திரமான கற்பனைகளாகவே ஆரம்பத்தில் உருவாகின்றன.
சென்ற நூற்றாண்டின் மிகப் பிரபலமான கோட்பாடான, திரு
ஆல்பர்ட் ஐன்ஸ்டின் அவர்களின் சார்பியல் கோட்பாடு கூட, துவக்கத்தில் ஒரு ஊகம்
"Hypothesis" ஆகவே கருதப்பட்டது.
உகந்த சூரிய கிரகணம் வரை தயாராக இருந்து, இக்கோட்பாடு
அனுமானித்த விண்வெளியையே வளைக்கும் ஈர்ப்புவிசையை உறுதிசெய்ய சில ஆண்டுகள்
காத்திருக்கவேண்டியிருந்தது.
கல்விக்கூடங்கள் முதல் ராணுவம் வரை, உலகின் அனைத்து
வகை நிறுவன அமைப்புகளும், தொழில்முனைவு கொண்டோரின் கற்பனையிலேயே முதலில்
உருவாக்கப்பட்டு பின்னர் நிதர்சனமாகப் படைக்கப்படுபவை.
அத்தகைய வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்றான, பெப்சிகோ
நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக உயர்ந்து, இந்தியாவிற்கே பெருமை சேர்த்தவர்
திருமதி இந்திரா நூயி அவர்கள்.
தம் பணிக்காலத்தில், நிறுவனத்தின் வருடாந்தர விற்பனை
வருவாயை எண்பது விழுக்காடு அதிகரிக்கச் செய்த அவரது தனித்துவத் திறமைகளாக அவர்
இரண்டைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சிக்கலான பிரச்சினையை எளிமையாக்குவது முதலாவது.
மற்றையது அதை மற்றவர்களுக்குப் புரியும் விதத்தில்
எடுத்துச் சொல்வது.
இவ்விரண்டைத்தான், அரசியல் வாதிகள் முதல், கார்பரேட்
நிறுவனங்கள் வரை, பிரச்சார விளம்பரங்கள் வாயிலாக உபயோகிப்பதை நாள்தோறும்
காண்கிறோம்.
“உறுதியான நம்பிக்கை இல்லாமல் எந்த நட்பும் இருக்க முடியாது,
நாணயம் இல்லாமல் எந்த உறுதியான நம்பிக்கையும் இருக்க முடியாது” என்பது திரு - சாமுவேல் ஜான்சன் அவர்களின் கூற்று.
அதற்கேற்ப, கற்பனையால் விஷயங்களை எளிதாக்கும்
உத்தியை, நாணயத்துடனும், அனைவரையும் உயர்த்தும் உயரிய நோக்கத்துடனும் பயன்படுத்தி
வாழ்வாங்கு வாழலாம்.
இவ்விதி சொல்லும் உத்திகளைத் தவறாகப்
பயன்படுத்துவோரிடமிருந்து, மக்களைக் காக்கும் தலைசிறந்த உபாயத்தை அடுத்த விதியில்
சுவைக்கலாமா?
நூல் குறித்த விவாதம் தொடரும்.
*****
இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை
பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள்
அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்,
இரா. அரவிந்த்
உறங்கும்போது அல்ல, விழித்திருக்கும்போதே காண்பதே கனவு என்றார் அப்துல் கலாம். அவையே நம்மை வழிநடத்தும்.
பதிலளிநீக்குஆம் ஐய்யா. அப்துல் கலாம் அவர்கள், தம் கடைசி ஶிள்ளாங் பயணம் வரை விழித்துக்கொண்டே பல அருமையான கனவுகளைக் கண்டுகொண்டே இருந்தார்.
நீக்குஅவற்றுள் ஒன்று, நாடாளுமன்றத்தில் வெரும் அமளி இல்லாமல், அறிவார்ந்த விவாதங்கள் நடக்கும் நாள் வர வேண்டும் என்பதே.
அதுபோல், நாமும் சிறந்த மாற்றங்களை ஏர்ப்படுத்தும் கனவை உருவாக்கி அதை நோக்கி பயணிப்போம்.
தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.
நல்லதொரு அலசல்கள் நண்பரே...
பதிலளிநீக்குமிக்க நன்றி கில்லர்ஜி சார்.
நீக்குஅருமை...
பதிலளிநீக்குமிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.
நீக்குஎளிய முறையில் இலகுவாக எடுத்துச் சொல்வது .
பதிலளிநீக்குஎனக்கு தெரிந்த மகனின் ஆசிரியர் தமிழில் இரட்டைகிளவி உதாரணத்துக்கு
'ஜீன்ஸ் படப்பாடலை உதாரணமாக பாடிக் காட்டி இருந்தார். :)
ஆம். கண்ணோடு காண்பதெல்லாம் பாடலாக இருக்கும் மேடம்.
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்த்ிற்கும் மிக்க நன்றி மாதேவி மேடம்.
வெறும் வினா வங்கிகளைக் கொண்டு பாடம் நடத்தும் ஆசிரியர்கள், மாணவர்களால் மறக்கப்படுவதோ, அல்லது வெறும் நகைச்சுவையாளர்களாக மட்டுமே நினைவுகூரப்படுவதோ உண்டு.//
பதிலளிநீக்குபெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகளில் இதுதான் நடக்கிறது தற்போது. நல்ல யதார்த்த உதாரணங்களோடு கூடிய நல்ல உரைகள் இல்லை என்பதே வேதனை. ஆசிரியர்களை மறக்கிறார்களோ இல்லையோ பாடங்கள் மனதில் பதிவதில்லை அதனால் அவர்களால் வேலைகளுக்கான நேர்காணல்களில் சிறப்பாகச் செய்ய முடிவதில்லை என்பது மிகவும் வேதனையான விஷயம்.
கீதா
ஒரு சிக்கலான பிரச்சினையை எளிமையாக்குவது முதலாவது.
பதிலளிநீக்குமற்றையது அதை மற்றவர்களுக்குப் புரியும் விதத்தில் எடுத்துச் சொல்வது.//
ஆம் அதேதான். இது ஒரு சிலரால் மட்டுமே முடிகிற காரியம். ஆனால் பள்ளிகளில் நோட் புக்கில் எழுத மட்டுமே வைத்து மனனம் செய்யச் சொல்லும் போது குழந்தைகள் திண்டாடுவதைப் பார்க்கலாம்.
சிறு குழந்தைகளுக்குக் கணக்குப் பாடம் சொல்லித் த்ரும் போது 2ம் 2ம் நான்கு என்பதை விட இதையே அவர்களுக்குப் பிடித்தமான மிட்டாய்கள், அல்லது அவர்களைக் கவரும் சிறிய சாதனங்களை வைத்து கூட்டல், கழித்தல், பெருக்கல் வகுத்தல் எல்லாமே போதிக்கும் போது நன்றாக மனதில் பதியும். இதே போன்றுதான் மற்றவையும்.
//“உறுதியான நம்பிக்கை இல்லாமல் எந்த நட்பும் இருக்க முடியாது, நாணயம் இல்லாமல் எந்த உறுதியான நம்பிக்கையும் இருக்க முடியாது”//
இது ஆசிரிய மாணவர், பெற்றோர் குழந்தைகளுக்கும் பொருந்தும் இல்லையா அரவிந்த்? மாணவர்களுக்கு ஆசிரியரிடத்தில் நம்பிக்கை வேண்டும் அது போலவே பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் வைஸ் வெர்சா..
//சில விசித்திரமான கற்பனைகளாகவே ஆரம்பத்தில் உருவாகின்றன.//
கற்பனைகள், கோட்பாடுகளாக உருவாகுபவையே, நீங்கள் அடுத்த வரிகளில் சொல்லியிருப்பது போல் பல வருடங்கள் கழித்து நிரூபிக்கப்படுகின்றன.
உதாரணங்கள் நன்று.
கீதா