அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
NEVER WAIT; LIFE GOES FASTER THAN WE THINK!
******
பயணங்கள் இனிமையானவை. தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர்
உங்களுக்கும் பயன்படலாம்.
இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின் பகுதிகளுக்கான சுட்டி கீழே!
பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.
பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.
பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள்.
பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.
பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி.
பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட்.
பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு.
பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட்.
பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும்
ராமேஷ்வர் dhதாம்.
பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.
பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.
பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.
பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி
பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்
பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா
பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்
பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…
பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…
பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்
பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்
பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்
பகுதி இருபத்தி இரண்டு - அயோத்யா ஜி - இராம ஜென்ம பூமி
பகுதி இருபத்தி மூன்று - அயோத்யா ஜி - சரயு நதி அனுபவங்கள்
பகுதி இருபத்தி நான்கு - Bபேல் PபThத்தர் மற்றும் இரவு உணவு
பகுதி இருபத்தி ஐந்து - ராஜ் (dh)த்வார் மந்திர்
பகுதி இருபத்தி ஆறு - கனக் Bபவன் எனும் தங்க மாளிகை
பகுதி இருபத்தி ஏழு - காலை உணவு - குஷி க்ளிப் - சரயு படித்துறை
பகுதி இருபத்தி எட்டு - ஸ்ரீ நாகேஷ்வர்நாத் ஜி எனும் சிவன் கோவில்
பகுதி இருபத்தி ஒன்பது - அயோத்யா ஜி - Khகாந்தானி DHதவா Khகானா
பகுதி முப்பது - அடுத்த நதிக்கரை நகரை நோக்கி
சென்ற பகுதியில் எங்கள் பயணத் திட்டத்தில் இரண்டு
நதிக்கரை நகரங்கள் பார்த்து முடித்து மூன்றாம் நதிக்கரை நகரமான வாரணாசி வந்து
சேர்ந்தது குறித்து எழுதி இருந்தேன். இந்தப் பகுதியிலிருந்து வாரணாசி நகரில் எங்களுக்குக்
கிடைத்த அனுபவங்கள் குறித்து எழுத இருக்கிறேன். நான் வாரணாசி நகருக்கு பயணிப்பது
இது முதல் முறை அல்ல! முன்னரே சில முறை அங்கே சென்றிருக்கிறேன். அந்தப் பயணங்களில் ஒன்று குறித்து வலைப்பூவில் பயணத்
தொடராக எழுதி இருப்பதோடு மின்நூலாகவும் (திரிவேணி சங்கமம்)
அந்த அனுபவங்களை வெளியிட்டு இருக்கிறேன். ஒவ்வொரு முறை சென்ற போதும் பார்த்த வாரணாசி நகரை
இந்த முறை பார்க்கும்போது அத்தனை மாற்றங்கள். அதிலும் 2018-ஆம் ஆண்டு புதிதாக, காஷி விஷ்வநாத்
காரிடார் ப்ராஜெக்ட் தொடங்கிய பிறகு வியத்தகு மாற்றங்கள் வந்து இருக்கின்றன. முன்பு பல கால கட்டங்களில் நடந்த
ஆக்கிரமிப்புகள்/மாற்றங்கள் காரணமாக 3000 சதுர அடி அளவில் மட்டுமே இருந்த காசி
விஷ்வநாத் ஆலயம் தற்போது 5 லட்சம் சதுர அடி அளவில் பரந்து விரிந்து பிரம்மாண்டமாக,
வரும் பக்தர்களுக்கு பலவித வசதிகளுடன் அமைந்து கொண்டிருக்கிறது.
மாற்றங்கள் இன்னும் முழுமையடையவில்லை என்றாலும் தற்போதைய மாற்றங்களே பிரமிக்க வைக்கும் வகையில் அமைந்திருந்தது. முன்பு ஏதேதோ சந்துகள் வழியாக, மாடுகளையும் மனிதர்களையும் முட்டி மோதிக்கொண்டு செல்ல வேண்டியிருந்த நிலை மாறி, மொத்தம் நான்கு பிரதான வாயில்கள் வழி சென்று வர வசதி உண்டாகி இருக்கிறது. இன்னமும் தொடர்ந்து மேம்பாட்டுப் பணிகள் நடந்த வண்ணமே இருக்கின்றன. நாங்கள் தங்கி இருந்த தங்குமிடத்தின் நிர்வாகியிடம், காலை நேரம் தயாராகி கோவிலுக்குச் செல்ல எந்த நுழைவாயில் சரியாக இருக்கும் என்று கேட்டபோது நான்காம் நுழைவாயில் வழி செல்லுங்கள் என்று சொல்லி அனுப்பினார். நான்காம் நுழைவாயில் வழி நாங்கள் சென்ற பாதை பிரதான வாயில்களில் முக்கியமான நுழைவாயில். எந்த நுழைவாயில் வழியே சென்றாலும் கோவில் உள்ளே சென்ற பிறகு நான்குமே இணைவதில்லை - சிவன் சன்னதி இருக்கும் இடத்திலும் நான்கு நுழைவாயில்கள் - அதனால் நான்கு வழிகளில் எதில் சென்றாலும் நின்று நிதானித்து தரிசனம் செய்து கொள்ள முடியும்.
முன்பு இது போன்று தரிசனம் செய்யச் சென்றால் ஒரே பாதை
தான் - நிறைய பக்தர்கள் கூட்டம் இருக்கும் என்பதால் சில நொடிகள் கூட அங்கே நின்று
நிதானித்து தரிசனம் செய்து கொள்ள முடியாது. அதிலும் பண்டாக்கள் என அழைக்கப்படும் பூஜாரிகள்,
வெளியிலிருந்தே பக்தர்களை பொது தரிசன வழியில் இல்லாமல் தனி வழியில் அழைத்துச்
சென்று தரிசனம் செய்து வைத்து பணம் வசூலிப்பதால் மற்ற பக்தர்களை துரத்திக்கொண்டே
இருப்பார்கள்.
இப்போது அது போன்றவர்களிடம் மாட்டிக்கொள்ள அவசியமே இல்லை. இப்போதும் அப்படியான நபர்கள் இருந்தாலும் அவர்களிடம்
பேச வேண்டியதே இல்லை.
நான்கு வழிகளில் எந்த வழியில் சென்றாலும் சில நிமிடங்களில் உங்களால் தரிசனம்
செய்து விட முடியும்.
சிவராத்திரி போன்ற தினங்களில் அதிக பக்தர்கள் கூட்டம் இருக்கும் என்றாலும் எல்லா
நாட்களிலும் அதிக நெரிசலோ, தள்ளு-முள்ளு கூட்டமோ இருக்க வாய்ப்பில்லாத வகையில்
ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள். காசி கோவில் வளாகம் தற்போது அத்தனை சுத்தமாக
இருக்கிறது. தொடர்ந்து சுத்தம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.
கோவில் வளாகத்தில் முன்பெல்லாம் அமர்ந்து பிரார்த்தனை
செய்ய வசதிகள் இல்லை.
தற்போது காசி விஷ்வநாத் கோவில் வளாகத்தில் பக்தர்கள் அமர்ந்து பிரார்த்தனை
செய்யும் அளவுக்கு இடம் இருக்கிறது. ஞானவாபி கிணறு இருக்கும் இடமும் அழகுற
மாற்றப்பட்டுள்ளது.
எல்லா தனிச் சன்னதிகளும் கூட சிறப்புற மாற்றி இருக்கிறார்கள். நாங்கள் சென்றபோது நுழைவாயில் அருகே வரை பக்தர்கள்
வரிசை இல்லை.
உள்ளே நுழைந்து பொருட்கள் பாதுகாப்பு அறையில் கைபேசி போன்றவற்றை வைத்து விட்டு
நிதானமாக வரிசையில் செல்ல முடிந்தது. முன்பு கைபேசி, கேமரா போன்றவற்றை வெளியே இருக்கும்
தனியார் பாதுகாப்பு அறைகளில் வைத்து விட்டுச் செல்ல வேண்டியிருந்தது - அவர்கள்
கட்டணம் இல்லை என்று சொன்னாலும் பூஜை பொருட்கள் என 200-300 ரூபாய்க்கு நம் தலையில்
கட்டி, வசூலித்து விடுவார்கள். தற்போது அந்தத் தொல்லையும் இல்லை. பொருட்களை வைப்பதற்கு கட்டணம் எதுவுமில்லை. கூடவே காலணிகளையும் அதே இடத்தில், அதற்கான தனி
பெட்டிகளில் வைத்துச் செல்லலாம் - அதற்கும் கட்டணம் இல்லை.
ஒரு சில பண்டாக்கள் எங்களிடம் வந்து, “விரைவாக தரிசனம்
செய்து வைக்கிறேன், காசு கொடுங்கள்” என்று கேட்டாலும் அவர்களை தள்ளிப் போகச்
சொல்லி விட்டு நாங்கள் வரிசையில் சென்று பதினைந்து - இருபது நிமிடங்களில் மிகச்
சிறிய அளவில் அமைந்திருக்கும் காசி விஷ்வநாத் சிவலிங்கம் அமைந்திருக்கும்
கர்ப்பகிரகம் உள்ளே சென்று விட்டோம். ஒன்றிரண்டு நிமிடங்கள் மட்டுமே அங்கே நின்று
இறைவனோடு மனதோடு மனதாக அளவளாவ முடிந்தது என்றாலும் திவ்யமான தரிசனம். முன்பு எப்போதும் கிடைக்காத அமைதியும் திருப்தியும்
இந்த முறை சென்ற சமயம் எனக்குக் கிடைத்தது என்று நிச்சயமாக என்னால் சொல்ல
முடியும்.
திருப்தியான தரிசனம் கிடைத்த பிறகு, ஞானவாபி கிணறு, சுற்றுச் சன்னதிகள் என அனைத்து
இடங்களிலும் வலம் வந்து பக்கவாட்டு பிரகாரம் ஒன்றில் அமர்ந்து எங்களுக்குத்
தெரிந்த மந்திரங்களை உச்சரித்தபடி சில நிமிடங்கள் தியானமும் செய்ய முடிந்தது.
கோவில் வளாகத்திலிருந்து வெளியே வர மனதே இல்லை. அதிக அளவில் கூட்டம் இல்லை என்பதால் மீண்டும் ஒரு
முறை வரிசையில் நின்று, மீண்டும் தரிசனம் செய்யலாமா என்று கூடத் தோன்றியது. ஆனாலும் அடுத்தவர்களுக்கும் தரிசனம் கிடைக்க நாங்கள்
தொல்லையாக இருக்க வேண்டாம் என்று நினைத்து, தரிசனம் குறித்த எங்கள் அனுபவங்களை
எங்களுக்குள் பகிர்ந்து கொண்டபடியே நுழைவாயில் அருகே வந்து எங்கள் அலைபேசிகளை
எடுத்துக் கொண்டு வெளியே வந்தோம். முந்தைய பயணங்களில் கிடைத்த தரிசனத்திற்கும் இந்தப்
பயணத்தில் கிடைத்த தரிசனத்திற்கும் நிறைய வித்தியாசங்கள். சிறப்பான ஏற்பாடுகள் செய்து, இறைவனை தரிசனம் செய்ய
வரும் பக்தர்கள் எந்தவித பிரச்னையும் இல்லாமல் தரிசனம் செய்து கொள்ள வசதிகள்
செய்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இன்னமும் தொடர்ந்து பல வசதிகளை செய்து
கொண்டிருக்கும் சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்தினர் அனைவருமே
பாராட்டுக்குரியவர்கள் தானே!
நாங்கள் சென்ற நுழைவாயில் இல்லாது மற்ற மூன்று
நுழைவாயில்களும் நல்ல மாற்றங்கள் உண்டாகி வருகின்றன. ஒரு நுழைவாயில் கங்கைக்கரையிலிருந்து நேரடியாக
கோவிலுக்கு வரும்படி அமைய இருக்கிறது - கங்கை நதியில் நீராடி நேரடியாக கோவிலுக்குள்
நுழைந்து எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசனை வழிபட முடியும் என்பது நல்ல விஷயம் தானே.
கோவில் வளாகத்திற்குள் அலைபேசி, கேமரா போன்றவை அனுமதிப்பதில்லை என்பதால் எந்த
நிழற்படமும் நாங்கள் எடுக்கவில்லை. இணையத்தில் சில படங்கள் உண்டு என்பதால் அவற்றை இங்கே
கொஞ்சமாக பயன்படுத்தி இருக்கிறேன். வாரணாசி நகரம் குறித்து மேலும் பல தகவல்கள் வரும்
பகுதிகளில் வர இருக்கிறது.
ஆகையால் இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன்.
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை
பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து…
ஒரே முறை தரிசனம் 2019ல். உங்கள் மற்றும் துளசி டீச்சரின் வர்ணனைகள் மறுபடி சீக்கிரம் அங்கு செல்லும் ஆவலை ஏற்படுத்துகின்றன.
பதிலளிநீக்குவிரைவில் உங்கள் காசி பயணம் அமைய வாழ்த்துகள். மிகவும் சிறப்பான மாற்றங்கள் வந்து இருக்கின்றன. சென்று வாருங்கள் ஶ்ரீராம்.
நீக்குபதிவு உபயோகம். மார்ச்சில் அங்கு செல்கிறோம்
பதிலளிநீக்குஉங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள் நெல்லைத் தமிழன். பதிவு பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சி.
நீக்குமிக அருமையான தரிசனம், படங்கள் எல்லாம் அருமை. இரண்டு முறை போய் இருக்கிறேன், இப்போது மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குகோயிலில் பணம் வசூல் இல்லை என்பதே மகிழ்ச்சியான விடயம் ஜி.
பதிலளிநீக்குதகவல்கள் சிறப்பு நானும் ஓர் தினம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
முடிந்த போது காசி சென்று வாருங்கள் கில்லர்ஜி. தங்கள் அன்பிற்கு நன்றி.
நீக்குதகவல்கள் அருமை... மேலும் நல்ல பல மாற்றங்கள் நடக்கட்டும்...
பதிலளிநீக்குதங்கள் கருத்திற்கு நன்றி தனபாலன்.
நீக்குகாசியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றது. 2018ல் மிகவும் சிரமத்துடன் தரிசித்த அனுபவம் நினைவிற்கு வருகின்றது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசாமி ஜி.
நீக்குமுன்பு எப்போதும் கிடைக்காத அமைதியும் திருப்தியும் இந்த முறை சென்ற சமயம் எனக்குக் கிடைத்தது என்று நிச்சயமாக என்னால் சொல்ல முடியும். //
பதிலளிநீக்குமகிழ்ச்சியான விஷயம்.
இப்போது பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை உங்கள் வரிகளில் உள்ள மகிழ்ச்சியே சொல்லிவிடுகிறது. மிக நல்ல விஷயம் ஜி இத்தனை அருமையான மாற்றங்கள்.
எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ தெரியவில்லை. பார்ப்போம்...
அருமையான தகவல்கள் ஜி
படங்கள் செமையா இருக்கு...
கீதா
உங்களுக்கும் காசி செல்லும் வாய்ப்பு அமையட்டும் கீதா ஜி. பதிவு குறித்த கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நீக்குபடிக்கும் போதே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது .5 இலட்சம் சதுரஅடி பரப்பளவில் பரந்து விரிந்து செல்கிறது என்பது மிகவும் பாராட்டத்தக்கது.
பதிலளிநீக்குபக்தர்கள் எல்லோரும் இலகுவாக தரிசிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது சிறப்பு.
வசதிகள் மேம்பட்டால் நல்லது தான். தங்கள் அன்பிற்கு நன்றி மாதேவி.
நீக்குசிறப்பான மாற்றங்கள் ஏர்ப்பட்டது அறிந்து மிகவும் மகிழ்கிறேன் சார்.
பதிலளிநீக்கு2015 இல் நான் சென்றேன்.
வரும் மே மாதம், என் அலுவலக நன்பர் செல்கிறார்.
பதிவு குறித்த கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அரவிந்த். காசி செல்லும் உங்கள் நண்பருக்கு வாழ்த்துகள்.
நீக்குபோன நவம்பர் மாதம் தேவ் தீபாவளி அன்று அங்கு இருந்தோம் ..அந்த தீபாவளி பற்றி அறியாமலே சென்று இருந்தோம் . எங்கள் தரிசனம் கிடைக்க 6 மணி நேரம் ஆனது . மிக பெரிய வரிசை ஆனாலும் மனதில் எனக்கு சலிப்போ வருத்தமோ இல்ல , மிக திருப்தியே. அத்துணை அமைதியாக நிதானமாக சென்றோம்.
பதிலளிநீக்குஆனாலும் தங்களின் 20 நிமிட தரிசனம் பற்றி வாசிக்க பெருமூச்சு எழுவதை தவிர்க்க முடியவில்லை