அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
GETTING OLD IS LIKE CLIMBING A MOUNTAIN; YOU GET A LITTLE OUT OF BREATH,
BUT THE VIEW IS MUCH BETTER - INGRID
BERGMAN.
******
இன்று (12 ஜனவரி 2023) மாலை ஒரு சிறு வேலையாக திருவடி
தெரு வரை செல்ல வேண்டியிருந்தது.
பொதுவாக திருவரங்கம் வந்த பிறகு எங்கே, திருவரங்கத்திற்குள் எங்கே செல்வதென்றாலும்
நடை தான்! நடந்து செல்வதையே அதிகம் விரும்புவேன். கோவில் நகரம் என்பதால் எப்போதும் பக்தர்கள் கூட்டம்
தான் - இதில் வண்டி ஓட்டுவது சிரமம் தான். வண்டி ஓட்டுவதென்றால் வேகம் இருக்க வேண்டும் என
நினைப்பவன் நான் - இங்கே அப்படி முடியாது! இன்றைக்கு காலையிலிருந்து இரண்டு முறை
வீதிகளில் உலா வந்தாயிற்று - இரண்டு முறையும் சைக்கிள் உலா! மக்களின் சைக்கிளை எடுத்துக் கொண்டு உலா வந்தேன்.
பொதுவாக மதுரா, விருந்தாவன் போன்ற கோவில்
நகரங்களுக்குப் போகும் போது நான் பார்த்து அதிர்ந்த விஷயம் - அங்கேயே சுற்றி வரும்
முதியவர்கள்.
அதிலும் குறிப்பாக சில குறிப்பிட்ட மாநிலத்தவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும்
முதியவர்களை இது போன்ற ஊர்களில் கொண்டு விட்டு விட்டுச் சென்று விடுவார்கள் -
அவர்கள் மரணம் அடையும் வரை அங்கேயே சுற்றிக்கொண்டு இருக்க வேண்டியது தான் -
பார்க்கவே மிகவும் கொடுமையான விஷயமாக இருக்கும். சாப்பாடு இல்லாமல், ஆசிரமங்கள், கோவில்கள் என பல
இடங்களில் கிடைக்கும் உணவை உண்டு, கிடைத்த இடத்தில் உறங்கி மரணத்தை எதிர் நோக்கி
காத்திருப்பார்கள்.
ஏனோ சென்ற சில முறைகளாக திருவரங்கம் வரும் போதும் இப்படியான சில முதியவர்களை
பார்க்க முடிகிறது.
இன்றும் அப்படி ஒரு மூதாட்டியைக் கண்டேன் -
எப்படியும் வயது எண்பதைத் தாண்டி இருக்கலாம். கைகளில் ஒரு பிரம்பு, ஒரு பெரிய கட்டை பை மற்றும்
துணிப்பை. இரண்டுமே ஏதோ பொருட்கள் திணித்து அடைக்கப்பட்டு இருந்தது. இரண்டையும் வைத்துக் கொண்டு கையில் பிரம்பையும்
பிடித்துக் கொண்டு சற்றே கூன் விழுந்த முதுகுடன் அவர் சிரமப்பட்டு நடந்து வந்தார். திருவடி தெருவில் ஒரு கடை வாசலில் நின்று
கொண்டிருந்தேன்.
அந்த கடைக்கு அடுத்தது ஒரு சிற்றுண்டி கடை. அந்த கடை வாசலில் வந்து சற்றே மேடாக இருந்த இடத்தில்
மூதாட்டி ஏற முயன்ற போது தடுமாறி விழுந்தார். பக்கத்திலேயே இருந்ததால் ஓடிப் போய் தூக்க
முயன்றேன்.
இன்னுமொரு பெண்மணியும் அங்கே இருக்க, அவர் ஒரு கை கொடுக்க, நான் ஒரு கை கொடுத்து
தூக்கி நிறுத்தினேன்.
அங்கே இருந்த ஒரு இருக்கையில் அமர வைத்து
ஆஸ்வாசப்படுத்திய பின் என் வேலையை கவனித்தபடியே அவரையும் கவனித்தேன். சிற்றுண்டி சாலையில் மூன்று இட்லி வாங்கி சாப்பிட்டு
காசு கொடுத்து, கொஞ்சம் சூடாக தண்ணீர் கிடைத்தால் நன்றாக இருக்கும் என அந்த கடை
பெண்மணியிடம் கேட்க, “முன்னாடியே சொல்லி இருந்தா, சுடுதண்ணீர் வச்சு
தந்திருப்பேன்.
பொதுவா தறதில்ல!” என்று சொல்லி விட்டார். மூன்று இட்லி சாப்பிட்ட பிறகு மெதுவாக
மேட்டிலிருந்து கீழே கை பிடித்து இறக்கி விட்டு அவரது கைப்பைகளையும் எடுத்து
கொடுத்தார் கடை பெண்மணி.
பொறுமையாக நடந்து சென்ற அந்த மூதாட்டியை பார்த்துக் கொண்டே இருந்தேன். எண்ணங்கள் பல என்னுள் வந்த வண்ணம் இருந்தது.
பல வீடுகளில் முதியவர்களை எப்படி தான் நல்லவிதமாக
பார்த்துக் கொண்டாலும் திருப்தி இல்லாமல் குறை சொல்லிக் கொண்டு இருப்பவர்களையும்
பார்த்திருக்கிறேன், இப்படி கவனிக்க யாரும் இல்லாமல் திண்டாடுபவர்களையும் பார்த்திருக்கிறேன். முதல் சாரார், விட்டுக் கொடுத்து, இளையவர்களுக்கு
ஏற்றபடி தங்களை மாற்றிக்கொண்டு, பிடிவாதம் பிடிக்காமல் இருந்தால் நல்லது என்பதை
உணர வேண்டும்.
முதுமையில், கவனிக்க யாரும் இல்லாமல் இருப்பது எத்தனை வேதனையான விஷயம் என்பது
இன்று பார்த்த மூதாட்டி போன்றவர்களை பார்க்கும்போது புரிகிறது… அந்த மூதாட்டி என் கண்களிலிருந்து மறைந்தாலும், அவர்
இன்னும் எத்தனை நாளைக்கு கஷ்டப்படவேண்டுமோ என்ற எண்ணம் ஏனோ மனதை விட்டு அகலவே
இல்லை. இறைவன் அவருக்கு நற்கதி அளிக்கட்டும் என்று வேண்டுவதைத் தவிர வேறென்ன
செய்ய?
மீண்டும் வேறு ஒரு விஷயம் குறித்து பேசுவோம்…..
அதுவரை
******
இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை
பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து….
வேதனையாக இருக்கிறது படிக்க... ஆனால் கொண்டு வந்து விடும்வரை அந்த மூதாட்டி வீட்டில் எப்படி இருந்தாரோ... எப்படி இருந்தாலும் கொண்டு இப்படி நட்டாற்றில் விடுவது தீர்வல்ல. மனதை பாதிக்கிறது.
பதிலளிநீக்குமிகவும் வேதனையாக இருக்கிறது சார்.
நீக்குமுதியோர்களுக்கு பல காரணங்களால் உள்மனதில் அச்சம் மிகுவதாலேயே, சிலமுறை சற்று கோபப்பபடுவர்.
அவர்களின் மனமறிந்து நடந்துகொள்வது இளவட்டத்தின் கடமையும் கூட.
அப்போதுதான், சமூகத்தில், பலதரப்பட்ட மனிதர்களோடு பழகும் பக்குவமும் ஏர்ப்படும் என்பதையும் உணர்ந்திருப்பது நல்லது.
தங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை முதுமையில் காப்பது பிள்ளைகளின் கடமை
பதிலளிநீக்குவருத்தமான விசயம் பல இடங்களில் நானும் இப்படி பார்த்து இருக்கிறேன் ஜி
பதிலளிநீக்குமனதை சலனப்படுத்தியது. ஒவ்வொரு குழந்தையும் அவர் பெற்றோருக்கு அருமை. By ignoring our parents we ignore grandparents மற்றும் அவர்களது ஆசி. பெரியவர்களும் அட்ஜஸ்ட் பண்ணணும்
பதிலளிநீக்குபாவம் அந்த மூதாட்டி. இப்படி நிறையப் பேரை பார்க்க முடிகிறது. எப்படி இப்படி மனது வருகிறது கொண்டு விட? மனசாட்சி உறுத்தாதா? ஆச்சரியமா இருக்கு.
பதிலளிநீக்குவெங்கட்ஜி நீங்கள் சொல்லியிருக்கும் மற்றொரு பாயிண்டையும் அப்படியே டிட்டோ செய்வேன்...ஆமாம் பெரியவர்களும் தங்களைப் பார்த்துக் கொள்பவர்களோடு அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இளையவர்களும் புரிந்து கொண்டு இருவரும் இயைந்து போனால் நல்லது.
மனம் வேதனை...
கீதா
//பல வீடுகளில் முதியவர்களை எப்படி தான் நல்லவிதமாக பார்த்துக் கொண்டாலும் திருப்தி இல்லாமல் குறை சொல்லிக் கொண்டு இருப்பவர்களையும் பார்த்திருக்கிறேன், இப்படி கவனிக்க யாரும் இல்லாமல் திண்டாடுபவர்களையும் பார்த்திருக்கிறேன். முதல் சாரார், விட்டுக் கொடுத்து, இளையவர்களுக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக்கொண்டு, பிடிவாதம் பிடிக்காமல் இருந்தால் நல்லது என்பதை உணர வேண்டும். //
பதிலளிநீக்குஇருபக்கமும் விட்டு கொடுக்கும் மனம் வேண்டும்., எப்போதும் ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்லாமல் அவர்கள் செய்யும் உதவிகளை பாராட்டி கொண்டு மலர்ந்த முகத்தோடு இருத்தல் அவசியம்.
முதியவர்களும் குழந்தைகள் போல தான் அவர்களை பார்த்து கொள்ள பொறுமையும் வேண்டும்.
காலத்துக்கு ஏற்றார் போல முதியவர்கள் தங்களை மாற்றி கொள்ள வேண்டும் இல்லையென்றால் அமைதி காக்க வேண்டும்.
எவ்வளவு குறை சொன்னாலும் பெற்றோர்களை பார்த்து கொள்ளும் பிள்ளைகளும், பிள்ளைகள் சரியாக பார்த்து கொள்ளவில்லை என்றாலும் அதை பெரிது படுத்தா பெற்றோர்களையும் பார்க்க முடிகிறது.
யாருமே இல்லா முதியவர்கள் பொருளதார வசதியும் இல்லாதவர்கள் இப்படி கஷ்டபடுவது வேதனையான விஷயம்.
வருத்தமாக இருக்கிறது...
பதிலளிநீக்குவருத்தமான விஷயம் முதுமையும் கொடுமை தான்.
பதிலளிநீக்கு