அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட சரயு நதி அனுபவங்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
உங்களுக்குத் தெரிந்த விஷயங்களை மட்டும் மற்றவர்களிடம் பேசிப் பழகுங்கள்.
இது காலப் போக்கில் உங்கள் மீதான நம்பிக்கை மற்றும் மரியாதையை அதிகப்படுத்தும்.
******
வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி
இருபத்தி ஒன்று
வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய
பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!
அறிமுகம் ;
விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு ; விதி பதினேழு ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது;
என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும்
உற்சாகம் கலந்த வணக்கங்கள்.
திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48
Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா?
இருபத்தி ஒன்றாம் விதி சொல்வது, "மிகச் சாதாரணமான எளியவனாக உன்னை
காண்பித்துக்கொள்".
மூல நூலில், இதை "PLAY
A SUCKER TO CATCH A SUCKER - SEEM DUMBER THAN YOUR MARK" என்கிறார் எழுத்தாளர்.
முதல் விதியில் ஏற்கனவே கூறப்பட்டதுபோல், நம்
செயல்கள் எப்போதும் பிறரை அச்சத்திற்குள்ளாக்கக் கூடாது என்பதை ஆசிரியர் இங்கே
மேலும் தெளிவாக வலியுறுத்துகிறார்.
பெரும்பாலான சமயங்களில், நம்மை மிக எளியவராகவோ, சற்று
முட்டாளாகவோ காட்டிக் கொள்வதால் எந்த பாதகமும் நேரப்போவது இல்லை.
நம்மை விடப் புத்திசாலிகளாக அவர்களைத் தோன்றச்
செய்தல், அவர்களை மிகச் சகஜமாக எவ்வித சந்தேகமும் இன்றி நம்முடன் பழகவே வழி
செய்யும்.
மேலும், நாம் அறியவேண்டிய பல ரகசியங்களும்,
எதிராளியின் பலவீனங்களும் நமக்கு எளிதில் தெரிய அவர்களே வழி செய்துவிடும்
அற்புதமும் நடப்பதை சில உதாரணங்களோடு புரிந்து கொள்ளலாமா?
இன்றைய இலங்கை, தனக்குத் தேவையானவற்றை வாங்க போதிய
அன்னியச் செலாவணி இன்றி, கடன்களையும் குறித்த நேரத்தில் கட்டத் தவறி தவிப்பதைக்
காண்கிறோம்.
இதே போன்ற ஒரு நிலை, 1991 இல், நம் நாட்டிற்கும்
ஏற்பட இருந்ததை இன்றைய
இளம் தலைமுறையினரில் சிலர் அறிந்திருக்கமாட்டார்கள்.
அப்போது நம் அன்னியச் செலாவணி கையிருப்பு, இரண்டு வார
நாட்டின் தேவைகளை வாங்கும் அளவு கூட இல்லை.
அதற்கும் மேல், உடனடியாகச் செலுத்த வேண்டிய குறுகிய
கால கடன்களும் நம் கழுத்தை நெறிக்கத் தொடங்கின.
அப்போது புதிதாக பதவியேற்றிருந்த திரு நரசிம்மராவ்
அவர்களின் காங்கிரஸ் அரசுக்கோ, அதிரடி முடிவுகளைத் துணிச்சலுடன் எடுக்கத் தேவையான
பெரும்பான்மை பலமும் இல்லை.
ஆனால், குறுகிய கால கடன்களை உடனே கட்ட, தங்கத்தை
இங்கிலாந்து வங்கியில் அடமானம் வைத்து பணம் பெற்றே தீரவேண்டும்.
வைத்த தங்கத்தை மீட்க அன்னியச் செலாவணி அதிகரிக்கும்
வண்ணம், வெளிநாட்டிலிருந்து முதலீடுகள் ஈர்க்கப்படவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும்
வேண்டும்.
அதற்காக நம் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க ரூபாயின்
மதிப்பை குறைக்கவும், தொழில் செய்ய உரிமம் "Licence" வாங்கவேண்டிய
கட்டாயத்தை ஒழிக்கவும் வேண்டும்.
மக்கள் விரோதச் செயல்களாகவும், நாட்டின் மானத்தையே
பணையம் வைப்பதாகவும் எதிர்க்கட்சிகள் எளிதில் குற்றம் சாட்டிய மேற்கூறப்பட்ட
நடவடிக்கைகளை, வெற்றிகரமாகச் செய்து காட்டியதில் இவ்விதி சிறப்பாகப்
பயன்பட்டிருக்கிறது.
பொருளியல் சிக்கலிலிருந்து நாட்டைக் காப்பாற்ற,
அன்றைய பிரதமர் திரு நரசிம்மராவ் அவர்கள், அனுபவம் வாய்ந்த திரு மன்மோஹன் சிங்
அவர்களை நிதி அமைச்சராகப் பணியமர்த்தினார்.
திரு மன்மோஹன் சிங் அவர்கள், தம் நிதித்துறை குழுவில்
சேர்த்துக் கொண்ட பொருளியல் அறிஞர்களில் முக்கியமானவர், உலக வங்கியில் பணியாற்றிய
அணுபவம் வாய்ந்த திரு மாண்டெக் சிங் அலுவாலியா அவர்கள்.
1979 இல் இந்தியா திரும்பி, திட்டக்குழுவில் சேர்ந்த
காலத்திலேயே, தம் திறமைக்குப் பெரும் தீனி கிடைத்துவிட்டதாகவும், ஒரு நாட்டையே தம்
அறிவால் தலைகீழாகத் திருப்பப் போவதாகவும் எண்ணி அசாத்திய நம்பிக்கையுடன்
பணிபுரியத் தொடங்கினார்.
வந்த சில வாரங்களிலேயே, தாம் வெறும் கடைநிலை
கணக்கரைப் போல மேலதிகாரிகளால் நடத்தப்படுவதையும், தம் பொருளியல் அறிவுக்கான
மதிப்பு முற்றிலும் இல்லை என்பதையும் உணர்ந்து பெரிதும் வெதும்பினார்.
அது குறித்து அப்போது நிதிக்குழு தலைமைச் செயலாளராக
1979 இல் இருந்த திரு மன்மோஹன் அவர்களைச் சந்திக்கும்போதெல்லாம் பெரும்
புலம்பல்களாகக் கொட்டித் தீர்த்திருக்கிறார்.
அதற்கு ஒரு மெல்லிய புன்னகையுடன், "இதுதான் இந்தியா,
இங்கே பணிகள் அதிகாரவர்க்கத்தில் நாம் நினைக்கும் வேகத்தில் நடைபெறாது" என
சொல்லத் தொடங்கி பல அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.
அதில் முக்கியமான அறிவுரை, "நீ உன் பொருளியல்
சார்ந்த தீர்வுகளை, உன் உயர் அதிகாரியிடம் பொறுமையாகச் சொல்லி, அவற்றை அவரின்
சொந்தக் கண்டுபிடிப்பாகவே வெளியிட ஆவன செய். காலப்போக்கில், அவருக்கான மதிப்பு உயர
உயர, உன்னைப் பெரிதும் சார்ந்தவராக மாறிவிடுவார்" என்பதே.
அதைக் கடைபிடிக்கத் தொடங்கிய பின்பே, தன் உயர்
அதிகாரியான திரு ஹானவர் அவர்களின் உயர் குணங்கள் புரியத் தொடங்கின.
அதிகார இயந்திரத்தின் நெளிவுசுளிவுகள் அறிந்து,
பொருத்தமான பொருளியல் ஆலோசனைகளையும், எச்சரிக்கைகளையும், கேட்கும்போது மட்டுமே
அழுத்தம் திருத்தமாக
வழங்கும் பக்குவத்தை மெதுமெதுவாக வளர்த்திருக்கிறார்.
அதையே பின்பற்றி, படிப்படியாகத் தம் பொருளியல்
தீர்வுகளை உயரதிகாரிகள் ஏற்கச்செய்து, 1991 இல் தக்க சமயம் வந்தபோது, உறுதியுடன்
செயலாற்றி
நாட்டை மீட்டதில் இத்தகைய அறிஞர்களின் பங்கு அளப்பரியது.
இது போன்ற பல சுவாரசியமான அனுபவங்கள், திரு மாண்டெக் சிங் அலுவாலியா அவர்களின்
"BACKSTAGE_ The Story behind India’s High Growth Years" என்னும்
நூலில் கொட்டிக் கிடக்கின்றன.
இந்தியாவின் அன்றைய நிலையை சுருக்கமாக
அறிமுகப்படுத்தவே இங்கே சில பத்திகள் பயன்பட்டுவிட்டதால், இந்தியாவை மீட்க
இவ்வறிஞர்கள் கையாண்ட பல விசித்திரமான உத்திகளை அடுத்தடுத்த விதிகளோடு பொருத்தி
விவாதிக்கவிருக்கிறோம்.
எனவே, நாம் சில நேரங்களில் முட்டாளாகத்
தோற்றமளிக்கும் கட்டாயம் இருக்கும் போதிலும், நம் திறமைகள், நம் உடனடி
மேலதிகாரிக்குத் தெரியும்படி பார்த்துக்கொள்வது மிக அவசியம் என்பதை இவ்விதி மூலம்
உணரலாம்.
அதன் மூலமே, அவரின் நற்பெயருக்கும், வெற்றிக்கும்
நம்மை உடன் வைத்திருக்கும் கட்டாயம் ஏற்படுவதோடு, நம்மைக் குறித்த விளம்பரமும்,
அவ்வதிகாரி மூலமே பலருக்குச் சென்று சேரும் அதிசயமும் நிகழும்.
இத்தகைய சூழலில், எவருக்கும் சில பலவீனங்கள் இருந்தே
தீரும்.
அத்தகைய பலவீனங்களையே, நம் பெரும் பலமாக உருமாற்றக்
கூடிய பரவசமூட்டக்கூடிய வழி ஒன்றை அடுத்த விதியில் சுவைக்கலாமா?
நூல் குறித்த விவாதம் தொடரும்.
*****
இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை
பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள்
அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்,
இரா. அரவிந்த்
அடக்கம் அமரருள் உய்க்கும் என்னும் குரலை நினைவுபடுத்தும் விதி. உபயோகமானது. மன்மோகன் சிங்கின் அறிவுரை அனுபவபூர்வமானது, பயன் மிக்கது.
பதிலளிநீக்குநிச்சயமாக ஐய்யா.
நீக்குதங்கள் பொருத்தமான குறள் பகிர்விற்கு மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.
அருமை
பதிலளிநீக்குமிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐய்யா.
நீக்குசிறப்பு...
பதிலளிநீக்குமிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் ஐய்யா.
நீக்குஅலசல் தொடரட்டும்...
பதிலளிநீக்குதொடர்வதற்கு மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
நீக்குஅழகான விதி. நீங்க தமிழ்ல சொன்னது தான் புரிகிறது. உண்மையாக எனக்கு ஆங்கில வரிகள் முதலில் சட்டென்று புரியவில்லை. அப்புறம் புரிந்தது.
பதிலளிநீக்குசில இடங்களில் இந்த விதி நன்றாகவே பயனளிக்கும். உதாரணங்களும் நல்லாருக்கு.
கீதா
எனக்கும் விதி புரிய சற்று நேரம் எடுத்தது.
நீக்குதங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி கீதா மேடம்.
சிறப்பு
பதிலளிநீக்குமிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐய்யா.
நீக்கு