வெள்ளி, 24 பிப்ரவரி, 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி முப்பது

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட அடுத்த நதிக்கரை நகரை நோக்கி பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

HAPPINESS IS NOT ABOUT GETTING ALL YOU WANT; IT IS ABOUT ENJOYING ALL YOU HAVE. 

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி முப்பது 


 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு  ; விதி பதினேழு  ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது ; விதி இருபத்தி ஒன்று ; விதி இருபத்தி இரண்டு ; விதி இருபத்தி மூன்று ; விதி இருபத்தி நான்கு ; விதி இருபத்தி ஐந்து ; விதி இருபத்தி ஆறு ; விதி இருபத்தி ஏழு ; விதி இருபத்தி எட்டு ; விதி இருபத்தி ஒன்பது ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

முப்பதாம் விதி சொல்வது, "அனாயாசமாகச் சாதனைகளை முடிப்பது போல் வெளியில் காட்டிக் கொள்ளவும்".

 

மூல நூலில், இதை "MAKE YOUR ACCOMPLISHMENTS SEEM EFFORTLESS" என்கிறார் எழுத்தாளர்.

 

தம்முடைய கடின உழைப்பை பிறர் உணரச் செய்ய, மணிக்கணக்காகத் தம் வீரப் பிரதாபங்கள் குறித்த சுயபுராணம் பாடுவதே, பெரும்பாலோர் செய்யும் மிகப் பெரிய தவறு.

 

இச்செயல், அத்தகையோரை பலவீனமானவர்களாகக் காட்டுவதோடு, பல எதிர்மறைப் பட்டப்பெயர்களும், அவர்களுக்கான பட்டங்களாக வழங்கப்படும் அவலமும் ஏற்படுவதுண்டு.

 

இதற்கு மாறாக, எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி, அனாயாசமாகத் தம் வேலைகளை முடிப்போரே, அதி திறமைசாலிகளாக மதிக்கப்படுவதுண்டு.

 

அத்தகைய திறனுக்குப் பின்னால் உள்ள ஆண்டுக்கணக்கான தொடர்ப் பயிற்சி குறித்துப் பேசாதவரும், திறனுக்கான வெகுமதியை தம் வழிகாட்டிகளுக்கே வெளிப்படையாக  அளிப்பவருமே, கவர்ச்சிகரமான ஆளுமைகளாக வெற்றிகளைக் குவிப்பர்.

 

தம் இசைத்திறனால், உலகின் எந்த மூலையில் உள்ள தமிழரையும் இன்றளவும் கட்டிப் போட்டிருக்கும் இசைஞானி இளையராஜா அவர்களே, இவ்விதிக்கு உதாரணமாக என் மனதில் உடனே உதிப்பவர்.

 

திரைப்பட இயக்குனர் கதையை சொல்லிக்கொண்டிருக்கும்போதே, தகுந்த உணர்வுகளுடன் இசைக்கோர்வையாக மனதிலேயே உருவாக்கி, தம் உதவியாளர் திரு சுந்தரராஜன் அவர்கள் மூலம் ஸ்வரக் குறியீட்டு வடிவமாக எழுதும் அனுபவங்களை, திரு கார்த்திகேயன் நாகராஜன் அவர்களின் கட்டுரை மூலம் அறிந்து வியந்திருக்கிறேன்.

 

இதற்குப் பின்னால், தம் ஒன்பதாம் வயது முதலே, பள்ளிப்படிப்பிற்காகப் பணம் ஈட்டும் எண்ணத்துடன் பாட ஆரம்பித்தது முதல், ஹார்மோனியம் உள்ளிட்ட பல இசைக்கருவிகளைப் பயின்ற இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் இருப்பது எவருக்கும் உடனே தெரிவதில்லை.

 

கவிப்பேரரசு கண்ணதாசன் அவர்கள், சதுரங்க ஜாம்பவான் திரு விஸ்வனாதன் ஆனந்த் அவர்கள் போன்ற எந்த சாதனையாளரின் வாழ்வை எடுத்துக்கொண்டாலும், அவர்கள் செலவிட்ட விலைமதிப்பற்ற நீண்ட காலமே நமக்குப் பாடமாகக் கிடைக்கிறது.

 

இத்தகைய  மேதமைக்கான நேர அளவையே, "The ten thousand hour rule" என திரு ராபர்ட் கிரீன் அவர்கள், தம்முடைய மற்றொரு நூலான "Mastery" என்னும் நூலில் விளக்கியுள்ளார்.

 

இவ்வளவு மணிநேரத்தைச் செலவிடுவது குறித்த பிரமிப்பாலும், பயத்தாலுமே, எம்முயற்சியையும் தொடங்காமல் விடுபவர்கள் மிக அதிகம்.

 

நம் உள்ளார்ந்த ஆர்வத்திற்கேற்றத் துறையைக் கண்டறிந்து, அதில் உயரிய சாதனையை நோக்கிய முயற்சியின் முதல் அடியை எடுத்து வைப்பதுதான் மிகக் கடினமானது.

 

இதை, ஒரு விண்வெளிக்கலன், புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபட்டுக் கடக்க ஆரம்பத்தில் உபயோகிக்கும் அதிகமான ஆற்றலோடு ஒப்பிட்டு உணரலாம்.

 

புவியீர்ப்பு விசையைக் கடந்தபின், விண்கலன் மிக இலகுவாகத் தொலைதூர கோள்களை நோக்கிப் பயணிப்பது போல், முதல் அடியை எடுத்து வைத்த ஊக்கமே, மிக வேகமாக நம் இலக்கு நோக்கி இழுத்துச் செல்லும் அதிசயத்தை அனுபவித்து வியக்கலாம்.

 

இதன் விளைவாகவே, செய்யும் செயலாகவே நாம் மாறுவதும், நம்மை அறியாமலேயே மிக அதிக நேரம் செலவிட்டு மிகவும் திறமைசாலியாக மாறிவிடும் சாத்தியமும் எத்துறையினருக்கும் ஏற்படுவதுண்டு.

 

இதுவே, இவ்விதி காட்டும் அனாயாச மனிதர்களின் எளிய குணநலன் ஆகும்.

 

“ஓர் எண்ணத்தை விதைத்தால், ஒரு செயலை அறுவடை செய்வீர்கள்; ஒரு செயலை விதைத்தால் ஒரு பழக்கத்தை அறுவடை செய்வீர்கள்; ஒரு பழக்கத்தை விதைத்தால் ஒரு குணநலனை அறுவடை செய்வீர்கள்; ஒரு குணநலனை விதைத்தால் ஒரு தலைவிதியையே அறுவடை செய்வீர்கள்!” என்று ஒரு கூற்று உள்ளது.

 

இதற்கேற்ப, தம் சிரமங்களைப் பரிதாபத்திற்காக முன்வைக்காதோரின் உயரிய மனவலிமையை, பெரும் உறுதியை மனதில் விதைப்பதையே, இவ்விதியின் சாரமாகக் கொள்வோம்.

 

இவ்விதியின் உதாரண புருஷர்கள், தம் திட்டங்களுக்கு எழும் எதிர்ப்புகளைக் கையாள உபயோகிக்கும் அதி அற்புத நுட்பம் ஒன்றை அடுத்த விதியில் சுவைக்கலாமா?

 

நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

7 கருத்துகள்:

  1. சிறப்பு, இதை என் அனுபவத்திலும் உணர்ந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதிகளை தங்கள் அனுபவங்களோடு பொருத்தி படித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்வதற்காக மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

      நீக்கு
  2. பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
    அணியுமாம் தன்னை வியந்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களால் ஒரு புது திருக்குரளை இன்று கற்றுக்கொண்டேன் ஐய்யா.
      பள்ளியில் படித்து மறந்தே போனேன்.
      மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் ஐய்யா.
      மிகப் பொருத்தமான குறள் இது.

      நீக்கு
  3. 'எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி அனாயாசமாக வேலையை முடிப்போர்'
    பல உதாரண மனிதர்களையும் காட்டியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி மேடம்.

      நீக்கு
  4. இந்த விதியும் அருமையான விதி. எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி அனாயாசமாக வேலையை முடிப்போர் - ஆம் அரவிந்த். குன்றின் மீதிட்ட விளக்குன்னு சொல்வதுண்டே அது போல!!! குறை குடம் கூத்தாடும் நிறை குடம் தளும்பாது....

    எனக்கு அனுபவங்களும் உண்டு. ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க அரவிந்த்.

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....