ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

முகநூல் இற்றைகள் - எமனுக்கு வரம் அளித்த சிவன் - திருப்பைஞ்சீலி

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட நிலம்/வீடு வாங்கும் ஆசை யாருக்குத் தான் இல்லை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

NEVER BE A PRISONER OF YOUR PAST; IT WAS JUST A LESSON, NOT A LIFE SENTENCE.

 

******


 

முகநூல் இற்றைகள் - எமனுக்கு வரம் அளித்த சிவன் - 24 ஜனவரி 2023


 

சென்ற பதிவில் சொன்ன அருள்மிகு பூமிநாதசுவாமி திருக்கோவிலில் தரிசனம் செய்து வெளிவந்து பார்த்தால் ஒரு அறிவிப்புப் பதாகை….. சிவபெருமான் எமனுக்கு அருளிய தலமான திருப்பைஞ்சீலி கோவில் அந்த இடத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் மட்டுமே என்பதாக தகவல் சொல்லியபடி…… சரி அங்கேயும் சென்று வருவோமே, ஏற்கனவே பார்த்த கோவிலாக இருந்தால் என்ன? என அங்கே செல்ல ஒரு பேருந்தினை பிடித்தேன்.  நடத்துநர் காலையிலேயே வீட்டில் சண்டைபோட்டுவிட்டு வந்தார் போலும்! எல்லோர் மீதும் எரிந்து விழுந்தபடி இருந்தார்.




எவ்வளவு கட்டணம் என்பது தெரியாததால் ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்றினை எடுத்து நீட்டினேன்! "சார் இப்ப தான் முதல் ட்ரிப், சுத்தமா சில்லரை இல்ல…. வரதெல்லாம் லேடீஸ் சீட்டும் ஸ்கூல் பசங்களும் மட்டும் தான். மொத்தமா நாலு ஆம்பளங்க தான்….. ஒரு ட்ரிப்-ல 100-200 கூட தேறமாட்டேங்குது….. இதுல எங்கேந்து சில்லரை தர!" என்று சொல்ல, தேடித் துழாவி எட்டு ரூபாய் கொடுத்தேன். பெரும்பாலான நகர பேருந்துகளில் இருக்கும் நடத்துநர்கள் இப்படி புலம்பியபடியே இருக்கிறார்கள்.  அவர்களுக்கும் இந்த மாதிரி குறைந்த கலெக்ஷன் என்பது அவர்களின் படிக்காசு குறைவதற்கு காரணமாக இருப்பதால் இப்படியான புலம்பல் என்று தோன்றுகிறது. 


 

சில நிமிடங்கள் பயணித்தபிறகு ஒரு நிறுத்தம் - பேருந்து நின்று புறப்பட்ட பிறகே அந்த ஊரின் பெயர் கண்ணுக்குத் தெரிந்தது - அழகிய மணவாளம் - ஆஹா அன்றைக்கு Rishaban Srinivasan சொன்னாரே - அழகிய ஊர் என! என்று எண்ணிய வண்ணமே, நடத்துனரிடம் பேச்சு கொடுத்தேன்.  அந்த ஊர் கோவில் குறித்து கேட்ட போது, “இங்கே இறங்கி ஊருக்குள்ளே நடக்கணும் சார்! அங்கே போகணுமா உங்களுக்கு? எதுக்கு போகணும்?” என வரிசையாக கேள்விக்கணைகளைத் தொடுத்தார்.  போகணும் தான், பரவாயில்லை, திரும்பி வரும்போது போய்க்கொள்கிறேன் என்று சொல்லி விட்டேன்.  திப்பைஞ்சீலி வந்ததும் பேருந்திலிருந்து இறங்கிக் கொண்டு கோவிலுக்குச் சென்றேன்.  மிகவும் அழகான சிவன் கோவில்.   கோவில் குறித்து முன்னரே எனது வலைப்பூவில் எழுதி இருக்கிறேன் - அதற்கான சுட்டி - எமதர்மராஜனும் ஞீலிவனேஸ்வரரும். 


 

இந்த முறை சென்றபோதும் நிறைய பக்தர்கள் கூட்டம் - பரிகாரத்திற்காக வந்திருந்தார்கள்.  அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் 61-ஆவது இடம் பெற்ற திருக்கோவில்.  திருமணத்தடை நீக்கும் பரிகார ஸ்தலம் என்பதோடு எமதர்மராஜாவிற்கும் தனிக்கோவில் அமைந்திருப்பது இந்த கோவிலில் தான்.  இங்கே ஸ்தல விருக்ஷம் கல்வாழை.  அமைந்திருக்கும் தீர்த்தங்கள் மொத்தம் ஏழு!  ஆனால் பெரும்பாலானவை காய்ந்து கருகாய் கிடக்கின்றது - பெயருக்குக்கூட தீர்த்தம் அதில் இல்லை.  பாறைகள் தெரியும் அளவிற்கு வறண்டு கிடக்கின்றன என்பது வேதனையான உண்மை. 


 

திருப்பைஞ்சீலி கோவில் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு எட்டு மணி வரையும் திறந்திருக்கும்.  சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நேரடி நகரப்பேருந்துகள் உண்டு.  சத்திரம் பேருந்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த திருக்கோவில்.  இங்கே இன்னுமொரு விஷயம் - பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி அமைந்திருக்கும். இங்கே நவக்கிரகங்களுக்கு சிலைகள் கிடையாது. 9 படிகளில் தீப வடிவில் நவக்கிரகங்கள் அமைந்திருப்பதாக ஐதீகம். அழகான கோவில்.  திருச்சி வந்தால் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக இந்த கோவிலும் நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளலாம். வெளியே முடிக்கப்படாத கோபுரம் பிரம்மாண்டமாக இருக்கிறது. அந்த மொட்டை கோபுரத்தினையும் வேறு சில இடங்களிலும் படங்கள் எடுத்துக் கொண்டு கோவிலில் நின்று நிதானித்து தரிசனம் செய்து கொண்ட பிறகு தான் அங்கிருந்து புறப்பட்டேன்.  அடுத்ததாக சென்றது எங்கே?  வேறெங்கே - அழகிய மணவாளம் கிராமத்திற்கு தான்!  அங்கே பார்த்தது என்ன, கிடைத்த அனுபவங்கள் என்ன போன்றவற்றை விரைவில் சொல்கிறேனே! 

 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

12 கருத்துகள்:

  1. திருப்பைஞ்சீலி தரிசித்தோம். மொட்டைக் கோபுரம் அழகு.

    பதிலளிநீக்கு
  2. யமனேஸ்வரம் என்பது வேறு ஊரோ?  திருச்சி வந்தால் பார்க்க வேண்டிய இடங்கள் லிஸ்ட் கூடிக் கொண்டே போகிறது.  அழகிய மணவாளம் வேறு சொல்கிறீர்கள்..  பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருச்சியில் நிறைய கோவில்கள் பார்க்க உண்டு ஶ்ரீராம். பிரபலம் இல்லாத கோவில்கள் பட்டியல் மிகப் பெரியது. முடிந்த வரை எல்லா இடங்களுக்கும் பயணிக்க வேண்டும். பார்க்கலாம். தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  3. உங்கள் பயணப் பதிவுகளை உடனுக்குடன் காலையிலேயே படித்துவிடுவேன். இந்தப் பதிவைப் படித்த பிறகுதான், திருவரங்கத்துக்கு வந்தால், காலையில் சாப்பிட்டோமோ, கேமராவை எடுத்துக்கொண்டு சுற்றக் கிளம்பிவிட்டோமா என்று இருப்பதுபோலத் தோன்றுகிறது. உங்கள் பேருந்து பயணத்தைப் படித்த பிறகு, எனக்குமே இந்தமாதிரிச் செல்ல மனதில் உள்ள ஆசை வெளிவருகிறது. சில வாரங்களுக்கு முன்பு, பெங்களூரிலிருந்து புதுக்கோட்டை பஸ்ஸில் சென்று அங்குள்ள கோவில்களுக்குச் செல்லலாம் என்று தோன்றியது. அது சரி... மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துவிடுவீர்களா இல்லை போகும் இடத்தில் சாப்பிட்டுவிட்டு, மாலைதான் வருவீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த முறை குடும்பச் சூழல்கள் காரணமாக அதிக நாட்கள் இங்கே வாசம்..... வாரத்தில் ஒரு நாள் அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை கொஞ்சம் நேரம் எடுத்து காலை 6 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்குள் வீடு திரும்புகிறேன். ஒன்றிரண்டு கோவில்கள் தரிசிக்க முடிகிறது. சில நாட்கள் நான்கு கோவில்கள். நிறைய இடங்களுக்குச் செல்ல முடிவதில்லை. தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
    2. எனக்கு தனியாக பயணம் செய்வது பிடிக்கும். சில நேரங்களில் மனைவியுடன் அல்லது பசங்களுடனும் சேர்ந்து பயணம் செய்தால் கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணிக்கவேண்டியிருக்கும். நான் மட்டும் பயணம் செய்தால், ஏதேனும் சாப்பிட்டுவிட்டு அல்லது சாப்பிடுவதை ஒத்திப்போட்டு என்று பயணம் செய்ய முடியும். நீங்க மாத்திரம் கும்பகோணம் அருகில் இருந்திருந்தால், ஏகப்பட்ட கோவில்களைத் தரிசிக்கலாம் (100க்கும் மேல் அந்தப் பகுதியில் கோயில்கள் உண்டு)

      நீக்கு
    3. தனியாக பயணம் செய்வதில் நிறைய அனுகூலங்கள் இருந்தாலும் சில கஷ்டங்களும் உண்டு. ஆனாலும் தனிமைப் பயணம் பிடித்ததே.

      கும்பகோணம் கோவில்கள் பார்க்க வேண்டும். விரைவில் வாய்ப்பு அமைந்தால் நல்லதே. தங்கள் மீள் வருகைக்கு நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. இக்கோயில் பற்றியும் கேள்விப்பட்டதுண்டு. உங்களின் பழைய பதிவையும் வாசித்துவிட்டேன். திருச்சி, கும்பகோணம் எல்லாம் கோயில்கள் சுற்றி நிறைந்த ஊர்கள்.

    மொட்டை கோபுரத்தின் கீழ் சிற்பங்கள் நிறைய உள்ளன போலத் தெரிகிறது.

    நல்ல தகவல்கள், ஜி.

    பெண்களுக்கு பேருந்தில் (உள்ளூர்) இலவசம் என்பது அரசுக்குக் கொஞ்சம் நஷ்டம் என்று சொல்லிக் கெள்வி. அரசு எப்படிச் சமாளிக்கிறது?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்திற்கு நன்றி கீதா ஜி.

      அரசுக்கு இழப்பு தான். ஆனால் இருக்கவே இருக்கிறது டாஸ்மாக் வருமானம். அதனால் சமாளித்துக் கொண்டு இருக்கிறார்கள். தில்லி இந்த விஷயத்தில் முன்னோடி. பேருந்து பராமரிப்பு செய்வதை அறவே விட்டுவிடுகிறார்கள் என்பது ஒரு சோகம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....