ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

முகநூல் இற்றைகள் - கண்ணு ஒரு காப்பி வாங்கி கொடேன்! - 20 ஜனவரி 2023


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட Chapter Close பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

LIFE IS A GAME OF CHESS… YOU CANNOT UNDO THE MOVES; BUT YOU CAN MAKE THE NEXT STEP BETTER.

 

******


 

கண்ணு ஒரு காப்பி வாங்கி கொடேன்!



படம்: இணையத்திலிருந்து…

 

திருவாசி கோவில் குறித்து எழுதிய நாளில் சில விஷயங்கள் எழுத விட்டுப் போனது. இடுகை பெரியதாக செல்கிறதே என்பதற்காக விட்ட விஷயங்கள்  அவை. அது குறித்து இன்று பார்க்கலாம். 

 

கோவில் உள்ளே ஒரு பூனையார் ராஜ்ஜியம் செய்கிறார்.  அதுவும் சரியாக மாற்றுரைவரதீஸ்வரர் சன்னதி அருகே அவரது ராஜாங்கம் தான். கோவில் உள்ளே செல்லலாம் என நுழைந்தபோது அவர் “மியாவி”யபடியே முறைத்துக் கொண்டு என்னைத் தொடர்ந்தார்.  அவரிடம் அப்படி ஒரு வேகம்.  பிராண்டி விடுவாரோ என்று மனதிற்குள் ஒரு எண்ணம்.  ஒரு வேளை குட்டி போட்டிருப்பாரோ, அதனால் தான் யார் வந்தாலும் இப்படி நடந்து கொள்கிறாரோ என்றெல்லாம் மனதிற்குள் சில எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது.  எம்பெருமான் ஈசனை மனதிற்குள் பூஜித்தாலும் ஒரு பக்கம் பூனையையும் கவனித்துக் கொண்டிருந்தது கண்களும் எண்ணமும்! 🙂

 

பிரகாரத்தில் ஒரு எல்லை வரை நம்மைத் தொடர்ந்து வரும் பூனையார் அவர் எல்லை தாண்டியதும் திரும்பி விடுகிறார்.  மீண்டும் அடுத்த வலம் வரும் போது மீண்டும் தொடர்ந்தார் பூனையார்.  ஆளரவம் இல்லாத கோவில் என்பதால் நின்று நிதானித்து மீண்டும் ஒரு முறை ஈசனை கண்ணாரக் கண்டுகளிக்க சன்னதிக்குள் செல்ல, மீண்டும் தொடர்ந்தார் பூனையார்.  அட என்னடா இது தொல்லையாக போயிற்று என அவரிடம் “என்னடா, என்ன விஷயம், என்னைத் தொடர்ந்து வந்து என்ன செய்ய எண்ணம்?” என பேச்சுக் கொடுத்தேன்.  என் பாஷை அதற்கு புரியவில்லை.  பூனையின் “மியாவ்” மொழி எனக்குத் தெரியவில்லை!  ஏதோ ஒரு வித பேச்சு வார்த்தை நடத்தி ஈசனை வழிபட்டு வெளியே வர, அவர் எல்லை முடிந்ததும் விடை கொடுத்தார் - “அது! அந்த பயம் இருக்கட்டும்!” என்று என்னிடம் சொல்வது போல இருந்தது அந்த பூனை பார்த்த பார்வை!    

 

கோவிலுக்கு வெளியே ஒரு சிறு தேநீர் கடை.  ஒரு தேநீர் அருந்தலாம் என அங்கே செல்லும் வழியில் மண்டபத்தில் ஒரு மூதாட்டி. நடக்கவே முடியாமல் அமர்ந்து இருந்தார்.  அவரைக் கடக்கையில் என்னிடம், “கண்ணு ஒரு காப்பி வாங்கி கொடேன்!” என்றார்.  “காப்பி வாங்கித் தரணுமா பாட்டி? சரி இருங்க, வாங்கித் தரேன்!” என்று நான் சொல்ல, அருகில் இருந்த பூக்கடைக்கார பெண்மணி, “இப்பதான் ஒரு காப்பி குடிச்சிது, இப்ப திருப்பிக் கேட்குது!” என்றார்.  சிரித்த படியே நகர்ந்து, கடைக்காரரிடம் எனக்கு ஒரு தேநீரும், பாட்டிக்கு ஒரு காப்பியும் சொன்னேன்.  காப்பியை கொண்டு கொடுக்க, வாங்கி ஒரு பக்கமாக வைத்துக் கொண்டார்.  “காப்பி ஆறிடும் குடிச்சுடுங்க பாட்டி!” என்று நான் சொல்ல, “ம்ம்ம்… ஆறட்டும் குடிக்கிறேன்!” என்று சொல்லி வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.  

 

கோவிலுக்கு வரும் சொற்ப பக்தர்களில் யாரேனும் இப்படி வாங்கிக் கொடுக்கும் காப்பி, உணவு என அவரது வாழ்க்கையும் ஓடிவிடுகிறது போலும்! ஈசன் யாருக்கு அருள்கிறாரோ இல்லையோ, அந்த மூதாட்டிக்கு நல்ல கதி கொடுக்கட்டும் என மனதார வேண்டிக்கொண்டு புறப்பட்டேன்.  இந்த மூதாட்டி மாதிரி எத்தனை எத்தனை பேரோ?  முதுமை கொடுமை, முதுமையில் வறுமை அதை விட கொடுமை என்று சொல்வது வழக்கம்.  அந்த மூதாட்டியை பார்த்தபோது எனக்கும் அது தான் தோன்றியது.  இன்னும் எத்தனை நாட்கள் இப்படி உழல வேண்டும் என அந்த மூதாட்டிக்கு எழுதி இருக்கிறதோ? அந்த ஈசனே அறிவார்!

 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

20 கருத்துகள்:

  1. பூனையின் செயல் வியப்பு ப்ளஸ் சிரிப்பு.  குறிப்பிட்ட தூரத்துக்கு மட்டும் அது அப்படி கூட வருவதற்கு என்ன காரணமோ!  பாவம் பாட்டி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறிப்பிட்ட தூரம் அந்த பூனையின் எல்லையாக இருக்கலாம் ஸ்ரீராம். பதிவு குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  2. இப்படி பெரியோர்கள் எங்கும் நிரவி வாழ்கிறார்கள் ஜி

    இனிமேல் அரசு நினைத்தால் மட்டுமே இவர்களின் வாழ்வில் மாற்றம் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல இடங்களில் பெரியவர்கள் நிலை இப்படித்தான் கில்லர்ஜி. பதிவு குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. மூதாட்டியின் அல்லல் தீர வேண்டும் என்பதே என் ஆசையும். தங்கள் கருத்துரைக்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. மூதாட்டி அந்த காப்பியை ஒருவேளை அந்த பூனைக்காக வைத்திருந்தாரோ எனவும் தோன்றியது.
    பாவம், பசியை அடக்க அவ்வப்போது காப்பியை கேட்கிறாரோ எனவும் தோன்றுகிறது.
    மிகவும் கடினமான முதுமை வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பசியை அடக்க காப்பி - இருக்கலாம் அரவிந்த். பதிவு குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  5. பூனை பெண் பூனை என்றால் அது அங்கு எங்கேனும் குட்டி போட்டிருக்கலாம் அதனால் வரவங்க நம்ம குட்டிங்களை தூக்கிட்டுப் போயிடுவாங்களோ என்ற ஓரு பயத்தில்....பாதுகாப்புக்காகத் தொடர்ந்திருக்கலாம்... அல்லது சாப்பாடு ஏதானும் கிடைக்குமோ என்று எதிர்பார்ப்பில்...அதற்கு சாப்பாடு கிடைத்திருக்காது. அதனால்.

    அல்லது ஜஸ்ட் ஒரு அன்பு எதிர்பார்த்து...

    பொதுவாகவே விலங்குகள் ஒரு confined பகுதிக்குள் இருந்தால் "ஏய் என் ஏரியாக்குள்ள புதுசா யாருடா அது" என்ற ஒரு உணர்வு இருக்கும் அவங்களுக்கு

    என் மகனிடம் கேட்க நினைத்தேன். டைம் ஆகிவிட்டது. நம் காலை நேரத்தில் அவனுடன் பேசிவிட்டதால் அவன் தூங்கச் சென்றிருப்பான் இப்போது. என்றாலும் இதை அனுப்பியிருக்கிறேன். அவன் என்ன சொல்கிறான் என்று தெரிந்து கொள்ள.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மியாவ் என்று கத்திக் கொண்டே வந்திருந்தால் அதற்குப் பசி (குட்டி போட்ட பூனைக்குப் பசிக்குமே...) அல்லது எச்சரிக்கை உணர்வு...

      கீதா

      நீக்கு
    2. ஹான் வெங்கட்ஜி இப்பதான் தோணுது, பூனை உங்களைப் பார்த்ததும் - அட இவர் ஃபோட்டோ புடிக்கிற ஆளாச்சே.....நம்மையும் எடுப்பாரோன்னு உங்க பின்னாடியே வந்திருக்கு!!!!!!!!!!!!

      கீதா

      கீதா

      நீக்கு
    3. பூனை குறித்த மேலதிகத் தகவல்கள் சிறப்பு. தங்கள் அன்பிற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
    4. மியாவ் என்று கத்திக் கொண்டே தான் இருந்தது கீதா ஜி. அங்கே இருப்பவர்களிடம் பேசி இருந்தால் தெரிந்திருக்கக்கூடும். தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
    5. ஃபோட்டோ - ஹாஹா… அதற்கும் நான் படங்கள் எடுப்பது தெரிந்து விட்டதோ. இப்போதெல்லாம் கேமரா எடுத்துச் செல்ல முடிவதே இல்லை. தங்கள் அன்பிற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. பாட்டி பாவம்....அவர் இளமையில் பலரும் செய்வது போல் காபி குடித்தே வாழ்ந்திருந்தாரோ என்னமோ அது இப்போது அதை மட்டும் குடித்தேனும் தன் பசியைப் போக்கிக் கொள்கிறாரோ? என்ன காரணமாக இருந்தாலும் பாவம் அவர். ஒவ்வொரு முதுமையின் பின்னும் நாவல் எழுதும் அளவு கதைகள் இருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “ஒவ்வொரு முதுமையின் பின்னும் நாவல் எழுதும் அளவு கதைகள் இருக்கும்…” - உண்மை. தங்கள் கருத்துரைக்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. பூனையார் பின் தொடர்ந்தது எனக்கும் பூனை, நாயார், குரங்கார் பின் தொடர்ந்தால் பயம் வரும் .

    நீங்கள் காப்பி வாங்கி கொடுத்துள்ளீர்கள் எல்லோரும் உதவுவார்களென நம்பமுடியாது.
    மூதாட்டி தனிமை நினைத்தாலே பாவமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூனை, நாய், குரங்கு - இவையெல்லாவற்றுக்கும் நம்மைக் கண்டு பயம்! பொதுவாக எனக்கு இவற்றின் மேல் பயம் இல்லை - ஆனாலும் ஓர் ஜாக்கிரதை உணர்வுடன் தான் செல்ல வேண்டியிருக்கிறது. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  8. நிறைய கோவில்களில் பூனையின் ராஜ்ஜியம்தான் நடக்கிறது.

    ஆஅள் அரவம் இல்லாமல் இருக்கும் கோவிலில் உங்கள் பாதுகாப்புக்கு வந்த பூனைபடையோ!

    மூதாட்டியை நினைத்தால் கவலையாக இருக்கிறது. இறைவன் நாளும் அவருக்கு உங்களை போனறவர்களை வைத்து படியளக்கடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல கோவில்களில் பூனைகள் உலா தான் - உண்மை கோமதிம்மா. இந்தப் பயணத்தில் நிறைய கோவில்களில் பூனைகளை பார்க்க முடிந்தது. பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....