வியாழன், 23 பிப்ரவரி, 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி முப்பது - அடுத்த நதிக்கரை நகரை நோக்கி - இரயில் பயணம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

NEVER APOLOGISE FOR BEING SENSITIVE OR EMOTIONAL. IT’S A SIGN THAT YOU HAVE A BIG HEART, AND THAT YOU AREN'T AFRAID TO LET OTHERS SEE IT. SHOWING YOUR EMOTIONS IS A SIGN OF STRENGTH - BRIGITTE NICOLE.

 

******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.  

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.  

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட். 

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு. 

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட். 

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்

 

பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…

 

பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…

 

பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்

 

பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்

 

பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்

 

பகுதி இருபத்தி இரண்டு - அயோத்யா ஜி - இராம ஜென்ம பூமி

 

பகுதி இருபத்தி மூன்று - அயோத்யா ஜி - சரயு நதி அனுபவங்கள்

 

பகுதி இருபத்தி நான்கு - Bபேல் PபThத்தர் மற்றும் இரவு உணவு

 

பகுதி இருபத்தி ஐந்து - ராஜ் (dh)த்வார் மந்திர் 

 

பகுதி இருபத்தி ஆறு - கனக் Bபவன் எனும் தங்க மாளிகை

 

பகுதி இருபத்தி ஏழு - காலை உணவு - குஷி க்ளிப் - சரயு படித்துறை

 

பகுதி இருபத்தி எட்டு - ஸ்ரீ நாகேஷ்வர்நாத் ஜி எனும் சிவன் கோவில்

 

பகுதி இருபத்தி ஒன்பது - அயோத்யா ஜி - Khகாந்தானி DHதவா Khகானா



அயோத்யா ஜி இரயில் நிலையம் - முகப்பு…

 

இந்தப் பயணத்தொடரின் சென்ற பகுதியில் வட இந்திய நாட்டு மருந்து விற்பனையாளர்கள் குறித்தும், அயோத்யா ஜி நகரிலிருந்து அடுத்த நதிக்கரை நகரம் நோக்கிய பயணத்திற்காக இரயில் நிலையம் சென்றது குறித்தும் எழுதி இருந்தேன்.  மதியம் பன்னிரண்டு மணி வரை மட்டுமே எங்கள் தங்குமிடத்திற்கான நேரம் இருந்ததால், இரண்டரை மணி ரயிலுக்கு, 12.15 மணிக்கே சென்று அமர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம்.  பயணிகளுக்கான காத்திருப்பு அறை நன்றாகவே இருந்தது. எங்கள் உடமைகளை அங்கே வைத்து, நண்பரின் இல்லத்தரசி மட்டும் அங்கே காத்திருக்க, நானும் நண்பரும் சென்று மத்திய உணவை சாப்பிட்டோம் - அதே வட இந்திய சப்பாத்தி, சப்ஜி வகையறா தான் - அதிலும் முதல் நாள் இரவு சாப்பிட்டது போல Thதாலி - எல்லாம் வைத்து தந்து விடுவார்கள் - விலையும் குறைவு தான்.   நண்பரின் இல்லத்தரசி முன்னதாகவே சாதமும் தயிரும் போதும் என்று சொல்லி இருந்ததால், அவருக்கு கொஞ்சம் சாதமும் பக்கத்து கடையில் இருந்து பாக்கெட்-இல் தயிரும் வாங்கிக் கொண்டோம்.  அங்கிருந்து பொடி நடையாக இரயில் நிலையம் வந்து சேர்ந்தோம்.  



எங்களுக்கு மட்டுமே இந்த இருக்கை என்று சொல்லாமல் சொல்கிறாரோ?

 

நண்பரின் இல்லத்தரசி உணவை குரங்குகளிடமிருந்து காப்பாற்றியபடி, உண்ட பிறகு, சில மணித்துளிகள் காத்திருப்பு அறையில் அமர்ந்து கொண்டு இருந்தோம்.  பிறகு மீண்டும் நடைமேடைக்கு சென்று எங்களுக்கான இரயிலுக்காக காத்திருந்தோம்.  பொதுவாக பயணிகளுக்கான இருக்கைகள் இரயில் நிலையங்களில் அதிகம் இருப்பதில்லை - குறிப்பாக நடைமேடைகளில்.  இங்கே அயோத்யா ஜி இரயில் நிலையத்திலும் அப்படியே! அதனால் கிடைத்த இடத்தில், சுவர் ஓரமாக, ஒரு படுக்கை விரிப்பினை விரித்து, அமர்ந்து கொண்டோம்.   இப்படி குறைவான இருக்கைகள் இருக்க, அதிலும் ஒரு இருக்கையில் இரயில்வே பாதுகாப்பு படை காவலர்களுக்கானதாக இருந்தது - May I Help You என்று எழுதி இருந்தது. அந்த இருக்கைகளில் யாரும் இல்லாததால் நண்பரின் இல்லத்தரசி அமர்ந்து கொண்டார்.  சில நிமிடங்களில் ஒரு காவலர் வந்து முறைத்தபடியே அமர்ந்து கொண்டார் என்றாலும், நல்ல வேளையாக எழுந்திருக்கச் சொல்லவில்லை.  



அயோத்யா இரயில் நிலையத்தில் ஒரு Selfie...
Mirror Image - ஆக மாற்றியபிறகு!

நடைமேடையின் கடைசி வரை சென்று அயோத்யா என்று எழுதி இருந்த தகவல் பலகையினையும் அதன் அருகே நின்று ஒரு selfie-யும் எடுத்துக் கொண்டு (வரலாறு முக்கியம் அமைச்சரே!) மீண்டும் ஒரு நடை! சிறிது நேரம் காத்திருந்த பிறகு எங்களுக்கான இரயில் வந்து கொண்டிருப்பதாக ஒலிபெருக்கி வழி தகவல்!  சரி என உடமைகளை எடுத்துக் கொண்டு எங்களுக்கான முன்பதிவு செய்த இரயில் பெட்டி வரும் இடத்தினை நோக்கி நடந்தோம்.  சில நிமிடங்களில் கங்கா-சட்லுஜ்  விரைவு வண்டி நடைமேடைக்கு வந்து சேர்ந்தது. எங்களுக்கான இருக்கைகளை அடைந்து உடைமைகளை வைத்து விட்டு கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என நினைத்தால் வந்திருந்த சக பயணிகள் எங்களை உறங்க விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வந்தது போல நடந்து கொண்டார்கள்.  தொடர்ந்து பேச்சு - கூடவே அவர்களது குழந்தைகள் வீட்டில் இருப்பது போலவே கூச்சலும் சத்தமும் போட்டுக் கொண்டு வந்தார்கள்.  என்னதான் குழந்தைகள் விளையாடுவது வழக்கம் தான் என்றாலும் இது போல இரயில் பயணத்தின் போது அடுத்தவர்களுக்குத் தொந்தரவு தராமல் இருக்க வேண்டும் என்பதை அவர்களுடைய பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கவில்லை போலும்! 

 

இரயிலில் கிடைத்த உணவு அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை என்பதால் நொறுக்குத் தீனி தான்.  வாரணாசி நகரில் தங்குமிடம் சென்று சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று இருந்து விட்டோம்.  ஒரு வழியாக நாங்கள் பயணித்த விரைவு (?) இரயில்,  அயோத்யா ஜங்ஷன்-லிருந்து புறப்பட்டு வாரணாசி ஜங்ஷன் வரையான 188 கிலோமீட்டர் தொலைவை சுமார் ஆறரை மணி நேரப் பயணத்தில் வந்து அடைந்திருந்தது.  இரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தால் நிறைய ஆட்டோ/கார் ஓட்டுனர்கள் சூழ்ந்து கொண்டார்கள்.  வாய்க்கு வந்த படி கட்டணம் வசூலிப்பார்கள் என்பது தெரிந்தே இருந்ததால் ஓலாவில் தேடினோம்.  எங்களுக்கான வாகனம் வந்து சேர்ந்தது. அந்த ஓட்டுநர் சரியான சோம்பேறியாக இருந்தார்.  பொறுமையாக ஒட்டிக்கொண்டு வந்தார்.  வாரணாசி நகரம் முன்பு பார்த்தது போலவே அன்றைய இரவிலும் பல  சுற்றுலா பயணிகளாலும், பக்தர்களின் வருகையாலும் மட்டுமல்லாது உள்ளூர் வாசிகளாலும் நிறைந்து காணப்பட்டது.  வாரணாசி எனும் இந்த நதிக்கரை நகரம் எப்போது சென்றாலும் ஏதோ ஒரு வகையில் என்னை மிகவும் ஈர்க்கும் ஒரு நதிக்கரை நகரம்.  






(DH)தஸாஸ்வமேத்(dh) Ghகாட் செல்லும் வழியில் தங்குமிடம்…


நண்பரது அலுவலக நண்பர் மூலம் ஏற்கனவே நாங்கள் தங்குவதற்கான இடத்தினை தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்து வைத்து இருந்தோம். ஹோட்டல் லாரா இண்டியா எனும் தங்குமிடம் தான் அது.  நாங்கள் மூவரும் ஒரே அறையில் தங்கும் விதமாக நான்கு படுக்கைகள் கொண்ட அறையாக இருந்தது.  நாங்கள் சென்ற சமயம் சைத்ர நவராத்திரி சமயம் என்பதால் பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் என்றும் தங்குமிடங்கள் கிடைப்பதில் சிரமங்கள் இருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார் நண்பரது அலுவலக நண்பர்.  எங்களது இந்த நதிக்கரை நகரங்கள் பயணத்தில் நாங்கள் அதிகமாக இருக்க நினைத்தது இந்த மூன்றாம் நதிக்கரை நகரமாகிய வாரணாசியில் தான்.  முதலில் திட்டமிட்டது நைமிசாரண்யம் - அயோத்யா - அலஹாபாத் - வாரணாசி என்ற வழி.  ஆனால் அயோத்யா நகரம் சென்ற பிறகு நேரடியாக வாரணாசி நகருக்கு மட்டுமே இரயில் கிடைத்ததால் திட்டத்தில் சிறிது மாற்றம்.  எங்களுக்கு அமைந்த ஓலா ஓட்டுநர் ஹோட்டல் வரை சென்று சேர முடியாமல் ஹோட்டல் அருகே இருந்த CHசௌக் வரை மட்டுமே விட்டார்.  ஆனாலும் அவரிடம் அவரது தொடர்பு எண்ணை வாங்கி வைத்துக் கொண்டோம் - பயணத்தில் தேவைப்படலாம் என்ற எண்ணத்துடன் - தேவைப்பட்டதும் கூட!



பெரிய தூணில் நந்தி…


ஓட்டுநர் விட்ட இடம் (DH)தஸாஸ்வமேத்(dh) Ghகாட் அருகே அமைந்திருக்கும் ஒரு பெரிய தூணில் நந்தி அமர்ந்து இருக்கும் இடம்.  அங்கேயிருந்து சில தப்படிகள் எடுத்து வைத்தால் தங்குமிடம்.  தங்குமிடம் வரை பக்தர்கள் கூட்டத்தில், எங்கள் உடமைகளைத் தூக்கிக் கொண்டு, முண்டியடித்து வந்து சேர்ந்தோம்.   தங்குமிடத்தின் உணவகத்திலேயே இரவு உணவு முடித்து நிம்மதியான உறக்கம்.  அடுத்த நாள், என்ன செய்தோம், அந்த நாள் எங்களுக்காக என்ன அனுபவங்களைத் தந்தது போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  பயணத்தில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன். 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

10 கருத்துகள்:

  1. துளசி டீச்சர் கூட கோவிடுக்குப் பின்னான பயணம் என்று இதே இடம் பற்றி நேற்று .எழுதி இருந்தார்.  வாரணாசி அழகான ஊர்.  அங்கு தங்கி இருந்து சுற்றி பார்ப்பது இனிமையான அனுபவமாயிருக்கும்.  சித்திரைத் திருவிழா மாதிரி தெருக்களில் என்ன கூட்டம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாரணாசி வீதிகளில் எப்போதுமே மக்கள் வெள்ளம் தான் ஸ்ரீராம். சில நாட்கள் தங்கி நின்று நிதானித்து சுற்றி வந்தால் நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும். தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  2. selfie அழகு...

    சென்னை T நகர் ரங்கநாதன் தெரு போலவே உள்ளது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் குறித்த தங்கள் கருத்து மகிழ்ச்சி அளித்தது. இங்கே எல்லா வீதிகளும் ரெங்கநாதன் வீதியை விட பெரியது, மக்கள் கூட்டமும் அதிகம் தனபாலன். தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  3. இந்தப் பயணம் முழுவதும் சிவப்பழமாக இருக்கீங்க ஜி!!

    வாரணாசி - ஆம் எனக்கும் படங்கள், காணொளிகள், உங்க பதிவு, துளசிக்கா பதிவு எல்லாம் வாசித்து ரொம்பவே ஈர்ப்பு உண்டு. இதுவும் அயோத்யாஜி யும்...அப்படி இருக்க நேரில் பல முறை சென்ற உங்களுக்கு கண்டிப்பாக இருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவப்பழம் - ஹாஹா… மகிழ்ச்சி கீதா ஜி. மனதுக்கு நிம்மதி அளித்த ஒரு பயணமாக இந்தப் பயணம் அமைந்தது. அயோத்யா, வாரணாசி, ஹரித்வார் என இங்கே பல இடங்கள் மனதுக்கு உகந்தவை. தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  4. தூணில் நந்தி வித்தியாசமாக இருக்கு....சிவன் தலம் என்பதால் நந்தி காவலோ - அயோத்யா ஜி யில் அனுமன் போல்!!!

    விரைவு வண்டி 188 கி மீ தூரத்தை 6 அரை மணி நேரமா...ஆ!!

    இன்றைய வாசகம் யோசிக்க வைக்கிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் - பெயருக்கு விரைவு வண்டி - பல இடங்களில் நின்று நின்றே செல்லும் இரயில்! ஆனால் அதுவும் ஒரு அனுபவம் தானே கீதா ஜி.

      இந்த நந்தி சிலை மிகவும் பிரபலம் இங்கே. வாசகம் குறித்த தங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  5. நம்மூரில் குழந்தைகளுக்கு, பொது இடங்களில் எப்படி நடந்துக்கணும் என்பதைச் சொல்லியே தருவதில்லை. என்னதான் செல்லம் என்றாலும் அவரவர் வீட்டுக்குத்தானே ! நாட்டுக்கா ? இங்கேயும் சமீபத்தில் குடியேறிய நம் மக்கள் இதையே கடைப்பிடிக்கறாங்க. மால்களின் தரையில் திடீர்னு தடால்னு விழுந்து உருண்டு புரண்டு வீறீடும் பிள்ளைகளைப் பார்க்கணுமே.......

    துளசி கோபால்.
    நேற்று முதல் பின்னூட்டமிட எத்தனைமுறை முயன்றாலும் அப்புறம் வான்னு ப்ளொக்கர் சொல்லிருச்சே.....

    பதிலளிநீக்கு
  6. மிக சிறப்பு ...

    சில பகுதிகள் விடுபட்டு விட்டன. இனி வாசிக்க வேண்டும் ...

    ஆஹா காசி ..


    முதலில் திட்டமிட்டது நைமிசாரண்யம் - அயோத்யா - அலஹாபாத் - வாரணாசி என்ற வழி....நாங்கள் அப்படியே தலைகீழ் அலகாபாத் காசி அயோத்தியா என திட்டமிட்டு பின் மாற்றி மாற்றி அயோத்திய மட்டும் செல்லவில்லை.


    இப்பொழுது துளசி மா தளத்திலும் காசி பதிவுகளே , நானும் அடுத்து அங்கு சென்ற அனுபவங்களை பகிரும் எண்ணமே

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....