திங்கள், 6 பிப்ரவரி, 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி இருபத்தி மூன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட திருவாசி கோவில் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

அமைதியை விட உயர்வான சந்தோசம் இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை - புத்தர்.

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி இருபத்தி மூன்று


 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு  ; விதி பதினேழு  ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது ; விதி இருபத்தி ஒன்று ; விதி இருபத்தி இரண்டு ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

இருபத்தி மூன்றாம் விதி சொல்வது, "உன் ஆற்றலையெல்லாம் ஒரு கூர்முனையில் குவி".

 

மூல நூலில், இதை "CONCENTRATE YOUR FORCES" என்கிறார் எழுத்தாளர்.

 

சென்ற விதியில் நாம் விவாதித்த சாதகமற்ற சூழல்களை, நம் வளர்ச்சிக்கான தயாரிப்புக் கருவிகளாக உபயோகிக்க, இத்தகைய முழு கவனக் குவிப்பு மிக அவசியம்.

 

அப்போதுதான், நல்வாய்ப்பு வரும் காலத்தில், அதற்கான முழு தயாரிப்புடன் உடனே செயலில் இறங்கி வெற்றிக்கனியைப் பறிப்பது சாத்தியமாகும்.

 

நம் கவனத்தைத் திசை திருப்புவதாக இன்றைய சமூக ஊடகங்களைப் பழிக்கும் நாம், முற்காலங்களிலும் நம் நேரத்தை வீணடிக்கவல்ல பல அம்சங்கள் வேறு வடிவில் இருந்ததை வசதியாக மறந்துவிடுகிறோம்.

 

உதாரணமாக, வெறும் அரசாங்கத் தொலைக்காட்சியும் வானொலியும் இருந்ததைப் பொற்காலமாக குறிப்பிடுவோர், வெறும் சினிமா கிசுகிசுக்களை வெளியிடும் நிகழ்ச்சிகள், மலின கருத்துக்களை வெளியிட்ட பத்திரிக்கைகள் போன்றவற்றால் நேரத்தை விரையமாக்கிய மனிதர்கள் அப்போதும் இருந்ததற்கு என்ன காரணம் கற்பிப்பார்களோ?

 

எனவே, எக்காலத்திலும், நம் ஆற்றலை அறிந்து அது சம்மந்தமான திறனை வளர்க்க முழு கவனத்தையும் குவிக்கும் முடிவு, அவரவர் கையில்தான் உள்ளது என்பதை ஒரு உதாரணம் மூலம் புரிந்துகொள்ளலாமா?

 

அட்டிகா தங்க நகை நிறுவனத்தை ஒன்பது ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய திரு பொம்மனஹல்லி பாபு அவர்கள், வெறும் ஐந்தாம் வகுப்பே முடித்தவர்.

 

அவர் படிப்பைத் தொடராததற்கான காரணம் வறுமையே, என எண்ணினால் அது இல்லை என்பதே பெரும் ஆச்சரியமான உண்மை.

 

அவருக்கு ஏட்டுப் படிப்பில் ஆர்வம் இல்லை என்பதையும், வியாபாரத்திலேயே ஆர்வம் இருப்பதையும் சிறு வயதிலேயே புரிந்து வைத்திருக்கிறார்.

 

மூன்றாம் வகுப்பிலேயே, அவருடைய வியாபார மூளையால் மாணவர்களிடம் பணம் வசூலித்து, மொத்த விலையில் அவர்களுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுப்பதன் மூலம், சிறிது சிறிதாகப் பணம் ஈட்டத் தொடங்கியிருக்கிறார்.

 

பிறகு ஆறாம் வகுப்பு நடுவிலேயே படிப்பை கைவிட்டு, சிறுசிறு தொழில்களை நடத்தத் தொடங்கி தற்போது ஐந்து மாநிலங்களில் இருநூற்று பதினேழு கிளைகளைக் கொண்ட அட்டிகா நிறுவனத்தை திறம்பட நடத்துகிறார்.

 

இவர் அடைந்த தோல்விகளுக்கு எல்லையே இல்லை.

 

ஒரு நாள், தொழில் தோல்வியால், கையில் துளியும் பணம் இன்றி, பசி தாளாமல் சாலையில் கிடந்த மழை நீரால் கெட்டிப்பட்ட ஈர மண்ணை உண்ணும் அவல நிலையையும் எதிர்கொண்டிருக்கிறார்.

 

எச்சூழலிலும், தனக்கான இலக்கில் தெளிவாக இருந்ததாலேயே, முழு கவனத்துடன் தனக்கான தொழில் வாய்ப்புகளை தேடிப்பிடித்து முன்னேறி இன்றைய நிலையை அடைய முடிந்திருக்கிறது.

 

தங்க நகைகளைக் கடனுக்காகப் பிற நிறுவனங்களில் அடகு வைத்து மீட்க இயலாதவர்கள் சார்பாக, அவர்களின் நகைகளை மீட்டு, கடனைச் செலுத்த மேலும் சில கால அவகாசத்தை நீட்டித்து வருவாய் ஈட்டுவதே இந்நிறுவனத்தின் சிறப்பு அம்சம்.

 

ஐந்து பெண் மேலாளர்களை முதுகெலும்பாக வைத்து, இந்நிறுவனம் நடத்தப்படுவது இதன் மற்றொரு சிறப்பு அம்சம்.

 

கடனால் தம் உயிருக்கு நிகரான நகைகளை இழக்கும் மக்களுக்கு, அவற்றை மீட்க வாய்ப்பளிக்கும் இவரின் வியாபார முறையால், வருமானத்திற்கும் அப்பால், நன்றிக்கடன் பட்ட பல உள்ளங்களையும் சம்பாரிக்கிறார்.

 

பள்ளிப்படிப்பை பாதியில் விட்டதால், கல்வி மீது இவருக்கு நம்பிக்கை இல்லை என்று ஊகிப்பது தவறு.

 

கல்வியை வெறும் கட்டாயத்திற்காகப் படிப்பதை விடுத்து, நமக்கான ஆர்வமான துறைகளைக் கண்டறிந்து அவற்றை நோக்கியே நம் ஆற்றலை மடைமாற்றுவதற்கானக் கருவியாக உபயோகிக்குமாறு பரிந்துரை செய்கிறார்.

 

ஏற்கனவே கடன்களைச் செலுத்த இயலாதவர்கள் நகைகளை மீட்ட பின், இவரையும்  அவர்கள் ஏமாற்றமாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம் என்னும் கேள்வி எழலாம்.

 

நேர்மையாக உழைத்து முன்னேறும் துடிப்பு மிக்கவர்களையும், ஊதாரித்தனமானவர்களையும், ஆரம்பத்திலேயே அடையாளம் காணும் உத்தியை, சிறு வயதில் தம் வீட்டில் பணியாற்றிய மல்லிகா அம்மையாரிடமிருந்தே பெற்றதாக இவர் கூறுகிறார்.

 

இதிலிருந்து, நம் வளர்ச்சிக்கான உத்திகளும், உதவிகளும் எவரிடமிருந்தும் கிடைக்கலாம் என்பதும், அதை அடையாளம் கண்டு பயன்படுத்தும் சூக்ஷுமம், நம் கவனத்தைச் சரியான இடத்தில் குவிப்பதிலேயே இருப்பதையும் உணரலாம்.

 

இவருடைய அனுபவங்களை மேலும் விரிவாகத் தெரிந்துகொள்ள விரும்புவோர், கீழ்காணும் யுட்யூப் காணொளிச் சுட்டியைப் பின்தொடரலாம்.

 

தங்க உலகின் தங்க மகன் Attica Gold Company திரு.பாபு | பேசும் தலைமை | 23.10.22

 

எனவே, தாம் பயிலும் பாடங்களுக்கான உலகியல் பயன்பாட்டை அறிய மாணவர்களை ஊக்குவிப்போம்.

 

அதே சமயம், நாம் பணியாற்றும் நிறுவனத்தின் இயங்குமுறையையும், சமூகத்தில் அதன் பங்கையும், எதிர்கால சாத்தியங்களையும் அறியும் முயற்சியிலும் இறங்குவோம்.

 

அப்போதுதான், சிறியோரும் பெரியோரும், தத்தம் விருப்பத்திற்கேற்ற இலக்கை நோக்கி கவனத்தைக் குவிக்க முடியும்.

 

நூல் கூறுவதுபோல, தத்தம் இலக்குகளை அடைய உதவும் சரியான நபர்களை அடையாளம் கண்டு அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவும் முடியும்.

 

அத்தகைய நபர்களை, நம் முன்னேற்றத்திற்காக முழு ஈடுபாட்டுடன் செயல்பட வைக்கப் பெரும் துணைபுரியும் சுவாரசியமான உத்தி ஒன்றை அடுத்த விதியில் சுவைக்கலாமா? 

 

நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

20 கருத்துகள்:

  1. அந்தக் காலத்தில் நாங்கள் என்று சொல்லும் வசனத்தில் வெறுத்துப் போயிருக்கிறீர்களா என்று நினைக்கிறேன்!!!   அந்தக் கால கிசுகிசு பத்திரிகைகள் இருந்தாலும் அவை எடுத்துக்கொள்ளும் நேரம் மிகக் குறைவு.  பாதிப்பும் கம்மியே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிப்பட்ட அளவில், கடந்த காலமே சிறப்பானதாக நம்புவதில் எனக்கு உடன்பாடு இல்லை ஐய்யா. ஒருவேளை, நான் என்னுவது தவறு என உணரும் நாளும் வரக்கூடும். எப்போதும் திறந்த உள்ளத்துடன் அணுபவங்களைப் பெற்று என்னை மாற்றிக்கொள்ள தயாராக உள்ளேன்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

      நீக்கு
    2. அரவிந்த், நான் ஸ்ரீராம் சொல்லுவதை சரி என்பேன். அவரும் கடந்த காலத்தைச் சிறப்பு என்று சொல்லவில்லை...கவனியுங்கள். பாதிப்பு குறைவு என்றுதான் சொல்லியிருக்கிறார்.

      இப்போதைய பாதிப்பு கூடுதல் என்பதற்குக் காரணம் கண்டிப்பாக மீடியாக்கள்தான். நாங்கள் வளந்த காலத்தில் மீடியாக்கள் இவ்வளவு இருந்ததா? இப்போது பிறந்த குழந்தை கூட யுட்யூப் தொடங்கலாம். அதற்கு கோடிக்கணக்கான சப்ஸ்க்ரைபர்ஸ். ஒவ்வொரு இளைஞரின் இளைஞியின் நேரம் எவ்வளவு வீணாகிறது பாருங்கள். இதை எல்லாம் பார்க்காமல் தங்கள் குறிக்கோளில் குறியாக இருப்பவர்களைப் பற்றிப் பேசவில்லை....ஆனால் இதில் விரயம் செய்பவர்கள் நிறைய...

      என் வகுப்பிலும் அப்போது என் கூடப்படித்தவர்கள் சைட் அடிப்பது பையனுடன் பேசுவது ரகசிய இடத்தில், ஓடிப் போனவை எல்லாமும் உண்டுதான்....ஆனால் வெகு குறைவு. இப்போது செய்தித் தாளில் பாருங்க ஒரு நாளாவது பாலியல் பற்றிய செய்தி இல்லாமல் இருக்கான்னுகொஞ்சம் புள்ளியியல் எடுத்துப் பாருங்க....சிறார் தண்ணி அடிப்பது புகைப்பது, காண்டம் பயன்படுத்துவது என்று எத்தனை காணொளிகள் செய்திகள் வருகின்றன? அப்போதும் ஆன்மீகச் சிந்தனையாளர்கள் இருந்தாங்க....ஆங்காங்கேதான்...இப்போது பாருங்க...அதுவும் அவங்க ஆன்மீகம்ன்ற பெயரில் செய்வன....

      திரு சைலேந்திர பாபு பேசுவதைக் கேட்டுப் பாருங்கள். க்ரைம்ஸ் பற்றி. அவர் சொல்கிறார் "எங்க காலத்துல சைபர் க்ரைம்னா என்னான்னே தெரியாது....இப்ப சைபர் க்ரைம்ன்றாங்க அதைப்பத்தி நாங்க இப்ப கற்றுக் கொள்றோம்" சினிமா தாக்கம் அதிகம் என்கிறார். சினிமா பார்க்காதீங்க உங்க நேரத்தை உங்கள் வாழ்க்கைப்பாதையை அமைக்க செலவிடுங்க என்று பேசுகிறார்.

      மனோ அக்கா சொல்லியிருக்காங்க எங்க தளத்தில் கருத்தில், ஒரு ஓட்டுநர் சொன்னதாக, அவர் 5 பெண்களை பாண்டிச்சேரிக்கு அழைத்துச் சென்று வந்திருக்கிறார். 5 ம் மது மயக்கத்தில் ஓட்டுநரையும் குடிக்கச் சொல்லி வற்புறுத்தல்....இப்படி நாங்கள் வளர்ந்த காலத்தில் இருந்ததில்லை. இது எதனால் என்று நினைக்கிறீர்கள்? அது போல அவரது சொந்தம் ஆசிரியையாக...தஞ்சையில்...பருவ வயதுப் பசங்க போதை மருந்தில் இருக்காங்க...வருத்தப்பட்டிருக்காங்க....எங்கள் ஊரிலும் அப்போது போதைப்பொருள் குடி எல்லாமும் உண்டுதான். ஆனால் சொற்பம். ஆனால் அது இப்போது பெருகியிருக்கிறது என்பதை மறுக்க இயலாது.

      அப்படி இருப்பதால்தானே எக்கச்சக்க மோட்டிவேஷனல் உரையாளர்கள், எக்கச்சக்க மனநல காப்பகங்கள், உளவியல் நிபுணர்களின் எண்ணிக்கையும் கூடி இருக்கிறது! மொபைல் ஃபோனுக்கு அடிமையாகி ஒரு சின்ன பையனை உளவியல் நிபுணரிடம் கூட்டி வரும் நிலை...educational psychologist டம்.....

      அக்காலத்தில் மீடியா இல்லாததால் அதிகம் தெரியாமல் போயிருக்கலாம்தான் ஆனால் நாங்கள் வளர்ந்தவர்கள் (இங்கு பெரும்பான்மையோர் என் வயதொத்தவர்கள்தான்) எங்கள் அனுபவங்களை வைத்துப் பார்க்கும் போதும் இப்போதைய சூழலைப் பார்க்கும் போதும் அந்த வித்தியாசம் கண்கூடாகத் தெரிகிறது.

      கீதா

      நீக்கு
    3. தங்கள் விரிவான விளக்கங்களுக்கு மிக்க நன்றி மேடம்.
      தங்கள் அணுபவங்கள் மூலம், இக்காலத்தின் சிக்கல்கள் எங்களுக்கு தெளிவாகின்றன.
      வரும் காலத்திலும் இது மேலும் கூடும் என்றே தோன்றுகிறது.

      நீக்கு
  2. அட்டிகா நிறுவனம் பற்றி உயர்ந்த அபிப்ராயம் இதுவரை நான் கொண்டதில்லை. நீங்கள் சொல்லி இருக்கும் அதன் நிறுவனர் பற்றிய தகவல்கள் படித்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பொருமையான வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஐய்யா.

      நீக்கு
  3. என்னைப்பொறுத்த வரை நாம் எதில் வல்லவர்கள் என்பதை அறிந்து, நம் திறமையின் எல்லை அறிந்து,  அதில் ஈடுபடுவது நல்லது என்று புரிந்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான புரிதல் ஐய்யா. இதைத்தான் விதியும் கூறுவதாக எனது புரிதலும் கூட.

      நீக்கு
  4. ///தாம் பயிலும் பாடங்களுக்கான உலகியல் பயன்பாட்டை அறிய மாணவர்களை ஊக்குவிப்போம்.

     அதே சமயம், நாம் பணியாற்றும் நிறுவனத்தின் இயங்குமுறையையும், சமூகத்தில் அதன் பங்கையும், எதிர்கால சாத்தியங்களையும் அறியும் முயற்சியிலும் இறங்குவோம்.///

    மிக சரியான வரிகள்....புரிந்து கொண்டவர்கள் நிச்சயம் வெற்றிக் கொள்வார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐய்யா.

      நீக்கு
  5. அலசல் சிறப்பாக இருக்கிறது தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  6. "இந்த விதி அருமை...அதே அதே....நம் ஆற்றலை குவித்தால் மற்ற விஷயங்களில் நம் கவனம் செல்லாது. அதை நோக்கிய பயணமாகத்தான் இருக்கும். ஆற்றல் மற்ற விஷயங்களில் வீணாகாது.

    அட்டிகா பற்றி இப்போதுதான் தெரிந்துகொள்கிறேன் அதாவது அட்டிகா எனும் பெயரே கூட. ஒரு வேளை நான் நகைகள் அணியும் பழக்கம் இல்லாததால் இருக்கலாம். வாங்கியதும் இல்லை.

    //எனவே, தாம் பயிலும் பாடங்களுக்கான உலகியல் பயன்பாட்டை அறிய மாணவர்களை ஊக்குவிப்போம்.//

    யெஸ் இது ரொம்ப ரொம்ப முக்கியம். மதிபெண்கள் தேவை என்பதை விட இது மிக மிக முக்கியம். Applications. நம் வீட்டில் சொல்லிக் கொடுப்பது இப்படித்தான். நல்ல கருத்து

    //அதே சமயம், நாம் பணியாற்றும் நிறுவனத்தின் இயங்குமுறையையும், சமூகத்தில் அதன் பங்கையும், எதிர்கால சாத்தியங்களையும் அறியும் முயற்சியிலும் இறங்குவோம்//

    நல்ல பாயின்ட் டிட்டோ செய்கிறேன்..அரவிந்த்.

    கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கீதா மேடம்.

      நீக்கு
  7. 'ஆற்றலை ஒரு முனையில் குவி' .....தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....