திங்கள், 20 பிப்ரவரி, 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி இருபத்தி எட்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட கோடு போடுவதும் வால் விடுவதும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

“SHOW ME A PERSON WHO HAS NEVER MADE A MISTAKE AND I’LL SHOW YOU SOMEONE WHO HAS NEVER ACHIEVED MUCH.” - JOAN COLLINS

 

******

 


வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி இருபத்தி எட்டு

 


வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு  ; விதி பதினேழு  ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது ; விதி இருபத்தி ஒன்று ; விதி இருபத்தி இரண்டு ; விதி இருபத்தி மூன்று ; விதி இருபத்தி நான்கு ; விதி இருபத்தி ஐந்து ; விதி இருபத்தி ஆறு ; விதி இருபத்தி ஏழு ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

இருபத்தி  எட்டாம் விதி சொல்வது, "குழப்பத்தை விடுத்து துணிவுடன் செயலாற்று".

 

மூல நூலில், இதை "ENTER ACTION WITH BOLDNESS" என்கிறார் எழுத்தாளர்.

 

நிச்சயமற்ற உலக வாழ்வில், எதையும் ஒரு சிக்கலுக்கான சரியான தீர்வு என எவராலும் நூறு சதவிகித உறுதியுடன் சொல்லிவிட முடியாது.

 

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், எதிர்ப்பும் ஆதரவும் இருந்தே தீரும். எனவே, மக்கள் நலம் பெறும் உயரிய நோக்கத்துடன், துணிச்சலுடன் செயலில் இறங்கிவிடுவதே, சிக்கலிலிருந்து மீளும் வழியைக் காண உதவும்.

பிரச்சனைகளைக் கண்டு ஓடுவதால், நாம் மீண்டும் மீண்டும் துரத்தப்பட்டுக்கொண்டே தான் இருப்போம்.

 

துரத்தி வரும் நாயைத் தைரியமாக நின்று முறைத்தாலே, நாய் திரும்பி ஓடுவதுபோல, துணிவுடன் செயல்பட்டு பெரிய வெற்றிகளை ருசித்தோரின் கீழ்காணும் அனுபவங்கள், இவ்விதியின் சாரத்தை உணர்த்திவிடும்.

 

கடந்த செப்டம்பர் இருபத்தைந்தாம் தேதி, இந்திய-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி நடந்து கொண்டிருந்தது.

 

அதில், 39 பந்துகளில் வெறும் பதினாறு ரன்களை எடுத்தால் வெற்றிபெற்றுவிடலாம் எனும் வலுவான நிலையில் இங்கிலாந்து இருந்தது.

 

அப்போது தீப்தி சர்மா என்னும் இந்திய சுழற்பந்து வீராங்கனை, சர்ச்சைக்குரிய "மான்கேடிங்" எனும் முறையில், இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீன் அவர்களை ஆட்டமிழக்கச் செய்தது பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

 

பந்துவீச்சாளர் பந்தை வீசும் முன்னே, மட்டையாளர் அநீதியான ரீதியில் ரன் எடுக்க முயன்றால், அவரை ஆட்டமிழக்கச் செய்யும் இந்த மான்கேடிங் உத்தி, கிரிக்கெட்டில் அனுமதிக்கப்பட்ட விதியே.

 

எனினும், இது பொது மானுட அறத்திற்கு எதிரானது என விவாதம் முன்பே பலமுறை கிளம்பியதால், இம்முறையைப் பெரும்பாலோர் தவிர்த்தே வந்துள்ளனர்.

 

தம் உள்ளுணர்வை நம்பி, துணிச்சலுடன் துரிதமாகச் செயல்பட்டு அணியின் வெற்றியை உறுதி செய்த தீப்தி சர்மா அவர்கள், உலகின் பலதரப்பட்ட மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டார்.

 

அதற்கு மாறாக, வெறும் வம்பர்களின் விமர்சனத்திற்காகப் பயந்திருந்தால், நல்ல சந்தர்ப்பத்தைத் தவறவிட்டதாகப் பலரால் தூற்றப்பட்டே இருந்திருப்பார்.

 

துணிவுடன் செயலில் இறங்கியோர் தவறே செய்துவிட்டாலும், அவர் மன்னிக்கப்படும் சாத்தியமே மிக அதிகம் என்பதையும் இவ்விதி தெளிவுபடுத்துகிறது.

 

1975 இல் அறிவிக்கப்பட்ட அவசரநிலையாலும், அடக்குமுறைகளாலும், மக்களின் பெரும் அதிருப்திக்குள்ளாகி, இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை இழந்தார் திருமதி இந்திராகாந்தி அவர்கள்.

 

இனி அவர் கதி அவ்வளவுதான் எனவும், வழக்குகளுக்கு அஞ்சி தன் மகனுடன் இமயத்தில் ஓய்வெடுக்கவே சென்றுவிடுவார் என்றும் பேசப்பட்டது.

 

அப்போது, பிகார் மாநிலம், பெல்ச்சி கிராமத்தில் நடந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல ஆள்பவர்களே தயங்கியபோது, யானையில் ஏறிச் சென்று மக்களுக்கு நேரில் ஆறுதல் அளித்தார் திருமதி இந்திரா அவர்கள்.

 

அது தொடங்கி அவர் மேற்கொண்ட பல துணிகர நடவடிக்கைகளால், இரண்டே ஆண்டுகளில் மீண்டும் பிரதமராக வெற்றிபெற்றார்.

 

எனவே, வாழ்வின் எவ்வகை வீழ்ச்சியிலிருந்தும், வேகமாக மீண்டெழ துணிச்சலே மிகச்சிறந்த ஆயுதம் என்பது தெளிவாகிறது.

 

மக்களில் பலர், தம் இலக்குகளை அடையாமல் இருப்பதற்கான காரணம், அவற்றை நோக்கிய முதல் அடியை வைக்காமல் தயங்குவதே.

 

சமூகத்தின் ஏதாவது  ஒரு தேவைக்கான தீர்வு, நம்மிடம் இருப்பதாக உணர்ந்தால், அதை ஒரு வெற்றிகரமான வியாபாரமாக மாற்றும் இலக்கை நோக்கி எவ்வயதிலும் அடியெடுத்து வைக்கலாம்.

 

தமக்குத் சுவையாகச் செய்யத் தெரிந்த மிருதுவான  கோழி வறுவலை, அறுபத்து இரண்டாம் வயது முதல் வியாபார உரிமங்களாக "K. F. C. Franchise" விற்று உலகெங்கும் பெரும் புகழ் பெற்ற திரு கர்னல் சாண்டர்ஸ் அவர்களை எவராலும் மறக்க முடியாது அல்லவா?

 

எனவே, தயக்கமே நம் முதல் எதிரி என்பதையும், துணிவே நம் உற்ற நண்பன் என்பதையும் மனதில் கொண்டு, நம் உள்ளுணர்வின் வழி செயல்படுவோம்.

 

நம் ஆழ்விருப்பங்களின் வடிவமான உள்ளுணர்வு, நம்மைச் சரியாக வழிநடத்தாவிட்டால், இதே துணிச்சலால் பெரும் அனர்த்தங்கள் நிகழ்ந்து, "அவசரக்குடுக்கை" போன்ற அவப்பெயரே மிஞ்சும்.

 

அப்படி நிகழாமல், சிறந்த பகுத்தறிவுடன், நம் உள்ளுணர்வைச் செயல்பட வைக்கும் சிறந்த உத்தி ஒன்றை அடுத்த விதியில் சுவைக்கலாமா?

 

நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

7 கருத்துகள்:

  1. பெரிய செயல்களை முன்னெடுப்பதற்குமுன் ஒரு பெரிய எதிர்பார்ப்பு அல்லது தோல்வி தேவையாய் இருந்திருக்கிறது!  எதற்கும் துணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.  கிட்டத்தட்ட செய் அல்லது செத்து மடி நிலை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐய்யா.
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் ம்க்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.

      நீக்கு
  3. இந்த விதி சொல்வது மிகவும் சரியே. தயக்கம் பயம் இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது. செய்,,,இன்றே செய், now or never என்று சொல்வதுண்டே ஒத்திப் போட்டால் அது அப்படியே ஆகிவிடும் என்பதும் என் அனுபவத்தில் கண்டதுண்டு. சில விஷயங்களில் என் முட்டுக்கட்டையே இந்தத் தயக்கமும் பயமும்தான்.

    அருமையான எடுத்துக்காட்டுகள் அரவிந்த்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மேடம். தயக்கத்திற்கும் எச்சரிக்கைக்கும் இடையிலான வேறுபாட்டை உணர்பவரின் வலிமை பன்மடங்கு பெருகும்.
      அது குறித்து அடுத்த விதியில் தெளிவாகிவிடும் என நம்பலாம்.
      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி கீதா மேடம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....