அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட ஸ்ரீ நாகேஷ்வர்நாத் ஜி எனும் சிவன் கோவில்
பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த
அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
YOU CAN’T ALWAYS HAVE A GOOD DAY; BUT YOU CAN FACE A BAD DAY WITH A GOOD
ATTITUDE!
******
ரெண்டு நாளு முன்னால் நாரலுக்கு பஸ்ஸுல போய்க்கிட்டு
இருக்கேன். ரெண்டு பயலுக சத்தமா பேசிக்கிட்டு வாரானுக.
“ஏலேய்! சிவராத்திரியன்னைக்கு ஓடப்போறியா? உங்க
அப்பாவுக்கு தெரியுமாடே?”.
“தெரியும்ல. அவரும்லா கூட ஓடி வரப் போறாரு”.
“என்னடே சொல்லுக. உங்க அம்மைக்கு தெரியுமா?”.
எனக்கு ஒரே மண்டை குடைச்சலு. வாலிபப் பய, ஓடப்
போறேன்னு சொன்னா, ஏதோ கெமிஸ்ட்ரி கோளாறு. கூடப் படிக்கிற புள்ளைய கணக்கு பண்ணி
வரலாறு படைக்கப் போறான்னு நினைச்சா, அப்பாவும் கூட ஓடி வரப் போறாருங்கான். என்னடா
இது, விலங்கியல் வாத்தியாருட்ட புவியியல் படிச்ச மாதிரி ஒரே மண்ட காய்ச்சலா
போச்சு.
நல்ல வேளையா பதில் கிடைச்சது.
“என்னது அம்மைக்கு தெரியுமாவா? எங்க அம்மதானடே எங்க
அப்பாவை ஓடச் சொன்னது. ஒரு வாரம் முன்னாலேயே அவரையும் என்னையும் விரட்டி விரதம்
இருக்க வச்சுட்டாங்கல்லா”.
சே! கொஞ்ச நேரத்துல ஒரு நல்ல பயலை தப்பா
நினைச்சிட்டேனே. ஆமா. அவ்வ ரெண்டு பேரும் பேசிக்கிட்டு வந்தது எங்க மாவட்டத்துல
சிவராத்திரியை ஒட்டி வரக் கூடிய சிவாலய ஓட்டம் பற்றி. எங்க மாவட்டத்தில சிவாலய
ஓட்டம் ரொம்ப ஃபேமஸுல்லா.
பின்னே ஆயிரக் கணக்கான பேரு இருபத்து நாலு மணி
நேரத்துல கிட்டத்தட்ட 108 கிலோ மீட்டர் (கொஞ்சம் முன்ன பின்னே இருக்கும்) ஓட்டமா
ஓடி 12 சிவாலயங்களை தரிசிக்கிறதுன்னா சும்மாவா!
சரி, எதுக்காக்கும் இந்த ஓட்டம். ஏதாவது
கதையிருக்கணும்லா. அதுக்கு நாம கொஞ்சம் மகாபாரத காலத்துக்கு போணும். பாரதப் போர்
முடிஞ்சு கௌரவர்களெல்லாம் அழிஞ்சு போனதுக்கு அப்புறம் நம்ம தருமரு மகாராசாவா
பட்டம் சூட்டணும். அதுக்கு யாகம்லாம் செய்யணும்லா.
இப்போல்லாம் நம்ம வீட்டுல விஷேசத்துல சின்னதா ஒரு
யாகம் செய்யணும்னா அய்யர கூப்பிடுவோம். அவரும் வந்ததும் கோமியம் கொண்டாங்கோம்பாரு.
அதனால் நம்ம பால்க்காரருட்ட சொல்லி கோமிய பாட்டில ரெடி பண்ணி வச்சிருப்போம்.
பால்காரரு இதுல தண்ணி சேர்க்க மாட்டாரு. ஒருவேளை நிறைய முகூர்த்தம் இருந்து
கோமியத்துக்கு டிமாண்ட் இருந்ததுன்னா தண்ணி சேர்ப்பாரோ என்னவோ.
ஆனா பட்டாபிஷேக யாகமுல்லா, முனிவரு பால்
வேணும்னுட்டாரு. என்ன பாலுன்னா புருஷாமிருகத்தோட பால் ( இடுப்புக்கு மேலே மிருகம், கீழே மனிதன்) (இங்க
ஒருத்தன் தூய தமிழில புருடா மிருகம் ன்னு சொல்லுகான். அவன் கிடக்கான், நாம்
கதைக்கு வருவோம்). இந்த புருஷா மிருகம் இருக்கே ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ள
வசிக்கும். அந்த எல்லைக்குள்ள யார் வந்தாலும் ஒரே அடி. லபக் லபக்தான். ஆனா
எல்லைக்கு வெளியிலே யாராவது கூட்டிப் போய்விட்டால் அவரின் அடிமையாகி விடும். இந்த
புருஷாமிருகம் ஒரு தீவிரமான சிவ பக்தன். சிவநாமத்தை தவிர வேறு எதுவும் அதுக்கு
காதுல விழுந்துரக் கூடாது. அப்படி விழுந்தா ஆடி பூவெடுத்துரும்.
இப்படிப்பட்ட புருஷா மிருகத்திடம் இருந்து பால்
எடுக்கதுன்னா லேசுப்பட்ட காரியமா. ஆனா என்ன, நம்ம பீமன் இருக்காரே. அவருக்குத்தான்
தாந்தான் உலகத்துலேயே பலசாலின்னு கர்வத்தோட சுத்தற ஆளாச்சே. அவரு நான் கொண்டு வாரேன்னு
கிளம்புகாரு. ஆனாலும் நம்ம ஐடியா அய்யாசாமி, அதுதான் கிருஷ்ண பரமாத்மா கிட்ட ஆலோசனை கேட்டுக்கிடுவோம்னு அவரு கிட்ட போறாங்க. அவரு
கிட்ட கேக்காமல் தருமரு என்னத்த செஞ்சுருக்காரு.
கிருஷ்ணரு பீமனை பாத்து சொன்னாரு, இந்த
புருஷாமிருகத்தை எல்லையை விட்டு வெளியே கொண்டு வருவது லேசுப்பட்ட காரியம்
கிடையாது. அது தன்னை மறந்து வெளியே வந்தாதான் உண்டு. அதுக்கு சிவனைத் தான்
பிடிக்கும். என்னை பிடிக்காது. அதனால் நீ அது கிட்ட போய் “கோபாலா! கோவிந்தா”ன்னு
என்பேரைச் சொல்லி கூப்பிடு. அது கோபப்பட்டு உன்னை துரத்தும். நீ அது கையில பிடிபடாம
ஓடணும். நான் பனிரெண்டு ருத்ராட்சங்கள் உன்னிடம் தருவேன். எங்கெல்லாம்
புருஷாமிருகம் உன்னை பிடிக்கும் நிலை வருதோ அங்க ஒரு ருத்ராட்சத்தை போடு. அது உடனே
சிவலிங்கமா மாறிடும். சிவலிங்கத்தை பார்த்தால் அது அமர்ந்து பூஜையும் தியானமும்
செய்யாமல் இருக்காது. அப்போ நீ நல்ல ரெஸ்ட் எடுத்துக்கிட்டு தெம்பாக “கோபாலா
கோவிந்தா” சொல்லு அப்படின்னு கிருஷ்ணர் ருத்ராட்சத்தை கொடுத்து ஆசீர்வதித்து
அனுப்பினார்.
நம்ம பீமனும் நம்ம ஊருக்கு வராரு. அந்த புருஷாமிருகம் எங்க கன்னியாகுமரி
மாவட்டத்திலதானே எல்லை போட்டு இருந்தது. அப்போ அது முன்சிறை திருமலைன்னு ஒரு
இடத்துலே படுத்துக் கிடக்கு. அங்க போய் நம்ம பீமரு, “கோபாலா! கோவிந்தா” ன்னு
கத்துகாரு. எவன்டா அது சிவ சிவன்னு கிடக்க எங்காதுல கோவாலா கோவிந்தா ன்னு
கத்துகதுன்னு கோபத்துல பீமனை துரத்துவது. பீமனும் ஒரு பத்து பன்னிரண்டு கிலோமீட்டர்
(அப்போல்லாம் கிலோமீட்டர் கிடையாதே, ஒரு கி.மீ எத்தனை காத தூரம்னுல்லாம்
கேக்கப்படாது) ஓடிப் பாத்தாரு. புருஷா மிருகம் பீமனை விட வேகமா ஓடுது.
திக்குறிச்சிங்கிற ஊரு கிட்ட வந்ததும் பீமனுக்கு மூச்சு வாங்குது. புருஷா மிருகம்
பிடிக்க வரவும் பீமன் ஒரு ருத்ராட்சத்தை கீழே போட்டாரு. உடனே அது சிவலிங்கமாக
மாறிற்று. சிவலிங்கத்தை பார்த்ததும் பீமனை விட்டு விட்டு சிவனை வழிபட அமர்ந்தது
புருஷா மிருகம். இந்த நேரம் நன்கு ஓய்வெடுத்த பீமன் மீண்டும் கோபாலா கோவிந்தா ன்னு
கத்த மீண்டும் துரத்தியது.
இப்படியாக தன் கையில் இருந்த மீதி ருத்ராட்சங்களை முறையே திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிபாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருபன்னிக்கோடு, கடைசியாக திருநட்டாலம் என்னும் இடங்களில் போட அங்கெல்லாம் சிவலிங்கங்கள் தோன்ற புருஷாமிருகம் அனைத்து சிவலிங்கங்களையும் வழிபட்டது. இன்னும் கொஞ்ச தூரத்தில் எல்லை வந்து விடும். பீமனிடம் ருத்ராட்சங்கள் தீர்ந்து விட்டன. பீமன் மீண்டும் கோபாலா கோவிந்தா என்று எல்லை நோக்கி ஓடுகிறான். புருஷா மிருகம் வெறிகொண்டு துரத்துகிறது. இதோ எல்லைக் கோட்டை தாண்டும் நேரம் பீமனின் ஒரு காலை பற்றி விட்டது புருஷா மிருகம். பீமனின் மற்றொரு கால் எல்லைக் கோட்டின் வெளியே. பீமன் புருஷாமிருகத்தைப் பார்த்து சொன்னான், நான் எல்லைக் கோட்டைத் தாண்டி விட்டேன். எனவே நீ எனக்கடிமை. இல்லை இல்லை, நீ தாண்டு முன்பே உன் காலை நான் பிடித்து விட்டேன். எனவே நான் உன்னை சாப்பிடப் போகிறேன் என்றது புருஷா மிருகம். பஞ்சாயத்து தருமரிடம் வந்தது.
தருமர் வாதங்களைக் கேட்டு பீமனின் பாதி உடல்
எல்லைக்குள் இருந்ததால் தன் தம்பி என்றும் பாராமல் பீமனின் பாதி உடலை
புருஷாமிருகம் சாப்பிடலாம் என தீர்ப்பளிக்க, புருஷாமிருகம் தருமரின் நியாயம் வழுவாத
தன்மை கண்டு மனமிளகி பீமனை விடுவித்தது. பின் தான் கடைசியாக வழிபட்ட சிவலிங்கம்
இருந்த திருநட்டாலத்திற்கு வந்து சிவ வழிபாட்டில் ஈடுபட சிவலிங்கத்தின் மேல்
சிவனும் விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணனாக காட்சி தெரிந்தது. இதைக்கண்ட புருஷா
மிருகம், சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என்றுணர்ந்து தன் எல்லைக் கோட்டைத் தாண்டி
வெளியே வந்து தன் பாலை தருமருக்கு தந்து வணங்கியது. பீமனும் தன் கர்வம் அழிந்து
புருஷா மிருகத்தை வணங்கினான்.
இப்படி தோன்றிய பனிரெண்டு சிவாலயங்களையும்
சிவராத்திரியின் முன்தினம் தங்களை பீமனாக கருதி கையில் விசிறியுடன் முன்சிறை
திருமலையில் தொடங்கி வழியெங்கும் கோபாலா கோவிந்தா என்ற கோஷத்துடன் ஒரேநாளில்
பனிரெண்டு சிவாலயங்களையும் தரிசித்து திருநட்டாலத்தில் ஓட்டத்தை நிறைவு செய்வர்.
பின்னர் சுசீந்திரம் வந்து மும்மூர்த்திகளும் ஒன்றாய் அருளும் தாணுமாலையனை வணங்கி
மகழ்வோரும் உண்டு. இப்போல்லாம் பைக்கு, காரு, டெம்போன்னு அதுலேயே பன்னிரண்டு
சிவாலயங்களையும் தரிசிப்போரும் நிறைய உண்டு.
சரி. ஓடும் வலிமையுள்ளோர் ஓடட்டும். நம்மால முடிஞ்சது
அவங்களைப் பாத்து சந்தோஷப் படுவதுதான். சிவ சிவ!
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை
பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
பத்மநாபன்
பின் குறிப்பு: புருஷா மிருகம் கதை எழுத்தாளர் காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் குபேரவனக் காவல் நாவலில் கூட வரும். அந்த நாவல் குறித்த வாசிப்பனுபவம் இங்கே!
சுவாரஸ்யமான கதை. ஒவ்வொன்றுக்கும் ஏதாவது பின்னணி வைத்துக் கொள்கிறார்கள். புருஷா மிருகம் நல்ல கான்செப்ட்.
பதிலளிநீக்குஎல்லாம் நம்பிக்கை தானே! புருஷாமிருகம் சிலைகள் பெரும்பாலான சிவன் கோவில்களில் உண்டு. சிவன் கோவிலில் காவல் புருஷாமிருகம் தான் என்றும் சொல்லிக் கேள்விப்பட்டது உண்டு.
நீக்குதங்களது அன்பிற்கு நன்றி ஸ்ரீராம்.
ரொம்ப நாளைக்கு அப்புறம் அண்ணாச்சி வந்திருக்காரு. நல்வரவு. இப்போல்லாம் நடை ஓட்டம் அதிகம் இல்ல. எல்லாம் பைக் ஓட்டம் தான். ஒரே நாளில் 108 கிமி ஓடக்கூடிய தெம்பு இருந்தால் ஒலிம்பிக்ஸ் மராத்தான் 42 கிமி ஓடி மெடல் வெல்லலாம் அல்லவா?
பதிலளிநீக்குJayakumar
சென்ற மாதமும் அண்ணாச்சி பதிவு வந்தது ஐயா. தற்போது இப்படியான ஓட்டங்கள் குறைவு தான். வடக்கிலும் பல ஊர்களிலிருந்து நடைபயணமாக ஹரித்வார் சென்று அங்கிருந்து குடங்களில் (குப்பிகளில்) கங்கை நீர் எடுத்து நடைப்பயணமாகவே அவரவர் இல்லம் திரும்பி அருகில் இருக்கும் கோவில்களில் சென்று, அவர்கள் கொண்டு வந்த கங்கை நீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வார்கள். அவர்களில் சிலரும் இப்படியான தொடர் ஓட்டம் (Relay) ஊடுவதுண்டு.
நீக்குதங்களது அன்பிற்கு நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.
எங்க மாவட்டத்தில சிவாலய ஓட்டம் ரொம்ப ஃபேமஸுல்லா.//
பதிலளிநீக்குஆமாம், இன்று கூட அதைபற்றி பேசினோம்.
மயிலாடுதுறையில் 7 கோவிலை இரவுக்குள் போய் வழிபட்டு வருவார்கள். நடந்து போவார்கள். நாலுகால பூஜையும் பார்த்து விடுவார்கள்.
//சிவனும் விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணனாக காட்சி தெரிந்தது. இதைக்கண்ட புருஷா மிருகம், சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என்றுணர்ந்து தன் எல்லைக் கோட்டைத் தாண்டி வெளியே வந்து தன் பாலை தருமருக்கு தந்து வணங்கியது. பீமனும் தன் கர்வம் அழிந்து புருஷா மிருகத்தை வணங்கினான்.//
கதை அருமை. தெரிந்த கதை என்றாலும் நீங்கள் சொல்வது கேட்க(படிக்க) நன்றாக இருக்கிறது.
அடுத்த பதிவு விரைவில் போடுங்கள்.
திருச்சி பகுதியிலும் ஒரே நாளில் மூன்று கோவில்கள் வழிபடுவதுண்டு கோமதிம்மா. “காலை கடம்பர், நண்பகல் வாட்போக்கி மாலை ஈங்கோய்மலை” என்று ஒரு வாக்கியம் உண்டு - காலை நேரம் குளித்தலையில் இருக்கும் கடம்பவனேஸ்வரர் கோவில், மதியம் அய்யர் மலை, மாலை ஈங்கோய்மலை ஆகிய மூன்று சிவன் கோவில்களுக்கும் சென்று வழிபடுவது வழக்கம். சமீபத்தில் ஒரே நாளில் முதல் இரண்டு கோவில்களையும் தரிசிக்க முடிந்தது.
நீக்குதங்களது அன்பிற்கு நன்றி.
தெரிந்த கதையை (ஆனால் சிவாலய இடங்கள் தெரியாது) எங்கேர் பாசைல சொல்ல பத்மநாபன் அண்ணாச்சியாலத்தான் முடியும். நல்லா எழுதியிருக்காரு.
பதிலளிநீக்குகூடவே நெல்லைக் குசும்பும்.
நல்லா எழுதறவங்க, நிறைய எழுதறதில்லை. நிறைய எழுதினால் சுகா போல ஃபேமஸாகிவிடுவோம் என்ற பயமா?
நெல்லை இது நாரோயிலு....தின்னவேலி இல்ல...வார்த்தைகளைப் பார்த்தால் தெரியுமே...சிலது ஒண்ணு போல தோணினாலும் இது தனியா தெரியும்..
நீக்குகீதா
“நல்லா எழுதறவங்க, நிறைய எழுதறதில்லை.” ஆஹா! சொல்லி இருக்கிறேன் அவரிடம்! முடிந்த போதெல்லாம் எழுதுங்கள் என்று.
நீக்குதங்கள் அன்பிற்கு நன்றி நெல்லைத்தமிழன்.
நெல்லையோ, நாரோயிலோ எங்களுக்கு இரண்டும் ஒண்ணு தான் கீதா ஜி. தங்களது அன்பிற்கு நன்றி.
நீக்குஓம் நம சிவாய...
பதிலளிநீக்குதங்களது அன்பிற்கு நன்றி தனபாலன். ஓம் நமசிவாய.
நீக்குஅண்ணாச்சியின் நடை ரசிக்க வைத்தது.
பதிலளிநீக்குஅவரே 108 கிமீ ஓடினமாதிரி எழுதியிருக்காரு. நீங்க என்னடான்னா, அவர் நடை ன்னு சொல்லிட்டீங்களே...ஹாஹா
நீக்குஓட்டமும், நடையுமாக என்று சொல்வதில்லையா...
நீக்குஅண்ணாச்சியின் எழுத்து நடை எப்போதும் சிறப்பு தான் கில்லர்ஜி. தங்கள் அன்பிற்கு நன்றி.
நீக்குஹை பப்பு அண்ணாச்சி!!!! பதிவா...ஆரம்பமே நாரோயிலுக்குப் போய்ட்டேன்ல....//எங்க மாவட்டத்தில சிவாலய ஓட்டம் ரொம்ப ஃபேமஸுல்லா//
பதிலளிநீக்குஓடிருக்கம்ல!!!
கீதா
ஆஹா நீங்களும் இப்படியான ஓட்டங்களில் பங்கு கொண்டதுண்டா? பிரமிப்பு. தங்கள் அன்பிற்கு நன்றி கீதா ஜி.
நீக்குபால்காரரு இதுல தண்ணி சேர்க்க மாட்டாரு. ஒருவேளை நிறைய முகூர்த்தம் இருந்து கோமியத்துக்கு டிமாண்ட் இருந்ததுன்னா தண்ணி சேர்ப்பாரோ என்னவோ.//
பதிலளிநீக்குஹையோ சிரிச்சு முடில பப்பு அண்ணாச்சி!!!
புருடா மிருகம் - ஹாஹாஹாஹா
அவரு கிட்ட கேக்காமல் தருமரு என்னத்த செஞ்சுருக்காரு.//
அடிப்பட்ட அனுபவம். சூதாட்டத்துக்குக் கேக்கலைலா..
தெரிந்த கதை ஆனா நீங்க சொல்லிருக்கீங்க பாருங்க...செமையா ரசித்து வாசித்தேன். ஆலயங்கள் தெரியும் ஆனால் ரொம்ப வருஷம் ஆகிடுச்சு....ஒரே ஒரு முறை அனுபவம். ஆனா இப்ப இந்த திற்பரப்பு தவிர மத்தது எல்லாம் எப்படி இருக்கும்னு கூடத் தெரியலை....
பிள்ளையாரு இருந்த எடத்துலயே சுத்தலையா அப்படி இப்படி ஓடிக்குவம்!!!!!
ரசித்து வாசித்தேன்
கீதா
அண்ணாச்சியின் பதிவு எப்போதும் சிறப்பு தான். உங்கள் ஊர் என்பதால் இன்னமும் அதிகமாக ரசித்திருப்பீர்கள் கீதா ஜி. தங்கள் அன்பிற்கு நன்றி.
நீக்குஅண்ணாச்சி பதிவு மிகவும் கலகலப்பான நடையில் வயிறு குலுங்க சிறிக்க வைத்துவிட்டது.
பதிலளிநீக்குசிவாலய ஓட்டத்தில் நான் கலந்துகொண்டது இல்லை.
இப்ப கலந்துகொள்ளலாமே என்னும் ஆசை தங்கள் பதிவை படித்தவுடன் ஏர்ப்படுகிறது.
டிமாண்டு அதிகமானால் கோமியத்துல தன்னி கலக்கலாமா, இல்ல மாட்டுக்கே குடிக்க நிறைய தன்னி முந்தைய இரவு குடுத்திரலாமா என யோசிச்சு முடிவு செய்யலாம்.
பத்மநாபன் அண்ணாச்சியின் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த். தங்கள் அன்பிற்கு நன்றி.
நீக்குசிவாலய ஓட்டம் சுவாரசியம்.
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி. தங்கள் அன்பிற்கு நன்றி.
நீக்கு