திங்கள், 27 பிப்ரவரி, 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி முப்பத்தி ஒன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட எமனுக்கு வரம் அளித்த சிவன் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

DON’T BE AFRAID TO TAKE THE UNFAMILIAR OR DIFFICULT PATH. SOMETIMES THEY’RE THE ONES THAT TAKE YOU TO THE BEST PLACES.

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி முப்பத்தி ஒன்று 


 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு  ; விதி பதினேழு  ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது ; விதி இருபத்தி ஒன்று ; விதி இருபத்தி இரண்டு ; விதி இருபத்தி மூன்று ; விதி இருபத்தி நான்கு ; விதி இருபத்தி ஐந்து ; விதி இருபத்தி ஆறு ; விதி இருபத்தி ஏழு ; விதி இருபத்தி எட்டு ; விதி இருபத்தி ஒன்பது ; விதி முப்பது ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

முப்பத்து ஒன்றாம்  விதி சொல்வது, "பிறரின் சுதந்திரமான தேர்ந்தெடுப்புகளுக்கு வாய்ப்பளித்துக்கொண்டே, முக்கிய துருப்புச்சீட்டை உன் வசமே வைத்துக்கொள்".

 

மூல நூலில், இதை "CONTROL THE OPTIONS: GET OTHERS TO PLAY WITH THE CARDS YOU DEAL" என்கிறார் எழுத்தாளர்.

 

தத்தம் நோக்கத்திற்காக, சுற்றத்தைக் கட்டாயப்படுத்தும் கொடுங்கோலர்களை எவரும் கடைசித் துளி உயிர் உள்ளவரை எதிர்க்கவே முயல்வர்.

 

எனவே, ஒரு தலைமைத்துவ வலிமையைப் பேண விரும்பும் எவரும், மக்களுக்கு முழு சுதந்திரம் அளிப்பதை முதல் கொள்கையாகப் பின்பற்றவேண்டும்.

 

அதே சமயம், தம் திட்டத்திற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்கவே, அம்மக்கள் தத்தம் சுதந்திரமாக முடிவெடுக்கும் திறனைப் பயன்படுத்துமாறு பார்த்துக்கொள்ளவும் வேண்டும்.

 

இங்கனம், தம் சுற்றத்தின் உளவியலை சரியாக அறிந்தவராக மாறும் பக்குவத்தை அடைய, நூல் நல்கும் நுட்பமான வழிகளை அறியலாமா?

 

1. பின்வாங்குதல் அல்லது காணாமல் போதல்:

 

டுவிட்டரில், அமெரிக்க முன்னாள் அதிபர் திரு டொனால்ட் டிரம்ப் அவர்களின் தடை செய்யப்பட்ட கணக்கு, ஒரு வாக்கெடுப்பிற்குப் பின், கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திரு எலான் மஸ்க் அவர்களால் செயலுக்குக் கொண்டுவரப்பட்டது.

 

ஆனால், தான் டுவிட்டருக்கு திரும்பி வர விரும்பாததாகக் கூறி, டிரம்ப் தான் காணாமல் போனது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கியுள்ளார்.

 

இவ்விடைவெளி, மக்களை மிகவும் ஏங்கச் செய்து, 2024 அதிபர் தேர்தலுக்குச் சற்று முன், டுவிட்டருக்கு மீண்டும் பிரச்சாரம் செய்ய வரும் திட்டமாக இருக்கலாம்.

 

அதற்குள், அமெரிக்காவில் ஏற்படக்கூடிய பொருளாதார மந்தநிலை போன்ற பிரச்சனைகளால், திரு பைடன் மீது அதிருப்தி உண்டாகி, தான் என்ன சொன்னாலும் கேட்பதற்கு மக்கள் தயாராக இருப்பர் எனும் நம்பிக்கையை திரு டிரம்ப் வைத்திருப்பதாகவே தோன்றுகிறது.

 

2. தேர்ந்தெடுப்புகளுக்கான பல வாய்ப்புகளில் ஒன்றை மட்டும் கவர்ச்சிகரமாகக் காட்டுதல்:

 

இவ்வுத்திக்கு ஆப்பிள் நிறுவனர் திரு ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களே, சிறந்த உதாரணம்.

 

நிறுவனத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் கூட்டங்களில், பணியாளர்களுக்குப் பல யோசனைகளை அளிக்க உரிய நேரத்தை வழங்குவார்.

 

ஆனால், அனைத்து யோசனைகளும், உரிய காரணங்களுடன் தவறானவையாகச் சித்தரிக்கப்பட்டு கூட்டம் தள்ளிவைக்கப்படும்.

 

மறுநாள், ஜாப்ஸ் அவர்களே, ஒரு சிறந்த யோசனையை முன் வைப்பதும், அது ஏகோபித்த ஆதரவுடன் ஏற்கப்படுவதும் நிகழும்.

 

ஆழ்ந்து யோசித்தால், முந்தைய நாள் வெளிப்பட்ட பலரின் யோசனைகளே, மாற்று வடிவில் ஒரு சிறப்பான தீர்வாக திரு ஸ்டீவ் அவர்களால் முன்வைக்கப்பட்டதாகவும், அதனாலேயே, மக்களால் எளிதில் ஏற்கப்பட்டதாகவும் உடன் பணியாற்றியோரின் அனுபவங்களால் அறிகிறோம்.

 

3. நமக்கு எம்முடிவால் துன்பம் வருமோ, அதையே கோருதல்;

 

சிறு குழந்தை போல் ஓயாமல் தம் முடிவிலேயே நின்று அடம்பிடிப்போரை, நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இவ்வுத்தி, மிக நுட்பமாகக் கடைபிடிக்கப்படுவதுண்டு.

 

30 ஜனவரி, 1970ல் குரேஷியும், அஷ்ரபும் ‘கங்கா’ என்கிற இந்திய போக்கர் 27 விமானத்தைக் கடத்தி, பாகிஸ்தான் நாட்டின் இலாகூரில் தரையிறக்கிய செயலை, பாகிஸ்தான் உளவு அமைப்பின் சதியாக இந்தியா பழி சுமத்திக் கண்டித்தது.

 

எதிர்பார்த்தது போலவே, தமக்கு எந்த சம்மந்தமும் இல்லை எனவும், ஜம்மு காஷ்மிர் விடுதலை முன்னனி அமைப்பின் திட்டமாகவே இருக்கும் எனவும் பாகிஸ்தான் கூறி மனதிற்குள் கொண்டாடிக்கொண்டது.

 

இரண்டு நாட்களாக, எவ்வித நிபந்தனையும், எவ்வியக்கத்தினரிடமிருந்தும் வராமல் விமானம் கொளுத்தப்பட்டது.

 

உடனே, இந்திய வான் எல்லையில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் தடை விதித்ததோடு, மீறினால் சுடப்படும் எனவும் எச்சரித்தார்.

 

போர் மூளும் அபாயத்தால் அஞ்சிய உலகத்தை, பிரதமரின் இவ்வறிவிப்பு சற்று ஆறுதல்படுத்தியதோடு, தடையை மறுக்கமுடியாத சிக்கலிலும் பாக்கின் ஆதரவாளர்கள் மாட்டிக்கொண்டனர்.

 

இதனால்தான், அவ்வாண்டு வங்கதேச யுத்தத்தில், ஆயுதங்களை எளிதில் எடுத்துச்செல்லவும் பாகிஸ்தானால் முடியவில்லை.

 

பின்னர்தான், விசாரணயில், கடத்தியவர்கள் இந்தியாவின் ‘ரா’ உளவாளிகள்  என பாகிஸ்தானிற்குத் தெரியவந்தது.

 

அதற்குள் பாகிஸ்தானைப் பணியவைப்பதில் இந்தியா, தாம் வெறுக்கும் கடத்தல் நாடகம் மூலம் வெற்றிபெற்றே விட்டது.

 

4. பிரச்சனைகளைத் திசை திருப்பி எதிர்ப்பாளர்களைக் குழப்புதல்;

 

அரசியல் வாதிகளின் மீது ஊழல் குற்றச்சாட்டு வரும்போது, குற்றம் சுமத்துபவர்களை, எதிரிநாட்டுக் கைக்கூலிகளாகவோ, மதத்தை இழிவுபடுத்துபவர்களாகவோ திசைதிருப்பி தப்பிப்பதை பலமுறை கண்டிருப்போம்.

 

இத்தகைய உத்தியைக் கைக்கொள்வோரின் தாக்குதல் எங்கிருந்து வருமோ எனும் அச்சத்தில் பலர் எதிர்க்கவே துணியமாட்டார்கள்.

 

5. முன்பே எடுத்த முடிவுகளுக்குப் பங்காளியாக்குதல்;

 

இன்றைய பெரு நிறுவனங்கள், போட்டி அடிப்படையில் தாம் நிர்ணயித்த வியாபார இலக்குகளை அடைவதாக மேல்மட்ட அதிகாரிகளிடம் முன்பே எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை வாங்கிவிடுகின்றன.

 

அவ்வதிகாரிகள், தத்தம் கீழ்மட்டப் பணியாளர்களிடம் அடுத்தகட்டமாக ஒப்புதல்களைப் பெற்றே வேலைகளைப் பிரித்தளிக்கின்றனர்.

 

இதனால், மேல்மட்டத்தின் செய்தி, அடிமட்டப் பணியாளர்களிடம் எளிதில் சென்று சேரவும், தெளிவான இலக்குடன் பணியாற்றவும் முடிகிறது.

 

மேற்கூறிய உதாரணங்கள் மூலம், இவ்விதி, பல சிக்கலான துறைகளை நிர்வகிக்கும் உயர்நிலை அதிகாரிகளுக்குப் பெரிதும் கை கொடுப்பதை அறியலாம்.

 

அனைவரின் பொதுநலன் என்னும் அடிப்படையில் இவ்விதியை செயல்படுத்துபவரே, நீண்டகால அளவில் நிலைத்த பலத்தையும், மங்கா புகழையும் பெறுவதையும் வரலாறு பலமுறை உணர்த்தியுள்ளது.

 

இந்நிலையில், சராசரிக்குக் கீழ்ப்பட்ட ஞானம் கொண்டவரையோ, குழந்தைகளையோ வைத்து பணிகளை முடித்துக்காட்டும் சவாலை வெற்றிகரமாகச் சமாளிக்கும் உபாயம் ஒன்றை அடுத்த விதியில் சுவைக்கலாமா?

 

நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

17 கருத்துகள்:

  1. மாறுபட்ட நிகழ்வுகளின் உதாரணங்கள் சிறப்பு.  விதிக்கு வலிமை சேர்க்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் ஆழ்ந்த வாசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  2. அரசியலை உதாரணமாக சொன்ன விதம் அருமையாக உள்ளது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதியின் சாரத்தை விட்டு நாம் விலகாமல் இருப்பதற்காகவே அரசியல் உதாரணங்களை முடிந்த அளவு குறைத்த்ு வழங்குகிறேன் சார்.
      இருப்பினும் சில இடங்களில் அதுவே அவசியமாகிறது.
      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  3. விளக்கங்களுக்கு கூறிய நிகழ்வுகள் அருமை...

    பதிலளிநீக்கு
  4. பல உதாரணங்கள் எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி மேடம்.

      நீக்கு
  5. இன்றைய வாசகம் ஆச்சரியப்படுத்தியது. என் மகனுக்கு அப்படியே பொருந்திப் போகிறது!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் தங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி கீதா மேடம்.

      நீக்கு
  6. ஆனால், தான் டுவிட்டருக்கு திரும்பி வர விரும்பாததாகக் கூறி, டிரம்ப் தான் காணாமல் போனது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கியுள்ளார்.

    இவ்விடைவெளி, மக்களை மிகவும் ஏங்கச் செய்து, 2024 அதிபர் தேர்தலுக்குச் சற்று முன், டுவிட்டருக்கு மீண்டும் பிரச்சாரம் செய்ய வரும் திட்டமாக இருக்கலாம்.//

    அரவிந்த் இது முன்பு வந்த ஒரு விதியைக் கொஞ்சம் தொட்டுச் செல்கிறதோ? நம் முக்கியத்துவத்தைத் தெரிய வைக்க அப்பப்ப ஆப்சென்ட் ஆவது....

    இந்த விதியை வாசித்ததும் எனக்கு உடன் தோன்றியது ஒரு குடும்பத் தலைவன். நல்ல குடும்பத் தலைவன் பிள்ளைகளுக்குச் சுதந்திரம் அளித்தாலும் லகானைத் தன் கையில் வைத்துக் கொள்வது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்் மேடம். விதி 16 ஐ லேசாக தொட்டுச் செல்கிறது.

      நீக்கு

  7. ஸ்டீவ் ஜாப்ஸ் உதாரணத்தில் சொல்லப்பட்டது அதாவது அவர் செய்வது - இது வீட்டிலும் நடப்பதுண்டு..- அதாவது ஐடியா எல்லாம் வாங்கிட்டு கடைசில அதைத் தானே செய்வது போல கொஞ்சம் உரு மாற்றி அதையே சொல்வது/செய்வது!!!! Is it not intellectual theft? Piracy without copy right? ஐடியாவை, பரிந்துரைகளை உழைப்பவர்கள் காப்பி ரைட் செய்து கொள்ளமுடியாதே....(குடும்பங்களிலும்!!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். மக்களை தம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள சிலர் கையாளும் வழி இது.

      நீக்கு
  8. 3, 4, 5 உதாரணங்கள் நன்று.

    3 வது உத்தி குடும்பத்திலும் வேலை செய்யும்....சிறிய வகையில்....ஆபத்தான வகையில் அல்ல

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி கீதா மேடம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....